Wednesday, November 28, 2007

மூளைக்கும் பரவியது பாழும் புற்றுநோய்

ஒரு முக்கியமான அறிவிப்பு
என் ஆருயிர் மனைவியின் உடல் நலம் அதிகமாகப் பாதிப்படைந்து வருகிறது.எனவே இப்பதிவிலிருந்து நான் தொடர்கிறேன்.
சரியான சமயத்தில் தக்க ஆலோசனை வழங்கிய நண்பர் ஓசை செல்லா அவர்களுக்கு நன்றி.
..........................................................................................

17.11.2007 ந் தேதி சனிக்கிழமை மாலை 5.30மணியளவில்
விமான நிலையத்திற்குக் கிளம்பினோம்.எங்கள் மகன் மருமகள் பேத்தி பணிப்பெண் அனைவரும் உடன் வந்தார்கள். லிப்டில் ஏறியதுமே அனுவுக்கு வாந்தி வந்துவிட்டது.எனக்குப் பகீர் என்றது.கர்சீப்பைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தினோம்.

டாக்சியில் ஏறும்போது அனுவால் வலது காலைத் தூக்கி வைக்க முடியவில்லை.மிகுந்த சிரமத்துடன் காரில் ஏற்றினோம்.விமான நிலையத்தில் இறங்கும்போதும் சிரமப்பட்டு இறக்கினோம்.அங்கு எங்கள் இரண்டாவது மகள்,மருமகன்,பேரன்,பேத்தி அனைவரும் வந்திருந்தனர்.இரவு 9.20க்குப் புறப்படவேண்டிய விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகக் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.லக்கேஜ்களை செக் இன் செய்துவிட்டு ஹாலில் உள்ள செயற்கை மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மேடையில் அனுவை அமர வைத்தோம்.சுற்றிலும் நாங்கள் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும் பேசிக்கொண்டிருந்தோம்.பேரன் பேத்திகள் விளையாடுவதைப் பார்த்த அனு கொஞ்சமாகச் சிரித்தாள்.சிறிதுநேரம் சென்றதும் பாத்ரூம் போய் வருவோமா என்று கேட்டேன்.வேண்டாம் என்று தலையசைத்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை தானாகவே எழுந்து நின்றாள்.பின் விறுவிறு என நடக்க ஆரம்பித்தாள்.பின்னால் அவளைப் பிடித்தபடியே நான் தொடர்ந்தேன்.என்னை உதறி விட்டு டாய்லெட் இருக்கும் திசை நோக்கி சற்று வேகமாகவே நடந்தாள்.தனக்கு ஒன்றுமேயில்லை,நன்றாக நடக்க முடியும் என்பதைப் பிறருக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ!நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்.ஆனாலும் பின்னாலேயே நானும் என் மகளும் பணிப் பெண்ணும் அருகிலேயே பின்தொடர்ந்தோம். டாய்லெட் நெருங்கியதுமே அனுவுக்கு கால்கள் தடுமாறின.கீழே விழுவதற்குமுன் அனைவரும் தாங்கிப் பிடித்துக்கொண்டோம்.ஒருவழியாக மகள் பணிப்பெண் ஆகியோரின் உதவியுடன் பாத்ரூம் சென்று வந்தாள்.

