Tuesday, March 25, 2008

விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்ன செய்யலாம்?ஆலோசனை கூறுங்கள்.

வலைப்பதிவு தொடங்கி ஒன்பது மாதங்களாகிவிட்டன.கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் கால கட்டத்தில் மனதளவிலும் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.ஒரு கால கட்டத்தில் நான் விரும்பிப் படிக்கும் தினசரி,வார மாத இதழ்கள் எதிலுமே நாட்டம் செல்லவில்லை.இப்படியே தொடர விட்டால் மனநோய்க்கு ஆளாகிவிடுவேனோ என்ற பயம்வந்து விட்டது.

இந்நிலையிலிருந்து மீண்டு வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன்.சரி,அபார்ட்மென்டில் உள்ளவர்களுடன் பழகலாம் என்றாலோ எனக்கு இந்தநோய் வந்திருப்பதை நான் யாரிடமும் சொல்லவில்லையே,அப்புறம் எப்படி அடுத்தவர்களுடன் பழகுவது?எனவே அதற்கும் வழியில்லை.நல்ல வேளை!என் கணவர் வாலன்டரி ரிட்டயர்மென்ட் வாங்கியிருந்தார்.என்னைக் கவனித்துக் கொள்வதிலும் மருந்துகளை நேரம் தவறாது எடுத்துக் கொடுப்பதிலும் வார இதழ்கள்,புத்தகங்களில் உள்ள சுவையானதகவல்களை எனக்குப் படித்துக் காண்பிப்பதிலும் இருந்தார்.எனக்கு நீ.உனக்கு நான் பொருத்தமானஜோடி.என்றிருந்தோம்.என் மன ஓட்டங்களை நன்றகாவே அறிந்தவர்.இந்த நேரத்தில் அவர் சமையலும் கற்றுக் கொண்டார்.கிச்சனில் என்ன செய்வாரோ என்று பயந்துகொண்டே சமையல் கற்றுக் கொடுத்தேன்.சுருக்கமாகச் சொன்னால் என் தனிமையைப் போக்க என்னால் ஆனதெல்லாம்நான் செய்தேன்.அவரால் ஆனதெல்லாம் அவர் செய்தார்.

ஒரு காலகட்டத்தில் எனது சிந்தனைகள் மாற ஆரம்பித்தன.இந்நோய் குறித்தன பல புத்தகங்களைப் படித்தோம்.இன்டர்நெட்டில் தேடி ஏராளமான தகவல்களைச்சேகரித்தோம்.இந்நோய் குறித்தான எங்கள்பொது அறிவு சற்று விசாலமானது.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நபர்களையும் சந்தித்தோம்.இவற்றின் விளைவாக என்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிய உதவிகள்செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகத் தோன்ற ஆரம்பித்தது.கையில் பணமில்லாத காரணத்தால் மாத்திரை வாங்க முடியாமல் அவதிப்பட்ட சிலபேர்களுக்கு மூன்று நான்கு மாதங்கள் வரை மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன்.ஆனால் எதையும் தொடர்ச்சியாகச் செயல்படுத்த முடியவில்லை.நோய்,நோய்க்கான சிகிச்சை,அதன் பலனான பக்கவிளைவுகள்,உடலில் ஏற்படும் ரணங்கள்,பாதிப்பிலிருந்து மீளுதல்,பின்னர் மீண்டும் நோயின் தொடர்ச்சி என ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன.எனவே எனது எண்ணத்தைத் தொடர்ச்சியாக இன்றுவரை நிறைவேற்ற முடியவில்லை.

இவ்வளவுக்கும் இடையில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தோம்.இதில் கூறியுள்ள தகவல்கள் இளைய தலைமுறையினரை எந்த அளவுக்குப் பாதித்துள்ளன என்பதற்கு இன்றுவரை வந்துள்ள பின்னூட்டங்களே சாட்சி.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக சங்கமம் இணைய இதழ் சார்பில் முல்லை என்ற தலைப்பில் 2007ம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பூவாக எனது பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டது.இத் தேர்வானது மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் எனது முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் ஒப்புதலாகவே கருதுகிறேன்.

எனது இம்முயற்சியானது இப்பதிவை எழுதுவதுடன் முடிந்துபோய் விடவில்லை.இதையே ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது.

இப்பொருள் குறித்து எனது டாக்டரிடம் விவாதித்தோம்.அவர் அரிய தகவல்களுடன் புது செய்தியும் சொன்னார்."இந்த நோய் குறித்து நாங்கள் பொதுமக்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.புற்றுநோய் வருவதைக் கடவுள் தங்களுக்கு இட்ட சாபமாகக் கருதுகின்றனர்.இதையே உங்கள் மாதிரியான நபர்கள் எடுத்துச் சொன்னால் அதே மக்களில் 30 முதல் 40 சதவிகிதம் பேர் சீரியசாக எடுத்துக் கொள்கின்றனர்.எனவே நீங்கள் புத்தகம் போடுவதுதான் சிறந்தது.அதே வேளையில் உங்கள் வலைப்பதிவை அப்படியே போடச் சொல்லவில்லை."என்றார்.

இது தொடர்பாக ''BREAST FRIEND''(மார்பகத் தோழி)என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னார்.

தனக்குப் புற்றுநோய் வந்துவிட்டது என்பது மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம்.மார்பகப் புற்றுநோய் பல வகைப்படும்.பல ஸ்டேஜில் இருக்கும்.HER 2-positive போன்ற வகையில் வரும் புற்றுநோய் மற்றவகைப் புற்றுநோய் வகைகளை விட மிக வேகமாக வளரும்.எனவே சரியான டெஸ்டுகளை விரைவில் எடுத்து சிகிச்சைகளை மேற்கொண்டால்தான் நோயாளியின்உயிரைக் காப்பாற்றவும் முடியும். டாக்டர் இந்நோய் பற்றி பல சிக்கலான தகவல்களைச்சொல்வார்.புரியாத சிகிச்சை முறைகளை விவரிப்பார்.அதனை நோயாளி மட்டுமே தனி ஒரு ஆளாக எதிர் கொள்வது சிரமம்.மனதளவில் தயாராக இருக்கவும் வாய்ப்பில்லை.இந்தநேரத்தில் சரியான ஆலோசனை சொல்ல நம்பகமான ஒருவர் கண்டிப்பாகத் தேவை.இதற்குத் தனது குடும்பத்தில் ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லலாம்.அப்படி யாரும் இல்லையென்றால் தனது நெருங்கிய தோழி ஒருவரைத் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.நோயாளி டாக்டரைக் கலந்து ஆலோசிக்கும்போது அவரும் கூடவே இருக்க வேண்டும்.என்ன சந்தேகம் வந்தாலும் கொஞ்சம் கூடத் தயங்காமல் டாக்டரிடம் கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர் கூறும் பல தகவல்களை வைத்துகொண்டு நோயாளியிடம் விரிவாகப் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கச் செய்வதில் உதவ வேண்டும்.இந்தத் தோழியானவர் இந்நோய் தொடர்பான பல்வேறு தகவல்களையும் திரட்டி நோயாளியிடமும் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் பகிர்ந்துகொண்டு சரியான முடிவுகள் எடுப்பதற்குத் துணையாக நிற்க வேண்டும். இவ்வகையில் நோயாளிக்குஅனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் ஒருவரை அவரின் மார்பகத் தோழி என அழைப்பது பொருத்தமானது தானே!

இதன் அடிப்படையில் மேற்கண்ட புத்தகமானது பதினேழு நாடுகளிலிருந்து சில நோயாளிகளையும் மற்றும் அவரது மார்பகத் தோழிகளையும் பேட்டி கண்டு இந்த மார்பகப் புற்றுநோய் தொடர்பாக மக்களுக்குத் தெரிவிக்கும் செய்திகளையும் புகைப் படங்களுடன் மிக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..........இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கேள்விகள் கேட்பதை டாக்டர்கள் கொஞ்சம் கூட விரும்புவதில்லை.நீ என்ன கேள்வி கேட்பது?உனக்கு என்ன தெரியும்?கேன்சர் நோய்க்கு நான் படிச்சுட்டு வந்திருக்கேனா? நீ படிச்சுட்டு வந்திருக்கியா?என்றெல்லாம் பேசிவிடுகிறார்கள்."இந்தா பாரும்மா. இந்த நோய் உனக்கு வந்திருக்கு.இதுக்கு இது தான் டிரீட்மெண்ட்.இஷ்டமிருந்தா டிரீட்மெண்ட் எடுத்துக்கோ.இல்லேன்னா உன் இஷ்டம்.நீ போகலாம்.கேள்வியெக் கேட்டு என் வேலையெக் கெடுக்காதே!"இப்படியெல்லாம் ஒரு டாக்டர் பேசினால் நோயாளியோ அவரது மார்பகத் தோழியோ என்ன செய்வார்?

அதே நேரத்தில் மேற்கண்ட புத்தகத்தில் தெரிவித்தபடியே இந்தியாவிலும்சிகிச்சைமுறை வர வேண்டும். அதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும்இதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

போன ஆகஸ்டு மாதத்தில் லண்டனிலிருந்து என் தாய்மாமா மகன் வந்திருந்தார்.அவர் அங்கேயே எலும்பு அறுவை சிகிச்சைக்கான எம்.எஸ்.மேல்படிப்பு படித்துவிட்டு அங்கேயே டாக்டராகப் பணிபுரிகிறார்.அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதைப் பற்றிக் கேட்டேன்.இந்தியாவில் கிட்டத் தட்ட அனைத்து மருத்துவமனைகளிலுமே டாக்டர்கள் இப்படித்தான் சிகிச்சை கொடுக்கிறார்களாம்.இதற்கு AUTHORITATIVE TREATMENT என்று சொல்வார்களாம்.மேல்நாடுகளில்அவ்வாறு இருக்காதாம்.ரொம்பவும் இன்ஃபார்மேடிவாக இருக்குமாம்.

