Tuesday, December 11, 2007

மீண்டும் தலை அழகாக மொட்டையானது.

வெள்ளிக்கிழமையும் வந்தது.முற்பகலில் டாக்டர் வந்து பார்த்தார்."எப்படி இருக்கீங்க"என்று கேட்டார்."நன்றாகவே இருக்கிறேன்"என்றேன்."சரி.இன்று ரேடியேசன் முடிந்தபின் நீங்கள் வீட்டுக்குப் போகலாம்.இன்னும் இரண்டு வாரங்களுக்கு தினமும் வீட்டிலிருந்து வந்து ரேடியேசன் வைத்துக்க்கொள்ளுங்கள்.ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்"என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.அதன்படியே அன்று
ரேடியேசன் முடிந்ததும் டிஸ்சார்ஜ் ஆகி சாயந்திரம் ஆறு மணிவாக்கில் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

மறுநாள் சனிக்கிழமையன்று காலையில் எழுந்து பார்த்தால் தலையணையில் முடி கொட்டியிருந்தது.சீப்பை எடுத்து லேசாகத் தலை வாரினேன்.சீப்பு பூராவும் முடி.பத்து நாட்கள் கீமோ மாத்திரை சாப்பிட்டதன் விளைவு.அடுத்து ஞாயிறன்றும் திங்களன்றும் கொஞ்சம் முடி கொட்டியது.இன்று செவ்வாய்க்கிழமை பின்பக்கம் அதிகமாகவே முடி விழுந்திருந்தது.கையால் தொட்டாலே முடி கற்றை கற்றையாகக் கையோடு வந்தது.என் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக முடி பூராவும் கையாலேயே பிடுங்கி விட்டும்,கத்தரிக்கோலால் வெட்டியும்,ரேசரால் மழித்தும் விட்டார்.சென்னையில் கீமோதெரபியின்போது முடி விழுந்து ஏற்கனவே ஒரு தடவை தலை மொட்டையான அனுபவத்தினால் இப்போது கவலைப்படவில்லை.இவ்வாறாக மீண்டும் தலை அழகாக மொட்டையானது.

நேற்றும் இன்றும்(திங்கள்,செவ்வாய்) மீனாட்சி மிசன் மருத்துவமனை சென்று ரேடியேசன் வைத்துக்கொண்டேன்.

சொல்ல மறந்துவிட்டேனே!என் அருமைக் கணவருக்கு இன்று 62 வது பிறந்த நாள்.பாரதியார் பிறந்த நாளில் பிறந்ததால் இவருக்கு சுப்பிரமணியன் என்றே பெயர் வைத்தாராம் என் மாமனார்.என்ன பாவம் செய்ததால் இப்பாழும் புற்றுநோய் வந்ததோ தெரியவில்லை.ஆனால் இவரைக் கணவராகப் பெற்றதற்கு நான் மிகுந்த புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

Saturday, December 1, 2007

இந்த வார டிசம்பர் 5, 2007 ஆனந்த விகடனில் எனது "கேன்சருடன் ஒரு யுத்தம்" வலைபதிவு அறிமுகம்

இந்த வார டிசம்பர் 5, 2007 ஆனந்த விகடன் வார இதழில் விகடன் வரவேற்பறை பகுதியில் எனது இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.இதன் வாயிலாக லட்சக்கணக்கான விகடன் வாசகர்களையும் தமிழ் நெஞ்சங்களையும் இவ்வலைப்பதிவு
சென்றடையும்.அனைவருக்கும் இந்த நோயைப்பற்றிய தாக்கத்தையும்
விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.ஆனந்த விகடனுக்கும்,அதன் ஆசிரியர் குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி
.

..............................................................................................................................................................................

சென்ற இடுகையை என் கணவர் எழுதியிருந்தார்.சரியாகத்தான்
எழுதியிருக்கிறார்.

ரேடியேசனும் கீமோ மாத்திரையும் கொடுக்கப்பட்டு வருகிறது.உடல்
நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று முதல் நானாகவே படுக்கையிலிருந்து எழுகிறேன்.நானாகவே உட்கார்கிறேன்.நானாகவே என் வலது கையினாலேயே சாப்பிடுகிறேன்.சிந்தனை தெளிவடைந்துள்ளது. நன்றாகப் பேசுகிறேன். காலையும் மாலையும் மருத்துவமனை வராண்டாவில் நீண்ட நேரம் யாருடைய உதவி இல்லாமலேயே நடக்கிறேன்.

இதோ இந்த இடுகையை நான் சொல்லச் சொல்ல என் கணவர் தட்டச்சு செய்கிறார்.

சனி,ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்கு ரேடியேசன் கிடையாது .கீமோ மாத்திரையும் கிடையாது. அடுத்து 3 ந் தேதி திங்கட்கிழமை முதல் 7 ந்தேதி வெள்ளிக்கிழமை வரை மீண்டும் ரேடியேசனும் கீமோ மாத்திரையும் கொடுக்கப்படுமாம்.அடுத்த என்ன சிகிச்சை என்பதை வெள்ளிக்கிழமை மாலை சொல்வதாக டாக்டர் தெரிவித்திருக்கிறாராம்.

அதுவரை காத்திருக்கிறேன்.