Friday, April 11, 2008

ஆறாவது முறையாக "அவாஸ்டின்" போடப்பட்டது.

இன்று ஏப்ரல் 11ந் தேதி மருத்துவமனை சென்று ஆறாவது முறையாக"அவாஸ்டின்' ஊசி மருந்து போட்டுக் கொண்டேன்.தொடர்ந்து
உட்கொள்ள வேண்டிய பதினான்கு நாட்களுக்கான கீமோ மாத்திரைகளை
வாங்கிக் கொண்டேன்.

இத்துடன் "அவாஸ்டின்" போடுவது போதும் என்றும் மூன்று வாரம் கழித்து மீண்டும் மூளையை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றும் டாக்டர் கூறினார்.அடுத்ததாக மே மாதம் 2ந் தேதியன்று வரச் சொல்லி இருக்கிறார்.

Wednesday, April 2, 2008

கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு,
மார்பகப் புற்றுநோய்ப் போராளி அனுராதா
வணக்கத்துடன் எழுதிக் கொண்டது.
தாங்கள் நலமா?
நான் நலமில்லை.
2003லிருந்து பாடாய்ப் படுத்துகிறது
இந்தப் பாழும் மார்பகப் புற்றுநோய்.
மார்பகத்தில் தொடங்கியது
கல்லீரலுக்குப் பரவி
இப்போது மூளைக்கும்
பரவி விட்டது.
நான் சற்று வசதியானவள்.
பணம் என்பது ஒரு இழப்பல்ல.
அது ஒரு பொருட்டே அல்ல.
இலட்சக் கணக்கில் செலவு செய்து
போராடிக் கொண்டிருக்கிறேன்.
என்னை விடுங்கள்.
என்போன்ற எண்ணற்ற தாய்மார்கள்
இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நோய் வந்தவர்களுக்கும் சரி
உடனிருந்து பார்க்க
வேண்டியவர்களுக்கும் சரி
விழிப்புணர்ச்சி மட்டும் போதவில்லை.
அடுத்து உடனே என்ன செய்ய வேண்டும்?
எடுத்துச் சொல்ல ஆளுமில்லை.
தெரிந்தபின் ஓடி மருத்துவமனை சென்றால்
முற்றியபின் வந்துள்ளீர்கள் என்கிறார் டாக்டர்.
இருக்கும் வசதியில் மருத்துவம் பார்க்கிறார்கள்.
இறுதியில் நோய் வெல்கிறது.
இந்நிலை மாற ஏது செய்வோமா?
அட! நம்மில் ஒருவர்
ஆண்டுகொண்டிருக்கிறாரே!!
அவரையே இறைஞ்சுவோமே!
என நினைத்தேன்.
இன மானத் தலைவருக்கு
தாய்த்திருநாடாம் தமிழ்நாட்டின்
மூத்த மகன் கலைஞருக்குத்
தொடுத்தேன் மடல் ஒன்றை.
எண்ணியதை நண்ணுவதற்கு
நல்லநாள் தேடுவதேன்?
இன்றே இப்பொழுதே பதிந்தேன்
என் வலைப் பதிவில்.
படிப்பவர் யாராகிலும்
கலைஞரோடு அருகில் பழகும்
வாய்ப்பு உடையவராகில்
அவரின் கவனத்திற்குக்
கொண்டு செல்வரன்றோ.
இம்மடலும் அதன் பொருட்டுத்தான்.
"யாரோ சொல்கிறார்கள் நீ கருப்பென்று
ம்..ஆப்பிரிக்காவில் போய்ப் பார்
நான் தான் சிவந்தவன்
"என்ற
உங்கள் மதிஉரையை
நேற்றுத்தான் கேட்டேன்.
உடனே சிரித்தேன்.
தெரியுமா உங்களுக்கு.நான் சிரித்துப்
பல ஆண்டுகளாயிற்று.
உங்களில் அனைத்திலும் தாழ்ந்தவள் நான்.
வயதில் மட்டும் ஆறு மாதம் உயர்ந்தவள்.
கலைஞரும் நீங்களும்
வெண்பாவும் யாப்பும் போலவாம்.
என் கணவர் சொன்னார்.
எனவேதான் கேட்கிறேன்
என் வலைப்பதிவைப் படியுங்கள்.
இன்று கலைஞர் அவர்களுக்கு எழுதிய
கடிதத்தையும் படியுங்கள்.
அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.
அயர்வாகவோ வேலைப் பளுவுடனோ
முக்கியமாக மற்றவரைச் சினந்திருக்கும்போதோ
போக வேண்டாம்.
மகிழ்வாக இருக்கும் தோது பார்த்து
அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.
இன்றைக்கு ஆண்டவனும் அவர் தான்
நாளைக்கு ஆளப்போகிறவரும் அவர் தான்
என் கோரிக்கையைச் சற்றே
செவி மடுத்திக் கேட்டபின்
அவர் நா அசைந்தால்
இந்நாடே அசையும்.
பிறகென்ன?நற்செயல் விளையும்.
அன்புடன்
சகோதரி
அனுராதா.
என் மின்னஞ்சல் முகவரி:sks_anu@hotmail.com
என் கைப்பேசி எண்: 98404 56066

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழ்நாட்டில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மடலைத் தங்களுக்கு எழுதுகிறேன்.

ஏதேனும் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் தயவுசெய்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என் பெயர் அனுராதா.வயது 55 ஆகிறது.கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அன்று முதல் இன்றுவரை நான் எடுத்துகொண்ட மருத்துவ சிகிச்சைகள்,மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அடைந்த துன்பங்கள் அனைத்தையும் விரிவாக விளக்கி "கேன்சருடன் ஒரு யுத்தம்' என்ற பெயரில் ஒரு வலைப்பதிவில் எழுதிவருகிறேன்.

தயவு செய்து அந்த வலைப் பதிவைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இன்றைய உலகில் சற்று வசதியான குடும்பத்தில் உள்ள பெண்களில் யாருக்கேனும் இந்த மார்பகப் புற்றுநோய் வந்திருக்குமேயானால் என்னென்ன துன்பம்,துயரம் அடைந்திருப்பார்களோ,அவ்வளவையும் நான் அடைந்திருக்கிறேன்.விலை உயர்ந்த ஊசிமருந்துகளைப் போட்டுக்கொண்டும் குணமடைய வைக்காமல் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது இந்தப் பாழும் புற்றுநோய்.மார்பகத்தில் வந்தது,கல்லீரலுக்குப் பரவி தற்போது மூளைக்கும் பரவியுள்ளது.இலட்சக்கணக்கில் செலவு செய்தும் நோய் குணமானபாடில்லை.

என் நிலையே இவ்வாறெனில் தமிழ்நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை எளிய தாய்மார்களில் இந்த நோய் வந்தவர்கள் எவ்வளவு துயர்ப்படுவார்கள் என்பதை நினைக்கும்போது என்னால் தாங்க முடியவில்லை.

இந்த நோயினால் நான் படுகின்ற துயரம் சொல்லி மாளாது.என்னைக் கவனித்துக் கொள்வதற்காகவே என் கணவர், தான் பார்த்துக் கொண்டிருந்த அரசுப் பணியிலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்றார்.தொடர்ந்து சிகிச்சை பெறுவதும் மருந்து மாத்திரைகளைச்சாப்பிடுவதும் மட்டுமே ஒரு மார்பகப் புற்றுநோயாளியைக் குணமாக்காது.உளரீதியாகவும் எந்நேரமும் அவருக்கு ஆதரவு தேவை. அந்த வகையில் காலையில் எழுந்தது முதல் இரவு நான் தூங்கச் செல்வது வரை, ஏன்? நான் தூங்கியபிறகும் கூட அவர் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொள்வதால் மட்டுமே இன்று நான் உயிரோடு இருக்கிறேன்.

மார்பகப் புற்றுநோயானது எந்த கெட்ட நடவடிக்கையாலும் வருவதில்லை.
உதாரணமாக

1) புகையிலை போடுவதால் வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது.
2)சிகரட் குடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது.
3)மூக்குப் பொடிபோடுவதால் மூச்சுக்குழலில் புற்றுநோய் ஏற்படுகிறது.
4)மதுப் பழக்கத்தினால் கல்லீரலில் புற்றுநோய்,மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

ஆனால்.........

பெண்களுக்கு இயற்கையாகவே மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.

இது இயற்கையின் சாபமோ என்னவோ!

இன்று எத்தனையோ பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.பெரும்பாலும் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பெண்களுமே இந்நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவமனையையே நாடி வருகிறார்கள்.காரணம் அவர்களிடம் தரையில் படிந்த பாசமாய் நிலவி வரும் இந்தப் பாழும் மூட நம்பிக்கை தான்.'ஏதோ,நான் போன பிறவியில் செஞ்ச பாவம் தான் என்னைஇந்த நோய்க்கு ஆளாக்கியிருக்கிறது'என்று தான் நினைக்கிறார்கள்.ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து மருத்துவமனையை அணுகினால் இந்தநோயை முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புள்ளது என்ற உண்மை யாருக்குமே தெரியவில்லை.

அது மட்டுமல்ல.மார்பகப் புற்றுநோய் வந்துள்ள ஒரு பெண்ணைக் கவனித்துக் கொள்ள அவரது குடும்பத்தில் உள்ளவர்களே தயங்குகிறார்கள்.காரணம் புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான தொற்றுநோய்.அருகில் சென்றாலோ,அவர்களைத் தொட்டாலோ,நெருங்கிப் பழகினாலோ தமக்கும் வந்துவிடும் என்றுதான் நினைக்கிறார்கள்
.

கிராமத்தில் இருக்கும் படிக்காத பாமரன் மட்டுமல்ல,நகரத்தில் உள்ள மெத்தப் படித்தவர்களிடத்திலும் இந்த நினைப்பு இருக்கிறது
.

இந்த நிலை மாற வேண்டும்.அதற்குத் தேவை மக்களிடையே போதுமான விழிப்புணர்ச்சி மற்றும் அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான உதவி.
இதற்கான ஆக்கபூர்வமான சில யோசனைகளை எனக்கு எட்டியவரையில்சொல்கிறேன்.

இந்த நோய்க்குத் தான் ஏழை பணக்காரன் என்ற பாராபட்சமில்லையே!தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் எத்தனையோ பெண்கள் இந்த நோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பார்கள்/சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.அவர்களில் சிலர் அந்தந்த கிராம நிருவாக அலுவலர்களின் குடும்பத்திலேயே கூட இருப்பார்கள்.அல்லது கிராமங்களில் பணிபுரியும் பல்வேறு அரசு அலுவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்களாகவோ அல்லது அவர்களது உறவினர்களாகவோ இருப்பார்கள்.அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கு தாலுகா அளவில் ஏற்பாடு செய்யுங்கள்.மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் உள்ள பெரிய அதிகாரிகளையும் கூட இந்தக் கூட்டங்களில் பங்கேற்க வைக்கலாம்.(அவர்களின் குடும்பத்தைச்சேர்ந்தவர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களோ மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம்).மாவட்ட அளவிலான புற்றுநோய்க்கான சிகிச்சை நிபுணர்கள்(ONCOLOGIST)மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் ஆகியோரும் பங்கேற்க வேண்டும்.

அவர்களைக்கொண்டு கலந்துரையாடினாலே போதும்.
1) இந்த நோய் குறித்து ஒவ்வொருவர் கொண்டுள்ள எண்ணங்கள்
,2)இந்த நோய் வந்தபின் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்
3)பார்த்த டாக்டர்கள்
4)கொடுக்கப்பட்ட சிகிச்சைகள்
5)மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சந்தித்த துன்பங்கள்
6)நோய் வந்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு
7)அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் அணுகுமுறை
8)மற்றவர்களுக்கு அவர்கள் கூறும் அறிவுரை.

இன்னும் இதுபோன்ற பல தகவல்களச் சேகரிக்கலாம்.அதன்பின் அனைத்துப் பொதுமக்களிடையேயும் குறிப்பாகத் தாய்மார்களிடையேயும் இந்நோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஒரு திட்டம் வகுத்துச் செயற்படுத்தலாம்.

ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மனுநீதிநாளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரின் தலைமையில் நடக்கும் மனு நீதி நாளின் போதும் சுகாதார அலுவலர்களைக் கொண்டு விழிப்புணர்ச்சிப் பிரச்சாரம் செய்யலாம்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மேமோகிராம் பரிசோதனை இயந்திரம் நிறுவி 30 வயதைத் தாண்டிய அனைத்துப் பெண்களையும் இலவசமாகப் பரிசோதிக்கலாம்

ஆந்திராவில் அனைத்து மக்களுக்கும் என ஒரு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப் படுவதாகக் கேள்விப்பட்டேன்.

அதாவது ஒரு இலட்சம் ரூபாய் வரை ஒவ்வொருவரையும் இலவச மருத்துவக் காப்பீடு செய்து அதற்கான அட்டை ஒன்றைக் கையில் கொடுத்திருக்கிறார்களாம். ஒருவருக்கு எந்த நோய் வந்தாலும் சரி.அதற்கான சிகிச்சையை ஆந்திராவில் எங்கு வேண்டுமானாலும் அது அரசு மருத்துவமனையாகட்டும் அல்லது தனியார் மருத்துவமனையாகட்டும் அங்கே சென்று அந்த அட்டையைக் காட்டி ஒரு இலட்சம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமாம்.

அந்த மாதிரி தமிழ்நாட்டிலும் கொண்டு வரலாம். குறைந்தபட்சம் அனைத்துத் தாய் மார்களுக்கு மட்டுமாவது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தலாம்.

மக்கள் நல அரசாங்கம் என்பது எப்படிச் செயல் பட வேண்டும் என்பதற்குத் தங்களது சீரிய தலைமையின் கீழ் செயற்படும் இந்த அரசே சாட்சி.

இதற்கு மேலும் வலுவேற்றும் முயற்சியாக மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு உதவும் வகையில் அனைத்துத் தாய்மார்களையும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல் போன்ற திட்டங்களைச் செயற்படுத்தினாலே போதும்,எதிர்வரும் தேர்தலிலும் அனைத்துத் தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவுடன் மிகப் பெரும்பான்மையான வித்தியாசத்தில் மீண்டும் தாங்களே ஆட்சியில் அமர்வீர்கள் என்பது திண்ணம்.
எனது மின்னஞ்சல்: sks_anu@hotmail.com
எனது கைப் பேசி எண்: 98404 56066
தங்கள் நன்றியுள்ள,
அனுராதா.

Tuesday, April 1, 2008

"Bone Scan"ரிசல்ட் வந்தது!

சென்ற 24ந் தேதி எனது அத்தை ஒருவர் மாரடைப்பால் காலமாகி விட்டதால் மருத்துவமனைக்குப் போக முடியவில்லை.எனவே இன்று ஏப்ரல் 1ந் தேதி மருத்துவமனை சென்றுஎலும்பு ஸ்கேன்(bone scan) எடுத்துக்கொண்டேன்.No obvious demonstrable scintigraphic evidence of skeletal secondaries.என ரிசல்ட் வந்திருக்கிறது.டாக்டர் இதைச் சொன்னவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

ஆக, தலைவலி,முதுகுவலி ஆகியவை சாதாரணமானது தான்.கவலைப்படத் தேவையில்லை என்று டாக்டர் கூறி விட்டார்."ரொம்பவும் யோசிக்காதீர்கள்.மனதை வேறு விஷயங்களில் திசை திருப்புங்கள்.எப்போதும் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று சில அறிவுரைகள் சொன்னார்.
முயன்று பார்க்கிறேன்.