இவைகளையெல்லாம் பார்த்த எங்கள் மகன் கவலையுடன் கேட்டான்.''அப்பா,நான் வேண்டுமென்றால் கூட வரட்டுமா?சென்னை வந்து வீட்டில் விட்டு விட்டு நாளையே திரும்புகின்றேனே!"என்றான்.நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்ன நினைத்தானோ தெரியவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட்,டிக்கட் ஆகியவற்றைக் கேட்டு எடுத்துக்கொண்டான்.''இதோ ஜஸ்ட் எ மினிட்''என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஒரு பத்து நிமிடங்களில் திரும்பி வந்தான்.அப்பா!நீங்கள் போகும் இந்த விமானத்தில் வரிசைக்கு மூன்று சீட்கள் தான் இருக்கும்.அம்மாவை உட்காரவைக்கவோ பாத்ரூம் போகவோ சிரமமாக இருக்கும். எனவே உங்களிருவரின் டிக்கட்டுகளையும் பிஸினஸ் கிளாஸ் டிக்கட்டுகளாக மாற்றி முன் வரிசையில் எடுத்து வந்துவிட்டேன்.இதில் இருவர் மட்டுமே வசதியாக அமரலாம்."என்றான்.இதற்காகக் கூடுதலாக 600 சிங்கப்பூர் டாலர் செலுத்தியிருந்தான்!

சிறிது நேரத்தில் சக்கர நாற்காலி உதவியுடன் விமானத்திற்குப் புறப்பட்டோம்.முதல் வரிசையில் முதல் இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம்.வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த இட்லியைச் சாப்பிட்டோம்.நான்கு மணிநேரத்தில் சென்னை வந்தடைந்தோம்.

மறுநாள் 18.11.2007 ஞாயிற்றுக்கிழமை அனுவை நன்றாக ஓய்வெடுக்க வைத்தேன்.அடுத்தநாள் 19ந் தேதி திங்கட் கிழமையன்று பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்றோம்.டாக்டரின் அறிவுரைகளின்படி மூளையை ஸ்கேன் எடுத்தோம்.பிளட் டெஸ்டும் எடுத்தோம்.ரிசல்ட்டுகள் அன்றிரவு ஏழு மணி சுமாருக்குக் கிடைத்தது.உடனே ரிசல்ட்டுடன் டாக்டரைப் பார்த்தோம்.

நீண்டநேரம் ஸ்கேனையே பார்த்துக்கொண்டிருந்தவர் நர்ஸைக் கூப்பிட்டு டிக்டேசன் சொல்ல ஆரம்பித்தார்."முன்பக்கம் இருபத்தைந்து பின்பக்கம் இருபத்தைந்து வீதம் தினந்தோறும் ரேடியேசன் தரவேண்டும் மொத்தம் ஐந்து நாட்கள் தர வேண்டும்..............."என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

''என்ன சார்.ரிசல்ட் என்ன வந்திருக்கு?என்று கேட்டேன்.
சிறிதுநேரம் என்னையே பார்த்தார்.நான் அவர் முகத்தை நேருக்கு நேராக உற்று நோக்கினேன்.
"என்ன தெரியணும்?"
"என்ன ரிசல்ட் வந்திருக்கு?"
ஸ்கேனைக் காண்பித்தபடியே டாக்டர் உதட்டைக் கடித்துக்கொண்டார்.
ஸ்கேனில் கொஞ்சம் பெரிய வட்டம் ஒன்றும் ஒரு சிறிய வட்டமும் தெரிந்தது.
என்னவென்று கேட்டேன்.டாக்டர் தலையசைத்தார்.பேசவில்லை.
கேன்சர் கட்டியா என்று கேட்டேன்.ஆமாம் என்பதுபோலத் தலையசைத்தார்.வயிற்றிலிருந்து ஏதோ குபுக்கென்று தொண்டைவரை வந்து போனது.
"கேன்சர் கட்டி தான் என்று எப்படிச் சொல்றீங்க?"
இப்போது டாக்டர் வாய் திறந்தார்."வேறு என்னவாக இருக்க முடியும்.?"
"ஏன்?டெஸ்ட் செய்து பார்க்க முடியாதா?"
டெஸ்ட் செய்யவேண்டுமென்றால் மண்டை ஓட்டைத் திறக்க வேண்டும்.
அது ரொம்ப ரிஸ்க்.பிரைய்ன் டியூமர் என்றாலே கேன்சராகத்தான் இருக்க வாய்ப்புண்டு.அதுவும் அனுராதாவுக்கு மார்பகத்திலிருந்து கல்லீரலுக்கு ஏற்கனவே பரவி இருக்கிறது.எனவே மீண்டும் பரவி மூளைக்குப் போயிருக்கிறது."
"சரி சார். இதற்கு என்ன டிரீட்மெண்ட்?''
"வேறென்ன?ரேடியேசன் தான்.
"எத்தனை முறை?"
"ஒரு ஐந்து நாள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.இங்கேயே அட்மிட் ஆகி விடுங்கள்."
"அதற்கப்புறம்?"
"பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் ஹெர்சப்டின் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஹெர்சப்டின் மருந்தில் கால் கால் பாகங்களாக நான்குவாரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்."
"அப்புறம் சார்?"
"அப்புறம் பார்க்கலாம்.ஆனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.ஸோ,முதல்லெ அதைக் கட்டுப் படுத்த வேண்டும்.நீங்க என்ன பண்றீங்க.நாளைக்கே டயாபடிக் செண்டருக்குப் போய் இன்சுலின் பம்ப் வைத்து சர்க்கரையெக் கண்ட்ரோல் பண்றீங்க.மறுநாள் புதன் கிழமை காலைல இங்கே வந்து அட்மிட் ஆறீங்க.புதன்,வியாழன்,வெள்ளி,சனி இந்த நாலு நாளுக்குள் ரேடியேசன் கொடுத்து விடுவோம்.சனிக்கிழமை சாயங்காலமே வீட்டுக்குப் போய்விடலாம்.