எனவே இந்த வகையில் புத்தகம் தயாரிப்பது அவ்வளவு புத்திசாலித்தனமாகப்படவில்லை.மாறாக,இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று முடித்தவர்களையும்,சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களையும் அவர்களின் நெருங்கிய உறவினர்களிடமும் பேட்டி காணலாம்.அவர்கள் அனுபவங்களைத் தொகுத்து ஒரு ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும்.இதன் பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தையும் தொண்டு நிறுவனங்களையும் அணுக வேண்டும்.

வேறென்ன செய்யலாம்?ஆலோசனை கூறுங்கள்.என் கணவர் அடிக்கடி ஒரு மேற்கோள் கூறுவார்."நன்றாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயல் பாதி முடிந்த மாதிரி"என்று

என்வே உங்களில் ஒருத்தியாக என்னை ஏற்றுக்கொண்டு நான் என்ன செய்யலாம் என்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தயவு செய்து கூறுங்கள்.

எனது அடுத்த செயலுக்கு அஸ்திவாரமே நீங்கள் கூறவிருக்கும் ஆலோசனை

Friday, March 21, 2008

நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு.

டாக்டர் சொன்னபடி 2008 சனவரி 11ந் தேதியன்று மருத்துவமனைக்குச் சென்றோம்.அன்று அவாஸ்டின் மருந்து ஸ்டாக் இல்லையாம்மூன்று நாட்கள் கழித்து போன் செய்துவிட்டு வருமாறுசொல்லிவிட்டார்கள்.வாய்ப்புண்ணைப் பற்றிக் கேட்டேன்.நிறையத் தண்ணீர் குடிக்குமாறு டாக்டர் அறிவுறுத்தினார்.

16ந் தேதியன்று மருந்து வந்திருப்பதை போனில் உறுதிசெய்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்று இரண்டாவது முறையாக அவாஸ்டின் மருந்தும் பேக்லிடாக்ஸல் கீமோ மருந்தும் போட்டுக் கொண்டேன்.

நாளாக நாளாக வாய்ப்புண் அதிகமானது.என்னால் பேசக் கூட முடியவில்லை.சரியாகச் சாப்பிட முடியவில்லை.காலையில் நெய்யுடன் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மதியமும் இரவும் வெறும் சாதத்துடன் நிறையத் தண்ணீர் சேர்த்துக் கொஞ்சம் உப்பு போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.என்ன செய்வது?சாப்பிட்டாக வேண்டுமே!முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.பிறகு பழக்கப்படுத்திக் கொண்டேன்.தினமும் சாத்துக்குடிஆரஞ்சு கொய்யா வாழைப்பழம் மற்றும் இளநீர் ஆகியவைகளைச் சேர்த்துக் கொண்டேன்.

இதற்கிடையில் கடுமையான ஜலதோஷம் வேறு வந்து வாட்டியது.உடம்பெங்கும் ஒரே வலி.எனவே ஒவ்வொரு வாரமும் அவாஸ்டின் போட்டுக் கொள்ள வேண்டிய கெடுவும் தள்ளிப் போனது.ஜலதோஷம் அதிகமாக இருக்கும்போது அவாஸ்டின் போடவேண்டாம் என்று டாக்டர் சொல்லி விட்டார்.

இந்நிலையில் தினமும் தலை வலிக்க ஆரம்பித்தது.அவ்வப்போது முதுகுக்குப் பின்னாலும் வலி இருந்தது.டாக்டரிடம் காண்பித்ததில் ஒரு வாரத்திற்கு ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு கொடுத்தார்.ஒரு வாரம்முடிவதற்குள் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிட்டாலும் தலைவலி வர ஆரம்பித்தது.

எனக்குப் பயமாகி விட்டது.மீண்டும் தலையில் ஏதாவது பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதோ என்ற சந்தேகம் தான்.எனவே டாக்டரின் சொல்படி பிப்ரவரி 2ந் தேதியன்று தலையை சி.ட்டி.ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டியைக் காணோம்!இன்னொரு கட்டி முன்பிருந்ததைவிடப் பாதிக்கும் மேல் குறைந்திருந்தது.எனவே தலைவலியானது சாதாரணமானது என்று உறுதியானது.
எங்களுக்கும் டாக்டருக்கும் நிம்மதியானது.

ஜலதோஷமும் கொஞ்சம் குறைந்திருந்ததால்,மறுநாள் பிப்ரவரி 6ந் தேதி மூன்றாவது முறையாக அவாஸ்டினும் கீமோவும்போட்டுக் கொண்டேன்.
வாய்ப்புண் குறைந்தபாடில்லை.டாக்டரிடம் கேட்டதற்கு பேக்லிடாக்ஸல் என்னும் கீமோ மருந்து போட்டால் அதன் பக்கவிளைவாக ஏதேனும் பாதிப்பு வரத்தான் செய்யும் என்றும் கூடிய மட்டும் சகித்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

பிறகென்ன.சாப்பாடு பழையகதை தான்.

ஜலதோஷம் அதிகமானதால் பிப்ரவரி 19ந் தேதிடாக்டரைப் பார்த்தோம்.அவரின் ஆலோசனையின் பேரில் காது மூக்கு தொண்டை டாக்டரைப் பார்த்தோம்.அவர் பரிசோதித்துவிட்டு ஸைனஸ் பிரச்சனை இருப்பதால்தான் தலைவலியும் ஜலதோஷமும் இருப்பதாகக் கூறி அதற்கான மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

இவ்வாறாக வாராவாரம் போட வேண்டிய அவாஸ்டின் மருந்து மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்றானது.

அடுத்து பிப்ரவரி26ந் தேதியன்று டாக்டரைப் பார்க்கும்போது கீமோ ஊசி மருந்தினால் தானே இவ்வளவு பாதிப்புகள் வருகின்றன?அதற்குப் பதிலாக மாத்திரைகளாகக் கொடுங்களேன்என்று கேட்டேன்."பேக்லிடாக்ஸல் கீமோ மருந்து சேராதபட்சத்தில் மட்டுமேதான் மாத்திரைகள் தரலாம். இப்போ உங்களுக்கு இந்த கீமோமருந்து சேராததால் இம்முறை கீமோ மாத்திரைகள் தருகிறேன்"என்றார்.

அடுத்தநாள்பிப்ரவரி 27ந் தேதி நான்காவது முறையாக அவாஸ்டின் ஊசி போட்டுக் கொண்டேன்.தினமும் உட்கொள்வதற்கு "CAPECITE" என்ற கீமோ மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

என்ன ஆச்சரியம்!இரண்டு மூன்று நாட்களிலேயே வாய்ப்புண் குறைய ஆரம்பித்தது.நாள் செல்லச் செல்லகாரமில்லாமல் உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன்.

இப்போது தலைவலியுடன் முதுகு வலியும் சேர்ந்துகொண்டது.மீண்டும்
இம்மாதம் 5ந் தேதி டாக்டரைப் பார்த்தோம்.அதற்கு குறைந்த பவர் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு எழுதிக்கொடுத்தார்.

அடுத்ததாக இன்று மார்ச்சு 21ந் தேதி மருத்துவமனை சென்று ஐந்தாவது
முறையாக அவாஸ்டின் போட்டுக் கொண்டேன்.முதுகு வலி குறைந்தபாடில்லை.டாக்டர் என்னைப் பரிசோதித்துவிட்டு அடுத்த வாரம் 24 அல்லது 25ந் தேதிஎலும்பு ஸ்கேன்(Bone scan)செய்து பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

ஆக இந்த நோயும் என்னை விட்டபாடில்லை.உடம்பின் ஒவ்வொரு பாகமாக
வருவேன் என்று சொல்லாமல் சொல்கிறது.என்னைக் கொல்லாமல்
கொல்கிறது.நானும் விடுவதாக இல்லை.

ஒருவழியாக இன்றைய நாள் வரை வந்து விட்டேன்.எனவே இனிமேல் மார்பகப் புற்றுநோயைக் குறித்தான நான் அறிந்த,சேகரித்து வைத்துள்ள தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.அத்துடன,இனிமேல் இந் நோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் உங்களுடன் விவாதிக்கலாம் என்றிருக்கிறேன்.
இது குறித்து விபரம் நாளை தருகிறேன்.

"அவாஸ்டின்" என்னும் இன்னொரு மருந்து

ஒரு வாரம் கழித்து டிசம்பர் 25-ம் தேதியன்று மருத்துவமனைக்குச் சென்றோம்.நாங்கள் வழக்கமாகப் பார்க்கும் டாக்டர் கிருஷ்ணகுமார் இல்லை.வேறொரு டாக்டரைப் பாருங்கள் என்றனர்.எனவே திரு.ஜெபசிங் என்ற மெடிகல் ஆன்காலஜி(கீமோதெரபி சிகிச்சை நிபுணர்) டாக்டரைப் பார்த்தோம்.அவர் ரிக்கார்டுகளைப் பார்த்தபின்னர் என்னையும் பரிசோதித்தார்.பிறகு "ஒரு கீமோ மாத்திரை சிறிது காலம் தினமும் உட்கொள்ள வேண்டும்.முதலில் அம் மாத்திரை உங்களுக்கு சேர்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.ஸோ,இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.என்றைக்கு வருகிறீர்கள்?"என்று கேட்டார்.

முதலில் நான் திகைத்துப் போனேன்.மாத்திரை சேர்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யவே இரண்டு நாட்கள் தங்கவேண்டும் என்றால் அவ்வளவு வீரியம் வாய்ந்த மாத்திரையா என்று நினைத்தேன்.
"சரி டாக்டர்.இன்றைக்கே அட்மிட் ஆகி விடுகிறேன்."என்றேன்உடனே டாக்டர் மாத்திரையின் பெயரை எழுதிக் கொடுத்தார்.பார்த்தால்,ஏற்கனவே நான் உட்கொண்டு வரும் "எக்செமெஸ்டேன்"(Exemestane) என்ற கீமோ மாத்திரை தான்."டாக்டர்.இந்த மாத்திரையைத் தான் நான் தினமும் இரவு ஒரு மாத்திரை போன ஆகஸ்டிலிருந்தே சாப்பிட்டு வருகிறேனே"என்றேன்.
ஒரு வினாடி டாக்டர் திகைத்துப் போனார்.பிறகு"ஓகே.இதையே தொடர்ந்துசாப்பிட்டு வாருங்கள்"என்றார்.வேறு மாத்திரை தேவை இல்லை என்றும் மீண்டும் ஒரு மாதம் கழித்து வருமாறும் கூறி விட்டார்.

வீட்டுக்குத் திரும்பும் வழியெல்லாம் என் கணவருடன்ஒவ்வொன்றாக விவாதித்துக்கொண்டே வந்தேன்.சென்னையில் சிகிச்சை பெறும்போது "ஹெர்சப்டின்"என்ற விலை உயர்ந்த ஊசியுடன் கீமோ ஊசியும் போட்டுக் கொண்டேன்.அதற்குமேல் அடுத்த சிகிச்சை இல்லை.ஆனால் இங்கோ ரேடியேசனுக்குப் பின்னர் ஒரே ஒரு கீமோ மாத்திரை மட்டுமே போதும் என்கிறார்களே.ஒரே குழப்பமாக இருந்தது.

மூன்று நாட்கள் வரை இதே சிந்தனை தான்.என் கணவரும் நானும் சிங்கப்பூரிலுள்ள எங்கள் மகனுடன் தினமும் பேசும்போது இதைப் பற்றியும் விவாதித்தோம்.ஏன் எங்கள் வழக்கமான டாக்டர் கிருஷ்ணகுமாரைப் பார்க்கக் கூடாது?அவரிடமே கேட்டு விடுவோமே!

மறுநாள் 22ந் தேதிடிசம்பர் 2007 சனிக்கிழமை டாக்டருக்கு செல்போனில் தொடர்பு கொண்டோம்.புத்தாண்டு பிறந்தபின் சனவரி 2ந் தேதி மருத்துவமனைக்கு வரச் சொன்னார்.அன்றிரவு எங்கள் மகனிடம் விபரத்தைச் சொன்னேன்.டாக்டரிடம் பேசும்போது வேறு சிகிச்சைகள் இருந்தால்
தெரிவிக்குமாறும் செலவு அதிகமானாலும் பரவாயில்லை என்பதைத் தெளிவாகக் கூறுமாறும் சொன்னான்.

2ந் தேதி சனவரி 2008 அன்று டாக்டரைப் பார்த்தோம்.நாங்கள் கூறுவதை டாக்டர் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.பிறகு"இதே கேள்வியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேட்டிருந்தால் வேறு மருந்து இல்லை என்றே சொல்லியிருப்பேன்.இப்போது சமீபமாக அவாஸ்டின்(Avastin)என்னும் ஒரு ஊசி{ BEVACIZUMAB என்பது அதன் மருத்துவப் பெயராம்}மருந்து போடப்படுவதாகவும் ஒரு தடவைக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் என்றும் அத்துடன் paclitaxel என்னும் கீமோ ஊசியும் சேர்த்துப் போட வேண்டும் என்றும் கூறினார்.இந்த சிகிச்சை உங்களைப் போல வசதி உள்ளவர்கள்"கேட்டால் மட்டுமே" சொல்வதாகவும் அத்தகையவர்கள் கூட சில பேர் அதிக செலவு செய்யத் தயங்குகிறார்கள் என்றும் எனவேதான் பொதுவாக அனைவரிடமும் இதைச்சொல்வதில்லை என்றும் கூறினார்.
எனக்கு அப்பாடா என்றிருந்தது.சிகிச்சைக்கு உடனே சம்மதம்தெரிவித்துவிட்டேன்.

டாக்டர் அம்மருந்தின் பெயரை ஒரு சீட்டில் எழுதி என் கணவரிடம்கொடுத்தார்."நீங்களே இதைப் பற்றி இன்டர்நெட்டில் பாருங்களேன்.avastin monoclonal antibody என்று டைப் செய்து பிரெளஸ் செய்து பாருங்கள்.ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் கேளுங்கள்"என்றார்.மறுநாள் காலை அட்மிட் ஆகும்படி சொல்லிவிட்டார்.
மனநிம்மதியுடன் வீட்டுக்குத் திரும்பினோம்.அன்றிரவு எங்கள் மகனிடம் விபரம் தெரிவித்தோம்.

மறுநாள் காலை மருத்துவமனை சென்று அட்மிட் ஆனேன். அன்று எக்கோ டெஸ்ட்,பிளட் டெஸ்ட்,ஈ.சி.ஜி.எல்லாம் எடுத்தார்கள்.மறுநாள்சனவரி 4ந் தேதி முதலில் அவாஸ்டின் மருந்தும் அடுத்து பேக்லிடாக்ஸல் கீமோ மருந்தும் கை நரம்பு வழியாக ஊசிமூலம் டிரிப் ஏற்றுவதுபோல ஏற்றினார்கள்.அன்று முழுதும் மருத்துவமனையிலேயே அவர்களின் கண்காணிப்பில் இருந்தேன்.திரும்ப அடுத்த ஊசி போடுவதற்காக ஒரு வாரம் கழித்து 11ந் தேதி வருமாறு டாக்டர் கூறினார்.அடுத்த நாள்5ந் தேதி வீட்டுக்குத் திரும்பினோம்.

முதலிரண்டு நாட்கள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அட,பரவாயில்லையே என்று சந்தோஷப்பட்டேன்.மறுநாள் கீமோ மருந்து தன் வேலையை ஆரம்பித்தது.காலையில் எழுந்து பல் விளக்கும் போதே வாயெல்லாம் எரிந்தது.வேறென்ன!வாய்ப்புண் தான்.

டாக்டரிடம் செல்போனில் கேட்டதில் வைடமின் சி மாத்திரையை தினமும் மூன்று தடவை நன்றாக சப்பிச் சாப்பிடுமாறு கூறினார்.அவ்வறே செய்தும் வாய்ப் புண் குறையவில்லை.அன்றிலிருந்து என் உணவுமுறையே மாறி விட்டது.எதிலும் சுத்தமாகக் காரமே இல்லாமல் காலையில் சட்னியோ சாம்பாரோ!மதிய உணவிலும்இரவிலும் இதே கதை தான்.காலை எழுந்ததும் நல்லெண்ணையில் வாய் கொப்பளிப்பது,டிபன் சாப்பிடுமுன் இளஞ்சூடான உப்புநீரில்வாய் கொப்பளிப்பது,வாய்ப்புண் மேல் வெண்ணெய் தடவி பின்னர் சாப்பிட முயற்சி செய்வது.இப்படி என்னென்னவோ செய்தும் பலனில்லை.உணவே பிடிக்கவில்லை.நாக்கின் சுவைமொட்டுகள் மறத்துப் போய் விட்டது. .இப்படியே அடுத்த வாரமும் வந்தது.

Wednesday, March 19, 2008

கேன்சர் நோயாளியை ஒரு வழியாக்கும் "ஆறுதல் வார்த்தைகள்"

சங்கமம் எனக்களித்த விருதினை என் கணவருக்கும் என் அருமை மகனுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன்.

டிசம்பர் 18,20007 வரை ரேடியேசன் வைத்துக் கொண்டேன்.இதுவரை இருபது முறை ரேடியேசன் வைக்கப்பட்டுள்ளது.இது போதும் என்றும்,ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்து பார்க்குமாறும் டாக்டர் சொல்லிவிட்டார்.டயாபடிஸ் டாக்டரிடம் சென்று சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

என்னால் முன்போல நன்றாகப் பேச முடிந்தது.கை கால்கள் இயக்கம் முன்பிருந்தது போல் ஆகிவிட்டது.சிந்தனையும் தெளிவடைந்தது.பரவாயில்லையே!நானும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டேனேஎன்ற எண்ணமே என்னை உற்சாகம் கொள்ள வைத்தது.தினமும் உறவினர்கள் வர ஆரம்பித்தனர்.கூடவே புதுப் பிரச்சனைகள் உண்டாக ஆரம்பித்தன

வருபவர்கள் அனைவருமே என்னை மிகுந்த அனுதாபத்துடனும்,பரிதாபத்துடனும் விசாரித்தனர்.இந்த நோய் வந்தது குறித்து நான் எந்த அளவுக்குக் கவலைப்பட்டிருப்பேனோ அதைவிட அதிகமாகவே கவலைப்பட்டனர்.

ஒரு மூதாட்டி சொன்னார்."நீ போன ஜன்மத்திலே ரொம்ப பாவம்பண்ணியிருப்பே,அதனாலேதான் இந்த ஜன்மத்திலெ இம்முட்டுகொடிய நோய் வந்திருக்கு.நீ என்ன செய்றே,மாப்பிள்ளையஅழைத்துக் கொண்டு ........கோவிலுக்குப் போயி அர்ச்சனை செஞ்சி சாமியக் கும்பிட்டு பரிகாரம் செஞ்சிரு.பிறகு இன்னொரு........கோவிலுக்குப் போயி.........."

இன்னொருவர் சொன்னார்."பாருப்பா.வராத நோயி வந்துருச்சு........கோயிலுக்குப்போயி சாமியெக் கும்பிட்டு ஒரு "யானைக்குட்டியெக் காணிக்கை செலுத்திறேன்னு வேண்டிக்க.எல்லாஞ் சரியாப் போயிரும்.

அவருடன் வந்தவர் சொன்னார்."யானைக்குட்டிக்கு யார் இரை போடுறதுன்னு யோசிக்காதே.அதுக்குன்னு இன்னொருத்தர் ஏற்கனவே வேண்டிகிட்டாச்சு."

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது."ஏன் பாட்டி.இந்த ஜன்மத்திலேஇவ்வளவு நல்லது பண்ணியிருக்கேனே......"

முதல் மூதாட்டி இடைமறித்து"அதுக்கு வரப் போற ஜன்மத்துலே கண்டிப்பா நல்ல பலன் கிடைக்கும்.கண்டிப்பா கடவுள் தருவார்."என்றார்.

"அதெப்படிப் பாட்டி,இந்தஜன்மத்திலெ பண்ற நல்லதுக்கு இந்த ஜன்மத்திலேயேதானே பலன் கிடைக்க வேண்டும்?"

"என்னமோடியம்மா,பெரியவுங்க அப்படித்தான் சொல்லியிருக்காங்க...."

பிறகு யானைக்குட்டிப் பாட்டியைப் பார்த்தேன்.

"என்ன சொன்னீங்க?யாரோ ஒருத்தர் யானைக்குட்டிக்கு இரை போட்றதுக்கு வேண்டிகிட்டாரே,யானைக்குட்டியையும் அவரே வாங்கித்தர வேண்டிக்கச் சொல்றது தானே!

அதுக்கு அவர்கிட்ட வசதி இல்லையாம்மா.

அப்ப யானைக்குட்டிக்குப் போடுற இரைக்கு என்ன செலவாகுமோ அதைக் கோவில்ல கட்டச் சொல்லுங்க.வேற யாராச்சும் எப்பவாச்சிலும் யானைக்குட்டியை வாங்கித் தந்தாங்கன்னா அப்பக் கோயில்லேயே இரை வாங்கிப் போடுவாங்க.

"ஏன் பாட்டி,யானைக்குட்டியை வாங்கிக் காணிக்கை செலுத்துறதாயிருந்தாஅதுக்கான உணவுக்கும் ஏற்பாடு நானே செஞ்சுறமாட்டேனா."

பாட்டி பரிதாபமாக என்னைப் பார்த்தார்.

இவர்களெல்லாம் பரவாயில்லை.பிறிதொரு நாள் என்னைப் பார்க்க வந்தஇன்னொரு உறவினர் சொன்னார்.

"அனு.உங்கிட்டெ இருக்கிற எல்லா நகைகளையும் தினந்தோறும் போட்டுக்க.இருக்கிற பட்டுப் புடவைகளைநாளுக்கு ஒன்றாகக் கட்டிக்க.திருப்தியா சாப்பிடு.இருக்குற வரை சந்தோசமா இரு."என்றாரே பார்க்கலாம்!

இவ்வளவு செலவு செய்து மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டுநோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று வந்தவர் கூறிய ஆறுதல்வார்த்தைகளைப் பார்த்தீர்களா!!
சரி.ஒரு முடிவோடுதான் வந்திருப்பார் போலிருக்கிறது என்றுநினைத்துக்கொண்டேன்.சரி சரி என்று தலையாட்டி அனுப்பி வைத்தேன்.
இவர்களின் ஆறுதல் மொழிகளைக் கேட்டபின்பு இதுவரை இல்லாத
அளவிற்கு என்மேலேயே எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது.

அன்றிரவு என் கணவரிடம் கேட்டேன்."ஏங்க,வந்து பாக்கிறவங்க,விசாரிக்கிறவங்க எல்லாம் இப்படித் தான் பேசுவாங்களா?

"அனு.இவங்க எல்லாருமே இப்படித்தான் பேசிப் பேசிப் பழக்கப் பட்டவங்க.வயசான காலத்திலே நாம சொல்ற விளக்கங்கள் எல்லாம் இவங்களுக்குப் புரியாது. ஆனா இவங்க பேச்சிலே கொஞ்சமும் களங்கமில்லே.ரொம்ப நல்லவங்க.இப்படியே பேசிப் பேசிக்காலத்தை ஓட்டிட்டாங்க.நாமும் அவங்களிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது.சரி சரின்னு சொல்லிட்டு அப்படியே விட்டுவிட வேண்டும்"

என் கணவர் சொன்னது சரிதான்.இவர்கள் பேச்சின்படி நடப்பதாகஇருந்தால்,சுய சிந்தனையை இழப்போம்.வெட்டியாகப் பணத்தை இழப்போம்.நிம்மதியை இழப்போம்.மொத்தத்தில் வாழ்க்கையையே இழந்துவிடுவோம்.அதற்குக் கண்டிப்பாக நானோ என் கணவரோ தயாராக இல்லை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் எப்படிப் பேச வேண்டும்,எப்படி அணுக வேண்டும் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது கணவர்/மனைவி/பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் விளக்கமாகக் கவுன்சிலிங் வைக்க வேண்டும்.பெரும்பாலான மருத்துவமனைகளில் கவுன்சிலிங்கே இல்லை."பேஷண்டை நல்லாப் பாத்துக்குங்க.ஓகே?"என்று டாக்டர் கூறும் ஓரிரு வார்த்தைகள் தான் இப்போதைக்கு நடக்கும் கவுன்சிலிங்.இது எப்படி கவுன்சிலிங் ஆகும்?இதற்கென மருத்துவமனைகளில் உளவியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நோயாளியைப் பார்க்க வரும் மற்றவர்கள் நோயாளியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மேற்சொன்ன நெருங்கிய உறவினர் யாராவது உடன் இருக்க வேண்டும்.நோயாளியின் மனம் பாதிக்கும்வகையில் பேச்சு தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கேன்சர் நோயாளிகள் ஆரம்பக் கட்டத்தில் மனதளவில் தயாராகி விடுவார்கள்.நாளாக நாளாக நோயின் கொடுமையும் சிகிச்சைகளின்பாதிப்பும் அவர்களை ஒருவழியாக்கிவிடும்.இந்த நேரத்தில் ஒரு கைக் குழந்தையை எப்படிக் கையாளுகிறோமோ அப்படி அவரைக் கையாள வேண்டும்.
அவர்களின் எண்ணம் நல்லமுறையில் வலுப்பெறும்வகையில் மட்டுமே ஆறுதல் கூறுபவர்களின் அணுகுமுறை அமைய வேண்டுமே ஒழிய மேற்கொண்டு மனம்சிதையும் வகையில் போகக் கூடாது.

வார்த்தையின்றிப் போகும்போது மெளனத்தாலே நன்றி சொல்வேன்.

வலைப்பதிவில் கடைசியாக எழுதி மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டன.தாமதத்திற்குக் காரணம் இருக்கிறது.

என் உடல்நிலை முன்பு போல இல்லை.மருந்து கசக்கிறது.அதற்கும் மேல் மனம் கசக்கிறது.சிந்தனை எங்கெங்கோ அலை பாய்கிறது.இனியும் நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்?மருத்துவ சிகிச்சைகள் முடிகிற மாதிரி தெரியவில்லை.அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எத்தனை முறை எழுதுவது?

ஓரளவுக்கு மேல் அமுதமும் விஷமாகுமல்லவா?சரி.பின் எதைத் தான் எழுதுவது?என் கணவருக்கோ என்னைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.எனவே தான் மேற்கொண்டு எழுத வேண்டாம் என்று என் கணவரிடம்கண்டிப்பாகக் கூறியிருந்தேன்.

ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னால் சக பதிவர் திரு சீனா அவர்கள் செல் போனில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தார் சங்கமம் தமிழ் வலைப்பூ 2007 க்கான விருதுகளில் முல்லைப் பிரிவுக்கான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்ற இனிய செய்தியைத் தெரிவித்திருந்தார்.

என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.ஒரு வினாடி சில்லென்றுபுல்லரித்தது."அப்பொ என் அனுபவங்களைப் படித்தவர்களின் சிந்தனை என்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவர்களைப் பாதித்திருக்கிறது!" ஆஹா!அந்த அளவுக்கா எழுதியிருக்கிறேன்? என்று ஒரு கணம் நினைத்தேன்."இல்லை.இல்லை.என் எழுத்தில் உண்மை இருக்கிறது.நேர்மை இருக்கிறதுசத்தியம் இருக்கிறது.அதற்குத்தான் இந்த விருது"என்று மனம் தெளிந்தேன்.

இந்த விருதினை யாருக்குக் காணிக்கையாக்குவது?

1.எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கா?
2.எனக்குக் கொடுக்கப்படும் மருந்துகளுக்கா?
3.என்னை அல்லும் பகலும் கவனித்துக் கொள்ளும் என் அருமைக் கணவருக்கா?
4.என்னையும் உங்களையும் இணைக்கும் வலைப் பூ உலகத்திற்கா?
5.அல்லது என்னைப் பாடாய்ப் படுத்திவரும் இந்தக் கேன்சர் நோய்க்கா?

தெரியவில்லை.நிஜமாகத் தெரியவில்லை.

வாக்களித்த சக வலை பதிவு நண்பர்,நண்பிகளுக்கும்,மதிப்பார்ந்த நடுவர்,துணை நடுவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

இந்த தேர்வின் மூலமாக வலைப்பதிவர்களிடையே என்னை வெளிச்சம்போட்டுக் காட்டிய "சங்கமம்"ஆசிரியக் குழுமத்திற்கு என் பணிவானநன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நோயிலிருந்து மீண்டு வருவேனோ இல்லையோ தெரியவில்லை.வலைப்பூவில் எழுத நாளை முதல் மீண்டும் வருவேன்.அந்த அளவிற்குஎன்னை உற்சாகப் படுத்தியிருக்கிறது இந்த விருது.

நிம்மதியாகத் தூங்கிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.இப்போது என் உள்ளம் குளிர்ந்திருக்கிறது.இன்று நான் நிம்மதியாகத்தூங்கப் போகிறேன்.