Wednesday, July 4, 2007

கேன்சருடன் ஒரு யுத்தம்

யாரிவள்?
வலைக்குப் புதியவள்
வலைப் பதிவர்க்கும் புதியவள்
கேட்டவர்க் கெல்லாம்
இல்லையென்னாது
வகை வகையாய் உதவியவள்
யாருக்கும் பாரமாய் இல்லாது
மாலையிட்ட கணவருக்கும்
மகிழ்ந்து பெற்ற மகவுகளுக்கும்
சுமைதாங்கியாய் இருந்தவள்
அவர்களின் கனவுகளை நனவாக்கத்
தன் கனவுகளைத் தொலைத்தவள்
அல்லும் பகலும் அயராது உழைத்தவள்
அவர்கள் சாய்ந்துகொள்ளத்
தோள் கொடுத்தவள்
இவளின் தன்னலங் கருதா
உழைப்பையும் உறுதியும் கண்டு
ஊழே பொறாமை கொண்டது
இவளின் தவத்திற்கு
ஊறு விளைவிக்க
உறுதி பூண்டது.
உற்றம் மயங்க
சுற்றம் கலங்கப்
பெற்றுவரும் பெயர் திரியப்
புற்றுநோய்க்கு ஆளாக்கிப்
பெருமிதம் கொண்டது.
அடுக்குமா இவ்வூழின்
அவலச் செயலுக்கு?
சான்றோரே சான்றோரே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்றீரே என்றீரே
தீதென்ன செய்தேன்
தீங்கென்ன விளைவித்தேன்
ஏன் உற்றது இப் புற்று?
என்றிவளின் வினாவிற்கோ
பதிலில்லை பதிலில்லை.
அடுத்துச் சிந்திப்பதற்கு
அட்டியென்ன?சிந்தித்தாள்
விதியே,விதியே நின்னை
நிந்திப் பயனில்லை
சந்திப்பேனுன்னை
ஆகா!விந்தையிவள் முயற்சியென நீ
நொந்துபோகும் அளவிற்குப்
பெறுவேன் மருந்தை
சீரகப் பெற்றவள் உற்ற
மார்பகப் புற்றைக்
கதிரியக்கம் கொண்டே
இற்றுவிழ வைப்பேன்
எனத் தன்னிலை மீண்டாள்
மீண்டும் உறுதி பூண்டாள்.
மருத்துவம் துணை கொண்டு
மனத்துவம் கருத்திற் கொண்டு
பணத்துவம் பலம் கொண்டு
சென்றாள்
சிகிச்சை பெறுகிறாள்.
விதி வெல்வாள்.

14 comments:

ramachandranusha(உஷா) said...

அனுராதா, இன்றுதான் உங்கள் பதிவு கண்ணில் விழுந்து மடமடவென்று எல்லாவற்றையும் படித்துவிட்டேன். மிக நல்ல முயற்சி.பலருக்கும் குறிப்பாய் பெண்களுக்கு மிக அவசியமான விஷயங்கள். நோயுடன் நீங்கள் தொடுக்கும் போரில் வெல்ல வாழ்த்துக்கள்.

அப்படியே கமெண்ட் மாட்ரேஷன் போட்டுவிடுங்கள்.அனாவசிய வேண்டாத மெயில்களை கழித்துக்கட்டிவிடலாம்.

Geetha Sambasivam said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அனுராதா, சுயத்தை மீட்டதோடு அல்லாமல் நோயுடன் போராடி வாழ்வதற்கும் வாழ்த்துக்கள். தினம் தினம் புதிதாய்ப் பிறப்போம். இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

Anuradha,
get well.
there is nothing on this earth that cannot be won over.
my friend survived and she is doing great.
vaazththukkaL.

MyFriend said...

அனுராதா..

இந்த பெயர்தான் என்னை இந்த பக்கம் வர சொல்லி ஈர்த்தது.

இன்றுதான் முதன் முதலாக உங்கள் பக்கத்துக்கு வந்திருக்கிறேன்.
முதல் பதிவிலிருந்து ஒவ்வொன்றாக படித்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அனுராதா said...

வருகை தந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி.

கோபிநாத் said...

இன்று தான் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். டெலிபின் அம்மா லிங்க் கொடுத்தாங்க.

உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)

மற்ற எல்லா பதிவுகளை படித்துக் கொண்டுயிருக்கிறேன்.

நீங்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அனுராதா said...

வாருங்கள் கோபிநாத்.வருகைக்கு நன்றி.

தாசன் said...

வணக்கம்,
பூங்காவில் வந்த பிறகே உங்களின் பதிவிற்கு வந்தேன். அதற்கு முதல் இதனை தவற விட்டமைக்கு வருந்துகின்றேன். நேற்றை வரைக்கும் யாருக்கோ என்று கேள்விப்பட்டது இன்று எங்களை தாக்கும் போது, விதியே என்றிருக்கமால் போராடும் உங்களின் திறனே உங்களின் நோயை நிச்சயம் மாற்றிவிடும். நலம் பெற வேண்டுகின்றேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போதுதான் இந்தப் பதிவினை பார்த்து தெரிந்துகொண்டேன்.....
நோயுடன் நூற்றாண்டு வாழ் என்பார்கள் பெரியவர்கள்.....

நீங்கள் அதனை எதிர்த்து போரடும் அதே நேரம், அதனை ஒதுக்கி மற்ற விஷயங்களில் மிக ஆர்வத்துடன் செயல்படுவதே நோயை உங்களிடமிருந்து விலக்கும்....வாழ்த்துக்கள் அனுராதா..

cheena (சீனா) said...

அனுராதா !! இன்று தான் இப்பதிவு கண்ணில் பட்டது - அறிமுகத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று இப்பதிவினைத் திறந்தேன் - தங்கள் கவிதை நெஞ்சை உருக்குகிறது - சடாரென ஒரு துயரம் ஒரு கவலை மனதைப் பிசைகிறது - புற்றினைப் பற்றி கவலைப் படாதீர்கள் - ஊழின் உட்பக்கம் காண வாழ்த்துகள் - இல்லை இல்லை - வழிபாடுகள். அனைத்து பதிவர்களூம் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள் - சீக்கிரமே குணமடைவீர்கள் - அந்த நோயை மறந்து மற்ற செய்கைகளில் ஆர்வம் காட்டும் தங்கள் துணிவு பாராட்டத்தக்கது.

அனுராதா said...

வாங்க தாசன்,மதுரையம்பதி,சீனா.வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

Anonymous said...

I saw the your website,you have wrote the your problem.but you have take more treatment but no improvement.

Do you know "AMMABHAGAVAN",mostly you don't know.
If you now see the Anandavikatan Book, you see the AMMABHAGAVAN Miracles told to the devotee. in that book inside.

You should meet the AMMABHAGAVAN,Your problem definitely solved.They are God.

you contact the this mobile number:9842222611,you full details collected.
You ask to Who is AMMABHAGAVAN?,and
tell your problem.He will told.

PLEASE CONTACTE THIS NUMBER OR SEE THE AMMABHAGAVAN MIRACLES IN THE ANANDAVIKATAN BOOK MORE CONTACT NUMBER AVAILABLES

Sathis Kumar said...

நெஞ்சு ஒருகணம் கனக்கிறது.. மீண்டும் புதியவனாய் உங்கள் வலைத்தளத்தில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன், என் பின்னூட்டத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்ற ஏக்கத்தோடு.. :(

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு