அன்புள்ள கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு,
மார்பகப் புற்றுநோய்ப் போராளி அனுராதா
வணக்கத்துடன் எழுதிக் கொண்டது.
தாங்கள் நலமா?
நான் நலமில்லை.
2003லிருந்து பாடாய்ப் படுத்துகிறது
இந்தப் பாழும் மார்பகப் புற்றுநோய்.
மார்பகத்தில் தொடங்கியது
கல்லீரலுக்குப் பரவி
இப்போது மூளைக்கும்
பரவி விட்டது.
நான் சற்று வசதியானவள்.
பணம் என்பது ஒரு இழப்பல்ல.
அது ஒரு பொருட்டே அல்ல.
இலட்சக் கணக்கில் செலவு செய்து
போராடிக் கொண்டிருக்கிறேன்.
என்னை விடுங்கள்.
என்போன்ற எண்ணற்ற தாய்மார்கள்
இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நோய் வந்தவர்களுக்கும் சரி
உடனிருந்து பார்க்க
வேண்டியவர்களுக்கும் சரி
விழிப்புணர்ச்சி மட்டும் போதவில்லை.
அடுத்து உடனே என்ன செய்ய வேண்டும்?
எடுத்துச் சொல்ல ஆளுமில்லை.
தெரிந்தபின் ஓடி மருத்துவமனை சென்றால்
முற்றியபின் வந்துள்ளீர்கள் என்கிறார் டாக்டர்.
இருக்கும் வசதியில் மருத்துவம் பார்க்கிறார்கள்.
இறுதியில் நோய் வெல்கிறது.
இந்நிலை மாற ஏது செய்வோமா?
அட! நம்மில் ஒருவர்
ஆண்டுகொண்டிருக்கிறாரே!!
அவரையே இறைஞ்சுவோமே!
என நினைத்தேன்.
இன மானத் தலைவருக்கு
தாய்த்திருநாடாம் தமிழ்நாட்டின்
மூத்த மகன் கலைஞருக்குத்
தொடுத்தேன் மடல் ஒன்றை.
எண்ணியதை நண்ணுவதற்கு
நல்லநாள் தேடுவதேன்?
இன்றே இப்பொழுதே பதிந்தேன்
என் வலைப் பதிவில்.
படிப்பவர் யாராகிலும்
கலைஞரோடு அருகில் பழகும்
வாய்ப்பு உடையவராகில்
அவரின் கவனத்திற்குக்
கொண்டு செல்வரன்றோ.
இம்மடலும் அதன் பொருட்டுத்தான்.
"யாரோ சொல்கிறார்கள் நீ கருப்பென்று
ம்..ஆப்பிரிக்காவில் போய்ப் பார்
நான் தான் சிவந்தவன்"என்ற
உங்கள் மதிஉரையை
நேற்றுத்தான் கேட்டேன்.
உடனே சிரித்தேன்.
தெரியுமா உங்களுக்கு.நான் சிரித்துப்
பல ஆண்டுகளாயிற்று.
உங்களில் அனைத்திலும் தாழ்ந்தவள் நான்.
வயதில் மட்டும் ஆறு மாதம் உயர்ந்தவள்.
கலைஞரும் நீங்களும்
வெண்பாவும் யாப்பும் போலவாம்.
என் கணவர் சொன்னார்.
எனவேதான் கேட்கிறேன்
என் வலைப்பதிவைப் படியுங்கள்.
இன்று கலைஞர் அவர்களுக்கு எழுதிய
கடிதத்தையும் படியுங்கள்.
அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.
அயர்வாகவோ வேலைப் பளுவுடனோ
முக்கியமாக மற்றவரைச் சினந்திருக்கும்போதோ
போக வேண்டாம்.
மகிழ்வாக இருக்கும் தோது பார்த்து
அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.
இன்றைக்கு ஆண்டவனும் அவர் தான்
நாளைக்கு ஆளப்போகிறவரும் அவர் தான்
என் கோரிக்கையைச் சற்றே
செவி மடுத்திக் கேட்டபின்
அவர் நா அசைந்தால்
இந்நாடே அசையும்.
பிறகென்ன?நற்செயல் விளையும்.
அன்புடன்
சகோதரி
அனுராதா.
என் மின்னஞ்சல் முகவரி:sks_anu@hotmail.com
என் கைப்பேசி எண்: 98404 56066
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//தாங்கள் நலமா?
நான் நலமில்லை.//
சகோதரி
கவிஞர் கவிதையின் மரபை உடைத்தவர். நீங்கள் கடிதத்தின் மரபை' நான் நலமில்லை' என உள்ளதை எழுதி உடைத்துள்ளீர்கள்.
கடிதம் அழகாக வந்துள்ளது.
பலனும் அப்படியே அமையட்டும்.
இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டுமெனும் தங்கள் அவா
நிறைவேறட்டும்.
நல்லது நடக்கும்.நல்லதே நடக்கும்.
சகோதரி
கவியரசு நினைத்தால் கலைஞர் நினைத்த மாதிரி - முயற்சிக்கு வெற்றி கிட்ட வாழ்த்துகள். நல்லது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கண்டிப்பாக நல்லதுதான் நடக்கும்.
good luck.
fix this link 'என் வலைப் பதிவில்.' to point to the kalaignar letter post.
வாருங்கள் யோகன் பாரிஸ்.உலகில் மாறாதது என்று எதுவுமே இல்லை.தேவை ஏற்படின் மரபுகளும் மாறும்.இது காலத்தின் கட்டாயம்.
வாருங்கள் சீனா,இளா,சுரேகா,நன்றி.
வாருங்கள் சர்வேசன்.தங்களின் அறிவுரையின்படியே லிங்க் கொடுத்துள்ளேன்.சரியான சமயத்தில் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
அம்மா நான் வலைப்பதிவுக்கு புதியவன். ஒரு மாதமாக தான் எழுதுகிறேன். அதனால் உங்கள் வலைப்பதிவை காணும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இன்று நீங்கள் எழுதிய வைரமுத்துக்கு கடிதம், இதை பார்த்து தான் வந்தேன், வந்ததும் உங்கள் அந்த பதிவை மற்றும் கலைஞர்களுக்கு எழுதிய பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் இட்டேன். மார்பகப் புற்றுநோய் பகுதி 1,2,3... என்று இருந்ததை பார்த்து நீங்கள் அதை பற்றிய கூறிய கட்டுரை என்று நினைத்து விட்டேன். அதனால் கவனிக்க வில்லை, பிறகு தான் சென்று பார்த்து (படித்து) அதிர்ந்து விட்டேன்.
அம்மா நான் மனதார சொல்கிறேன், உங்கள் மன தைரியம் பார்த்து நான் வியந்து போனேன். இப்படியும் ஒருவருக்கு கஷ்டம் வருமா, அதை இப்படி கூட எதிர்கொள்ள முடியுமா என்று உங்கள் அனுபவம் கண்டு மலைத்து போனேன். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கடவுள் மேல் எனக்கு கோபம் வந்தது, ஒருவரை சோதிக்க ஒரு அளவு இல்லையா என்று? என்ன தான் போன பிறவி இந்த பிறவி என்று கூறப்பட்டாலும் என் மனது சமாதானம் அடையவில்லை.
உங்கள் கஷ்டத்தை பார்த்து (படித்து) என் கஷ்டம் கடலில் கரைத்த பெருங்காயமாய் ஆகி விட்டது. நீங்கள் எழுதிய உரை நடையை பார்த்து நான் முதலில் கதை என்றே நினைத்தேன், அவ்வளவு தத்ரூபமாக இருந்தது, நேரில் பார்க்கும் உணர்வை கொடுத்தது. முடிவில் இது கதையாகவே போய் விடக்கூடாதா என்று இருந்தது ...அவை அனைத்தும் உண்மை என்று நினைக்கும் போது மனது கனக்கிறது. உங்களுக்கு தேவை பரிதாப பார்வை மற்றும் வார்த்தைகள் அல்ல, உற்சாகமான வார்த்தைகள் என்பதை உணர்ந்தேன். உங்களுக்கு கிடைத்து இருக்கும் வலைதள நண்பர்களே உங்களுக்கு கிடைத்து இருக்கும் புதிய உற்சாகம் என்று அறிகிறேன்.
நீங்கள் கூறிய "நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு" வார்த்தை சத்தியமான ஒன்று. அனுபவபூர்வமாக கூறி இருக்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்த கணவரை விட பெரிய சொத்து வேறு உங்களுக்கு தேவை இல்லை என்றே கருதுகிறேன், இது யாருக்கும் கிடைக்காத அற்புதம். இதை கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உங்களுக்கு முன்பே இந்த நிலை வரும் என்று எண்ணியோ என்னவோ உங்களுக்கு இப்படி இரு அருமையான கணவரை கிடைக்க செய்து இருக்கிறார். எனவே கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார் என்று மனபூர்வமாக நம்பலாம். ஒரு கதவை மூடினாலும் மறு கதவை திறந்து தான் வைத்து இருக்கிறான். அனைத்து சோதனைகளையும் தகர்த்து எறிந்து நீங்கள் இடும் சந்தோஷ இடுகையை எதிர்பார்க்கும் வலைப்பதிவர்களில் நானும் ஒருவன்.
உங்கள் அன்புள்ள
கிரி
வாருங்கள் கிரி.நீங்கள் உணர்ந்தது மெத்த சரி.எனக்குத் தேவை அனுதாபமல்ல.பலவகையிலும் உற்சாகமூட்டக்கூடிய வார்த்தைகள் மட்டுமே.அவை உங்களைப் போன்ற வலைப்பதிவர்களிடமிருந்து கிடைத்து வருகிறது.எனக்குள் killing instinct ஏற்படுத்தி அதைச் சற்றும் குறையாமல் காப்பது என் கணவர் தான்.நன்றி
நானும் இந்த தமிழ் வலையுலகுடன் இணைந்து சில வாரங்களே ஆகின்றன். இன்று தான் உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்.
நீங்கள் தைரியமாக இருங்கள். இன்றைய மருத்து உலகம் முன்னையதை விட எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றே நம்புகிறேன்.
நீங்கள் நலமோடிருக்க விரும்புகிறேன்.
இன்றுதான் இதை படித்தேன். ஏதும் பதில் வந்ததா?
வாருங்கள் கெளபாய் மது.வருகைக்கு நன்றி.
வாருங்கள் மதுரையம்பதி.இன்றுவரை பதில் வரவில்லை.அவரது கவனத்திற்குக் கொண்டு செல்ல வேறு சில வழிகளில் என் கணவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment