Saturday, May 3, 2008

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

நேற்று மே 2ந் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.எக்ஸ்ரே,அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்,எம்.ஆர்.ஐ. பிரெய்ன் ஸ்கேன் ஆகியவைகள் எடுக்கப்பட்டன.அனைத்தையும் பரிசீலித்துவிட்டு,"உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை மிகவும் நன்றாக வேலை செய்திருக்கிறது.மூளையில் இப்போது 1.5x1.3 செ.மீ.அளவில் தென்படுகிற கட்டியானது ஏற்கனவே இருந்த புற்றுநோயின் இறந்துபோன செல்களாக (dead cells)இருக்கும்.எனவே அடுத்த ஆறு மாதம் வரை எந்த மருந்தோ சிகிச்சையோ தேவை இல்லை.எதற்கும் மாதம் ஒருமுறை வந்துவிட்டுப் போங்கள்.இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே வாருங்கள்.அப்படி பிரச்சனை எதுவும் நிச்சயமாக ஏற்படாது"என்று டாக்டர் சொன்னார்.
நல்ல ரிசல்ட் வந்திருக்கிறது என்று மனதார சந்தோசப்பட்டேன்.பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்தது.

Thursday, May 1, 2008

காண்பதெல்லாம் துயரமென்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு

நாளை மே 2ம் தேதி.மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நாள்.மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அடுத்த பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த இரு தினங்களாக என் வாழ்க்கையில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் என்னை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு புற்றுநோயாளிக்கு மருத்துவச் சிகிச்சை மட்டும் போதவே போதாது.அவளின் மனம் எந்த வகையிலும் சிதைந்துவிடக் கூடாது.அப்படிப்பட்ட பேச்சுக்கள் அவள் காதிலேயே விழக்கூடாது.மீறி நடந்தால் அவளின் மன உறுதி பலமிழந்துவிடும்.அதுவே அவளுக்கு எமனாகி விடும்.இதை எனது பதிவில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
ஆனால் அவ்வளவும் இப்போது என் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

விழிப்புணர்வு வேண்டும்,விழிப்புணர்வு வேண்டும் என்று கூக்குரல் இடுவதெல்லாம் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு முன்னால் தோற்றுப் போகிறது.இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?

மதுரைக்கு நான் வந்தது முதல் என் அண்ணன்,அண்ணி,என் தாயார் ஆகியோர் என்னுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு நாங்கள் தனியாக வேறு வீட்டுக்குப் போகிறோம் என்று என் அண்ணன் அண்ணி இருவருமே சொன்னார்கள். ஏனென்று கேட்டேன்.

"வர்ற தை மாசம் பையங்களுக்குப் பொண்ணுபாக்க ஆரம்பிக்கலாம்னுஇருக்கோம்.அதனால் நாங்க வேற வீட்டுக்குப் போகிறோம்."

பளிச்சென்று பிரச்சனை புரிந்துவிட்டது.

"ஏன்.பையங்களோட அத்தைக்குக் கேன்சர் நோய் என்ற விபரம் வெளியே தெரிஞ்சா கல்யாணம் பண்றதிலே தடங்கல் ஏற்படும். இதுதானே பிரச்சனை?"

அவர்கள் பதில் பேசவில்லை.

கேன்சர் நோயாளியான தங்கையை அருகில் வைத்துக் கொண்டு மகன்களுக்குத் திருமணம் முடிக்கும் மன உறுதி என் அண்ணனுக்கோ அண்ணியாருக்கோ நிச்சயம் இல்லை.

விழிப்புணர்ச்சி,மனித நேயம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறேன்,வலையில் பதிவுகள் எழுதுகிறேன்.சொந்த வீட்டிலேயே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை.மனித நேயத்தைக் காண முடியவில்லை.

தங்கைக்குக் கேன்சர்.அதுவும் ஐந்து ஆண்டுகளாக என்றதும் அண்ணன் துடிக்கிறான்.பெற்ற தாயார் ஓ வென்று கதறுகிறாள்.உறவினர்கள் அனைவுரும் வருந்துகின்றனர்.இவையெல்லாம் யதார்த்தங்கள் அல்ல.

என்னை ஒதுக்கினால் அவர்களின் பிரச்சனை தீரும் என்று வரும்போது ரசத்திலிருந்து எடுத்துப் போடும் கருவேப்பிலையாகிறேன்.தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

இதுதான் வாழ்வின் யதார்த்தம்.

இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு விழிப்புணர்ச்சி போதவில்லை.இப்போது போதும் போதும் என்ற அளவுக்குக் கிடைத்து விட்டது.

இந்த சம்பவங்கள் என்னை உலுக்கி எடுத்தாலும் என் வைராக்கியத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.இப்படிப்பட்ட உறவுகளின் முன் இந்த நிலைமையிலும் நான் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.