அதற்குள் ஒரு நர்ஸ் வந்து ஒரு சீட்டைக்கொடுத்து"இந்த ஊசி மருந்துகளை வாங்கி வாங்க.உடனே போடணும்"என்றாள்.பார்மஸிக்குச் சென்று வாங்கி வந்தேன்.அனுவுக்கு ஊசிகள் போடப்பட்டன.ஸ்டீராய்ட் மாத்திரைகள் ஆறுமணிநேரத்திற்கு ஒன்று வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்ற அறிவுரைகளுடன் மருந்துச் சீட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் ரிசல்ட் என்னவென்று அனு கேட்டாள்.மூளையில் கட்டி வந்திருக்கிறது என்றும் ரேடியேசன் கொடுத்தால் சரியாகிவிடும் என்று டாக்டர் சொல்வதாகவும் சொன்னேன்.அனு வேறொன்றும் பேசவில்லை.இரு கண்களிலிருந்தும் நீர் மல்கியது.
ஏதாவது பேசு என்று பல முறை சொல்லியும் பேசவில்லை.

மறுநாள்20ந் தேதி கோபாலபுரத்தில் உள்ள எம்.வி.டயாபடிக் செண்டருக்குச்சென்று அட்மிட் செய்தேன்.பம்ப் மூலமாக இன்சுலின் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டது.ஸ்டீராய்ட் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை அளவு ஒழுங்குக்கு வருவதாகத் தெரியவில்லை.அன்றிரவு சுமார் 8 மணி இருக்கும்.அனு என்ன நினைத்தாளோ! இன்சுலின் ஏறிக்கொண்டிருந்த ஊசியைக் கையில் இருந்து எடுத்து விடும்படிகேட்டாள்.சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இன்சுலின் ஏற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இந்நிலையில் ஊசியை அகற்றக்கூடாது என்றும் சொன்னேன்.அனு கேட்கவில்லை.எடுத்து விடுங்க எடுத்துவிடுங்க என்று வற்புறுத்த ஆரம்பித்தாள்.வலிக்கிறதாவெனக் கேட்டேன்."அன் ஈசியா
இருக்கு.உடனே எடுத்துவிடுங்க என்று சத்தமாகச் சொன்னாள். உடனே நர்சை
வரவழைத்து விபரம் சொன்னேன்.டாக்டருக்கு விபரம் தெரிவிப்பதாக நர்ஸ் சொன்னார்.

மீண்டும் அனு ஊசியை எடுத்துவிடும்படி வற்புறுத்தினாள்."சரி.ஊசியை எடுத்துவிடச் சொல்கிறேன்.பிறகு என்ன செய்யலாம் என்று கேட்டேன்.

"மதுரை"என்று சொல்லியபடியே கையை அசைத்தாள்.

மதுரைக்குப் போகலாம் என்கிறாயா என்று கேட்டேன். ஆமாம் என்று தலை அசைத்தாள்.
"மதுரைக்குப் போய்?"
"மீனாட்சி ஆஸ்பத்திரி"
"என்ன சொல்றே.மீனாட்சி மிசன் ஹாஸ்பிடலுக்குப் போகலாம் என்கிறாயா?"
"ஆமாம்."
"அங்கே போய் ரேடியேசன் கொடுக்கலாம் என்கிறாயா?"
ஆமாம் என்பதற்குத் தலையசைத்தாள்.
எனக்குப் புரிந்தது.

நான்கு ஆண்டுகளாக இந்த நோயுடன் போராடிப் போராடிக் களைத்துவிட்டாள்.மார்பகத்தில் ஆரம்பித்த புற்றுநோய் மூன்றாண்டுகளுக்குப் பின் கல்லீரலுக்குப் பரவியது. எவ்வளவோ நவீனசிகிச்சைகள் கொடுத்தபின்னரும் இப்போது மூளைக்கும் பரவியிருப்பது எங்களுக்கே சொல்லவொண்ணாத் துயரத்தைத் தந்திருக்கிறது.அவளுக்கு எப்படி இருக்கும்?
சரி.இனிமேல் சொந்த ஊர் திரும்பிவிடலாம்,உற்றார் உறவினர்களுடன் சேர்ந்திருக்கலாம்,வாழ்வின் இறுதிக் கட்டத்தை சொந்த ஊரில் கழிக்கலாம் என்ற மனநிலை அவளுக்கு வந்திருப்பது புரிந்தது.

உடனே டாக்டரை வரவழைத்தேன். அவரும் அனுவின் மனநிலையைப் புரிந்துகொண்டார்.இன்சுலின் பம்ப்பை உடனே அகற்றச் செய்தார்.அன்றிரவு முழுதும் அனு என்னென்னமோ சொல்லிக்கொண்டே இருந்தாள்.அவளும் உறங்கவில்லை.நானும் உறங்கவில்லை.
அன்றிரவு எங்கள் மகன் சிங்கப்பூரிலிருந்து போனில் பேசும் போது அனுவின் மனநிலையைச் சொன்னேன்.அவள் விருப்பப்படியே சொந்த ஊரான மதுரைக்கு உடனே செல்வது என்று முடிவு செய்தோம்.

அன்றிரவு பேட்டர்சன் கேன்சர் செண்டர் டாக்டர் விஜயராகவனை செல்பேசியில் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தேன்."நல்லாக் கூட்டிக்கொண்டு போகலாமே"என்றார்.நீங்கள் ஒரு லெட்டர் தருகிறீர்களா என்று கேட்டேன்.லெட்டர் ஏதும் தருவதற்கிலை என்றும் என்னிடம் உள்ள ரிக்கார்டுகளே போதுமானது என்றும் சொல்லிவிட்டார்.

மறுநாள் 21ந் தேதி புதன்கிழமை விடிந்ததும் விடியாததுமாக கை ந்ரம்பில் குத்தியுள்ள ஊசியையும் எடுத்துவிடும்படி சொல்ல ஆரம்பித்தாள்.ஒன்பது மணியளவில் விசிட் வந்த டாக்டரிடம் சொல்லி அதையும் அகற்றச் செய்தேன்.உடனே வீட்டுக்குப் போகலாம் என்றாள்.டாக்டர் மாலை வரை இன்சுலின் ஊசி போட்டு என்ன அளவில் கன்ட்ரோல் ஆகிறது என்பதை உறுதி செய்துகொண்டு மாலை வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.இந்த விபரங்களை யெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகவும் திருப்பித் திருப்பியும் சொல்லி அனுவைப் புரிய வைத்தேன்.

அன்று மாலை மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில் அண்ணாநகரிலுள்ள ஒரு டிராவல் ஏஜன்சிக்குச் சென்று பாரமவுண்ட் ஏர்வேசில் மறுநாள் மதியம் 12.40மணி விமானத்திற்கான டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டேன்.வீட்டுக்கு வந்ததும் துணிமணிகள்,அத்தியாவசியமான பொருள்கள் மருந்து மாத்திரைகள் ஆகியவைகளை சூட்கேஸ்களில் பேக் செய்தேன்.

மறுநாள் 22ந் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் மதுரை வந்தடைந்தோம்.விமானநிலையத்திலிருந்து நேராக மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கு வந்து உடனே டாக்டர் கிருஷ்ணகுமார் என்பவரைச் சந்தித்தோம்.அனுவைப் பரிசோதித்துப் பார்த்தார்.ரிக்கார்டுகளையும் பார்த்தார்.அனைத்து ரிக்கார்டுகளும் நேர்த்தியாக வைத்திருப்பதாகப் பாராட்டிய அவர்,"ரேடியேசனுக்கு முன் கொடுக்கவேண்டிய மருந்துகளை ஏற்கனவே கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.எனவே இன்றைக்கே ரேடியேசன் கொடுக்க ஆரம்பித்துவிடலாம்"என்றார்.சென்னை பேட்டர்சன் கேன்சர் செண்டர் டாக்டர் ரேடியேசன் ஐந்து நாளுக்குக் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்ததைச் சொன்னேன்.அப்படிக் கொடுக்கக் கூடாது என்று டாக்டர் கிருஷ்ணகுமார் சொல்லிவிட்டார்.இதற்கென்று சில முறைகள் உள்ளன என்றும் அதன்படியே கொடுப்பதாகவும் சொன்னார்.நானும் ஒப்புக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் ரேடியேசனும் கொடுக்கப்பட்டது.பிறகு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தோம்.

ஆக ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்று 27.11.2007 வரை ஐந்து முறை ரேடியேசன் கொடுக்கப்பட்டுள்ளது.இதுதவிர நேற்று 26ந் தேதி முதல் TEMOZOLAMIDE என்ற கீமோ கேப்சூல் மாத்திரையும் கொடுக்கப்பட்டு வருகிறது.பத்து நாட்களுக்கு இம்மாத்திரையுடன் ரேடியேசனும் கொடுப்பதால் நல்ல பலன் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார்.

இதுவரை ஐந்துமுறை ரேடியேசன் கொடுத்ததற்குப்பின் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.முகம் தெளிவடைந்துள்ளது.கொஞ்சம் நன்றாகவே பேச வருகிறது.ஆனால் பேசுவதில் குழப்பம் நீடிக்கிறது.நன்றாக நடக்க முடிகிறது. எழுவதிலும் ,உட்கார்வதிலும் சிரமம் உள்ளது.வலது கையில் ஏற்பட்டிருந்த வீக்கம் இப்போது இல்லை.கணிசமாகக் குறைந்துவிட்டது.

நேற்று மதுரையில் உள்ள வலைப்பதிவர் திரு சீனா அவர்களும் அவரது மனைவியாரும் வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள்.அனு முகமலர்ச்சியுடன் கொஞ்சம் பேசினாள்.
........................... அனுராதாவின் கணவன் எஸ்.கே.எஸ்...........................................................

Wednesday, November 14, 2007

பிரார்த்தனைகள் பலிக்கின்றன.

பின்னூட்டங்களிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.நான்கு நாட்களாக தினமும் வருகிற பின்னூட்டங்களை எனக்கு மீண்டும் மீண்டும் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என் கணவர்.
உங்களில் ஒருவரையேனும் நான் முன்னே பின்னே பார்த்ததுகூட கிடையாது.ஆனால் என் உடல்நிலை தேறவேண்டும் என்பதற்காக இவ்வளவு பேர்கள் கவலையுடன் விசாரித்து எழுதியிருக்கிறீர்கள்.பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள்.இதில் குழந்தைகளும் சேர்ந்து பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள்.ஒவ்வொரு பின்னூட்டத்தையும் யார் எழுதினார்,அவரது வலைப் பதிவு என்ன, அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றி என் கணவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.எனது நெஞ்சம் நெகிழ்கின்றது.
நான் மிகவும் கொடுத்து வைத்தவள்.சொந்த பந்தங்களைத் தாண்டி இவ்வளவு வலைப்பதிவர்கள் தோழர் தோழிகளாகவும்,
உறவினர்களாகவும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.சிலர் என்னைத் தாயாகவே பாவித்து எழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் அனைவரின் பிரார்த்தனை வீண் போகாது என்றே நம்புகிறேன்.பிரார்த்தனைகள் கண்டிப்பாகப் பலிக்கும் என்பதற்கு நான் தேறி வருவதே அத்தாட்சி.

என் கணவர் அடிக்கடி ஒரு பொன்மொழி சொல்வார்.''நீ பத்து தடவை கீழே விழுந்ததைப் பற்றி இந்த உலகம் பார்ப்பதில்லை.பத்தாவது தடவையும் நீ எழுந்து நின்றாயா என்பதைத்தான் பார்க்கிறது."என்று சொல்வார்.

இதோ நான் எழுந்து நிற்பேன்.பழையபடி நன்றாகப் பேசும் வல்லமை பெறுவேன். உங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் எனக்கு முன் எப்போதும் இல்லாத மனவலிமை தந்திருக்கிறது.


இன்று தான் கொஞ்சம் உடல் நிலை தேறியிருக்கிறது.கை வீக்கம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.பேச வருகிறது. சிந்தனை தெளிவாகிறது.ஆனால் இன்னும் முன்னேற வேண்டும்.

இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருக்கும்போது எனக்கு புத்துணர்ச்சி உண்டாகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இதைக் கொடுத்தது நீங்கள் தான். நீங்கள் தான்.இதற்காக வெறுமனே நன்றி மட்டும் சொல்லி அந்த வார்த்தையை அவமானப்படுத்த விரும்பவில்லை.மீண்டும் பழைய அனுராதாவாக மாறி புது தெம்புடன் மனவலிமையோடு வலம் வருவதுதானே நான் செய்யும் கைம்மாறு?

இந்தியா சென்றதும் மீண்டும் டாக்டரைப் பார்த்து சிகிச்சை தொடர சம்மதம் தெரிவித்துவிட்டேன்.நாளை மறுநாள் சனிக்கிழமை(18.11.2007)ந்தேதி இரவு இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை திரும்புகிறேன்.

எனது மெயில் ஐடி anurathass@hotmail.com
இன்னொன்று anurathass@gmail.com
என் கணவரின் மெயில் ஐடி sks_anu@hotmail.com
செல்பேசி +91 98404 56066

Sunday, November 11, 2007

துன்பமே தொடர்கதையானது

சென்ற பதிவுடன் எனது அனுபவம் முடிந்தது என்று நினைத்தேன்.ஆனால் முடியவில்லையே!கடந்த ஒரு வாரமாக எனது வலது கை வீங்கிக்கொண்டே வருகிறது.வலியும் இருக்கிறது.இங்குள்ள பொது மருத்துவரைப் போய்ப் பார்த்தோம்.எனது ரிக்கார்டுகளைப் பார்த்து திகைத்துப் போனார்.முழங்கையில் ஏதோ நீர் தேங்கி இன்ஃபெக்சன் ஆகியிருக்கலாம் என்றும் உடனே மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு மூன்று நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து பார்த்தால் தான் என்னவென்று தெரியும் என்றும் கூறிவிட்டார்.சென்னையிலுள்ள எனது டாக்டருக்குப் போன் போட்டு விபரம் சொன்னோம்.அவர் ஓரிரு மாத்திரைகளைச் சொல்லி வாங்கிச் சாப்பிடும்படி சொன்னார்.இங்குள்ள பொது மருத்துவரை மீண்டும் சந்தித்து விபரம் சொன்னோம்.அதற்குச் சமமான மாத்திரைகள் சிலவற்றைக் கொடுத்துள்ளார்.மூன்று நாட்களாக அவைகளைச் சாப்பிட்டு வருகிறேன். வலியும் வீக்கமும் கொஞ்சம் குறைந்துள்ளது.சிங்கப்பூரிலேயே இருந்து பார்க்கலாம் என்றால் செலவு அபரிமிதமாக இருக்கும் என்று டாக்டரே சொல்லிவிட்டார்.எனவே இரண்டு மூன்று நாட்களில் சென்னைக்குத் திரும்பிவிடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

அடுத்த முக்கியமான விஷயம் என்னால் முன்னால் பேசுவது மாதிரி இப்போது பேச முடியவில்லை.வாய் வரவில்லை.வீட்டில் உள்ள அனைவரும் இந்த மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.என் கணவரோ,பையனோ மகளோ ஏதாவது கேட்டால் என்னால் ஒழுங்காகப் பதில் சொல்லமுடியவில்லை. "வெளியே போகலாமா?"என்று கேட்டால் "வெளியே"என்று மட்டும் தான் வாய் விட்டு சொல்லமுடிகிறது.அடுத்த வார்த்தை வரவில்லை.என்னை எப்படியாவது முன் போல பேசவைக்கவேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.என்னால் தான் பேச முடியவில்லை. பேச்சு தொடர்ந்து வரமாட்டேன் என்கிறது.
தெளிவாக சிந்திக்க முடியவில்லை.ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.என் கணவர் கேட்டதற்கு நான் சொன்ன அதிகபட்சமான பதில் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்."என்று சொல்கிறேன்.அதாவது என்னைச் சுற்றியுள்ள அனைவரின் நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

இவைகளைப் பதிவுகளாகப் பதியும்படி பலமுறை என் கணவரிடம் வற்புறுத்தியபிறகே இப்போது என் கணவர் லேப் டாப்பில் டைப் செய்து படித்துக் காண்பித்தார்.

இந்த யுத்தத்தில் நான் தோற்றுவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.இனியும் சிகிச்சை மருந்து எதுவும் வேண்டாம் என்று தெரிவித்துக் கொண்டே இருக்கிறேன்.என்ன செய்வது என்று தெரியவில்லை.நான் பேசவில்லை என்றாலும் நான் பேசும் ஓரிரு வார்த்தைகளைக் கொண்டும் நான் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கொண்டும் நான் எது எது பதியவேண்டும் என்று சொல்கிறேனோ அவைகளையெல்லாம் கட்டாயமாகப் பதிந்து எனக்குப் படித்துக் காண்பிக்கவேண்டும் என்று என் கணவரிடம் சொல்லியிருக்கிறேன்.யாருடைய அனுதாபங்களையும் பெறுவதற்காக இதைச் சொல்லவில்லை.இந்த வலைப் பதிவை ஆரம்பிக்கும்போதே என் கணவரிடம் தெரிவித்திருக்கிறேன்.நான் இறக்கும்வரை என் அனுபவங்களைத் தொடர்ந்து பதியவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.என் கணவர் சரி என்று கூறியிருக்கிறார்.