Friday, October 26, 2007

ஒரு வேண்டுகோளும் மார்பகப் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும்.

மார்பகப் புற்று நோய் என்னைத் தாக்கியதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்துச் சம்பவங்களையும்,எனக்குக்கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளையும்,நான் பெற்ற அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த நடையில் சொல்லிவிட்டேன்.

புற்றுநோய் வந்துள்ள மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று பல டாக்டர்கள் வலியுறுத்தியபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.அதற்கான காரணங்களை ஏற்கனவே விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.அவையே எல்லோருக்கும் பொருந்தும் என்று எடுத்துக்கோள்ளக்கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும்.எனக்கு மார்பகம் அகற்றாமல் இருப்பதுதான் சரி என்று அப்போது பட்டது."இவ்வளவு கஷ்டப்படும்பொழுது முதலிலேயே மார்பக அறுவை சிகிச்சையே செஞ்சிருக்கலாமேன்னு தோணினது உண்டா?இப்பொழுது நடந்தவைகளை மாற்றமுடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா? என்று இலவசக்கொத்தனார் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.சரியான கேள்வி.

எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.படும் துன்பங்களுக்கு இடையில் முதலிலேயே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்கலாமோ என்று சில நேரம் தோன்றியது உண்டு.ஆனால் நான் சந்தித்த மார்பகப் புற்றுநோயாளிகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்குமே ரேடியேசன் கொடுக்கப்பட்டுள்ளது.கீமோதைரபி கொடுக்கப்பட்டுள்ளது.அப்போதெல்லாம் 'அறுவைசிகிச்சை செய்தும் இவர்களுக்கும் ரேடியேசன் மற்றும் கீமோ கொடுக்கப்படுகிறதே!நல்லவேளை. அறுவை சிகிச்சையிலிருந்து நான் தப்பித்தேன்.' என்று நினைப்பதும் உண்டு.

இப்பொழுது நடந்தவைகளை மாற்றமுடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா?

கேள்வியை இப்படி மாற்றிப் போட்டுக்கொள்கிறேன்.மீண்டும் இதே மார்பகத்திலோ அல்லது இடது மார்பகத்திலோ இந்நோய் வந்தால்,அறுவைசிகிச்சைக்கு ஒப்புக்கொள்வீர்களா?

எனது பதில்:அது அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையையும்,என் மனப்பக்குவத்தையும் பொறுத்தது.அந்த முடிவை அந்த நேரத்தில் தான் எடுக்கமுடியும்.உலகில் மாறாதது எதுவுமே இல்லை.மாற்றம் என்பதைத் தவிர.

கேன்சரைப் பொறுத்தவரைக்கும் இப்போதைய அவசிய அவசரத் தேவை
1.மருத்துவ உலகில் இன்னும் புதிய கண்டுபிடிப்புகள்
2.சமுதாயத்தில் அனைவருக்கும் இந்நோய் குறித்தான விழிப்புணர்வு.

கேன்சர் நோய் வருவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மருத்துவம் முன்னேறிய பிறகு மார்பகப் புற்றுநோய் வந்த நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள்,அவர்களின் வாழ்க்கைமுறைகள் போன்ற விபரங்களைப் புள்ளிவிபரங்களாகத் தொகுத்துக் கணக்கிட்டுப் பார்த்ததில் சில உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவை என்ன?

1.பெண்ணாக இருப்பதுவே மார்பகப் புற்றுநோய் வர முதல் காரணம்.
2.பெண்கள் வயது ஆக ஆக இந்நோய் வர வாய்ப்பு கூடுகிறது.நாற்பத்துஐந்து வயதுக்கும் கீழே உள்ள பெண்களுக்கு எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்திலும்
ஐம்பத்துஐந்து வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயது ஆனவர்களுக்கு
மூன்றில் இரண்டு என்ற விகிதத்திலும் இந்நோய் காணப்படுகிறது.
3.பரம்பரையாக இந்த நோய் வந்தது என்று கண்டறியப்பட்ட நோயாளிகள் ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர்.
4.உங்கள் தாயாருக்கோ,சகோதரிக்கோ,மகளுக்கோ இந்நோய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்நோய் வ்ருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு ஆகிறது.இவ்வாறு மிகநெருங்கிய உறவினர்கள் இரண்டு பேர்களுக்கு இருந்தாலோ உங்களுக்கு வரும் வாய்ப்பு ஐந்து மடங்கு ஆகிறது.
5.மார்பகப் புற்றுநோய் உள்ள ஒரு பெண்ணுக்கு அதே மார்பகத்தில் வேறு பாகத்திலோ அல்லது மற்றொரு மார்பகத்திலோ புதிய புற்று நோய் தோன்றக்கூடிய அபாயம் மூன்றிலிருந்து நான்கு மடங்காகும்.
6.பனிரெண்டுவயதுக்குள் வயதுக்கு வந்தவர்களுக்கும்,ஐம்பத்துஐந்து வயதுக்கு மேல் மெனோபாஸ் அடைந்தவர்களுக்கும் இந்நோய் வரலாம்.
7.குழந்தை பெறாத பெண்கள்,முப்பது வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறும் பெண்கள் ஆகியோருக்கும் வரலாம்.
8.கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களுக்கும் வரலாம்.
9குழந்தை பெற்ற தாய்கள் குறைந்தது ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரையிலாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.
10.ஆல்கஹால் உபயோகிக்கும் பெண்களுக்கு இந்நோய் வரக்கூடிய அபாயம் உண்டு.
11.அதிக எடையுள்ள பெண்களுக்கும் இந்நோய் வரலாம்.மெனோபாஸ் வந்த குண்டானபெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம்.
12.நைட் ஷிஃப்ட் பார்க்கும் பெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் உண்டு என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.வெளிச்சத்தின் காரணமாக ''மெலடோனின்''என்ற ஹார்மோன் பாதிக்கப்படுவது தான் காரணம் என்கிறார்கள்.

இவ்வாறாக ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.மனித குலத்தின் நன்மைக்காக இவர்களின் தொண்டு மகத்தானது.

அடுத்ததாக சமுதாயத்தில் அனைவருக்கும் இந்நோய் குறித்தான விழிப்புணர்வுக்கு வருகிறேன்.

எத்தனை பேர்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்பு உணர்வு இருக்கிறது?இந்த நோய் என்னைத் தாக்கும் வரை எனக்கே விழிப்புணர்வு இல்லையே.எங்கே போய் முட்டிக்கொள்வது?

இதற்கு அரசு தான் போதிய பிரச்சாரம் செய்ய வேண்டும்.இதை மிகச் சுலபமாகச் செய்யலாம்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு துணைக் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் நடக்கிறது.மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்திலும் ,கலெக்டர் தலைமையில் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இன்னொரு கிராமத்திலும் மனுநீதி நாள் நடக்கிறது.அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகள் அவைகளில் பங்கேற்று மக்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்.கலெக்டர் தலைமையில் நடக்கும் மனுநீதிநாளில் மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை அதிகாரிகளும் டாக்டர்களும் பங்கேற்கிறார்கள்.புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இங்கேயே ஆரம்பிக்கலாமே!


இதைச் செய்யும்போது அனைத்துப் பெண்களும் மருத்துவக்காப்பீடு செய்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.அந்தக் காப்பீட்டில் அடங்கும் நோய்களுக்கான பட்டியலில் கேன்சர் நோயும் இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.மிக மிக அதிகமான செலவு பிடிக்கும் கொடுமையான நோய் இந்த நோய்.

சரி.அரசும் அதிகாரிகளும் பிரச்சாரம்தான் செய்யமுடியும்.மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

எனவே எனது வேண்டுகோளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் தனித்தனியாக வைக்கிறேன்.
முதலில் மார்பகப் புற்றுநோய் வந்த பெண்களுக்கு.

ஐயையோ,இவ்வளவு கொடிய நோய் வந்து விட்டதே என்று மனம் கலங்காதீர்கள்.இதற்கான முதல் சிகிச்சையே மனதைத் திடமாக்கிக்கொண்டு வந்ததை எதிர்கொள்வதுதான்.பிரச்சனைகள் எதுவானாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.துவண்டுவிடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை.
நோயும் கொடுமையானதுதான்.அதற்கான சிகிச்சைமுறைகளும் கொடுமையானவை தான்.அனைத்து சிகிச்சைகளும் உங்கள் நலனை முன்னிட்டே செய்யப்படுகின்றன என்பதை மறவாதீர்கள்.இதைத் தவிர வேறு எதுவும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களுக்கு,

பெற்றோர்,சகோதர சகோதரிகள்,சொந்தங்கள் என அனைத்தையும் திருமணமான ஒரே நாளில் விட்டுவிட்டு உங்களுடன் வந்தவள்,உங்கள் சுகத்திலும் துக்கத்திலும் பங்கு பெற வந்தவள்,
இவ்வளவு காலம் நீங்கள் சாய்ந்துகொள்ளத் தோள் கொடுத்தவள்,நீங்கள்நோயில் படுத்த படுக்கையில் விழும்போது இரவும் பகலும் உங்களைக் கவனித்துக்கொண்டவள்.அவளுக்கு இந்தநோய் வந்திருக்கிறது.ஆணோ,பெண்ணோ ஒருவருக்கு ஒரு நோய் வருவதற்குக் காரணமே அவருடைய தவறான செயல்களே.ஆனால் ஒரு தவறும் செய்யாமல் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே
இந்த நோய் அவளைத் தாக்கியிருக்கிறது.உங்களை விட்டால் அவளுக்கு வேறு வழி?எனவே தயவு செய்து அவளைக்கவனித்துக்கொள்ளுங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களுக்கு இந்தமாதிரி கொடிய நோய் வந்தால் அவள் எப்படி உங்களைக் கவனித்துக்கொள்வாளோ அந்த அளவுக்கு நீங்கள் அவளைக் கவனித்துக்கொள்ளுங்கள்.நோயினால் அவதிப்படுவது அவள்மட்டுமே. நீங்கள் ஆதரவாக இருந்தாலே போதும்.அவள் படும் துன்பங்கள் எவ்வளவோ குறையும்.


சொந்தங்களுக்கும் சுற்றங்களுக்கும்

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உங்கள் சொந்தவீட்டில் ஒருவருக்கு இந்தநோய் வந்தால் ஒதுக்கிவைப்பீர்களா?இது ஒன்றும் தொற்றுநோயல்ல.முறையான சிகிச்சை கொடுத்தால் குணமாகக் கூடியதுதான்.அவளை ஒதுக்கிவைப்பதால் உங்களுக்கு ஆகக் கூடியது எதுவுமில்லை.ஆனால் உங்களின் அன்பும் ஆதரவும் கிடைத்தால் அவளுக்குக் கிடைக்கும் நிம்மதி இருக்கிறதே!அது அளவிடமுடியாது. அடிக்கடி போய்ப் பாருங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களின் செயலால் ஒரு செலவில்லாமல் ஒரு நோயாளிக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்?அது உங்களுக்கும் பெருமை அல்லவா?

மார்பகப் புற்றுநோய் வராத பெண்களுக்கு

முதலில் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.அதில் அடங்கும் நோய்களில் கேன்சர் நோயும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் வயது நாற்பதை எட்டி விட்டதா? உடனே மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.
குளிக்கும்போது வாரம் ஓரிருமுறை மார்பகங்களை நன்கு அமுக்கியும் தடவியும் ஏதேனும் கட்டியாகத் தென்படுகிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.தென்பட்டால் உடனே டாக்டரை அணுகுங்கள்



டாக்டர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
எனக்கே சிரிப்பாக இருக்கிறது.பைத்தியக்காரத் தனமாகவும் இருக்கிறது.யாருக்குப் போய் யார் சொல்வது?இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.தவறாக இருந்தால் கண்டியுங்கள்.திருத்திக்கொள்கிறேன்.
இன்றைக்கு எல்லாமே எந்திரத்தனமாகிவிட்டது.உங்கள் பணியை அப்படி ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.நோயாளிகள் உங்களை நாடி வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த நோயைப் பற்றி என்ன தெரியும்?நீங்கள் தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.என்னென்ன சிகிச்சை தரப்படும்,ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் தெளிவாகக் கூறுங்கள்.அவள் படும் வேதனைக்குக் கத்துவாள்.கதறுவாள்.ஆனாலும் உங்களின் தரமான சிகிச்சையினாலும் ஆறுதலான அணுகுமுறையினாலும் மட்டுமே அவள் குணமாவாள்.
அவளுக்கு நீங்கள் டாக்டர் மட்டுமல்ல.நீங்கள் தான் கடவுள்.எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயாளிகளிடம் நர்சுகள்"நீ எல்லாம் எதுக்கு சிகிச்சை எடுக்குரே.இன்னும் ஆறு மாசத்துக்குள்ளாரவே செத்துப்பொயிடுவே.உனக்கு டிரீட்மெண்ட் கொடுக்கிறதே வேஸ்ட்"என்றெல்லாம் பேசுவார்களாம்.கையில் பணமில்லாத கொடுமையால் இலவச சிகிச்சை நாடிப் போகும் இடத்தில் இந்தப் பேச்சுகளையும் தாங்கிக் கொண்டு அந்த நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்கள்.டாக்டர் கடவுள் என்றால் நர்சுகள் கடவுளின் உதவியாளர்கள்.அவர்களிடமிருந்து இத்தகைய கொடுமையான வார்த்தைகள் வரலாமா?உங்களைப் போல உங்களை நாடிவரும் நோயாளிகளும் மனிதர்கள் தான்.நீங்கள் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை.சேவை செய்கிறீர்கள்.மனிதநேயத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்.நோயைக் குணமாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளின் கனவைச் சிதைத்துவிடாதீர்கள்.


சமூகச் சிந்தனையாளர்களுக்கும்,பெண் விடுதலைப் போராளிகளுக்கும் ஒரு வேண்டுகோள்.

மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை அறுத்து எறிந்துவிட்ட பெண்களில் எத்தனை பேர் வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறார்கள்?மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து சிகிச்சைகள்,வலி,உறவினர்களின் அணுகுமுறை,மற்றவர்களிடத்திலிருந்து தள்ளிவைக்கப்படும் கொடுமை,எல்லாவற்றிலும் மேலாகக் கட்டிய கணவனே வேறு பெண்ணைத் தேடிச் செல்வதைத் தடுக்கமுடியாத இயலாமை இவைகளோடு மட்டுமல்லாமல் சிகிச்சைகளினால் ஏற்படுகின்ற உடல் ரீதியான பாதிப்புகள் இவைகளுடன் இவர்களும் வாழ்கிறார்கள்.இவர்கள் வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?சொல்லுங்கள்.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் முடிவு ''சக்சஸ்''என்ற இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.''சர்வைவல்''என்ற ஆரம்பக் கட்டத்திலேயேஇருக்கிறது.இதற்கே மாபெரும் யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது.

குறிப்பாகப் பெண்களுக்கு மட்டுமே வரக் கூடிய நோய் என்பதால் இறுதியாக ஒரு எச்சரிக்கையுடன் இப்பதிவை முடிக்கிறேன்.

பெண்களே,நீங்கள் யாராகவும் இருக்கலாம்.மிகப் பெரிய அரசியல் வாதியாகவோ,அரசு அதிகாரியாகவோ,வழக்குரைஞராகவோ,டாக்டராகவோ,சமூகத்தில் அந்தஸ்து மிகுந்தவராகவோ,பணக்காராராகவோ,ஏழையாகவோ இருக்கலாம்.ஆனாலும்
நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது.
எச்சரிக்கையுடன் இருங்கள்.நலமாக வாழுங்கள்.

Tuesday, October 23, 2007

எனது இன்றைய நிலை

இவ்வாறாக ஹார்மோன் மற்றும் கீமோ ஊசிமருந்துகள் கொடுக்கும் சிகிச்சைகளின் முதல் நிலை முடிந்தது.அடுத்ததாக 2008ம் ஆண்டில் சனவரி,மே, செப்டம்பர் என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசி மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.அடுத்த செக்கப் வரை நான் உட்கொள்ளவேண்டிய மருந்து மாத்திரைகளையும் எழுதிக்கொடுத்திருக்கிறார்.

எனது உடல்நிலை.

1.கை கால் சோர்வு தொடர்கதையாய் இருக்கிறது.
2.இன்றைக்கும் இடது மார்பகத்தை விட வலது மார்பகம் வெம்மையாக இருக்கிறது.
3.அக்குளில் பிராக்கிதைரபி செய்ததால் உள்ளே பள்ளமாக இருக்கிறது.வலி இருக்கிறது.
4.மார்பகத்தில் அரிப்பு இருக்கிறது.எனவே பிளவுஸ் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் குவாட்ரிடெர்ம் என்ற ஸ்கின் ஆயின்மெண்ட்டைப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
5.கீமோ மாத்திரை உட்கொள்வதால் மலச்சிக்கல் தொடர்ந்து இருக்கிறது.அதற்காக மருந்து,மாத்திரைகள் உட்கொண்டுவருகிறேன்.
6.கீமோ ஊசி குத்தும்போது கையில் ஏற்பட்ட இடம் நன்றாகக் கருத்து இருக்கிறது.சிவந்த நிறமானதால் கருத்திருப்பது பளிச்சென்று தெரியும்.
கை கால் அமுக்கும்போது இந்த இடத்தில் பார்த்து அமுக்கிவிடவேண்டும்.இல்லையென்றால் பயங்கரமாக வலிக்கும்.
7.கை,கால் நகங்கள் கருத்துவிட்டன. நகப் பாலிஷ் பூசி மறைத்துள்ளேன்.கால்களின் மேற்புறங்கள் லேசாகக் கருத்திருக்கிறது.உடலில் பல இடங்களில் திட்டுத் த்ட்டாகக் கருத்திருக்கிறது.
8.இடதுகையைவிட வலது கை வீங்கியபடி இருக்கிறது.என்னதான் எக்சர்ஸைஸ் செய்தாலும் இடதுகையை ஆட்டுகிற மாதிரி வலது கையை அவ்வளவாக ஆட்டமுடியாது.
9.அடுப்படியில் ஐந்து நிமிடம் நிற்கமுடியாது.உடம்பெல்லாம் வேர்த்து விருவிருத்துவிடும்.
10.முன்பு பத்துப் பக்கமென்றாலும் வேகமாக எழுதுவேன்.இப்போது அரைப்பக்கம் கூட எழுதமுடியவில்லை. கையெழுத்து முன்போல அழகாக இல்லை.மிகவும் சுமாராக வருகிறது.
11.அதிக பாரம் தூக்கவோ சுமக்கவோ முடியவில்லை.முன்பெல்லாம் பதினைந்து லிட்டர் குடம் ஒன்றை இடுப்பில் தூக்கிகொண்டும்,பத்து லிட்டர் குடமொன்றை இன்னொரு கையில் தூக்கிக்கொண்டும் சாதாரணமாக மாடிப்படி ஏறுவேன்.இப்போது ஐந்து லிட்டர் பாரம் கூட தூக்க முடியாது.
12.என்னதான் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டாலும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறது.இத்தனைக்கும் ஹியூமின்சுலின் 30/70 பேனா டைப் ஊசியை காலை,மதியம் இரவு மூன்று வேளைகளிலும் 25/25/20 அளவுகளில் போட்டுக்கொள்கிறேன்.குளூகோபே 25மி.கி.மாத்திரையை
காலை,மதியம் இருவேளைகளில் உட்கொள்கிறேன்.உடம்பில் ஊசி குத்தாத நாளே இல்லை.
13.தலைமுடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.டை அடித்துக்கொள்கிறேன்.
14. காதில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.வேறு வழி இல்லை.சகித்துக் கொள்கிறேன்.
15.இரவு படுக்கும்போது ஏ.ஸி.நல்ல குளிராக இருக்கவேண்டும்.என்வே
குளிர் 17 டிகிரியிலும் மின்விசிறி வேகம் 5-லும் வைத்துத் தூங்குகிறேன்.

இவ்வளவு இருந்தும் நான் நானாக இருக்கிறேன்.2003 செப்டம்பரில் இந்த நோய் தாக்கியபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தேன்.இந்த நோய் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததும் ஒரு முக்கியமான காரணம்.ஒவ்வொரு டாக்டரும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டும் என்று கூறும்போது மனதளவிலும் மிகவும் பலவீனப்பட்டிருந்தேன்.

ஆனால் இப்போது?

பலவகையில் உடல் ஊனமாகியிருந்தாலும்,உள்ளம் ஊனமாகவில்லை.
பாதிப்புகள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சையால் சமாளித்துவருகிறேன்.
இவ்வுலகில் இருக்கும்வரை இந்த சமூகத்திற்கு என்னால் முடிந்த அளவு நல்லது செய்து வருகிறேன்.மேற்கொண்டும் செய்ய விரும்புகிறேன்.

ரேடியேசன் கொடுக்கும் காலகட்டத்தில் நானும் என்கணவரும் இந்நோய் குறித்து அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் இது குறித்த புத்தகங்களை லேண்ட்மார்க்,ஹிக்கின்பாதம்ஸ் போன்ற கடைகளில் தேடினோம்.
மணிமேகலை பிரசுரத்திலிருந்து வெளீயாகியிருந்த "புற்றுநோய்"என்ற புத்தகமும்,டாக்டர் முத்துக்குமரன் எழுதிய வாய்ப் புற்றுநோயும், பிற புற்றுநோய்களும் என்ற புத்தகமும் கிடைத்தன.படித்துப் பல விபரங்களைத்தெரிந்துகொண்டேன்.என் கணவர் உதவியால் இன்டர்நெட்டில் தேடி அநேக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.அமெரிக்காவில் இயங்கும் "breastcancer.org "என்ற இணையதளத்தில் மார்பகப் புற்றுநோய் வந்து உயிர் பிழைத்த பெண்களுக்கென்று ஒரு சாட்டிங் அறை இருக்கிறது.என் கணவர் உதவியால் அதில் தீவிரமாகப் பங்கேற்றுப் பல விபரங்களைத் தெரிந்துகொண்டேன்.

இவைகளெல்லாம் என்னுள் ஒரு புது உலகத்தைத் திறந்துவிட்டது.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நபர்களைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தித் தந்தது.

குமுதம் சினேகிதி இதழில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் கவுன்சிலிங் செய்து வரும் நீரஜா மற்றும் கிரிஜா ஆகிய இருவரைப் பற்றிய பேட்டி வெளிவந்திருந்தது.இவர்களைப் போய்ச் சந்தித்துப் பேசினால் என்ன?என்று எண்ணினேன்.உடனே குமுதம் சினேகிதி இதழ் அலுவலகத்திற்குப் ஃபோன் செய்தேன்.கிரிஜாவின் ஃபோன் நம்பர் கிடைத்தது. அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன்.நேரில் வந்து பார்க்கலாமா என்று கேட்டேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார். மறுநாளே அண்ணாநகர் மேற்கில் இருக்கும் அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.மிகவும் அன்பாகப் பேசினார்.அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு மாதா மாதம் சென்று புற்றுநோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் செய்து வருவதாகச் சொன்னார்.நோயாளிகளைவிட அவர்களுடைய குடும்பத்தார்களுக்குத் தான் கவுன்சிலிங் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்றார்.இருவரும் சேர்ந்து "சஹாயிகா"என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவி, மாத்திரைகள்கூட வாங்க முடியாத வறிய நிலையில் உள்ளவர்களுக்கு மாதாமாதம் மூன்றாயிரம் ரூபாய்க்கும் குறையாமல் மாத்திரைகள் இலவசமாக வழங்கி வருவதாகச் சொன்னார்.இவர்களின் சேவையைக் கண்ட நெருங்கிய உறவினர்கள் சிலரும் நண்பர்கள்சிலரும் அவ்வப்போது கொடுக்கும் தொகையுடன் தாங்களும் பெருமளவு பணம் போட்டு இப்பணியைச் செய்துவருவதாகச் சொன்னார்.
அவர் சொன்ன ஒரு சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்தது.அடையாறு கேன்சர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் இவருக்கு நல்ல பழக்கம்.நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது முகத்தைக்கூடத் தூக்கிப் பார்க்க மாட்டாராம்.மளமளவென்று அறுவை சிகிச்சைக்கு எழுதி அனுப்பிவிடுவாராம்.அந்த டாக்டருக்கே மார்பகப் புற்றுநோய் வந்து விட்டது.பரிசோதனை எல்லாம் முடிந்து அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சக டாக்டர்கள் சொன்னதும் அந்த டாக்டர் இவரிடம் வந்து அழுத அழுகை இருக்கிறதே,"எத்தனையோ பேர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு எழுதும்போதெல்லாம் அவர்களின் மனநிலையையோ குடும்பத்தில் உள்ளவர்களின் நிலையையோ கொஞ்சம்கூட நினைக்கவேஇல்லை.இப்போது எனக்கே அந்த நிலைமை வந்த பிறகு என்னால் தாங்கமுடியவில்லை."என்றுகூறி ஓ என்று வாய் விட்டுக் கதறி அழுதாராம்.

விடைபெற்றுக் கிளம்பும்போது வாசல்வரை வந்து கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் தந்தார்.இந்த முத்தத்தின் அர்த்தம் எனக்கு நன்றாகப் புரிந்தது.இந்தநோய் கண்டிப்பாகத் தொற்றுநோய் அல்ல.இந்த நோய் வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையைக்காட்டிலும் மற்றவர்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும் ஆதரவும் வேண்டும் என்பதே அது.

பின்னொருநாளில் விஜய் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகை லட்சுமி நடத்தும் "அச்சமில்லை அச்சமில்லை" தொடரில் ஒரு பேட்டி ஒளிபரப்பானதைப் பார்த்தேன்.அடையாறு கேன்சர் மருத்துவமனையில் "சகி"என்ற பெயரில் கவுன்சிலிங் செய்துவரும் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.அவர் தெரிவித்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.வேதவல்லி என்பவர் பேசினார்.மேற்சொன்ன சகி என்ற அமைப்பை நடத்தி வருவதாகச் சொன்னார். சென்னை திருவல்லிக்கேணியில் குடி இருக்கிறார்.இரு தினங்களில் அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.வயது முப்பத்துஐந்துகூட ஆகவில்லை.நன்கு படித்து செஷல்ஸ் நாட்டில் ஃபோர்டு கார் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாராம்.இந்தநோய் தாக்கியதாகக் கண்டுபிடிக்கப்பட்டதும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மற்றும் ரேடியேசன் செய்துகொண்டாராம்.பத்து வயதில் ஒரு மகளும் எட்டு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.கணவர் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.அறுவை சிகிச்சையின்போது டாக்டரிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டாராம்."டாக்டர்.என் இரண்டு குழந்தைகளும் பெரியவர்களாகும் வரை தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.பிறகு கடவுள் விட்ட வழி"கஷ்ட ஜீவனம் தான்.கணவரின் ஒரே வருமானத்தில் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளதால் வாழ்த்து அட்டைகள்,ஸ்டேசனரிப் பொருட்கள்,பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வீட்டில்வைத்து விற்பனை செய்கிறார்.கொடுமை என்னவென்றால் இவர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் உள்ள ஒருத்தர் கூட இவரிடம் வாங்க மாட்டார்களாம்.எல்லாவாடிக்கையாளர்களும் வெளியிலிருந்து வருபவர்கள் தானாம்.காரணம் இவருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது மற்ற குடித்தனக்காரர்களுக்குத் தெரிந்ததால் தானாம்.ஒருவர் கூட இவரிடம் பழக மாட்டார்களாம், ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது பாழும் இந்தப் புற்றுநோய்.


பிரபல எழுத்தாளர் படுதலம் சுகுமாரன் ரத்தப் புற்றுநோய் வந்து சாவின் விளிம்பிற்கே சென்று வந்தவர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் 'அவ்வளவு தான்' என்று டாக்டர்களாலேயே கைவிடப்பட்டவர்.ஆனால் அவரது மனைவி டாக்டர்களுடன் வாதாடியும்,போராடியும் மீண்டும் மீண்டும் சிகிச்சை கொடுக்க வைத்துத் தன் கணவரை உயிர் பிழைகக வைத்திருக்கிறார்.இவரது போராட்டம் பற்றி குமுதம் வார இதழில் ஒரு கட்டுரை வெளியானது.அதைப் படித்தவுடன்,குமுதம் வார இதழ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தொலைபேசி எண்ணைப் பெற்று அவருடன் பேசினேன்.ஒரு வாரத்தில் சிட்லப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம்.நோயின் பாதிப்பு நன்றாகவே தெரிந்தது.மற்றவர்கள் போல சாதாரணமாக எழுந்து நிற்க முடியவில்லை.கை,கால்கள் ஆடின.அவரது மனைவி சிட்லப்பாக்கம் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிகிறார்.நிறைந்த மனதுடன் எங்களை வரவேற்றுப் பேசினார்கள்.சினிமாத்துறையிலிருந்து நடிகர் கமலஹாசன்,கிரேசி மோகன் போன்றோரின் உதவிகளை நினைவு கூர்ந்தார்.எனது நோய் விபரங்களை
ஆதங்கத்துடன் கேட்டார்கள்.அக்கம் பக்கத்தில் இதுவரை சொல்லாமல் இருப்பதுகூட நல்லது தான் என்றார்கள்.சொன்னால் அவர்களுடன் இருக்கும் கொஞ்சநஞ்ச பேச்சுவார்த்தையும் நின்றுவிடும் என்றார்கள்.மனம் விட்டுப் பேசும் ஒருசில நல்லவர்களில் அவரும் ஒருவர்.

பின்னொருதடவை பேராசிரியர் பெரியார்தாச்னின் கட்டுரையைப் படிக்கும்போது எனக்கு ஒரு யோசனை உதித்தது.எல்லா ஊடகங்களிலும் எய்ட்ஸ் பற்றித்தான் பேசுகிறார்களே.புற்றுநோயைப் பற்றியோ,மார்பகப் புற்றுநோயைப் பற்றியோ ஏன் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள்?இது பற்றி பல பிரபலங்களிடம் பேசி வலியுறுத்தினால் தான் என்ன? இந்தக்காலத்தில் என் மாதிரி சாதாரணப் பெண்கள் எழுதினாலே பத்திரிகைகளிலேயே பார்ப்பார்களோ என்னமோ.ஆனால் பெரியார்தாசன் போன்ற பிரபலமானவர்கள் எழுதினாலோ பேசினாலோ ஊடகங்களில் கண்டிப்பாக வெளிவரும்.மக்களும் படிப்பார்கள்.அதுமட்டுமல்ல,புற்றுநோயைப் பற்றி என்மாதிரி சராசரிப் பெண்களை விட அவருக்குக் கூடவே தெரிய வாய்ப்பு இருக்கிறது.பேசித்தான் பார்ப்போமே என்று அவருக்குப் போன் போட்டேன்.அவரே பேசினார்.முத்லில் என்னைப் பற்றியும் நோயைப் பற்றியும் சொன்னேன்.ஆதரவாகக்கேட்டார்.பிறகு என் கேள்வியைக் கேட்டேன்."ஏன் சார்.எய்ட்ஸைப் பற்றி இவ்வளவு பிரசாரம் செய்கிறார்கள்.அரசாங்கத்தில் பணம் தண்ணீராய்ச் செலவழிக்கிறார்கள்.எய்ட்ஸ் என்பது தவறான உறவுகளால் வருவது.ஆனால் மார்பகப் புற்றுநோய் அப்படி இல்லையே.ஒரு தவறும் செய்யாத பெண்களுக்குப் புற்றுநோய் வருகிறதே.ஆனால் எய்ட்ஸூக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மார்பகப் புற்றுநோய்க்கு அரசாங்கமோ தொண்டுநிறுவனங்களோ கொடுப்பதில்லையே.ஏன் சார்?"என்று கேட்டேன்.நீங்கள் கேட்ட கேள்வி ரொம்ப முக்கியமான கேள்வியம்மா.எனக்கு இந்த நோயைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. உங்களிடம் ஏதாவது விபரங்கள் இருந்தால் கொடுங்கள்.என்னால் முடிந்தது என்னமோ அதை அவசியம் செய்கிறேன்."என்றார்.கொண்டுவந்து தருவதாகச் சொன்னேன்.பிறகு படுதலம் சுகுமாரனைப் பற்றிச் சொன்னேன்.ஆர்வமாகக் கேட்டார்.முடிந்தால் அவரையும் அழைத்துக்கொண்டு அடுத்த ஞாயிறன்று காலை பச்சையப்பன் கல்லூரிக்கு வருமாறு சொன்னார்.

இந்த விபரங்களைப் படுதலம் சுகுமாரனிடம் சொன்னேன்.இணைய தளத்தில் சேகரித்துவைத்திருந்த தகவல்களையெல்லாம் பிரிண்ட் எடுத்துக்கொண்டும்,புற்றுநோய் பற்றிய என்னிடம் உள்ள புத்தகங்களையும் எடுத்துக்கொண்டும் அடுத்த ஞாயிறன்று படுதலம் சுகுமாரனின் வீட்டுக்குச் சென்றோம்.அவரை அழைத்துக்கொண்டு பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தால் பெரியார்தாசனைக் காணோம்.ஏதோ அவசர வேலையாக்ச் சென்றுவிட்டதாகத் தெரிந்தது.மீண்டும் படுதலம் சுகுமாரனின் வீட்டுக்குச் சென்று அவரை விட்டுவிட்டுப் பின் வீட்டுக்குத்திரும்பினோம்.

அடுத்த வாரத்தில் முன்னரே உறுதிப்படுத்திக்கொண்டு நானும் என் கணவரும் சென்று பெரியார்தாசனைச் சந்திதோம்.கையோடு கொண்டுசென்றிருந்த தகவல்களையும் புத்தகங்களையு,ம் அவரிடம் கொடுத்துவிட்டு வந்தோம்.படித்துப் பார்த்துவிட்டு ஆவன செய்கிறேன் என்று கூறினார்.

இதேபோல் பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களையும் போனில் தொடர்புகொண்டு இதே பிரச்சனையைப் பற்றி அதிகம் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

இக்கால கட்டத்தில்தான் ரேடியேசன் கொடுத்த வலது மார்பகத்தில் புண்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.என்னால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


2004 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிணநீர் சுரப்பி கிளான்சுகளைஅறுவைசிகிச்சை செய்து எடுத்தபின்னர், ஒருவழியாக 2005 ஏப்ரலில் கேன்சர் நோயுடன் நான் போராடிய அனுபவங்களை எழுதி குமுதம் சினேகிதி பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.அது அப்பத்திரிக்கையில்
சூலை 2004 ல்வெளியானது.அக்கட்டுரையைப் படித்த பல பெண்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.இவர்கள் அனைவருமே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே.இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த அளவுக்குப் பதில் சொன்னேன்.இவர்களிடமிருந்து நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம் என்னவென்றால்,இந்நோய் தாக்கியதை வெளியே மற்றவர்களிடம் சொன்ன பெண்களுடன் யாருமே பேசுவதில்லை,பழகுவதில்லையாம்.சொல்லாமல் மறைத்த பெண்களுக்கோ இப்பிரச்சனை இல்லை. ஆனால் இரு தரப்புப் பெண்களின் கணவன்மார்கள் இவர்களை ஒதுக்கிவைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தில் மார்பகப்புற்றுநோய்க்காக ரேடியேசன் சிகிச்சை பெற வந்திருந்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன்.கணவர் காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிள் ஆகப் பணியாற்றுகிறார்.சிகிச்சைக்கு ஆகும் செலவுக்காக அரசாங்கத்திலிருந்து நிதிஉதவிபெற மனுச்செய்திருப்பதாகச் சொன்னார்.
உங்கள் சம்பளத்தில்தான் மாதா மாதம் ஹெல்த் பண்டிற்கு பணம் பிடிக்கப்படுமே,அதிலிருந்து அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாகக் கிடைக்குமே?என்று என் கணவர் கேட்டார்.அதற்காகப் பல மாதங்களுக்கு முன்பே எல்லாவிபரங்களையும்,ரிக்கார்டுகளையும் சேகரித்து மனுச் செய்துவிட்டதாகவும் காவல்துறைத் தலைமை அலுவலகத்திலிருந்தே இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவரின் கணவர் சொன்னார். ''நானும் சென்னைக்கு வரும்போதெல்லாம் சென்று விசாரிக்கிறேன் சார்.டி.ஜி.பி.அய்யாவைக்கூட இரண்டு முறை பார்த்துவிட்டேன்.ஒண்ணுமே நடக்க மாட்டேங்கிறது."என்றார்.''என்ன சார் செய்றது.இந்த நோய் எம்புட்டுக் கொடுமையானதுன்னு ஆபீசிலேருந்துவந்து பாத்தாத்தான் நடவடிக்கை எடுப்பாங்களோ"என்று ஆதங்கப்பட்டார்.
போலிஸ் குவார்ட்டர்சில் குடியிருக்கிறார்களாம்.புற்றுநோய் வந்துள்ளதை வெளியே எல்லோரிடத்திலும் சொல்லிவிட்டார்களாம்.ஒரு பெண்கூட என்னவென்று எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்களாம்.குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்கச் சென்றால் அங்கிருக்கும் அனைவருமே ஓடிப் போய்விடுவார்களாம்."இந்த நோய் தங்களுக்கும் வந்துவிடுமோங்கிற பயம் தான் சார்.படிச்சவங்க படிக்காதவங்கன்னு பேதமே இல்லே சார்.எல்லோருமே இப்படீத்தான் பாக்குறாங்க.இது ஒண்ணும் தொற்றுநோய் கிடையாதுன்னு என் ஃபிரண்ஸ் கிட்டே எல்லாம் சொல்லியும்"நீ சொல்லிட்டா மட்டும் போறுமா?ன்றாங்க சார்.பேசாமெ சொந்த ஊருக்கே போயிடலாம்னு பாக்குறேன்.அங்கே போனாலும் என்ன செய்றதுன்னே தெரியல்லே."

என் உறவினர்கள்,அக்கம்பக்கத்தவர்கள் யாரிடத்திலும் எனக்கு இந்த நோய் வந்திருப்பதைச் சொல்லவில்லை என்று சொன்னேன்.ரொம்ப நல்ல காரியம் பண்ணினீங்கம்மா.அப்பிடியே மெயின்டெயின் பண்ணுங்க."என்றார்கள்.

இப்போது நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் என் வயதில் ஒரு பெண் இருக்கிறார்.எல்லோரிடத்திலும் கல கலவென்று பேசுவார்.இரண்டு,மூன்று வாரங்களாக வெளியே அவரைக் காணவில்லை.ஒரு நாள் மாலைநேரத்தில் தற்செயலாகப் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தேன்.கால் டாக்ஸியிலிருந்து அவரும் அவரின் கணவரும் இன்னும் சிலரும் இறங்கினார்கள்.அந்தப் பெண்ணின் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது.என்னவென்று விசாரிக்கப் போவதற்குள் அவர்கள் அனைவரும் வீட்டுக்குள் சென்று விட்டனர்.வேலைக்காரப் பெண்ணிடம் விசாரித்தேன்.''அந்தம்மாளுக்குப் புத்துநோய் வந்துருக்காம்.அதுக்குத்தான் மொட்டை அடிச்சிருக்காங்களாம்.ஆஸ்பத்திரிக்கிப் போய்ப் போய் வர்ராங்களே.நீங்க கவனிக்கலியா"


இந்த சம்பவங்கள்,அனுபவங்கள்,நான் சந்தித்த நபர்களின் இந்நோய் பற்றிய அணுகுமுறை இவை எல்லாம் சேர்ந்து,எனக்கு வந்துள்ள நோயைப் பற்றி நான் வெளியே கூறாதிருந்தது எவ்வளவு நல்லது என்றே நினைக்கத் தோன்றியது.

கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 2

அடுத்து 2007 மே மாதம் 4ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.இந்தக் காலகட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விட்டது.ஏற்கனவே போட்ட வினோரல்பின் என்ற கீமோ ஊசியினால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர் சொன்னார்.அன்று இபிருபிசின் என்ற கீமோ மருந்தும்,லெடாக்சின் என்ற கீமோ மருந்தும் ஏற்றப்பட்டன.உடலில் ரத்தம் மிகவும் குறைந்திருப்பதாகவும் மறுநாள் வந்து ஒரு யூனிட் ரத்தம் ஏற்றிக்கொள்ளும் படியும் டாக்டர் சொன்னார்.அதன்படியே மறுநாள் சென்று ரத்தம் ஏற்றிக்கொண்டேன்.

அடுத்து மே 30ம்தேதி சென்றோம்.முதலில் ஹியூமன் அல்புமின்,புரோட்டின் ஊசி மருந்துகளும் அதன்பின் இபிருபிசின்,லெடாக்சின் கீமோ மருந்துகளும் ஏற்றப்பட்டன .சூன்30ம் தேதியும்,சூலை 27ம் தேதியும் மேற்சோன்ன இரு கீமோ ஊசி மருந்ந்துகள் ஏற்றப்பட்டன.
அன்று வீட்டுக்குப் புறப்படும்போது டாக்டரைச் சந்தித்தோம்.அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 27ந் தேதி வரச் சொன்னார்.அன்றைக்கு ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசி மருந்தை ஐந்தாவது தடவையாக ஏற்றப் போவதாகச் சொன்னார்.நால்வடக்ஸ் (டமாக்சிபன்) மாத்திரையை நிறுத்திவிடுமாறும்,அதற்குப் பதிலாக ஆரோமசின்(எக்செமெஸ்டேன்)(Exemestane)என்ற கீமோ மாத்திரையைத் தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ளுமாறும் சொன்னார்.இம்மாத்திரை சற்று விலை உயர்ந்தது என்றும் பாரி முனையில் உள்ள ஃபார்மசிக்கடைக்குத் தகவல் அனுப்பினால் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள் என்றும் சொன்னார்ர்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,இம்மாத்திரைகளைஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசமாகத் தருவதற்கு "மாலா"என்ற அமைப்பு இந்தியா முழுதும் இயங்கி வருவதாகவும் சென்னை தியாகராய நகரில் இதன் கிளை அலுவலகம் இயங்குவதாகவும் பதினைந்து மாத்திரை கொண்ட அட்டையை மாத்திரை தீர்ந்ததும் அங்கு கொண்டு சென்று கொடுத்து விட்டால் பதினைந்து மாத்திரைகொண்ட இன்னொரு அட்டையைத் தருவார்கள் என்றும் கூறினார்.டாக்டர் சொன்னதன் பேரில் அந்த நிறுவனதில் என் பெயரைப் பதிந்துகொண்டேன்.மறுநாளே இம்மாத்திரையை வரவழைத்துத் தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ள ஆரம்பித்தேன்.

இந்த இடத்தில் மீண்டும் ஒரு பிரச்சனை முளைத்தது.2003 செப்டம்பரில் ரேடியேசன் கொடுக்கும் காலங்களில் வலது காதில் ''ஙொய்'' என்று சுவர்க்கோழி கத்துவது மாதிரி விட்டு விட்டுக் கேட்க ஆரம்பித்தது.அப்போதே டாக்டரிடம் இதைப் பற்றிச் சொன்னேன்.அதை டாக்டர் குறித்து வைத்துக்கொண்டார்."சத்தம் கேட்க ஆரம்பியிருச்சா"என்றார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.இப்போது மேற்சொன்ன ஆரோமசின் கீமோ மாத்திரையை சாப்பிட ஆரம்பித்த மூன்று நான்கு நாட்களிலேயே வலது காதில் மீண்டும் "ஙொய்"என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.பகல்நேரத்தில் அவ்வளவாகக் கேட்காது.பல வேலைகளில் ஈடுபடுவதாலும்,டி.வி.,ரேடியோ,சத்தங்களாலும் இந்த சத்தம் அவ்வளவாகக் கேட்காது நிசப்தமாக இருந்தால் கேட்க ஆரம்பிக்கும்.அதுவும் இரவு படுக்கும்போது மிகத் துல்லியமாகக்கேட்கும்.
இத்துடன் மலச்சிக்கலும் ஏற்பட ஆரம்பித்தது.சரிதான் பிரச்சனை திரும்பவும் ஆரம்பமாகிறது போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.மலச்சிக்கலுக்கு டாக்டர் ஏற்கனவே எழுதிக்கொடுத்திருந்த மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தேன்.காதில் சத்தம் கேட்கும் பிரச்சனக்கு என்ன செய்வது?சரி. நாமாகவே இந்த கீமோ மாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்தித்தான் பார்ப்போமே என்று மூன்று நாட்களூக்கு ஆரோமசின் கீமோ மாத்திரையைச் சாப்பிடுவதை நிறுத்தினேன்.என்ன ஆச்சரியம்?காதில் சத்தம் கேட்பது குறைந்தது.இதை டாக்டரிடம் ஃபோனில் சொன்னேன்.எக்காரணத்தைக்கொண்டும் இந்த கீமோ மாத்திரையை நிறுத்தக் கூடாது என்றும் வாழ்நாள் முழுதும் இந்த மாத்திரையைச் சாப்பிடவேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிகிச்சை பலனளிக்காது என்றும் எச்சரித்தார்.அன்றே மீண்டும் அந்தக் கீமோ மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தேன். வழக்கம்போல காதில் மீண்டும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. மலச்சிக்கலுக்குத் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டேன்.

அடுத்து ஆகஸ்டு 27ம்தேதி மருத்துவமனை சென்றோம்.
அன்றைக்கு மருந்து வரவில்லை.எனவே செப்டம்பர் 3ந் தேதியன்று வரச் சொன்ன்னார்கள் அதன்படியே செப்டம்பர் 3ந்தேதி சென்று அட்மிட் ஆகி ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசிமருந்து போட்டுக்கொண்டேன்.வழக்கம்போல் பனிரெண்டு மணி நேரம் ஆனது. டாக்டர் வந்திருக்கும்போது
காதில் ஏற்படும் பிரசனையை மீண்டும்சொன்னேன். ஈ.என்.டி. ஸ்பெசலிஸ்ட் ஒருவரை அனுப்புவதாகச் சொன்னார்.பிறகு,ஒரு காது மூக்கு தொண்டை க்கான டாக்டர் வந்து பரிசோதித்தார்.காதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் நன்றாக இருப்பதாகவும் நீங்கள் சாப்பிடும் கீமோ மாத்திரையின் பாதிப்பாக இருக்கலாம் என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகும்போது டாக்டரைச்சந்தித்தோம்.அடுத்ததாக அனைத்து டெஸ்டுகளும் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று எழுதிக்கொடுத்தார். 15ந் தேதிவிநாயகர் சதுர்த்திக்குக்குப் பிறகு எல்லாடெஸ்டுகளையும் எடுத்துக்கொண்டு 18ந் தேதியன்று வந்து பார்க்குமாறு சொன்னார்.


ஒருவாரம் சென்றது காதில் சத்தம் கேட்பது மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன்.இதை எங்கே போய்ச் சொல்வது?யாரிடமாவது போய்ச் சொன்னால் இவளுக்கு சித்தப்பிரமை பிடித்திருக்கிறதோ என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்களே!என்று தயங்கினேன்.

பிறகு எங்களுக்குப் பழக்கமான இன்னொரு காது மூக்கு தொண்டை டாக்டரை அணுகுவது என்று தீர்மானித்தோம்.இதன்படி கீழ்பாக்கத்தில் உள்ள டாக்டர் கார்த்திகேயன் என்ற ஈ.என்.டி. டாக்டரைப் போய்ப் பார்த்தோம்.அவர் நன்றாகப் பரிசோதித்தார்.ஆடியோ டெஸ்டிங் எடுத்தும் பார்த்தார்.காதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் சொன்னார்."காதின் உள்ளே கிட்டத்தட்ட நடுப்பகுதியில் இருந்து மூளைக்கு மில்லியன் கணக்கில் நரம்புகள் செல்கின்றன.அவைகளில் ஏதோ ஒன்றிரண்டு நரம்புகள் ரேடியேசன் கொடுக்கும்போதே சேதம் ஆகியிருக்கலாம்.இதை ஒன்றும் செய்யமுடியாது.இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.பகலில்தான் பிரச்சனை இல்லையே.எனவே இரவு படுக்கும்போது ஏதாவது பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே தூங்குங்கள்"என்றார்.என்ன செய்வது?இப்போதெல்லாம் இந்த சத்த்த்துடனேயே வாழப் பழகிக்கொண்டேன்.

அடுத்ததாக ஏற்கனவே டாக்டர் கூறியபடி பிளட்டெஸ்ட், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. அல்ட்ரா சவுண்டு,எக்கோ,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளியர் ஸ்கேன் ஆகியவைகளை 14,15,17 ஆகிய தேதிகளில் எடுத்தோம்.18ந் தேதி டாக்டரைச் சந்தித்தோம்.

ரிப்போர்ட்டுகள் அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்தார் டாக்டர்.
மிக அருமையான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.சிகிச்சை தொடரும் என்றும் ஆனால் இனிமேல் மாதா மாதம் இல்லை என்றும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசி மருந்து போட வேண்டும் என்றார்.காதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு டாக்டர் கார்த்திகேயனைச் சந்தித்ததைச் சொன்னேன்.ரேடியேசன் நேரத்திலேயே காதில் டாமேஜ் ஆகியிருக்கலாம் என்றும் இதோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்.அடுத்த சிகிச்சைக்கு 2008ம் ஆண்டு சனவரி மாதம் பொங்கல் கழித்து மருத்துவமனைக்கு வருமாறும் கூறி அனுப்பிவிட்டார்.

Sunday, October 21, 2007

கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 1

கீமோ மருந்துகளின் பின்விளைவுகள் பற்றி சில தகவல்களை ஏற்கனவே டாக்டர் சொல்லியிருந்தார்.
1.தலைமுடி பூராவும் கொட்டிவிடும்.சிகிச்சைக்குப் பின் மீண்டும் வளர்ந்து விடும்.
2.வாந்தி வரும்.வாந்தி வராமல் இருக்க மாத்திரை கொடுப்போம்.தினமும் உணவுக்குமுன் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
3.வாய் உலர்ந்து வரும்.மலச்சிக்கல் ஏற்படும்.அல்லது டயோரியா ஏற்படும்.இவைகளைத் தவிர்க்க நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
பொதுவாக ஒருவருக்கு ஏற்படும் பின்விளைவுகள் இன்னொருவருக்கு ஏற்படாது.ஒருவருக்கொருவர் வித்தியாசப்படலாம்.

வீட்டுக்கு வந்ததிலிருந்தே உடல் சோர்வடைய ஆரம்பித்தது.வயிறெல்லாம் எரிந்தது.இரு கால்களும் என்னமோ பத்துமைல் தூரம் ஓடிவந்தால் எப்படி வலிக்குமோ அப்படி வலிக்க ஆரம்பித்தன.தண்ணீர் குடிக்கவே வெறுப்பாக இருந்தது.மறுநாளிலிருந்து தண்ணீர் குடித்தாலே வாந்தி வந்தது.இளநீரைக் கொண்டு வரச்சொல்லிக் குடிக்க ஆரம்பித்தேன். சுகர் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது.என்ன செய்வது.டாக்டரிடம் கேட்டேன்.இளநீரை அளவோடு குடிக்கலாம் என்றும் தண்ணீர் அதிகமாகக் குடிக்கவேண்டும் என்றும் கூறினார்.தண்ணீர் அதிகமாகக் குடிக்கக் குடிக்க கீமோ மருந்துகளின் பாதிப்பு குறையும் என்றார்.

இவைகளையெல்லாம் ஓரளவு சமாளித்துவிட்டேன்.மிகவும் பாதித்தது மலச்சிக்கல் பிரச்சனைதான்.காலையில் எழுந்தாலே மலம் கழிப்பதற்குள் உயிர் போய் உயிர் வரும்.டாக்டரைக் கேட்டதற்கு மலம் கழிப்பதற்கு முன் ஒரு ஆயின்மெண்டும் கழித்தபின் இன்னொரு ஆயின்மெண்டும் மலத்துவாரத்துக்குள் ந்ன்றாகப் போடச்சொன்னார்.பயனில்லை.நாளாக நாளாக ரத்தமும் அதிகமாக் வெளிப்பட ஆரம்பித்தது.அதற்குள் அடுத்த கீமோ ஊசி போடவேண்டிய நாளான டிசம்பர் 11ந் தேதியும் வந்து விட்டது.
அன்று டாக்டரைப் பார்த்ததும் உடல் வேதனையில் பேச முடியவில்லை.என்னைப் பரிசோதித்த டாக்டர்"தண்ணீரே குடிக்கிறதில்லே போலிருக்கு.அதனாலே தான் மலச்சிக்கலுடன் மலத்துவாரத்தில் தசைகளில்
இன்ஃபெக்சன் ஏற்பட்டு வீங்கியுள்ளது.இது பைல்ஸ் இல்லை."என்றார்.நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.தவறினால் மலச்சிக்கல் மற்றும் வீக்கம் குறையாதென்றும் யூரினில் தொற்றுநோய் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைய ஆரம்பித்துள்ளது என்றார்.புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் என்றார்.வலி குறைவதற்கு சில ஹோமியோபதி மருந்துகளை எழுதிக்கொடுத்தார்.அன்று மூன்று மணி நேரத்தில் வினோரல்பின்(2) கீமோ ஊசி போடப்பட்டது.

அடுத்த வாரம் முழுதும் இதே பிரச்சனை தொடர்ந்தது.கொஞ்சமும் குறையவில்லை.சித்தமருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு விசாரித்தேன்.அண்ணாநகர் மேற்கில் குடியிருக்கும் கிருஷ்ணகுமார் என்ற சித்த மருத்துவரைசந்தித்தேன்.அவர் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர் மட்டுமல்ல,காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவத்துறைத் தலைவராகவும் பணீயாற்றுகிறார்.அவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டபின் வீக்கம் குறைந்தது.ரத்தம் வெளியேறுவது நின்றது.

இந்நிலையில் தலைமுடி கொட்ட ஆரம்பித்தது.காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது பார்த்தால் தலையணை பூராவும் நிறைய முடி விழுந்து ஒட்டியிருக்கும்.பார்த்தேன்.சலூனுக்குச் சென்று சவரம் செய்பவரை அழைத்துவரச் செய்து தலையை மொட்டை அடித்துக்கொண்டேன்.அக்கம் பக்கத்தவர்கள் கேட்டனர் என்னவென்று. திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டதாகப் பொய் சொன்னேன். முன்னதாகவே வடபழனியில் உள்ள சினிமா நடிகர்களுக்கு விக் தயாரித்துக்கொடுக்கும் கடைக்குச் சென்று
நல்ல விக் ஒன்று தயாரித்து வாங்கிக்கொண்டேன்.இன்றைக்கு வரைக்கும் நான் வெளியே செல்லும்போது இந்த விக் மிகவும் உதவுகிறது.

அடுத்த வினோரல்பின்(3) கீமோ ஊசி டிசம்பர் 20ந் தேதி போடப்பட்டது.இரண்டாவது ஹெர்சப்டின் போடுவதற்காக சனவரி 2ந் தேதியன்று மருத்துவமனைக்கு வருமாறு சொன்னார்கள்.அதன்படியே சனவரி 2ந் தேதி சென்று அட்மிட் ஆனேன்.3ந் தேதி ஹெர்சப்டின்(2),4ந்தேதி டாஸிடாக்ஸ்ல்(2),5ந் தேதி வினோரல்பின்(4) போடப்பட்டது.ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அது மீண்டும் வளர்வதற்காக நியூகேன் என்ற ஊசி மருந்தை ஐந்து நாட்களுக்குத் தொடந்து போட்டுக் கொள்ளுமாறும் சொன்னார்கள்.அதையும் போட்டுக்கொண்டேன்.

கீமோவும் பழகிவிட்டது.அதன் பின்விளைவுகளும் பழகிவிட்டன.அவைகளுடன் போராடிப் போராடி நாட்களைக் கழிக்கவும் பழகிவிட்டேன்.பாதிப்புகள் குறைய வேண்டுமென்றால் நன்றாகச் சாப்பிட வேண்டும்.நிறையப் பழங்கள் உட்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.யூரின் இன்ஃபெக்சன் ஏற்பட்டு அதற்கான''ஆன்டிபயாடிக்" மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.


அடுத்துசனவரி 12ந் தேதி மருத்துவமனை சென்றேன்.அன்று வினோரல்பின் 5வது ஊசி போடவேண்டியது.எனக்கோ ஊசி போடுவதற்காக கையில் நரம்புகள் அவ்வளவாக அகப்படாது.ஊசி போடவந்த நர்ஸ் என்ன செய்தார் தெரியுமா?முதலில் வினோரல்பின் கீமோ மருந்தை சலைன் பாட்டிலில் ஏற்றிவிட்டு ஸ்டாண்டில் மாட்டி விட்டார்.பாட்டிலில் இருந்து டியூப் வழியாக கீமோ மருந்து கலந்த சலைன் வாட்டர் வந்துகொண்டிருக்கும்போது தான் கையில் ஊசி ஏற்றுவதற்காக நரம்பைத்தேடிக் குத்த ஆரம்பித்தார்.நரம்பு அகப்படவில்லை.அதே நேரத்தில் ஊசி வரை வந்திருந்த மருந்துத் துளிகள் கையில் பட்டும் ஊசி குத்திய இடங்களிலிருந்து வெளியேறவும் ஆரம்பித்தது.ஒரு வழியாக ஐந்தாவதுதடவை குத்தும் போது நரம்பு அகப்பட்டு ஊசியைக் குத்தினார் நர்ஸ்.அன்று வீட்டுக்கு வரும் போதே ஊசி குத்தின இடங்களில் எரிய ஆரம்பித்தது.இரு நாட்களில் லேசாகக் கருமையாக நிறம் மாறியது.

அடுத்த ஊசி போட்டுக்கொள்வதற்காக சனவரி 22ந் தேதி மருத்துவமனை சென்றேன்.ஊசி போட்டிருந்த இடத்தில் சீழ் உண்டாகி பெரிய வீக்கமாக மாறியிருந்தது. இதைப்பார்த்ததும் டாக்டரின் முகம் மாறியது.மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.என்னவென்று நான் விவரித்தேன்.உடனே சீழ் பிடித்த இடத்தைத் துடைத்து விட்டார்.முழுதம் துடைத்தபின் பார்த்தால் ஆழமாக ஒரு பள்ளம் ஏற்பட்டு வெள்ளையாகத் தெரிந்தது. நன்றாகச் சுத்தம் செய்தபின் ஜெல் மருந்தைத் தடவி பிளாஸ்திரி போட்டார். ரீஜென்-டி என்ற அந்த ஜெல் ஆயின்மெண்டைப் புதிதாக வாங்கி இரு நாளுக்கு ஒருமுறை போடுமாறு சொன்னார்.அன்று வினோரல்பின் ஊசி(6)போடப்பட்டது.

கீமோ போடும் முறை அதுவல்ல என்றும்,கீமோ மருந்துகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை என்றும் சிலவகையான கீமோ மருந்துகள் தப்பித் தவறிக் கையில் பட்டாலே கையை வெட்டிவிடவேண்டி வரும் என்றும் கூறினார்.அந்த நர்சைக் கூப்பிட்டு நன்றாகக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றியது.ஆனால் முடியவில்லை.ஏனென்றால்
அன்று தான் அந்த நர்ஸ் வேலையை ராஜினமா செய்து கொண்டிருந்தார்.மருத்துவமனையில் அவருக்கு அன்று தான் கடைசிப் பணி புரியும் நாள்.விரைவில்திருமணம் செய்யவிருப்பதாகவும்,திருமணத்திற்குப் பின் பாண்டிச்சேரி சென்று புதுவாழ்வை தொடங்கவிருப்பதாகவும் சொன்னார்.நிறைந்த மனதுடன் வாழ்த்தினேன்.என் விதி இப்படிப் புண் ஆக வேண்டும் என்று இருக்கிறது.


அடுத்துவந்த இடைவெளிகளில் வரிசையாகக் கீமோ ஊசிகள் போடப்பட்டன.நோய்களுடனும்,அதற்கான சிகிச்சை முறைகளுடனும் நன்றாகப் பழகிவிட்டதால் பெரிய மாறுதல் இல்லை.

31.01.2007 வினோரல்பின்(7)

12.02.2007 ஹெர்சப்டின் (3)
13.02.2007 டாஸிடாக்ஸல்(3)
14.02.2007 வினோரல்பின்(8)

14.03.2007 ஹெர்சப்டின் (4)
15.03.2007 டாஸிடாக்ஸல்(4)

16ந் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு வெள்ளை அணுக்கள் வளர்வதற்காக
நியூகேன் என்ற ஊசிமருந்து ஐந்து நாளைக்குப் போட்டுக்கொண்டேன்.

பின்பு ஏப்ரல் மாதம் 17ந் தேதியன்று மருத்துவமனை சென்றோம்.யூரின் இன்ஃபெக்சன் அதிகமாக உள்ளதாகவும் புரோட்டின் மிகவும் குறைந்திருப்பதாகவும் டாக்டர் சொன்னார்.இவைகளைச் சரி செய்வதற்காக மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.இன்னும் நான்கு முறை கீமோ ஊசி மருந்து போடவேண்டும் என்றும் மே மாதம் 4ம் தேதி வருமாறும் சொன்னார்.

ஹெர்சப்டின் என்னும் அதிசய ஹார்மோன் மருந்தும் கீமோ மருந்துகளும்

2006 டிசம்பர்ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கெல்லாம் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்கு வந்து டாக்டரைச் சந்தித்தோம்.எத்தனை ஊசிகள் போட வேண்டும் என்றும் அதற்கான கால அளவுகளும் சொன்னார்.
ஹார்மோன் மருந்து
ஹெர்சப்டின்.......................மாதம் ஒன்று வீதம் ஆறு மாதங்களுக்கு 6
கீமோ மருந்துகள் பின்வருமாறு
டாசிடாக்சல்........................மாதம் ஒன்று வீதம் நான்கு மாதங்களுக்கு 4
வினோரல்பின்......................வாரம் ஒன்று வீதம் எட்டு வாரங்களுக்கு 8
இவைகள் முதலில் முடியட்டும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிறகு சொல்கிறேன் என்றார்.

அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் விஜயா ஹெல்த் சென்டரில் அட்மிட் ஆனேன்.மறுநாள் காலையில் டாக்டர் சொன்ன அதிக விலையுள்ள ஊசி மருந்து வந்தது.
அந்த மருந்தின் பெயர் ''ஹெர்சப்டின்''.கேன்சர் உலகில் இன்றைய தேதிக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசய மருந்து.இது கீமோ மருந்தல்ல. ஹார்மோன் மருந்து.இந்த மருந்து இரண்டு வழிகளில் வேலை செய்கிறது.கேன்சர் செல்கள் வளர்வதைத் தடுக்கிறது.உடலில் இயங்கும் பாதுகாப்பு அமைப்பைக் கேன்சர் செல்களைக் குறி வைக்குமாறு தூண்டுகிறது.

2ம் தேதியன்று மதியம் பதினோரு மணியளவில் கையில் உள்ள நரம்பைத் தேடி ஊசி ஏற்றினார்கள்.அலர்ஜிக்கும் வாந்தி வராமல் இருப்பதற்கும் இன்னும் பல தடுப்பு சிகிச்சைகளுக்கும் என ஊசி மருந்து ஏற்றினார்கள்.பனிரெண்டு மணியளவில் ஒரு லிட்டர் சலைன் பாட்டிலில் ஹெர்சப்டின் மருந்தைக் கலந்து ஏற்ற ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் மெல்ல ஏற வேண்டுமாம்.மருந்து முழுதும் முடிய இரவு ஒரு மணிக்கு மேலாகி விட்டது.

மறுநாள் 3ம் தேதியன்று காலை அரை லிட்டர் வெறும் சலைன் ஏற்றப்பட்டது.இது முடிய மூன்று மணிநேரமானது.முதல்நாளன்று போட்ட தடுப்பு ஊசிகளை இன்றும் போட்டார்கள்.பிறகு டாசிடாக்சல் என்ற கீமோ மருந்தை
அரை லிட்டர் சலைன் பாட்டிலில் ஏற்றி கைநரம்பில் ஏற்கனவே உள்ள ஊசி மூலம் ஏற்ற ஆரம்பித்தார்கள்.இதுவும் மூன்று மணி நேரம் ஏற வேண்டுமாம்.
இந்த கீமோ மருந்து ஏற ஆரம்பித்தவுடனேயே உடல் வெப்பமடைய ஆரம்பித்தது.நேரம் செல்லச் செல்ல வாய் உலர்ந்து விட்டது இரு கால்களும் சோர்வடைய ஆரம்பித்தன.மருந்து உள்ளே செல்வதினால் இப்படியெல்லாம் ஆகிறது என்று சொன்னார்கள்.
இம் மருந்து முடிந்ததும் மறுபடியும் இரண்டு அரை லிட்டர் சலைன் பாட்டில்களை தலா மூன்று மணி நேரம் வீதம் ஆறு மணி நேரம் ஏற்றினார்கள்.ஆக மொத்தம் இன்றும் பனிரெண்டு மணி நேரம் ஆனது.


அடுத்த நாள்4ம் தேதி காலை பதினோரு மணிக்கு வினோரல்பின் என்ற கீமோ மருந்தை அரை லிட்டர் சலைன் பாட்டிலில் ஏற்றி கையில் உள்ள நரம்பு ஊசிமூலமாக மூன்று மணி நேரம் ஏற்றினார்கள்.அன்று மாலை ஆறு மணி அளவில் டிஸ் சார்ஜ் ஆனேன்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் எடுத்து மருத்துவமனைக்கு விபரம் தெரிவிக்க வேண்டுமென்றும்,ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சொன்னார்.
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நாளாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறையெல்லாம் பிளட் டெஸ்ட் எடுத்ததில்லையே,இப்போது எடுக்க வேண்டும் என்கிறாரே!டாக்டரிடமே கேட்டோம்.உள்ளே செலுத்தப்பட்ட கீமோ மருந்துகள் கேன்சர் செல்கள் மட்டுமல்லாது நன்றாக இருக்கும் செல்களையும் தாக்கும் என்றும்,வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகின்ற எலும்புகளிலுள்ள மஜ்ஜையையும் தாக்கும் என்றும் அதனால் வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும் என்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தது நான்காயிரமாவது இருக்க வேண்டும் என்றும் அதற்கும் கீழே குறைந்தால் வெள்ளை அணுக்கள் சீக்கிரமாகவும் அதிகமாகவும் வளர்வதற்காக அதற்கென உள்ள ஊசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்.அதற்காகத் தான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டி இருக்கிறது என்றார்.

சரிதான் என்று வீட்டுக்கு வந்தோம்.அடுத்ததாக கீமோ மருந்துகளின் பின்விளைவுகளால் நான் பட்ட துன்பம் அளவிட முடியாது.

Friday, October 19, 2007

ஹைதராபாத் அபோல்லோ மருத்துவமனையில் பெட் ஸ்கேன் எடுக்கப்பட்டது.

மறுநாள் 20.11.2006ந்தேதி மேற்கு அண்ணாநகரிலுள்ள எம்.வி.மோகன் டயாபடிஸ் சென்டருக்குக் காலை எட்டு மணிக்கே சென்று விட்டோம்.சர்க்கரை அளவைப் பரிசோதித்த டாக்டர் கயல்விழி என்பவர் எனக்கு டைப் 2 டயாபடிஸ் வந்துள்ளது என்றும்,வெறும் மாத்திரையினால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.உடனே சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய அவசரத்தைச் சொன்னோம்.இரண்டு தினங்கள் இன்சுலின் ஊசி போட்ட் பிறகும் கட்டுக்குள் வரவில்லை என்றால் அடுத்த சிகிச்சை செய்யலாம் என்றார்.
ம்....எனக்காவது.சுகர் கட்டுக்குள் வருவதாவது!மீண்டும் 22.ந்தேதி சென்று டாக்டரைப் பார்த்தோம்.எங்களை கோபாலபுரத்திலுள்ள அவர்களின் தலைமை மருத்துவமனைக்கு மறுநாள் போகுமாறு சொன்னார்கள்.அதன்படி அங்கு 23ந் தேதி காலை அட்மிட் ஆகி சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வந்து மறுநாள் 24ந் தேதி மாலை டிஸ்சார்ஜ் ஆனேன்.அன்று முதல் இன்று வரை தினமும் இன்சுலின் ஊசி மூன்று வேளையும் மாத்திரை இரு வேளையும் போட்டுக்கொள்கிறேன்.இருந்தும் சர்க்கரை அளவு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.பெரும்பாலான கேன்சர் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அவ்வளவாகக் கட்டுக்குள் வராது என்றும்,காரணம் இவர்களுக்குக் கொடுக்கப்படும் கீமோ ஊசி மற்றும் கீமோ மருந்துகளின் பாதிப்பு என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.எனவே முடிந்தவரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அடிக்கடி சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள்.


அடுத்தநாள் 25ந்தேதி சனிக்கிழமை பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்று டாக்டரைப் பார்த்தோம்.ஹைதராபாத் பெட் ஸ்கேன் சென்டருக்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டோம்.அங்கு பணிபுரியும் பீமாராவ் என்ற அலுவரைத் தொடர்பு கொண்டு நாம் செல்லும் தேதியையும் ஸ்கேன் எடுக்கும் தேதியையும் உறுதி செய்துகொள்ளும்படியும் டாக்டர் கூறினார்.

ஹைதராபாத் நகரில் ஜுபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள அபோல்லோ மருத்துவமனையில் உள்ளதாம் இந்த பெட் ஸ்கேன் சென்டர்.நாங்கள் இதுவரை ஹைதராபாத் சென்றதில்லை.அன்றே பீமாராவுடன் தொடர்பு கொண்டோம்.அனைத்து விபரங்களையும் குறித்துக்கொண்டார்.27ந்தேதியே ஸ்கேன் எடுத்துவிடலாம் என்றும் கூறினார்.வந்தால் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் அங்கேயே உள்ளதாகவும் சொன்னார்.நாங்கள் ஞாயிறன்றே விமானத்தில் வருவதாகச் சொன்னவுடன் விமான நிலையத்திற்கு காரை அனுப்புவதாகவும் சொன்னார். சிறிது நேரத்திலேயே டாக்டர் மாதவி என்பவரும் தொலைபேசியில் அழைத்தார்.தான்,இந்த பெட் ஸ்கேன் செண்டரில் உள்ள டாக்டர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.நாங்கள் வரும் விபரங்களை உறுதிப்படுத்திக்கொண்டார். அப்பாடா என்றிருந்ததது.


மறுநாள் 26ந்தேதி பிற்பகல் ஒருமணியளவில் ஹைதராபாத்துக்கு விமானத்தில்புறப்பட்டோம். இரண்டு மணியளவில் சென்றடைந்தோம்.
முதல் நாளே தகவல் அனுப்பியிருந்தபடியால்,எங்களை அழைத்துச் செல்ல காரை அனுப்பியிருந்தார்கள். மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறையை ஒதுக்கியிருந்தார்கள்.விடுதிக்கு மிக அருகாமையிலேயே பெட் ஸ்கேன் சென்டர் இருந்தது. வந்துசேர்ந்ததும் பீமாராவைத் தொடர்பு கொண்டோம்.ந்ன்றாக ரெஸ்ட் எடுக்குமாறும் மறு நாள் காலையிலிருந்து டீ,காபி,காலை டிபன் என்று எதுவும் உட்கொள்ளாமல்
ஒன்பது மணியளவில் சென்டருக்கு வந்துவிடுமாறும் கூறினார்.

ஹைதராபாத்தில் ஜுபிலி ஹில்ஸில் உள்ளது அபோல்லோ மருத்துவமனை.இங்குதான் பெட் ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளது.
ஆங்கிலத்தில் பொசிட்ரான் எமிஸன் டோமோகிராபி( POSITRON EMISSION TOMOGRAPHY)அழைக்கப்படுகிறது.ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்துப் படித்தால் பெட் என்று வருகிறதல்லவா?
ஒருவருக்குக் கேன்சர் வந்துள்ளதைக் கண்டுபிடிப்பதற்காகவும் ஏற்கனவே கேன்சர் வந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு,அந்த சிகிச்சைகள் எந்த அளவுக்குச் செயல்பட்டுள்ளது
என்பதைக்கண்டுபிடிப்பதற்காகவுமே பொதுவாகப் பெட் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. வெளிநோயாளியாகவே வந்து நான்கைந்து மணிநேரங்களில் எடுத்துவிடலாம்.ஸ்கேன் எடுப்பதற்கு நான்குமணிநேரத்திற்கு முன்பிருந்தே எதுவும் சாப்பிடக்கூடாது. என்வே காலைலேயே ஸ்கேன் எடுத்துக்கொள்வது நல்லது.

சி.டி.ஸ்கேன்.,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவைகள் ஒரு நேரத்தில் உடம்பின் ஏதேனும் ஒரு பகுதியைத்தான் ஸ்கேன் எடுக்க முடியும்.ஆனால் பெட் ஸ்கேனில் முழு உடம்பையும் ஒரே நேரத்தில்
ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம்.அதுமட்டுமல்லாமல் இதயத்தின் தசைகளில் எந்த அளவுக்கு ரத்தம் பாய்கிறது என்பதை முடிவு செய்யவும் இதயத்தின் பல்வேறு செயல்பாடுகளையும் அறிந்து கொள்ளவும்,மூளையின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் பெட் ஸ்கேன் மிகவும் உதவியாக இருக்கிறது.

மறுநாள்27ந் தேதி காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் பெட் ஸ்கேன் சென்டருக்குச் சென்று பதிவு செய்து கொண்டோம்.ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்கள் நான்கு பேர் இருந்தனர்.பத்து மணிக்கெல்லாம் என்னைக்கூப்பிட்டுச் சென்றனர்.காலையிலிருந்தே எதுவும் உட்கொள்ளவில்லை என்பதைக் கேட்டு உறுதி செய்துகொண்டனர். கதிர் இயக்க மருந்து கலந்த தண்ணீரை அரை மணிநேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் மொத்தம் ஒன்றரை மணி நேரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் குடிக்க வைத்தனர்.பிறகு முதல் மாடியில் உள்ள ஓய்வு அறையில் ஒரு மணி நேரம் தங்க வைத்தனர்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் பீமாராவ் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். என் கணவர் அவருடன் பேசி இந்த ஸ்கேன் தொடர்பான செயல்முறைகள் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார்.பிறகு எனக்கும் விளக்கிச் சொன்னார்.
சிங்கப்பூரில் உள்ள கிளென் ஈகிள் என்ற நிறுவனத்துடன் இணைந்து
இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும்,நிமிடத்துக்கு நிமிடம் வழக்கத்துக்கு மாறாக வளரும் செல்களின் வளரும் வேகம்,இருக்கும் இடம்,என்ன உருவில்(shape)உள்ளது,சரியான அளவு(exact size)போன்றவைகளை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் சொன்னார்.

ஒன்றரை மணிநேரத்திற்குப் பின் பெட்ஸ்கேன் இயந்திரம் உள்ள அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.அங்கு கதிர் இயக்கம் கலந்த மருந்தைக் கையில் உள்ள நரம்பு வழியாகச் செலுத்தினர்.உடனே உடலெங்கும் வெப்பம் பரவியது. சுமார் ஒரு மணிநேர ஸ்கேன் எடுக்கப்பட்டது.

மணி பிற்பகல் மூன்று ஆகியிருந்தது.பின் முன்பு சொன்ன மேல்மாடியிலுள்ள ஓய்வு அறையில் எங்கள் இருவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
உணவு முடித்துக்கொண்டு எங்கள் அறைக்கு வந்தோம்.மாலை ஐந்தரை மணியளவில் மீண்டும் கூப்பிட்டு அனுப்பி ஒரு ஐந்து நிமிடத்தில் இன்னொரு முறை ஸ்கேன் எடுத்தார்கள்.அப்போது அங்கிருந்த டெக்னீசியன், எனது இடது மார்பகம் நார்மலாக உள்ளது.வலது மார்பகம் சுருங்கி சின்னதாக இருக்கிறதே காரணம் என்ன என்று கேட்டார்.ரேடியேசன் கொடுக்கப்பட்ட விபரம்,பிராக்கிதைரபி செய்யப்பட்ட விபரம் எல்லாம் சொன்னேன்.ஆச்சரியமாக எல்லா விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
"ஓ!இந்த சிகிச்சைகளெல்லாம் செய்தால் இப்படி ஆகுமோ?"

மறுநாள் 28ந் தேதி காலை பத்து மணிக்கெல்லாம் ஸ்கேன் ரிப்போட்டுகளைக் கையில் கொடுத்துவிட்டார்கள்.அன்று பிற்பகல் நான்கு மணியளவில் விமானத்தில் புறப்பட்டு ஐந்து மணிக்கெல்லாம் சென்னை வந்துசேர்ந்தோம்.

மறுநாள் 29ந் தேதி காலை பத்து மணிக்குப் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்று டாக்டரைச் சந்தித்தோம்.ரிப்போர்ட்டுகளைப் பரிசீலித்த டாக்டர்,மார்பகத்தில் மீண்டும் கேன்சர் வந்துள்ளதும்,கல்லீரலில் கேன்சர் பரவியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது என்றும் ,அனைத்துக் கேன்சர் செல்களும் ஆக்டிவாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் மிக வேகமாக வளர்வதாகவும் சொன்னார். அதாவது,17ந் தேதியன்று எடுத்த சி.டி.,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்களில் தெரிந்த கேன்சர் செல்களின் அளவுகளை விட
இப்போது 27ந் தேதி எடுத்த பெட் ஸ்கேனில் இரு மடங்காகத் தெரிகிறது என்று சொன்னார். இவ்வளவு சிகிச்சைகள் செய்தும் பதினோரு நாட்களில்
இருமடங்காக வளர்ந்த கேன்சர் செல்களின் வேகத்தை என்னவென்று சொல்வது?
அன்றே டாக்டரின் அறிவுரையின்படி,விஜயா மருத்துவமனை இதயநோய் டாக்டர் ஏ.எல்.நாராயணன் என்பவரிடம் சென்றுமீண்டும் ஒரு எக்கோ எடுக்கப்பட்டது .கீமோ மருந்து செலுத்துவது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.அதன் பிறகு ஒரு நாள் கழித்து டிசம்பர் ஒன்றாம் தேதி வந்து கீமோ சிகிச்சைக்காக மருத்துவமனை வருமாறு டாக்டர் கூறினார்.

Thursday, October 18, 2007

இங்கிவனை யான் மகனாகப் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.'ஏற்கனவே பல லட்சங்கள் செலவாகி விட்டன.இப்போது மேலும் பதினைந்து இருபது லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று டாக்டர் கூறுகிறார்.ஏற்கனவே போதுமான அளவுக்கு உடல் ஊனமாகிவிட்டது.வயதோ ஐம்பத்துமூன்று ஆகிவிட்டது.குடும்பக் கடமைகள் என்று ஏதுமில்லை. குழந்தைகள் அனைவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.ஒரே மகனோ கேட்கக் கேட்கக் கொடுத்துக்கொண்டே இருக்கிறான்.அவனை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது.
சாதாரண நோயாக இருந்தால் பரவாயில்லை.இவ்வளவு பெரிய மேஜர் நோயுடன் இவ்வளவு நாள் போராடியது போதும்.வருவது வரட்டும் மேற்கொண்டு சிகிச்சை அது இது என்று எடுக்க வேண்டாம்.வெறும் மாத்திரைகள் கொடுங்கள் என்று டாக்டரிடம் கேட்கலாம்.
இந்த உலகத்தில் வறிய நிலையில் இருக்கும் எத்தனையோ பெண்களுக்கும் இந்நோய் வந்திருக்குமல்லவா?அவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு நிலை வந்தால் என்ன பாடுபடுவார்கள்? என் காலத்திற்குப் பின்னால் இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு ஏற்பாட்டை நான் உயிருடன் இருக்கும்போதே செய்துவைக்க வேண்டும்'

இவ்வாறு சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.என் கணவரோ பணத்தைப் பற்றிக் கவலை இல்லை.மகனிடம் விபரத்தைச் சொன்னாலே வேண்டிய பணம் அனுப்பிவிடுவான்.விடிந்ததும் மகனுடன் பேசலாம் என்றார்.

மறுநாள் 2006 நவம்பர்19ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.காலையில் சிங்கப்பூரில் இருக்கும் என் மகனுடன் பேசினேன்.விபரமெல்லாம் சொன்னேன்.ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை என் மகன்.''அதுக்கென்னம்மா.இருபது லட்சந்தானே.நீங்க என்ன பண்றீங்க.இப்பவே டாக்டரை செல்லில் கூப்பிடுங்க.அவர் சொன்ன சிகிச்சைக்குச் சரின்னு சொல்லிடுங்க.கேக்குற பணத்தை இப்பவே ஆன்லைனில் அப்பாவோட கணக்குக்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுகிறேன்.நாளைக்கே ஆஸ்பத்திரிக்குப் போங்க.மளமளனு ஒவ்வொரு சிகிச்சையா முடிங்க."

''டேய்.பணம் கொஞ்சநஞ்சமில்லேடா.''

என்மகன் சிரித்தான்.

''தெரியுதும்மா.''
''போதும்டா எனக்கு செலவு பண்ணினது.''
''ஏம்மா''
''எனக்குச் செலவு பண்றதைவிட வேறெ நல்ல.....''
அவன் குறுக்கிட்டான்."சரிம்மா.நீ சொல்றதும் செய்றேன்.''
''என்ன சொல்றே?''
''உன் கனவே அது தானம்மா.இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவவேண்டும்.அதுவும் செய்யலாம்மா.உன்னை வச்சுத்தானே செய்யணும்? "
என்னால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
எனக்குப் பணம் முக்கியமில்லேம்மா.நீ தான் முக்கியம்மா.எனக்கு நீ வேணும்மா."
என் உள்ளம் நெகிழ்ந்தது.

அன்றிரவு பதினோரு மணிக்குமெல் டாக்டர் செல்லில் கூப்பிட்டார்.
என் மகன் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக டாக்டருடன் பேசியதாகச் சொன்னார்.விபரங்கள் அனைத்தையும் கேட்டதாகவும்,பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சிகிச்சையை உடனே தொடருமாறும் கூறினானாம்.அதிகமான செலவு எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர் ஞாபகப்படுத்தியதாகச் சொன்னார்.
"அதற்கு உங்கள் மகன் என்ன சொன்னார் தெரியுமா?"
"சொல்லுங்கள் சார்."
"பணம் முக்கியமில்லை டாக்டர்.இன்றைக்குப் பெரிய தொகையா இருக்கிற பணம் நாளைக்குச் சிறியதா மாறிவிடும்.இப்போது இந்த செலவைச் செய்றதுக்குத் தயங்கினா, பணம் இருந்தும் அம்மாவைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற குற்ற உணர்ச்சி பிற்காலத்தில் எனக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். அது என்னால் தாங்கமுடியாது. பதினைந்து இருபது லட்சம் தானே செலவாகும்.கோடி ரூபாயாக ஆனாலும் ஆகட்டும் டாக்டர்.இந்தக் கோடி ரூபாயை என்றைக்கு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.ஆனால் என் அம்மாவைச் சம்பாதிக்கமுடியாதே டாக்டர்.எனக்கு என் அம்மா வேண்டும் டாக்டர்.'என்று சொன்னார் உங்கள் மகன் அனுராதா."
இப்படிப்பட்ட பையனைப் பெற நீங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அனுராதா.''என்றார் டாக்டர்.

மெடாஸ்டிக் கேன்சருக்கான இன்றைய நவீன சிகிச்சை முறைகள்.

''உங்களுக்கு வலது மார்பகத்தில் மீண்டும் புற்றுநோய் தாக்கியுள்ளது.அது மட்டுமில்லாமல் அங்கிருந்து கல்லீரலுக்கும் பரவியுள்ளது.அது போதாதென்று டயாபடிஸ் வேறு வந்திருக்கிறது.இவை அனைத்திற்கும் உடனே உடனே சிகிச்சை செய்தாக வேண்டும்.''

இவ்வாறு டாக்டர் சொன்னார்.இப்போதுதான் இன்னதென்று புரியாத பயம் வந்தது. டாக்டர் சொல்லச் சொல்ல பயம் அதிகரித்தது.

டாக்டர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார்.அதே நேரத்தில் பலவழிகளில் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

நான் கேட்டேன்."ஏன் சார்.இவ்வளவு சிகிச்சைகள் செய்தும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டும் மார்பகத்திலேயே மீண்டும் வரக் காரணம் என்ன?கல்லீரலிலும் பரவக் காரணம் என்னவாக இருக்கும்?"

''வந்திருச்சு.எப்படி வந்ததுன்னு யோசிக்க இது நேரமில்லை.வந்திருக்கிறதுக்கு என்ன சிகிச்சை செய்தாகணும்னு தான் யோசிக்கணும்.''என்றார் டாக்டர்.


"இவ்வளவு டெஸ்டுகள் எடுத்தாச்சு. இன்னும் ஒரு ஸ்கேன் இருக்கு. பெட் ஸ்கேன் னு பேரு. இந்தியாவில் டெல்லி,பூனே,ஹைதராபாத்.இந்த மூன்றே இடங்களில் தான் அந்த ஸ்கேன் எடுக்கிற வசதி இருக்கு.நமக்கு ஹைதராபாத் தான் கிட்டே இருக்கு.சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் ஆகியவகளில் இருந்து கேன்சர் செல்கள் வந்திருக்கு,பரவி இருக்குன்னு மட்டும்தான் தெரியும்.ஆனா இந்த பெட் ஸ்கேனில் அந்த செல்கள் உயிருடன் இருக்கிறதா இல்லையான்னும் தெளிவாத் தெரியும்.எவ்வளவு தீவிரமா அந்த செல்கள் இயங்கிக் கொண்டுஇருக்குன்னும் தெரிஞ்சுரும்.
ஆனா ஸ்கேன் சார்ஜ் தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்."

''சரி சார்.அந்த ஸ்கேனை எடுத்திடலாம்.அப்புறம்?''

"புதுசா ஒரு ஊசி வந்திருக்கு.அதோட விலை ஒன்றரை லட்சம் ரூபாய்.அந்தஊசியை மாதா மாதம் ஒரு ஊசி வீதம் ஆறு மாதத்திற்கு ஆறு ஊசியையும் அத்தோட வேறு சில கீமோ ஊசிமருந்துகளையும் போடணும்."

"என்னது கீமோவா?"

"ஆமா அனுராதா. இந்தமுறை கீமோதைரபி சிகிச்சைக்கான ஊசிகளையும் கண்டிப்பாகப் போட்டாகணும்.வேறு வழியில்லை.என்ன?தலைமுடி பூராவும் கொட்டிவிடும்.சிகிச்சை முடிஞ்சதும் மீண்டும் நல்லா வளர்ந்திடும்"

"வேறெ சைட் எஃபக்ட் சார்?"

"டிரீட்மெண்டின்போது வாந்தி,மலச்சிக்கல்,அலர்ஜின்னு பலது இருக்கு.எல்லா சைட் எஃபக்டும் எல்லாருக்கும் வரும்னு சொல்ல முடியாது.ஒரு சில பேருக்கு சிலது வரும்.சில பேருக்கு சைட் எஃபக்டே இருக்காது.தலைமுடி கொட்றதைத் தவிர மற்ற அனைத்துக்கும் மாற்று மருந்து கொடுத்திடுவோம்.சரியாயிரும்.

"சரி சார்.நீங்க சொல்றபடியே அந்த ஊசிகளெல்லாத்தையும் ஆறு மாசத்துக்குப் போட்டா?"

"போட்டாத் தான் வந்திருக்கிற கேன்சர் செல் எல்லாம் அழிஞ்சிடும்."

மீண்டும் டாக்டர் தொடர்ந்தார்.''என்ன.செலவுதான் பதினைஞ்சு இருபது லட்சத்தைத் தாண்டிவிடும்.நல்லா யோசிச்சுச் சொல்லுங்க.நீங்க சரின்னா
அடுத்து என்னென்ன செய்யணும்னு சொல்றேன்.அவ்வளவு செலவு செய்யமுடியாதுன்னா கீமோ ஊசி மருந்து மட்டுமாவது கொடுத்தாகணும்.
எதைச் செய்யணுமென்றாலும் முதலில் இந்த சுகர் அளவைக் கட்டுக்குள் கண்டிப்பாகக் கொண்டு வந்தே ஆகணும். எந்த முடிவானாலும் சீக்கிரமே சொல்லுங்க.லேட் பண்ணவே பண்ணாதீங்க.கொஞ்சம் சீரியஸா யோசிச்சி நல்ல முடிவுக்கு வாங்க."

மார்பகத்திலிருந்து கல்லீரலுக்குப் பரவிய புற்றுநோய்(மெடாஸ்டிக் கேன்சர்)

கர்ப்பப்பை ஆபரேசன் முடிந்து ஐந்துநாட்கள் மருத்துவமனையில் இருந்தேன்.ஆறாவது நாள் டிஸ்சார்ஜ் ஆனேன்.குனியக் கூடாது. பாரம் சுமக்கக் கூடாது.மூன்று மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும்.ஒரு வாரம் கழித்து செக்கப்புக்கு வந்துவிடுங்கள் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.வைடமின் ஈ,கால்சியம் மாத்திரைகள் ஆகியவகளுக்கு எழுதிக்கொடுத்தார்கள்.
வீட்டுக்கு வந்தேன்.இடுப்பு வலி ஆரம்பித்தது.கடுமையான வலி.அதற்கான மருந்துகளை ஏற்கனவே மருத்துவமனையில் கொடுத்திருந்தார்கள்.அவைகளை உட்கொண்டேன்.மூன்று நாளாகியும் வலி
குறையவில்லை.மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டேன்.

டாக்டர் சொன்னபடி மறுவாரம் சென்று சந்தித்தேன். வழக்கமான பரிசோதனைகள் முடிந்தன.ஆபரேசன் செய்த இடம் நன்றாகச் சேர்ந்துவிட்டது என்று டாக்டர் சொன்னார்.இடுப்பு வலிக்கும் மூன்று நாளுக்கு மாத்திரை கொடுத்தார்.


மூன்று நாளாகியும் வலி நிற்கவில்லை.மீண்டும் மருத்துவமனை சென்று டாக்டரைப் பார்த்தோம்.கர்ப்பப்பை ஆபரேசனுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்றும் இடுப்புவலிக்குத் தற்காலிகமாக மட்டுமே மாத்திரைகள் கொடுத்ததாகவும்,மேலும் இடுப்பு வலித்தால் எலும்பு முறிவு டாக்டரைப்(ஆர்த்தோ ஃபிஸீசியன்)பார்க்குமாறும் கூறி அனுப்பிவிட்டனர்!!


இடுப்புவலிக்குத் தீர்வு காண வேண்டுமே?சென்னையில் டாக்டர்களுக்கா பஞசம்?அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் அண்ணாமலை என்பவரிடம் சென்றோம்.என் கதை முழுவதையும் பொறுமையாகக் கேட்டார்.பொதுவாக கர்ப்பப்பை ஆபரேசன் செய்து கொண்டவர்களுக்கு இடுப்புவலி வருவதில்லை என்றும் ஆனால் கேன்சர் நோய்க்காக ரேடியேசன்,பிராக்கிதைரபி போன்ற கதிரியக்க சிகிச்சை மேற்கொண்டதால் உடலில் உள்ள எல்லா எலும்புகளும் பலவீனப்படும் என்றும் கூறினார்.அதன் விளைவுதான் இந்த இடுப்புவலி என்றார். பிசியோதைரபி சிகிச்சை செய்தார். வலிக்குத் தற்காலிகமாக் வேறு மாத்திரைகளைக் கொடுத்தார்.முதல்ஒரு வாரம் தினமும்,பின் வாரத்திற்கு இரு முறையும் வந்து பிசியோதைரபி சிகிச்சை செய்து கொள்ளும்படியும் சொன்னார்.அதன்படியே சென்று சிகிச்சை பெற்றேன்.ஒரே மாதத்தில் இடுப்பு வலி மறைந்தது.


வழக்கம் போல செக்கப்பிற்கு பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்று வந்தேன்.லேட்ரொனேட் மாத்திரையைத் தொடந்து சாப்பிடுமாறு டாக்டர் கூறினார்.அதன்படியே மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தேன்.

2006 நவம்பர் மாதம் 13ந்தேதி வாக்கில் வலது மார்பகத்தில் மீண்டும் புண்கள் ஏற்பட ஆரம்பித்தன.எனவே 15ந்தேதியன்று உடனே மருத்தவமனை சென்றோம்.டாக்டர் பரிசோதித்துப் பார்த்தார்.மீண்டும் புண் வ்ரக் கூடாதே!என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். உடனே எல்லவித டெஸ்டுகளும் எடுக்கவேண்டும் என்றார். 16,17 ஆகிய தேதிகளில் பலவிதமான பிளட் டெஸ்ட்,தைராய்டு டெஸ்ட்,லிவர் ஃபங்சன் டெஸ்ட்,எக்ஸ்ரே,ஈ.சி.ஜி.,அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்,எக்கோ,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளீயர் போன் ஸ்கேன் ஆகிய டெஸ்டுகள் எடுக்கப்பட்டன.முக்கியமாகப் புண்ணிலிருந்து திசுக்களை எடுத்துப் பயாப்ஸிக்கு அனுப்பினார்.அனைத்து ரிப்போர்ட்டுகளும் 18ந்தேதியே கிடைத்தன.அன்றே டாக்டரைப் பார்த்தோம்.
ரிஸல்ட்?


1.மார்பகத்தில் மீண்டும் புற்றுநோய் பரவ ஆரம்பித்தது.அது மட்டுமல்லாமல்
மார்பகத்திலிருந்து கல்லீரலுக்கும் புற்றுநோய் பரவியிருந்தது.மெடாஸ்டிக் கேன்சர் என்று இதற்குப் பெயராம்.
2.நீரழிவு நோய் தாக்கியுள்ளது.வெறும் வயிற்றுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றுடன் 280. காலை உணவு சாப்பிட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து 468.ஆக இருந்தது.

Wednesday, October 17, 2007

ஹிஸ்டரக்டமி எனப்படும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கு இடையில் பல் வலி வந்தது.அப்பல்லோ மருத்துவமனை பல் டாக்டர் தினகரன் என்பவர் என் வீட்டுக்கு அருகில் கிளினிக் வைத்திருக்கிறார்.25.05.2005 ந்தேதி அவரைப்போய்ப் பார்த்தேன்.
வலதுபக்கம் மேல்கடைவாய்ப் பற்கள் மூன்றும்,இடதுபக்கம் கீழ்க்கடைவாய்ப் பற்கள் மூன்றும் சொத்தை விழுந்துள்ளது என்றார்..முன் பற்கள் வரிசையில் பற்கள் கருக்க ஆரம்பித்துள்ளன என்றார்.காரணம் கதிரியக்கத்தின் பாதிப்பு என்றார்.பற்களைப் பிடுங்கி ரூட் சேனல் டிரீட்மெண்ட் செய்தால் முன் போலவே செயற்கையாகப் பற்களைப் பொறுத்திவிடலாம் என்றார்.அத்ன்படியே ஆறு பற்களும் பிடுங்கப்பட்டன.ரூட் கேனல் டிரீட்மெண்ட் மூலம் செயற்கைப் பற்கள் பொறுத்தப்பட்டன.

ஜனவரி2006 வரை அவ்வப்போது டாக்டர் வரச் சொல்லும் நாட்களில் சென்று செக்கப் செய்து கொண்டேன்.அப்போது இன்னொரு பிரச்சனை முளைத்தது.

2003ம் ஆண்டு என் ஐம்பதாம் வயதில் எனக்கு மாதவிடாய் நின்று விட்டது.
மூன்று ஆண்டுகள் கழித்து 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் ஆரம்பித்தது.நாளாக நாளாக ஓவர் பிளிடிங்.எனக்கே சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.என் இள வயதுக் காலத்தில் என்றுமே இப்படி ஓவர் பிளீடிங் ஆனதில்லை. உடனே எனது டாக்டரைப் பார்த்தோம்.
ரேடியேசன் ஆரம்பிக்கு முன்னரே ''நால்வடாக்ஸ்'' என்ற டாமாக்சிபன் மாத்திரை தினமும் இரவு இரண்டு மாத்திரை உட்கொள்ளவேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார்.இப்போது அம்மாத்திரைகளை உடனே நிறுத்தச் சொல்லிவிட்டார்.அதற்குப் பதிலாக ''லேட்ரொனேட்'' என்ற மாத்திரையை தினமும் இரவு ஒரு மாத்திரை மட்டும் உட்கொள்ளச் சொன்னார். அது தவிர பிளீடிங் நிறுத்துவத்ற்குச் சில மாத்திரைகளையும் தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மட்டும் உட்கொள்ள எழுதிக்கொடுத்தார்.அதன்படியே உட்கொண்டதில் மாத்திரைகளின் தாக்கத்தினால் மூன்று நாட்கள் மட்டும் மாத விடாய் நின்றது. நான்காவது நாள் இரவு மீண்டும் ஆரம்பித்தது. மறுநாள் மதிய ம் டாக்டரைத் தொலைபேசியில் கேட்டேன்.மறுநாள் வரச் சொன்னார்.மறுநாள் சென்றோம்.இதற்கு மேல் ஒரு கைனகாலஜிஸ்ட் தான் பார்க்கவேண்டும் என்று கூறி விஜயா மருத்துவமனையில் உள்ள டாக்டர் மாலா என்ற கைனகாலஜிஸ்டிடம் அனுப்பினார்.

டாக்டர் மாலா மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.என்னை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பரிசோதித்தபின் சில மாத்திரைகளை மூன்றுநாட்கள் மட்டும் உட்கொள்ளுமாறும் பிளீடிங் நின்று விடும் என்றும் நான்காவது நாள் பிளீடிங் மீண்டும் ஆரம்பித்தால் உடனே வருமாறும் கூறி அனுப்பினார்.அவர் சொன்னவாறே மூன்றுநாட்கள் மாத்திரை உட்கொண்டேன்.பிளீடிங் நின்றது. நான்காவது நாள் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

டாக்டர் மாலா மீண்டும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்துப் பரிசோதித்தார்.
''உங்கள் கர்ப்பப் பை நார்மலைவிடக் கொஞ்சம் பெரியதாகவே இருக்கிறது.நன்றாகவும் இருக்கிறது.உங்கள் வயதுக்கு மெனோபாஸ் நின்றூ கர்ப்பப் பையும் நன்றாகச் சுருங்கியிருக்க வேண்டும்.ஆனால் ஆகவில்லை.சாதாரணமாக இப்படிப்பட்ட பிரச்சனைகளுடன் வரும் பெண்களுக்கு நான் கொடுக்கும் மாத்திரைகளுடன் ஓவர் பிளீடிங் நின்று விடும்,ஆனால் உங்களுக்கு நிற்காததற்குக் காரணம் உங்கள் கர்ப்பப் பை ஆரோக்கியமாக இருப்பதுதான்.இதே நேரத்தில் நீங்க்ள் ஒரு கேன்சர் பேஷண்ட் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.எனவே உங்கள் கர்ப்பப் பையை ஆபரேசன் செய்து அகற்றினால் மட்டுமே உங்கள் பிரச்சனை தீரும் ''என்றார்.அதன்படியே எனது டாக்டருக்கும் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் எங்கள் டாக்டரிடம் வந்தோம்.அவருக்கு கர்ப்பப்பையை அகற்றுவதில் விருப்பமே இல்லை.இதை இப்படியே விட்டு விடுங்கள்.கொஞ்சநாள் ஓவர்பிளீடிங் போகும்.பின் தானாக நின்று விடும் என்றார்!சில ஹோமியோபதி மருந்துகளை எழுதிக் கொடுத்து இவைகளை வாங்கிச் சாப்பிடுங்கள்.சரியாகிவிடும் என்றார்.!! வேண்டுமானால் கர்ப்பப் பை சுருங்க ஒரு வாரம் ரேடியேசன் கொடுத்தால் போதும். சுருங்கி விடும் என்றார்.ஒரு ஆறு மாதம் வரை லூஸ் மோசன் போய்க் கொண்டே இருக்கும் என்றார்.ரேடியேசன் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.நோயைவிட நோய்க்கான சிகிச்சை முறைகள்,அதனால் வரும் பாதிப்புகள் தான் பொறுக்கமுடியவில்லை.''வாழ்வு எரித்து ஊனம் வாங்கி எதைச் சாதிக்க''
என்ற வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது.

என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.சரிதான் என்று டாக்டர் சொன்ன ஹோமியோபதி மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

எதுவும் பிரயோசனமில்லை. டாக்டர் எழுதிக்கொடுத்த ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டும் பிளீடிங் நிற்கவில்லை.பல முறை டாக்டரிடம் கேட்டும் ஆபரேசனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.டாக்டர் மாலாவைப் பார்த்தோம்.ஆபரேசன் செய்தால் ஒழிய இதற்குத் தீர்வு இல்லை என்றுகூறி விட்டார்.எங்கள் டாக்டரிடம் ஆலோசியுங்களென் என்று கேட்டோம்."வேண்டிய விளக்கம்,என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எனது கருத்து ஆகியவைகளைச் சொல்லிக் கடிதம் கொடுத்துவிட்டேனே!"என்றார்.இரண்டு டாக்டர்களும் அவரவர் கருத்துகளில் நின்றார்கள்.மகாபாரதத்து அம்பையாக இருவரிடமும் மாறி மாறிப் பல தடவை அலைந்தேன்.


எப்ரல் மாதம் இருபது தேதியானது. ஓவர் பிளீடிங் ஆரம்பித்து இரண்டரை மாதங்களாகி விட்டது.சோர்வடைந்து மிகவும் பலவீனப்பட்டேன்.இதற்கு மேலும் என்னால் பொறுத்திருக்க முடியவில்லை.நானும் என் கணவரும் ஆலோசித்தோம்.டாக்டர் மாலாவின் ஆலோசனைப்படியே கர்ப்பப்பையை அகற்றுவது என்ற முடிவுக்கு வந்தோம்.

26.4.2006 அன்று விஜயா மருத்துவமனையில் அட்மிட் ஆனேன் 27.4.2006 அன்று எனது கர்ப்பப்பை,சினைக்குழாய்களாகியவை முற்றிலும் 'ஹிஸ்டரக்டமி' என்ற அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

லிம்ப் கிளான்ஸ் டிஸெக்சனும்,அதன் பின்விளைவுகளும் 2

வீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் கழித்தும் கூட, வெளியேறும் நிணநீரின் அளவு பதினேழு,பதினெட்டு எம்எல் அளவுக்கும் குறைந்தபாடில்லை.டாக்டர் பிரசாத்தைத் தொடர்புகொண்டோம்.உடனே மருத்துவமனைக்கு வரச் சொன்னார்.சென்றோம்.ஆபரேசன் செய்த டாக்டர் போஸைத் தொடர்பு கொண்டதாகவும் இவ்வளவு நாட்கள் டியூபை அகற்றாமல் இருப்பது நல்லதில்லை என்றும் உடனே அகற்றுமாறும் கூறியதாக டாக்டர் பிரசாத் சொன்னார்.டியூபை அகற்றிவிட்டார்.மேற்கொண்டு சுரக்கும் நிணநீர் அக்குளுக்குப் பின்பக்கம் முதுகுப் பக்கத்தில் உள்ள வேறு கிளான்ஸுகள் வழியாக வெளியேற ஆரம்பிக்கும் என்றும் சொன்னார்.அன்றைய நாள் முதல் நாள் தவறாமல் கிளொவ்ஸ் போட்டுக் கொள்ளுமாறும் கைகளை நன்றாக வீசியும் ஆட்டியும் எக்ஸர்ஸைஸ் செய்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆசியன் கேம்ஸ் குடியிருப்பில் உள்ள ஒரு முகவரியைக் கொடுத்தார்.அங்கே "நோர்மா" எனும் டெல்லி நிறுவனத்தின் பிரதிநிதி இருப்பார் என்றும் அவரிடம் தொகையைச் செலுத்திவிட்டால் இரண்டுநாளைக்குள் கூரியரில் கிளொவ்ஸ் வந்துவிடும் என்றார்.
டாக்டர் கூறியவாறு 'நோர்மா''விற்பனைப் பிரதிநிதியைத் தேடிச் சென்றோம்.
அவர் அங்கு இல்லை. கைப் பேசியில் தொடர்பு கொண்டோம்.என் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டார்.வெளியூரில் இருப்பதாகவும் இரு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து அளவு எடுப்பதாகவும் சொன்னார்.இடைப்பட்ட நாட்களில் சமாளிக்க வீட்டுக்கு அருகில் உள்ள ஃபார்மஸிக்குச் சென்று விளையாட்டு வீரர்கள் முழங்காலில் அணிந்து கொள்வார்களே அதுமாதிரியான கிளொவ்ஸ்களை வாங்கிக் கொண்டோம்.என் கணவருக்கு 1998ஆம் ஆண்டில் மாற்று வழி இதய அறுவை சிகிச்சை செய்தபின் இரு கால்களிலுமிருக்கமாக கம்ப்ரசன் எலாஸ்டிக் துணி டேப்கள் அணிந்திருந்த அனுபவம் இருந்ததால் புதிதாக அவற்றையும் வாங்கினோம்.''நோர்மா''பிரதிநிதி இருநாட்களுக்குப் பின் வீட்டுக்கு வந்து வலது கையிலிருந்து தோள்பட்டைவரை பல அளவுகள் எடுத்தார்.அடுத்த இருநாட்களில் ''நோர்மா கிளொவ்ஸ்கள் கூரியரில் வந்தன.டெல்லியிலிருந்து ''நோர்மா''கிளொவ்ஸ்கள் வரும்வரை மேற்சொன்ன கிளொவ்ஸ்கள்,கம்ப்ரசன் எலாஸ்டிக் டேப்கள் கை கொடுத்தன.

பிரச்சனையே அதற்குப்பிறகுதான் ஆரம்பித்தது.டாக்டர் சொன்னபடி கையை ஆட்ட முயன்றேன்.முடியவில்லை.மிகவும் சிரமப்பட்டு கையை ஆட்டியும் வீசியும் முடிந்தவரை பயிற்சி செய்தேன்.வலி ஒருபக்கம் இருக்க கை ஒருஅளவுக்குமேல் அசைக்க முடியவில்லை.இரவுபகல் என்றில்லாமல் எப்போதுமே ''நிர்மா''கிளொவ்ஸ் அணிந்திருப்பதில் நல்ல இறுக்கம் இருந்தாலும் ஒரு தொந்தரவாகவே இருந்தது.பொறுத்துக்கொண்டு அணிந்தேன்.

மூன்று நாள் சென்றபின்னும் கை அசைப்பதில் சிரமம் கூடுவதை உணர்ந்தேன்.அன்றே பேட்டர்ஸன் கேன்சர் செண்டருக்குச் சென்று எங்கள் டாக்டரை(விஜயராகவன்)ப் பார்த்தோம்.டாக்டரல்லவா!அவருக்கே உரிய பாணியில் கையை இழுத்தும்,முறுக்கியும்,தோள்பட்டைப் பகுதியில் பிசைந்தும் பிசியோதைரபி சிகிச்சை செய்தார்.சிகிச்சை செய்து முடிப்பதற்குள் வலி ஆஹா,என்ன வலி என்ன வலி.கையைத்தனியாகக் கழற்றிவிட்டாரோ என்று நினைத்தேன்.ஒரே நிமிடம்.கையில் வலி பாதிக்குமேல் குறைந்தது.கையையும் ஓரளவுக்கு நன்றாகவே ஆட்ட முடிந்தது.

டாக்டர் சொன்னார்.''நீங்கள் பயிற்சி செய்வது போதுமானதாக இல்லை.இன்னும் நன்றாகப் பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால்
தோள்பட்டை எலும்புகள் ஒன்றுடன் ஒன்று கெட்டியாக ஒட்டிக் கொண்டுவிடும்.''என்றார்.தொடர்ந்து ஐந்து நாட்கள் பிசியோதைரபி சிகிச்சை செய்துகொள்ளும்படியும்,வீட்டுக்கு அருகில் பிசியோதைரபி சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனையில் செய்துகொள்ளுமாறும்,ஆறாவது நாள் தன்னை வந்து பார்க்குமாறும் சொன்னார்.என்னவகையான பிசியோதைரபி செய்யவேண்டும் என்பதற்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.

மறுநாள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தோம்.அங்கிருந்த பிசியோதைரபிஸ்ட் வலப்புற முதுகின் மேல்பக்கம்தோள்பட்டைக்கு அருகில் ஜெல் தடவி அதன் மீது இன்னொரு கருவியை வைத்து மசாஜ் செய்தார்.மறுநாளும் இதே சிகிச்சை செய்துகொண்டேன்.மூன்றாவது நாள் சென்றபோது இயந்திரம் பழுதாகி இருந்தது.எனவே அருகிலுள்ளதனியார் ஒருவர் நடத்தும் இன்னொரு பிசியோதைரபிஸ்ட்டுடைய முகவரி அறிந்து மேலும் மூன்று நாட்கள் சிகிச்சையைத் தொடர்ந்தேன்.முடிந்தவரை கைகளை ஆட்டியும் அசைத்தும் பயிற்சி செய்துகொண்டே இருந்தேன்,

கைகளை அசைப்பதில் முன்னேற்றமில்லை.டாக்டர் சொன்னமாதிரி எலும்புகள் ஒட்ட ஆரம்பித்துவிட்டதோ என்று சந்தேகம் ஆரம்பித்தது.அன்று மாலையே மருத்துவமனை சென்று டாக்டரைச் சந்தித்தேன்.முன்செய்தது போலவே டாக்டர் கைகளை முறுக்கி ஒருமாதிரியாக சிகிச்சை செய்தார்.கை ஆட்ட முடிந்தது.கயை முறுக்கும்போது வலி இருந்த்து.இப்போது வலி இல்லை.
நான் வெளியே செய்துகொண்ட எக்ஸர்ஸைஸ் டாக்டருக்குத் திருப்தி அளிக்கவில்லை.எனவே விஜயா ஹெல்த் செண்டரில் பணி புரியும் பிசியோதைரபிஸ்டை மறுநாள் முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வீட்டுக்கு அனுப்பி விட்டார்.அவரோ பழைய பிசியோதைரபிஸ்ட் செய்த அதே முறையைக் கடை பிடித்தார்.விபரங்களைச் சொல்லியும் டாக்டர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதைத் தான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு சிகிச்சையைத் தொடர்ந்தார்.

ஐந்து நாட்களுக்குப் பின் டாக்டரைச் சந்திதோம்.டாக்டருக்கே வெறுப்பாகி விட்டது.நான் ஒண்ணு சொன்னா இவங்க ஒண்ணு செய்றாங்களே என்று சொல்லிகொண்டே அவர் தனது சிகிச்சையைத் தொடர்ந்தார்.
ஒரு வாரம் தினமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையை
செய்திகொள்ளுமாறும் சொன்னார்.ரப்பர் பந்து வாங்கி வலது கையில் வைத்துப் பிசைந்துகொண்டே இருக்குமாறும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பந்து பிசையும் பயிற்சி செய்துகொண்டே இருக்குமாறும் சொன்னார்.

மறுநாளிலிருந்து தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் உள்ள நர்சிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கை சரியானது. இருப்பினும் பழைய நிலைக்கு வரவில்லை.

இச்சமயத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் ஏற்கனவே அறிமுகமானவரை(இவர் கதையைப் பின்னால் சொல்கிறேன்)த் தொடர்புகொண்டு பேசியதில் தனக்குத் தெரிந்த ஜெயா என்பவர் அடையாறு மருத்துவமனையில் தன்னார்வமாக பிசியோதைரபி சிகிச்சை செய்து வருவதாகவும்,அவரிடம் மேற்கொண்டு சிகிச்சை பெறுமாறும் ஆலோசனை கூறினார்.

மேற்சொன்ன ஜெயா என்பவர் பிசியொதைரபி முறையாகப் பயின்றவர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணி புரிகிறார்.
பணிநேரம் போக தினமும் பத்து நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார்.அவரே மூன்றுநாளுக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து எனக்கு சிகிச்சை அளித்தார்.நிவ்யா கிரீம் கொண்டுவரச் சொல்லி அதைத் தடவி மிகநன்றாக மசாஜ் செய்தார்.சில உடற்பயிற்சிகளையும் கற்றுத் தந்தார்.
இரண்டு மாதம்வரை சிகிச்சை அளித்தார்.

கையின் இயக்கம் ஏறத்தாழ நன்றானது.இன்றுவரை கைக்கு நல்ல பயிற்சி கொடுக்கிறேன். இருந்தாலும் இடது கையைவிட வலது கை கொஞ்சம் வீக்கமாகவே இருக்கிறது.வலி கொஞ்சம் இருக்கிறது.


சொல்ல மறந்துவிட்டேனே!சர்ஜரி செய்து எடுக்கப்பட்ட பததொன்பது கிளான்ஸ்களில் ஒன்றில் கூட கேன்சர் செல்கள் இல்லையாம்!பயாப்ஸி செய்து பார்த்ததில் இந்த் ரிசல்ட் வந்திருப்பதாக்ச் சொன்னார்கள்.''அப்புறம் ஏன் ஆபரேசன் செஞ்சீங்க"என்று டாக்டரைக்கேட்டேன்.ஆபரேசன் செஞ்சு பயாப்ஸி செய்து பாத்ததுக்கப்புறம் தானே இந்தவிபரம் தெரியுது?"என்றார்.

Tuesday, October 16, 2007

லிம்ப் கிளான்ஸ் டிஸெக்சனும்,அதன் பின்விளைவுகளும் 1

12.09.2004ந்தேதிகாலை பத்து மணிக்கெல்லாம் பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்றுவிட்டேன்.அது அமைந்துள்ள விஜயா ஹெல்த் செண்டரில் அட்மிட் ஆனேன்.ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் இருந்து போஸ் என்ற சர்ஜன்(இவர்தான் ஆபரேசன் செய்தாராம்),முன்னரே அறிமுகமான சர்ஜன் பிரசாத் ஆகியோர் வந்து பார்த்தனர்.அன்றைக்கு மதியம் இரண்டு மணியளவில் ஆபரேசன் தியேட்டருக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.
மதியம் மூன்றரை மணியளவில் ரூமிற்குக் கொண்டு வரப்பட்டேன்.
சீக்கிரமே மயக்கம் தெளிந்துவிட்டது.வலதுகை அக்குளில் ஆபரேசன் செய்திருந்த இடத்தைப் பெரிய பிளாஸ்டர் கொண்டு ஒட்டியிருந்தார்கள்.அதனுள்ளிருந்து ஏற்கனவே சொன்னபடி ஒரு டியூப் தொங்கிகொண்டிருந்தது .அதன் மறுமுனை வட்டமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவுடன்(சக்சன் பாக்ஸ்)இணைக்கப்பட்டிருந்தது.ஆபரேசன் செய்த சர்ஜன் போஸூடன் என் கணவர் விபரங்களைக் கேட்டறிந்திருந்தார்.ஆபரேசன் நல்லபடியாக முடிந்ததாம்.மொத்தம் பத்தொன்பது கிளான்ஸ்கள் இருந்ததாம்.அனைத்தும் அகற்றப்பட்டனவாம்.
மார்பகத்திலிருந்து சுரக்கும் நிணநீரானது கிளான்ஸ்கள் இல்லாததால் டியூப் வழியாக சக்சன் டப்பாவுக்குள் சேர்ந்துகொண்டிருந்தது.ஏறத்தாழ டப்பா நிரம்புவதற்கு முன் எடுத்து எவ்வளவு நீர் வெளியேறியுள்ளது என்பதை அளந்து குறிக்கப்பட்டது.காலையும் மாலையும் டாக்டர்கள் வந்துசென்றனர்.
மூன்றாவது நாளன்று பிளாஸ்டரை அகற்றி விட்டுசிறிய பிளாஸ்திரியை
ஒட்டிவிட்டனர்.
வலி?அதுபாட்டுக்கு வலித்துக்கொண்டு இருந்தது.வலியுடன் வாழப் பழகி விட்டேனே!
இப்போது வேறு பிரச்சனை முளைத்தது.பாத்ரூமிற்குச் செல்ல வேண்டுமென்றால் ஆடாது அசங்காது டியூபையும் சக்சன் டப்பாவையும் கூடவே எடுத்த்ச் செல்ல வேண்டும்.அக்குளில் இணைக்கப்பட்டுள்ள டியூப் கொஞ்சம் ஆடினாலும் வலி உச்சந்தலையைத் தாக்கும்.உயிர் போய் உயிர் வரும்.டாக்டரிடமோ நர்சிடமோ சொன்னால் உடனே பெட் பேன் எடுத்து வைப்பார்கள்.பெட் பேன் உபயோகிக்க விருப்பமில்லை.அது அவ்வளவு சுத்தம்.எனவே என் கணவர் உதவியுடன் பாத்ரூமிற்குப் போய் விடுவேன்.
நான்காவது நாளன்று சர்ஜன் பிரசாத் வந்து பரிசோதித்துப் பார்த்தார்.சக்சன் பாக்ஸைப் புதிதாக மாற்றச் சொன்னார். உடனே மாற்றப்பட்டது."நாளைக்குள் நீர் சுரப்பது குறைந்துவிடும்.அதுக்கப்புறம்
கையை மெதுவாஆட்ட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகக் கையைச் சுழற்ற வேண்டும்.கைக்குப் போட்டுக் கொள்ள ஒரு கிளொவ்ஸ் எழுதித் தருகிறேன்.இரண்டு கிளொவ்ஸ் வாங்கிக்கொள்ளுங்க.தினமும் காலை குளித்தபின் வலது கையில் இந்த கிளொவ்ஸ் மாட்டிக் கொள்ளுங்க.மறுநாள் காலை வரை அதைக் கழற்றக்கூடாது. இப்படியே ஆறு மாதம் வரை கிளொவ்ஸ் போடவேண்டும்.மறக்காமல் கைக்கு நல்ல எக்சர்ஸைஸ் கொடுக்க வேண்டும்.''
அவர் சொல்லிக்கொண்டே போனார்.
ஐந்தாவதுநாள் வந்தது.அன்று மதியம் டிஸ்சார்ஜ் என்றார்கள்.நிணநீர் வெளியேறுவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. எனவே டியூபுடனும் சக்சன் டப்பாவுடனும் வீட்டுக்குப் போங்க என்றார் டாக்டர்.என்ன சார்.ஐந்தாவது நாளன்று டியூபை அகற்றிவிடுவோம் என்றீர்களே?என்றேன்.
ஆமா.சொன்னேன்.நிண நீர் வருவது குறையவில்லையே,இன்னும் ஒரு ஐந்து நாள் பார்ப்போமே.டியூபுடன் வீட்டுக்குப் போங்க.தினமும் வெளியேறும் நிணநீரைக் கணக்கெடுங்க.ஒரு நாளுக்கு பத்து பதினைந்து எம்எல் அளவு வந்தா உடனே இங்கு வாங்க.டியூபை எடுத்துடுவோம்."என்றார் டாக்டர்.
எப்படி இருந்திருக்கும் என்கிறீர்கள்?
இந்தநோயால் நான் பாதிக்கப்பட்ட விபரமே வெளியே ஒருத்தருக்கும் தெரியாது.சேலை கட்டி வெளியே செல்வது ஏற்கனவே அரிதாகிவிட்டது.இப்போது ஃபுல் ஓபன் நைட்டியுடன் தானிருக்கவேண்டிய கட்டாயம்.இந்த அழகில் ஒரு சைடில் டியூப் தொங்க அதன் முனையில் சக்சன் டப்பா தொங்க டப்பாவைக் கையில் பிடித்துக்கொண்டு காரை விட்டு இறங்கி தெருவிலிருந்து நடந்து வீட்டுக்கு எப்படி செல்வது?யாரேனும் பார்த்தால்?என்னவென்று கேட்கமாட்டார்களா?என்ன பதில் சொல்வேன்?ஐயையோ!பிறகு யாரேனும் பார்க்க வந்தால்?வேலைக்காரியை எப்படிச் சமாளித்து வேலை வாங்குவது?
இதையெல்லாம் டாக்டரிடம் கேட்டேன்.
"இதில் என்ன இருக்கிறது?யாரேனும் கேட்டால் உள்ளதைச் சொல்லுங்களேன்.''
''அது முடியாது டாக்டர்''
''அப்புறம் உங்க இஷ்டம்.நாங்க டிஸ்சார்ஜ் செய்து விடுகிறோம்.''
அவருக்கு அவர் பிரச்சனை.
மனமென்னும் குரங்கு நோயை மறந்துவிட்டது.எதிரே இருக்கும் சமூகத்தைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்துவிட்டது.சும்மாவே வெறும் வாயை மெல்லும் இந்தக் கேடு கெட்ட சமுதாயத்துக்குக் கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி அல்லவா எனது பிரச்சனை ஆகிவிடும்?
'' சரி சார்.டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள்''
''அப்புறம் எங்கே போவீங்க?''
''அதை நான் பார்த்துக் கொள்கிறென்.இந்த மருத்துவமனையில் கஸ்ட் ரூம்கள் எதற்கு இருக்கின்றன?''என்றேன்.
டிஸ்சார்ஜ் ஆனதும் மருத்துவமனையில் உள்ள விருந்தினர் இல்லத்திற்குச் சென்றோம்.வசதியான அறையை எடுத்துக்கொண்டு ஐந்து நாட்கள் தங்கினோம்.
ஆறாவது நாளாகியும்அதாவது ஆபரேசன் நடந்து பத்துநாட்களாகியும் நிணநீர் சுரந்து வெளியேறுவது குறையவில்லை.அன்று பிற்பகல் டாக்டரைச் சந்தித்தோம்.மிகச் சில பேர்களுக்கு நிணநீர் சுரப்பது நிற்க ஒரு மாதம் கூட ஆகுமாம்.எனவே இன்னும் ஒரு ஐந்துநாட்கள் பார்ப்போமே என்றார்.
இப்போது வலி மிகவும் குறைந்திருந்தது.ரூமிற்கு வந்தோம்.இன்னும் எத்தனை நாட்கள் வீட்டுக்குப் போகாமல் இருப்பது.
டியூபையும் சக்சன் டப்பாவையும் நைட்டிக்குள் மறைத்துப் பிடிக்க முடியுமா என்பதை முயன்று பார்த்தேன்.சிறிது நேரத்தில் பழகிவிட்டது.
மறு நாள் மாலை விருந்தினர் இல்ல அறையைக் காலி செய்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.நல்லவேளை.தெருவிலோ,வாசல் பக்கமோ யாரும் இல்லை.யாரும் கவனிக்கவில்லை.மிக லாவகமாக டியூபையும் சக்சன் டப்பாவையும் கையில் பிடித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்து விட்டேன்.
எனது செயல் சுத்தப் பைத்தியக்காரத்தனமானது தான்.நோயைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிவிட்டால்தான் என்ன?யார் என்ன செய்துவிட முடியும்?என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம். கண்டிப்பாக எழும்.
எனது செயல் நியாயமானதா இல்லையா என்பதற்கான விவாதங்களை பதிவுகளின் இறுதியில் வைத்துக் கொள்வோமே!இது தொடர்பாக இன்னும் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை அடுத்து வரும் பகுதிகளில் சொல்லவிருக்கிறேன்.அதுவரை அருள் கூர்ந்து பொறுங்கள்.

ஆக்ஸிலரி லிம்ப் நோட்ஸ் டிஸெக்சன் ஏன் செய்ய வேண்டும்?

"இன்னும் என்ன சார் ஆபரேசன்.அது வேண்டாமின்னு தானே எல்லா ஆஸ்பத்திரிகளையும் விட்டு விட்டு இங்கே வந்தேன்.இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினதுக்கப்புறம் இன்னும் என்ன சார்?"
''வேண்டாமென்றீங்களா?இப்ப நான் சொல்ற ஆபரேசன் மார்பகத்தில் செய்யப் போறதில்லே.மார்பகத்தை எடுக்கப் போறதும் இல்லே.''
வெறுமனே டாக்டரைப் பார்த்தவாறே இருந்தேன்.
நிண நீர் சுரப்பி அப்படின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா?ஆங்கிலத்தில் லிம்ப் நோட்ஸ்ன்னு சொல்வோம்.நம்ம உடம்பிலே ரத்தம் ஓடுதில்லே.அதிலெ கலந்திருக்கும் கழிவுகளையும்,பேக்டீரியா,வைரஸ் கிருமிகளையும் வடிகட்டும் வேலையை இந்த சுரப்பிகள் செய்கின்றன.ஒவ்வொருத்தரோட உடம்பில் சுமார் 500 முதல் 600 வரை இந்த நிணநீர் சுரப்பிகள் இருக்கும்.இப்போ உங்க வலது மார்பகத்தில் ஓடும் ரத்தத்தை வடிகட்டும் நிணநீர் சுரப்பிகள் மார்பகத்திலேருந்து
வலது கை அக்குளில் இருக்கும் கிளான்ஸுகளில் முடியும்.அந்த கிளான்ஸுகளைத் தான் ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும். மார்பகத்தில் இன்னும் மிச்சம் மீதி இருக்கிற கேன்சர் செல்கள் இந்த நிணநீர் சுரப்பிகள் வழியே போனால் உடம்பில் மற்ற பாகங்களில் பரவ வாய்ப்புண்டு.எனவே இந்த கிளான்ஸுகளை ஒரு சின்ன ஆபரேசன் செஞ்சி எடுத்திட்டா
மார்பகத்தில் தப்பித்தவறி இருக்கிற கேன்சர் செல்கள் மார்பகத்தை விட்டு வெளியேற முடியாது.இத்னாலே உடம்பில் வேறு உறுப்புகளுக்குமார்பகத்திலேருந்து கேன்சர் பரவுவது தடுக்கப்படும்.''
என்னவோ பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது.
" என்ன சொல்றீங்க அனுராதா?"
"சொல்றதுக்கு என்ன இருக்கு சார்.என்னை என்னமோ பண்ணனும்னு முடிவு பண்ணிட்டிங்க''.
இந்த ஆபரேசன் செஞ்சபிறகு எடுக்கப்படும் நிணநீர் சுரப்பி கிளான்சுகளை
பயாப்ஸி செய்து பார்த்தா அதுலே கேன்சர் செல்கள் பரவியிருக்கான்னு தெரிஞ்சிரும்.இந்த ஆபரேசன் அவசியம் செஞ்சால் ஒழிய ரேடியேசன் கொடுத்த நோக்கம் பூர்த்தியாகாது.ஸோ இந்த ஆபரேசன் அவசியம் செஞ்சாகணும்.''
''ஒரு வழியா என்னை எலியாக்கிட்டீங்க சார்.''
என்னது?
பெரிய பெரிய விஞ்ஞானிகளெல்லாம் பரிசோதனைக் கூடத்திலே எலிகளை வச்சு ஆராய்ச்சி பண்ணுறதை டி.வி.யிலே பாத்திருக்கேன்.அந்த மாதிரி என்னையும் வச்சுப் பரிசோதனை பண்றீங்க.''
டாக்டர் சிரித்தார்.
''என்னால் சிரிக்க முடியாது டாக்டர்.''
''ஏன்?'
''நோவு எனக்குத் தானே?''
பிறகு கேட்டேன்.''இத்தோட முடிஞ்சுருமா.இன்னும் இருக்கா?''
''அவ்வளவே தான் அனுராதா.ஆபரேசனுக்கப்புறம் ஒரு ஐந்து நாள் மட்டும்
அக்குளில் ஒரு டியூபைச் சொருகி வைப்போம்.வழக்கமா சுரக்கும் நிணநீரெல்லாம் டியூப் வழியா வெளியேறும்.ஐந்து நாளைக்குள் சுரப்பது நின்று விடும்.அதுக்கப்புறம் டியூபை எடுத்திடலாம்.''
அப்போது உள்ளே வந்த இன்னொரு டாக்டரை அறிமுகப்படுத்தினார்.
"இவர் தான் டாக்டர் பிரசாத். இந்த ஆபரேசன் செய்யப் போகிற சர்ஜன்."
அவருக்கு வணக்கம் தெரிவித்தேன்.
அவருடன் ஆலோசனை செய்தபிறகு செப்டம்பர் மாதம் 12ந் தேதி ஆபரேசன் செய்வது என்று முடிவானது.

பிராகிதைரபி சிகிச்சை முடிந்தது.

11.3.2004 அன்று மாலை ஆறு மணி அளவில் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது.மறுநாள் 12ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நேராக மருத்துவமனைக்கு(பேட்டர்சன் கேன்சர் சென்டர்)காலையிலேயே வந்துவிடுமாறும் இங்கிருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றும் கூறினார்கள்.அதன்படியே மறுநாள் எல்லா மருத்துவ ரிக்கார்டுகளை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம்.டாக்டர் மீண்டும் என்னைப் பரிசோதித்தார்.அங்கேயே மாலை வரை காத்திருந்தோம். மாலை ஆறு மணி அளவில் எங்களை செயின்ட் தாமஸ் மவுண்ட் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறி அங்கே கொடுப்பத்ற்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்கள்.அன்று இரவு சுமார் எட்டு மணியளவில் நந்தம் பாக்கத்திலுள்ள அந்த மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆனேன்.
மிகவும் சிறிய அறை.ஒரே ஒரு படுக்கை.ஏ.சி.இல்லை.ஒரு ஃபேன் மட்டும் இருந்தது.இங்கே என்ன சுற்றுலாவுக்கா வந்திருக்கோம்,சிகிச்சை முடிந்தபின் ஓடிவிட மாட்டோமா!என்று நினைத்துக் கொண்டு சமாதானமானேன்.
மறுநாள் 13ந் தேதி காலையிலிருந்து வழக்கமான பரிசோதனைகள் ஆரம்பமாயின.மாலை 5.30மணியளவில் டாக்டரும் அவரது மனைவியும்(இவர் அனஸ்தீசியா டாக்டராம்)வந்தார்கள்.என்னை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள்.
மாலை 6 மணியளவில் மயக்க மருந்து கொடுத்தபின்
பிராகிதைரபி சிகிச்சை செய்யப்பட்டது.
ஒரு மணி நேரத்தில் நினைவு திரும்பியது.தியேட்டர் ரூமிலிருந்து வெளியே கொண்டுவரும்போதே நினைவு திரும்பிவிட்டது.எழுந்திருக்க முயன்றேன்.முடியவில்லை.வாயெல்லாம் கசந்தது.படுத்தவாறே மார்பகத்தைப் பார்த்தேன்
நீள நீள கம்பிகளால் நிறையக் குத்தியிருந்தார்கள்.அறைக்குக் கொண்டுசென்று படுக்க வைத்தார்கள்.வலி ஆரம்பமானது.பொறுக்க முடியாத வலி.யாரையாவது கூப்பிடமுயன்றாலும் முடியவில்லை.பாதி மயக்கத்திலேயே இருந்தேன்.அறைக்கு வெளியே டாக்டர்களுடன் என் கணவர் காத்திருந்தார்.கொஞ்சநேரம் கழித்து டாக்டர்கள் அறைக்குள் வந்தார்கள்.கதிர்வீச்சைத் தடுக்கும் கோட்டுகளை அணிந்திருந்தார்கள்.என் கணவரோ படுக்கைக்கு அருகில் இருந்த ஒரு ஸ்டாண்ட் பின்னால் வந்து நின்றார்.ரேடியேசன் தடுப்புக் கோட்டு அணியாதவர் அந்த ஸ்டாண்ட் பின்னால் தான் நின்று பார்க்க வேண்டுமாம்.
''எப்படி இருக்கிறது அனுராதா?''என்று டாக்டர் கேட்டார்.
நன்றாக இல்லை என்பதுபோலத் தலையசைத்தேன்.
ஊசிகளை மீண்டும் பரிசோதித்தார்கள்.
''இப்படியே படுத்திருங்க.காலையில் வந்து பார்க்கிறேன்.''என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பிவிட்டார்.
பிறகு என் கணவர் ஊசிகளைப் பற்றி விளக்கினார்.
முன்பு டாக்டர் சொன்னமாதிரியே வலப்பக்கமிருந்து இடப்பக்கமாக மொத்தம் பனிரெண்டு கம்பிகள் சொருகப்பட்டுள்ளன.அனைத்துக் கம்பிகளிலும் இரிடியம் ஊசிகள் உள்ளே சொருகப்பட்டுள்ளன என்றார்.அவைகளின் கதிர்வீச்சு நன்றாகப் பாய மொத்தம் நாற்பத்துஎட்டு மணிநேரம் இருக்க வேண்டுமாம்.
மருந்துகளை உட்கொண்டும் வலி குறைந்தபாடில்லை.
பொறுத்துக்கொண்டே தூங்கினேன்.
மறுநாள் காலையில் எழும்போது வலி குறைந்திருந்தது.வேளாவேளைக்கு மருந்துகள் உட்கொண்டேன்.
அன்று மாலைதான் டாக்டர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.
அடுத்தநாள் 15.ந்தேதி மாலை சரியாக ஆறு மணியளவில் ஒரு டாக்டர் வந்து ஊசிகளையும் கம்பிகளையும் கவனமாக எடுத்துவிட்டார்.எங்கள் டாக்டர் வேறு பணி இருந்ததால் வரவில்லையாம்.எனவே டிஸ்சார்ஜ் ஆனதும் அங்கிருந்து நேராக பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்றோம்.டாக்டரைப் பர்த்தோம். உடனே ஒரு சி,டி ஸ்கேன் எடுக்கப்பட்டது.மேலே பூசுவதற்கு ஆயின்மெண்ட் எழுதிக் கொடுத்தார்.மார்பகத்தில் தண்ணீர் படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.வீட்டுக்குத் திரும்பினோம்.
பின் என்ன?வழக்கம் போல் புண்கள் ஏற்பட்டன.நேரம் தவறாமல் மாத்திரைகளை உட்கொண்டேன்.ஆயின்மெண்ட் போட்டுக்கொண்டேன்.தண்ணீர் படாமல் பார்த்துக்கொண்டேன்.டாக்டரின் அறிவுரையின்படி மாதம் இருமுறையோ மூன்று முறையோ மருத்துவமனைக்குச் சென்று பல ஊசிகளைப் போட்டுக்கொண்டேன்.ஆகஸ்ட் இறுதிவாக்கில் புண்கள் ஆறின.
இருடியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு இன்றைய நாள் வரை இருக்கிறது.எந்த நேரம் தொட்டுப் பார்த்தாலும் கொஞ்சம் வெம்மையாகவே இருக்கிறது.இடது மார்பகத்தைத் தொட்டு ஒப்பிடும்போது இந்த வித்தியாசம் தெரிகிறது.டாக்டரைக் கேட்டால் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு.நல்லது தானே என்றார்!
செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த செக்கப்பிற்குச் சென்றேன்.
"ரொம்ப சூப்பராகப் புண்கள் எல்லாம் ஆறியிருக்கு.இன்னும்
ஒரே ஒரு ஆபரேசன் மட்டும் செஞ்சுகிடீங்கன்னா இன்னும் நல்லாயிரும்
என்று டாக்டர் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்.

Monday, October 15, 2007

ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்

2004 பிப்ரவரி மாத முடிவில் மார்பகத்தில் ஏற்பட்டிருந்த் புண்கள் ஏறத்தாழ முழுதும் ஆறி விட்டன.ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பொக்கு உதிராமல் இருந்தன.அரிப்பு தாங்க மாட்டாமல் லேசாகச் சொரிந்தாலே மீண்டும் ரணமாகிவிடும்.
2004 மார்ச் 2ந் தேதி அடுத்த செக்ககப்பிற்காக மருத்துவமனை சென்றேன்.வரிசையாக டெஸ்டுகள் எழுதிக் கொடுக்கப்பட்டன.பிளட் டெஸ்டிலேயே பல வகை,ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே,எக்கோ,அல்ட்ரா சவுண்டு,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளியர் ஸ்கேன் ஆகியவை எடுக்கப்பட்டன.5.3.2004 அன்று அனைத்து ரிசல்டுகளுடன் டாக்டரைப் பார்த்தோம்.ரிசல்ட் நன்றாக வந்திருப்பதாக டாக்டர் சொன்னார்.
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்பாடா!பட்ட துயரம் போதும்.இனிமேல் ஒரு பிரச்சனையுமில்லை.மற்ற பெண்களைப் போலவே உடலளவில் நானும் சாதாரண மனுஷியாகிவிட்டேன்.
டாக்டரிடம் என் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன்.
"எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை டாக்டர்.ரொம்ப தாங்ஸ் டாக்டர்."
"எனக்கென்னம்மா நன்றி.எல்லாம் அந்த இறைவனுக்குச் சொல்லுங்கள்."
"சரி சார்."
டாக்டர் மெள்ள ஆரம்பித்தார்."இதுவரை எல்லாம் ஓகே.இன்னும் ஒரு சின்ன
சிகிச்சை இருக்கிறது.அதைச் செய்துவிட்டால் போதும்."
நான் திடுக்கிட்டேன்.
"என்ன சார் சொல்றீங்க?இன்னும் ஒண்ணா?''
''ஆமா அனுராதா.இப்போ மார்பிலே இருந்த கேன்சர் செல்களையெல்லாம் அழிச்சாச்சில்லே?ஆனாலும் மார்பிலேயே கொஞ்சம் கேன்சர் செல்கள்
இவ்வளவு ரேடியேஷனுக்குப் பின்னாலும் உயிரோடு இருக்கும்.இருக்க அதிக
வாய்ப்புண்டு. அதனாலே பிராக்கிதைரபி என்ற ஒரு சிகிச்சை அவசியம்
செய்ய வேண்டும்.அதாவது உங்க வலது மார்பகத்தில் ரொம்பவும் மெலிதான ஊசிகளை இடது பக்கத்திலேருந்து குத்தி வலது பக்கம் வெளியே வருமாறு
குத்தி வைப்போம்.ஒவ்வொரு ஊசியிலேயும் இரிடியம் கம்பிகளைச் சொருகுவோம்.அந்தக் கம்பிகள் வழியே கதிரியக்கம் மார்பகத்துக்குள் சென்று
மிச்சம் மீதி இருக்கிற கேன்சர் செல்கள் எல்லாத்தையும் அழிச்சுடும்.''
எனக்குப் புரிந்த மாதிரி இருந்தது."ஏன் சார்.பழனிகோயில்லே நாக்கிலே அலகு குத்திகிட்டு பக்தர்கள் வருவாங்களே,அந்த மாதிரி சொல்றீங்களா?
''கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க அனுராதா.அதே மாதிரி தான்''
"ஏன் சார்.இது தேவையா?"
"கண்டிப்பாத் தேவை அனுராதா."
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
என் கணவர் என்னைச் சமாதானப்படுத்தினார்."டாக்டர் ந்ம்ம நல்லதுக்குத் தானே சொல்றாரு.இவ்வளவு பெரிய ரேடியேசன் பாதிப்பையே
தாங்கிகிட்டே.இதையும் செஞ்சிக்கிறது நல்லதுன்னு தான் தோணுது."
வேறு யாரைக் கேட்பது?ஒரு பக்கம் டாக்டர். ஒரு பக்கம் என் கணவர்.
இரண்டு பேருமே என் நல்லதுக்குத் தான் சொல்றாங்க.சரி ஒத்துக் கொள்வோமே!
"சரி சார்.செஞ்சுக்கிற்றேன்."
"ஓகே அனுராதா.இந்த பிராக்கிதைரபி இங்கே செய்யறதில்லே.நந்தம்பாக்கத்தில் இருக்கிற செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆஸ்பத்திரியில் தான் செய்து வருகிறோம்.நீங்க வர்ர 12ந்தேதி அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிடுங்க.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"என்று கூறி டாக்டர் எங்களுக்கு விடை கொடுத்தார்.

Sunday, October 14, 2007

தனிமையின் கொடுமை

வலது மார்பகத்தில் புண்கள் ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் வெளியுலகத் தொடர்புகளைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டேன்.வீட்டில் நான்,என் கணவர் இருவரைத் தவிர வேறு யாருமில்லை.சொந்தஊர் மதுரை.என் கணவர் பணி புரிந்தது திண்டுக்கல் மாவட்டம்.என் மூத்த மகள் சென்னையிலும் ஒரு மகனும் ஒரு மகளும் சிங்கப்பூரிலும் வாழ்கின்றனர்.அனைவருக்கும் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கின்றன.மருத்துவ சிகிச்சையை முன்னிட்டு நாங்கள் சென்னைக்குக் குடி வந்துவிட்டோம்.மூத்த மகளைத் தவிர வேறு நெருங்கிய /தூரத்து உறவினர்கள் என்று யாருமே அருகில் இல்லை.இது எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது.வெளியே எங்கும் செல்ல முடியாது.எங்கு செல்வது?எப்படிச் செல்வது?ரவிக்கை போடமுடியாது.மருத்துவ மனைக்கு நைட்டியுடன்செல்லும் போதே இந்தா அந்தா என்று ஆகி விடுகிறது.எப்போ வீட்டுக்குத் திரும்புவோம் நைட்டியைக் கழற்றி வீசுவோம் என்று இருக்கும்.வீட்டுவேலைக்காரி வந்து போகும் நேரங்களில் ஒரு பெரிய துண்டைப் போர்த்திக்கொள்வேன்.தப்பித் தவறியும் எனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன்.சமயத்தில்
தரையைக் கூட்டுகிறேன் பேர்வழி என்று தடாலென்று அறைக்குள் நுழைந்துவிடுவாள் வேலைக்காரி.ஏனம்மா படுத்தே இருக்கிறீர்கள் என்று சில தடவை கேட்டுவிட்டாள்.முதுகு வலிப் பிரச்சனையம்மா என்று சொல்லி சமாளித்தேன்.நம் வீட்டு விஷயமோ விவகாரமோ வெளியே தெரிவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன.ஒன்று நாமே சொல்வது.இன்னொன்று வேலைக்காரி மூலம் பரவுவது.நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இம்மாதிரியான நேரங்களில் மனது அலை பாய்ந்தது.யாருக்கு என்ன தீங்கு
செய்தேன்?எனக்கு ஏன் இந்த நோய் வந்தது? ஏன் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது?எப்போது தீரும் இந்த நோவு?
இதைத்தவிர வேறு சிந்தனையே ஓடவில்லை.ஒரு நேரத்தில் இப்படியே
தாறுமாறாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால் பைத்தியமே பிடித்துவிடுமோ
என்று கவலைப்பட்டேன்.
குமுதம்,ஆனந்தவிகடன்,துக்ளக்,அவள் விகடன்,குமுதம் சிநேகிதி,மங்கையர் மலர் ஆகிய புத்தகங்களை நான் எப்போதுமே படிப்பதுண்டு.தற்போது படித்தாலும் கவனம் சிதறியது.படிப்பதில் நாட்டமே ஓடவில்லை.
இதைக் கவனித்த என் கணவர் மேற்கண்ட புத்தகங்களில்
உள்ள சுவையான தகவல்களைப் படித்துக் காண்பிப்பார்.அவர் ஒரு அறிவாளி.ஒரு காலத்தில் புத்தகப் புழுவாக இருந்தார்.எனவே மற்ற
நூல்களிலும் உள்ள பல பொதுஅறிவுத் தகவல்களையும் என்னிடம்
சொல்லிக் கொண்டே இருப்பார்.என்னைக் கவனிப்பதிலும்,உரிய நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதிலும்,அவருக்கு நேரம் சரியாக இருந்தது.அவர் ரிட்டயர் ஆனதிலும் ஒரு நன்மை இருக்கிறது என்றே நினைத்துக் கொண்டேன்.
என் வீட்டுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்குத் தையல் வகுப்பு யோகா வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள்.மேலும்கம்பு,கேழ்வரகு போன்ற தானியங்களை மாவாக்கி சத்து மாவு என்று விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.ஒருநாள் உடல் நிலை கொஞ்சம் தேறியிருந்ததால் அங்கு சென்று பார்த்துவிட்டு வருவோமே என்று போயிருந்தேன்.
எம்.எஸ்.சி.பட்டதாரிப் பெண்மணி ஒருவர் தன்னார்வ சேவையாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார்.கிட்டத்தட்ட அவர்தான் மேலாளர் எனலாம்.
நன்றாகப் பேசினார்.பழகினார்.சத்துமாவு உட்கொண்டால் என்னென்ன குறைபாடுகள் தீரும் என்று விளக்கினார்.பெண்கள் தொடர்பான பல கருத்துகளைச் சொன்னார்.எனக்கு ஒரு சிந்தனை ஓடியது.எனக்கு இந்த நோயை வந்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர் எப்படி அதை எதிர் கொள்வார்?அவரிடம் இப்படிக் கேட்டேன்".ஏங்க பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் பற்றி என்ன நினைக்கிறீங்க?"
"ஐயையோ!பிரஸ்ட் கேன்சர் வந்திருக்கிற பெண் என்றாலே காத் தூரம் ஓடிப் போயிடுவேன்!!பக்கத்திலேயே நெருங்கமாட்டேன்.அந்த நோய் நம்மளைத் தொத்திருச்சின்னா?"
எம்.எஸ்.சி.படித்த இந்தப்பெண்ணுக்கே இது தொற்றுநோயா இல்லையா என்று தெரியவில்லையே,படிக்காத பாமர மக்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள்?அடப்பாவமே!
சரிதான்.தவறான இடத்தில் இக்கேள்வியைக் கேட்டுவிட்டேன்போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.
நாளாக நாளாகப் புண்கள் ஆறிக்கொண்டே வந்தன.எனது சிந்தனைகளும் மாற
ஆரம்பித்தன.எப்படியாகிலும் இந்த நோயை வெற்றி கொள்ள வேண்டும்,
என்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகத் தோன்ற ஆரம்பித்தது.

Saturday, October 13, 2007

ரேடியேசனின் பின்விளைவுகள்

2003 அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்துடன்ரேடியேசன் மொத்தம் இருபத்து ஐந்து சிட்டிங் முடிந்தது.ஒவ்வொரு நாளும் மலர்ந்த முகத்துடனும் நன்றாக சேலை அணிந்துகொண்டும் மருத்துவமனைக்குச் செல்வேன்.அங்கிருக்கும் வரவேற்பாளர் முதல் நர்ஸ்,ரேடியேசன் கொடுக்கும் டெக்னீசியன் உள்பட அனைவருமே என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.சில நோயாளிகள் மூன்றாவது நான்காவது முறை ரேடியேசன் கொடுக்கும்போதே உடல் தளர்ந்தும் சோர்ந்தும் நடப்பதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே வருவார்களாம். இதைக் கேட்டுப் பெருமிதம் கொண்டேன்.மகிழ்ச்சியாக இருந்தது.இது பொய்யான தற்காலிகமான மகிழ்ச்சி என்று அடுத்து வந்த நாட்கள் நிரூபித்தன.
ரேடியேசன் முடிந்து மூன்று நான்கு நாட்கள் கழித்து ரேடியேசன் கொடுக்கப்பட்ட வலது மார்பகத்தில் வலி ஆரம்பித்தது.மறுநாளே மேல்தோல் சற்று சுருங்கியது.சுருக்கம் விழுந்த பகுதிகளில் புண்கள் தோன்றின.வலி நாளுக்கு நாள் அதிகமானது.ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் டாக்டரைத் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தேன்.ஒரு வாரம் சென்றதும் மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டார்கள்.டாக்டர் என்னைப் பரிசோதிக்கும்போது மார்பகம் முழுவதும் புண் ஆகியிருந்தது.கை நிறைய பஞ்சு எடுத்துக்கொண்டார்.அருகில் இருந்த நர்ஸிடம் ஒரு கண்ணாடி பாட்டிலைக் கொடுத்தார்அதில் முழுதும் தண்ணீர் மாதிரி ஒரு மருந்து இருந்தது.(லோக்கல் அனஸ்தீசியா மருந்து என்பதைப்
பிற்பாடுஅறிந்து கொண்டேன்.)"இதோ பார். நான்பஞ்சினால்இந்தப்
புண்களைத் துடைத்து விடும்போதே இந்தப் பாட்டிலில் உள்ள மருந்தைத் தாராளமாக மார்பகம் பூராவும் ஊற்ற வேண்டும். ஒரு வினாடி கூடத் தாமதிக்கக் கூடாது."என்று சொல்லிவிட்டுக் கண்மூடிக் கண் திறப்பதற்குள் கையிலுள்ள பஞ்சைக் கொண்டு மார்பகம் பூராவையும் அழுந்தத் துடைத்து விட்டார். நர்ஸும் உடனே அந்த தண்ணீர் மாதிரி இருந்த மருந்தை மள மளவென்று ஊற்றினார்.டாக்டர் துடைப்பதற்கும் நர்ஸ் மருந்தை ஊற்றுவதற்கும் மூன்று அல்லது நான்கு வினாடிகள் தான் ஆகியிருக்கும்.ஏற்கன்வே வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது.கத்தக் கூட முடியவில்லை.நர்ஸ் மருந்து ஊற்றியதுமே வலியும் உடனே குறைந்து விட்டது. மார்பகத்தைப் பார்த்தேன்.புண்கள் முழுதும் துடைக்கப்பட்டு மேல் தோல்பெரும் பகுதி காணோம்.பின்னர் புளு கலரில் இருக்கும் திரவ மருந்தை மார்பகம் முழுவதும் ஊற்றினார். பேண்டேஜ் துணியை சிறு கட்டம் கட்டமாக வெட்டி புண் இருந்த இடங்களில் வைத்து அதன் மேல் பஞ்சு வைத்து மீண்டும் புளு கலர் மருந்தை ஊற்றினார்.
பிறகு என் கணவரை அழைத்து மேற்சொன்னபடிஎப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.தினமும் பலமுறை இவ்வாறு பேண்டேஜ் துணி,பஞ்சு வைத்து மருந்து ஊற்ற வேண்டும் என்றார்.உட்கொள்ள சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.
படுக்கை அறையிலுள்ள குளிர் சாதனப் பெட்டியை உபயோகிக்கக்கூடாது என்றும்
ஒரு பெடஸ்டல் மின் விசிறியை வாங்கி அதிகபட்ச வேகத்தில் காற்றுப்
படும்படி வைத்துக்கொள்ளுமாறும் டாக்டர் கூறினார்.அத்துடன் வீட்டுக்கு வந்தோம்.
வரும் வழியில் துணிக்கடைக்குச் சென்று பத்து ஃபுல் ஓபன் நைட்டிகள் மொத்தமாக வாங்கினோம்.கழுத்து வரை ஓபனாகத் தைக்கப்பட்ட
நைட்டிகளை அணிந்து கொள்வதில் மிகுந்த சிரமமாக இருந்தது.
வரும் வழியிலேயே மீண்டும் வலி ஆரம்பித்தது.இப்போது வலியுடன் சரியான எரிச்சலும் சேர்ந்து கொண்டது.
வலது கை அவ்வளவாகத் தூக்க முடியவில்லை.துணி பட்டாலே எரிந்தது.வீட்டுக்கு வந்தபின்
நைட்டியை(அதைத் தான் உடுத்திக்கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன்.)க் கழற்றிப்
பார்த்தால் மார்பகம் முழுவதும் நீர் சுரந்து ஈரமாகி நைட்டியும் நனைந்திருந்தது.என் கணவர்
பஞ்சினால் லேசாகத் துடைத்தார்.வலி உயிர் போனது.கத்தோ கத்து என்று கத்திவிட்டேன்.என் கணவர் மிரண்டு விட்டார்.லேசாகத் துடைத்தாலே எரிந்தது.
பேண்டேஜ் துணியால் ஒற்றி ஒற்றி எடுத்தார்.புது பேண்டேஜ் துணிகளை கொஞ்சம் கனமாக இருக்கும் வகையில் நான்காக மடித்துச் சதுரங்களாக வெட்டி மார்பகம் முழுதும் வைத்து
அதன் மேல் புளு மருந்தை ஊற்றினார்.சீலிங் மின்விசிறியையும் பெடஸ்டல் மின்விசிறியையும் அதிகபட்ச வேகத்தில் வைத்தும்
எரிச்சல் குறையவில்லை.படுக்கையில் படுக்க முயன்றேன்.முடியவில்லை.பெட் ரூமிலேயே ஒரு சேரைப் போடச் சொல்லி அதில் இரண்டு போர்வைகளை மடித்துப் போடச் சொல்லி சேரில் உட்கார்ந்து கொண்டேன்.
அன்று சாயங்காலத்திற்குள் பத்துப் பதினைந்து தடவை பேண்டேஜ் துணி,பஞ்சு மாற்றி
புளு மருந்தை ஊற்றி விட்டார்.
இரவானதும் மீண்டும் படுக்க முயன்றேன்.முடியவில்லை.அப்படியே சேரில் அமர்ந்தவாறே தூங்கினேன்.தூக்கம் வரவில்லை. இரவு நீண்ட நேரம் என் கணவர்
அருகில் நின்றுகொண்டு அடிக்கடிபேண்டேஜ் துணி,பஞ்சு மாற்றி புளு மருந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
மறுநாள் விடிந்தது.விழித்துப் பார்த்தால் சேரிலேயே தூங்கியிருக்கிறேன்.
மெதுவாக எழுந்து பல் விளக்கி காலைக் கடன்களை முடித்தேன்.என் கணவர் தேநீர்
தயாரித்துக் கொடுத்தார்.அடுத்தத்தாகக் குளிக்க வேண்டும்.மார்பகத்தில் தண்ணீர் படாமல்
குளிக்கவேண்டும்.அதற்கு என் கணவர் ஒரு தீர்வு கண்டார்.
கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொண்டார்.
ஒரு முனையை நீளவாக்கில் கத்தரித்தார்.இப்போது பார்த்தால் மழையில் நனையாமலிருக்க
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குழந்தைகள் தலையில் போட்டுக் கொண்டு செல்வார்களே
அது மாதிரி இருந்தது.மேல்முனையில் குறுக்காகக் கை நுழையும் அளவுக்குக் கத்தரித்தார்.
அவ்வளவு தான்.அதில் வலது கையை மெதுவாகவும் கவனமாகவும் நுழைத்தேன்.
வலது மார்பகம் முழுதும் கச்சிதமாக மறைத்திருந்தது.ஆகத் தண்ணீர் படாமல்
குளிக்க வழி கண்டாகிவிட்டது.
இப்படியே ஒருவாரம் கழிந்தது.தினமும் படுக்கையில் படுக்க முயல்வேன் முடியவில்லை.
சேரில் அமர்ந்தவாறே தூங்கப் பழகிக் கொண்டேன்.அவ்வாறே கிட்டத்தட்டப் பத்து நாட்கள்
தூங்கியிருப்பேன்.அது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு என்பதைப் பிற்பாடு
தெரிந்துகொண்டேன்.
இந்த இடத்தில் என் கணவரைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும்.
வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தவர்,முப்பத்து ஒன்பது ஆண்டுகளாகப் பணியாற்றி தாசில்தார் நிலையிலும் பணிபுரிந்து பின் என் உடல்நிலையை
உத்தேசித்து இரு ஆண்டுகள் முன்னதாகவே தன்விருப்ப ஓய்வு பெற்றவர்.அவர் கையாண்ட எந்த ஃபைலைப் பார்த்தாலும் கண்ணில் வைத்து ஒற்றிக் கொள்ளும்படியாக இருக்கும் .அவ்வளவு நேர்த்தியாகவும்,பக்கங்கள் சீராகவும் கிட்டத்தட்ட பைண்டிங்
செய்தது போலவே இருக்கும்.அவர் படிக்கும் காலத்தில் அவரது தந்தையார்(எனது மாமனார்)
மதுரையில் பேப்பர் கடை மற்றும் பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார்.தினமும் பள்ளி முடிந்ததும்
நேராகக் கடைக்குச் சென்று விடுவார்.கடையில் பேப்பர்களை லாவகமாகக் கையாள்வதிலும்
சீராக அடுக்குவதிலும் அவருக்கு நிகர் அவர் தான்.கடையிலும் அலுவலகத்திலும் பழகிய பழக்கம் இங்கே வீட்டில் பஞ்சையும் பேண்டேஜ் துணியையும் அளவாகவும் சீராகவும் வெட்டுவதில் கை கொடுத்தது.
பத்து நாட்கள்கழித்து மீண்டும் மருத்துவமனைக்குச் சென்ற போது மார்பகத்தில்
வைக்கப் பட்டிருந்த பேண்டேஜ் துணிகளையும் பஞ்சையும்எடுத்த டாக்டர்
மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டார்.
"யார் இவ்வளவு நீட்டாக வெட்டி வைத்தது?யாராவது நர்ஸை வீட்டில் வேலைக்கு
வைத்திருக்கிறீர்களா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே டாக்டர்.நான் தான் வெட்டி வைத்திருக்கிறேன்"என்றார் என்
கணவர்.
எக்ஸலண்ட் ஜாப்.எங்க ஸ்டாப் கூட இவ்வளவு நேர்த்தியாக டிரஸிங் செய்ய முடியாது.
என்று டாக்டர் பாராட்டினார்.
அடுத்து மார்பகத்தைப் பரிசோதித்தார் டாக்டர்.புண் ஆறவேயில்லை.மாறாக மார்பகத்தின் அடிப் பக்கம் உரசும் இடத்தில் புண் பரவி இருந்தது.டாக்டர் ஒரு நிமிடம் திகைத்தார்.
இந்த இடத்தில் எப்படிப் புண் ஆனது?ஆகாதே!என்றார்.எங்களைப் பல வகையில் விசாரித்தார்.
இறுதியாக "இரவு எப்படித் தூக்கம் வருகிறது?"என்று கேட்டார்.
"எங்கே சார் தூங்குறது?ஒரு பக்கம் வலி. மறு பக்கம் எரிச்சல்.தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தூங்கினாலும்
தூக்கம் வரமாட்டேங்கிறது.ஒரு வழியா சேரில் உட்காந்துகிட்டே தூங்குறேன்."
"என்னது சேரிலேயா?"
"ஆமா சார்."
"எப்படி?'
"இப்படித்தான்.இப்ப நான் உக்கர்ந்திருக்கேன்லே.இதேமாதிரி தான்."
அப்படியே டாக்டர் என்னை முறைத்துப் பார்த்தார்."அது தான் இங்கேயும் புண் ஆகியிருக்கு!"
என்றார்.இப்படியே சேரில் உட்கார்ந்துகிட்டே தூங்கினா புண் ஆறவே ஆறாது. மார்பகம் உரசும் இடத்தைப் பாருங்க.எப்படிப் புண்ணாகியிருக்குன்னு.''
டாக்டரே பஞ்செடுத்துச் சுத்தம் செய்து மீண்டும் மருந்திட்டார்.உட் கொள்ளமாத்திரைகளை

எழுதிக் கொடுத்தார்.இன்னையிலேருந்து பெட்டில் தான் படுக்க்கவேண்டும்.அவ்வப்போது எழுந்து உட்காரலாமே தவிர பெரும்பாலும் படுத்தே இருக்க வேண்டும்."என்றார்.
டாக்டரிடம்"ஏன் சார்.இந்தப் புண்கள் எப்போதுதான் ஆறும்.?"என்று கேட்டேன்.
"கவலைப்படாதீங்க.சீக்கிரமே ஆறி விடும்"
இப்படியாக நாட்கள் வாரங்களாகி மாதங்களாகிக் கழிந்தன.

Friday, October 12, 2007

டி.எம்.எஸ்.அவர்களுடன் மற்றுமொரு சந்திப்பு

மறுநாளே திரு டி.எம்.எஸ்.அவர்களைத் தொடர்பு கொண்டோம்.அடுத்த சனிக்கிழமையன்று
காலைநேரத்தில்வரச் சொன்னார். டாக்டரிடம் உடனே விவரம் தெரிவித்தோம்.டாக்டருக்கு ஒரே சந்தோஷம்.அன்றைக்குரிய மற்றபணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு வந்துவிட்டார்.டி.எம்.எஸ்.அவர்களின் வீட்டை அடைந்தபோது காலை மணி பத்து இருக்கும்.டி.எம்.எஸ்.வெள்ளைப் பேண்ட்,வெள்ளை சர்ட் அணிந்திருந்தார்.எங்களைப் பார்த்தபின் வெளியே செல்ல ஆயத்தமாக இருக்கிறாரோ என்று எண்ணினேன்.டி.எம்.எஸ்.ஸும் அவரது மனைவியாரும் இன்முகத்துடன் வரவேற்றார்கள்.டாக்டரை அறிமுகப் படுத்தினேன்.
கதிரியக்க சிகிச்சை முறைகளைப் பற்றியும்,பலவிதமான புற்றுநோய்கள் அவைகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.எனக்கும் டாக்டருக்கும்ஒரேஆச்சரியம்.பிறகு திரைப்படப் பாடல்களைப் பற்றி பேசத் தொடங்கினோம்.சென்றமுறை எங்களிடம் கூறிய தகவல்கள் மட்டுமல்லாது பிற சுவாரசியமான தகவல்களையும் சொன்னார்.
அவரது இளமைக் கால வாழ்க்கை,திரையுலக அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்ட
தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.அது குறித்த டிரைலர்
சி.டி.யை டி.வி.யில் போட்டுக் காண்பித்தார்.சுமார் பதினைந்து நிமிடம் ஓடியது.நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் பேட்டி காணுவதாக அமைக்கப்பட்டிருந்தது.
தொடர் முழுதும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும்,ஸ்பான்ஸர் செய்ய சரியான நபர் அல்லது நிறுவனத்தைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.தினமும் அதிகாலையில் சாதகம்
செய்வதாகவும் சொன்னார்.முருகன் பாட்டுஒன்றையும் பாடினார்.குரலில் கொஞ்சமும் நடுக்கமில்லை. மதியம் இரண்டாகிவிட்டது.பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.ஒரு வழியாக விடை பெற ஆயத்தமானோம்.உடனே டி.எம்.எஸ்.தனது மனைவியாரிடம் இரண்டு சால்வைகளை எடுத்துவரச் சொன்னார்."நான் என்ன சாதனை செய்திருக்கிறேன்?ஏதோ வேறு தொழில் தெரியாமல் திரையுலகில் பாட்டுப் பாடி வந்தேன்.நீங்கள் இவ்வளவு பெரிய படிப்புப் படித்து டாக்டர் தொழில்
செய்து மக்களுக்கும் சமுதாயத்துக்கும் பெரிய சேவை செய்து வருகிறீர்கள்.என்னையும்
மதித்துப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழவும்
உங்கள்மருத்துவச் சேவை தொடரவும் என்னை ஆளும் அந்த முருகப் பெருமானை வேண்டுகிறேன்"என்று டாக்டரை வாழ்த்தி ஒரு சால்வையைப்
போர்த்தினார்.தனது பண்(பாட்டு)நாயகன் நூலையும் வழங்கினார்.இன்னொரு சால்வையை என் கணவருக்குப் போர்த்தினார். டாக்டர் அப்படியே டி.எம்.எஸ்.அவர்களின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசிகள் பெற்றுக் கொண்டார்.
அவரிடமிருந்து விடை பெற்று வெளியே வந்தோம்.
இன்றைய தினம் என்னால் மறக்கமுடியாது.ரொம்பத் தேங்ஸ் அனுராதா.என்றார் டாக்டர்.
டாக்டரிடம் விடை பெற்று நாங்கள் வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.

Thursday, October 11, 2007

பண்(பாட்டு)நாயகன் திரு டி.எம்.எஸ்.அவர்களுடன் முதல் சந்திப்பு.

ரேடியேசன் கொடுக்க்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்று ரேடியேசன் முடிந்ததும் டாக்டரைப் பார்த்தோம். வழக்கம்போல் ஒரு திரைப் படப் பாடலை முணுமுணுத்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.'படிக்காத மேதை படத்தில் வருகிற பாடல்தானே இது?'என்று என் கணவர் கேட்டார். 'ஆமாம். டி.எம்.எஸ்.பாடினது''என்று டாக்டர் பதில் சொல்லிவிட்டு 'எப்படி கரெக்டா சொல்றீங்க?'என்று கேட்டார்.நான் பதில் சொன்னேன்.'கிட்டத்தட்ட டி.எம்.எஸ்.ஸின் எல்லாப் பாடல்களுமே நாங்க கேட்டிருக்கோம் சார்.தினமும் எஃப்.எம்.சென்னை ரேடியோவிலெ ராத்திரி ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரைக்கும் பழைய பாட்டுகளைத்தானே போட்றாங்க.அதுலேயும் டி.எம்.எஸ்.பாட்டுகளெத்தானெ அதிகமாப் போட்றாங்க' என்றேன்.ஒவ்வொரு நடிகரின் குரலுக்கு ஏற்ப அவர் பாடிய பாடல்கள் தொடர்பாக கருத்துக்களைப் பறிமாறிக்கொண்டோம்.'தமிழ்த் திரையுலகில் மாபெரும் சாதனை புரிந்த இவரை எனது வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்துப் பேச வேண்டும்.தன்னுடைய மயக்கும் குரலினால் உலகையே ஆட்சிபுரிந்த இவரை ஒரு தடவை பார்த்துப் பேசினாலே போதும்.ஆனா அவரெங்கே.நானெங்கே.அவருக்கு முன்னாலெ நாமெல்லாம் எம்மாத்திரம்?'என்று டாக்டர் சொன்னார்.அவர் பேச்சிலும் முகத்திலும் ஏக்கம் தெரிந்தது.எங்களுக்கோ ஒரே ஆச்சரியம்.நான் வாய் விட்டே கேட்டு விட்டேன்"என்ன சார். இவ்வளவு பெரிய டாக்டரா இருக்கீங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா?"
"ஏன் இருக்கக் கூடாதா?டாக்டரா இருந்தா என்ன? நானும் உங்களைப் போல மனுஷன் தானே?என் மனசுக்குள்ளே ஒழிஞ்சுகிட்டுருக்கிற நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒண்ணும்மா"என்றார்."இப்ப என்ன.நீங்க டி.எம்.எஸ்.ஸைப் பாக்கணும்.அவ்வளவு தானே சார்.
நான் எற்பாடு பண்றேன்"என்றேன்.அவ்வளவு தான்.டாக்டர் முகத்தில் பிரகாசம் தெரிந்தது."என்ன சொல்றீங்க.உண்மையிலேயே டி.எம்.எஸ்.ஸைப் பார்க்க
முடியுமா?சீரியஸாத் தான் பேசுறிங்களா?"நீங்க என்றைக்கு ஃபிரீயா இருப்பீங்க.ஒரு
தேதி மட்டும் சொல்லுங்க.மத்ததெல்லாம் நான் ஏற்பாடு பண்றேன்"என்றேன்.நான் போயி
தேதி சொல்றதா? அவருக்கு வசதியான தேதி எதுவோ அன்னிக்கு ஃபிக்ஸ் பண்ணுங்க"என்றார் டாக்டர்.அவர் குரலில் எங்கள் வார்த்தையை நம்பாதது போல் தெரிந்தது.

பிறகு சமீபத்தில் டி.எம்.எஸ்.அவர்களைப் பற்றி நாழிதழிலும் அடுத்து ஆனந்தவிகடனிலும்
வெளியாகியிருந்த விவரங்களையும்,இதனை ஒட்டி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர்
நாங்கள் டி.எம்.எஸ்.அவர்களின் வீட்டுக்குச் சென்று சந்தித்து வந்ததையும் டாக்டரிடம் சொன்னேன்.மிகவும் ஆச்சரியப்பட்டார்.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்!

ரேடியேஷன் ஆரம்பிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக திருடி.எம்.எஸ்.அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் மருத்துவ சிகிச்சைக்குப்பின்
உடல்நலம் தேறி வருவதாகவும் நாளிதழ்களில் செய்தி வந்திருந்தது.அச்செய்தியைப் படித்ததிலிருந்து மனதுக்கு என்னவோ மாதிரிஇருந்தது.ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வென்ன,இருந்த இருப்பென்ன?அவர் கால கட்டத்தில் யாருமே எட்ட முடியாத சாதனை படைத்த இவருக்கா இந்த நிலை?
இரண்டு வாரம் கழித்து ஆனந்தவிகடனில் அவரது பேட்டி வெளிவந்திருந்தது.மருந்தென்று நினைத்து (ஏதோ)ஒரு திரவத்தைச் சாப்பிட்டுவிட்டாராம்.உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தகுந்த சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறிவிட்டாராம்.அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இளமைக் காலத்தில் தான் ஒரு பெண்மீது காதல் வயப்பட்டதையும் அது நிறைவேறாமல் போனதையும் விவரித்திருந்தார்.திரைப் படங்களில் சோகமான காதல் பாடல்களைப் பாடும் போது அவரது முன்னாள் காதலியை நினைத்துக் கொள்வாராம்.குரலில் சோகம் வந்து விடுமாம்.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?அவரது முன்னாள் காதலி எங்களின் நெருங்கிய உறவினர்.

மிகவும் சுவாரசியமாக இருந்தது அந்தப் பேட்டி.

இந்தப் பேட்டியைப் படித்த பிறகு எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.என்ன தான் இருந்தாலும்முன்னாள் காதலி என்று பெயரெல்லாம் போட்டு மானத்தை வாங்கிவிட்டாரே!
என்றுதான் முதலில் நினைக்கத் தோன்றியது.சிந்தனை தெளிவடைந்தபின் எண்ணம் மாறியது.'பாவம் தனதுஎண்பத்து இரண்டாம் வயதிலாவது தனது காதலைப் பற்றி
வாய் திறந்திருக்கிறாரே'என்று ஆதங்கப் பட்டேன்.

யோசித்துகொண்டே இருக்கும்போது திடீரென்று தோன்றியது.சரி.நாம் போய்ப் பார்த்து விசாரித்து வந்தால்என்ன?சென்னையில் தானே இருக்கிறார்?திரைப்படங்களில்தான் தற்போது பாடுவதேஇல்லையே!கண்டிப்பாக ஓய்வில் தான் இருப்பார்.
என் எண்ணத்தைக் கணவரிடம் சொன்னேன்.உடனே அவரது வீட்டுத் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம்.மயிலாப்பூரில் அவரது வீடு உள்ளது. தொடர்பு கோண்டோம்.டி.எம்.எஸ்.அனைத்துலக ரசிகர் மன்றத் தலைவர் என
அறிமுகப் படுத்திக் கொண்ட பாலன் என்பவர் பேசினார்.என்றைக்கு வேண்டுமானாலும் காலை வேளைகளில் வரலாம் என்று சொன்னார்.
அப்புறம் என்ன?
மறுநாள் காலையே கிளம்பினோம்.மல்லிகைப்பூ,கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டோம்.
என் இரு மகள்கள்,மாப்பிள்ளைகள், பேரன் பேத்தி ஆகியோர்களுடன் சென்று சந்தித்தோம்.
மிக அருமையான அமைதியான சந்திப்பு.என் பேரனைப் பாடச் சொன்னார்.வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் "உன்னை அறிந்தால்.."பாடலில் நான்கு வரிகளைப் பாடினான்.அவரும் உற்சாகமாக குரல் ஏற்ற இறக்கங்களுடன் எப்படிப் பாட வேண்டும் என்பதைப் பாடிக் காட்டினார். கொண்டுசென்ற பூ பழங்களை அவரிடமும் அவரின் மனைவியாரிடமும் கொடுத்தோம். பழங்களை ஏக்கத்துடன் பார்த்தார்.சர்க்கரை நோயின் காரணமாக இனிப்புகளை அறவே தவிர்த்து விட்டாராம். காப்பி பலகாரம் கொடுத்து உபசரித்தார்.

நிறையப் பேசினோம்.சில பாடல்களப் பாடும் போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபிறகு பிரபல பின்னணிப் பாடகர் திரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மட்டுமே வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போனாராம்.வேறு யாருமே இன்று வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லையாம்.
"என்ன செய்றது.எனக்கு கூழைக் கும்பிடு போடத் தெரியாது.மனசிலெ ஒண்ணெ வச்சுகிட்டு வெளியிலெ ஒண்ணு பேசத் தெரியாது.பொய் பேசத் தெரியாது.இதனாலெ நான் இழந்தது ஏராளம்.இதனாலேயே எம்.ஜி.ஆர்.அவர்களுடன் கருத்து வேறுபாடு கூட வந்தது.ஆனாலும் என் நிலையிலிருந்து நான் மாறவேயில்லை.பிற்பாடு என் குணமே அது தான் என்பதை எம்.ஜி.ஆர்.
தெரிந்துகொண்டபிறகு மீண்டும் முன்போலவே பழக ஆரம்பித்தார்.
இன்றைய திரை உலகத்திலெ பாட்டுப் பாடறதுக்கு நான் லாயக்கில்லெ.ஒரு பாட்டுப் பாடரதுன்னா அதுலெ எல்லாரது உழைப்பு இருக்கணும்.அன்னிக்கெல்லாம் ஒரு போட்டியே இருந்துச்சில்லே!ஒருபக்கம் கவிஞரு(கண்ணதாசன்)ஒரு பக்கம் எம்.எஸ்.வி.அண்ணா.என் ராகத்துக்குப் பாட்டு எழுதிருவியோன்னு எம்.எஸ்.வி.சொல்ல,இந்தா பிடின்னு கவிஞரு மளமளன்னு சொல்ல தாளத்துக்கு ஒத்து வரல்லியே,மாத்திக் கொடுன்னு எம்.எஸ்வி.திருப்ப,அப்பிடியா இந்தா இன்னொண்ணு
பிடின்னு கவிஞரு சொல்ல ஒரே போட்டியா இருக்குமையா!இருவருக்கும் மனசு திருப்திப் பட்டாலொழிய எழுந்திருக்கவே மாட்டாங்க.பிறகு நான் பாடினதுக்கப்புறம் சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்
அனாயாசமாக வாயசைத்து நடித்துவிட்டுப் போய் விடுவார்.அப்புறம் பாடலின்
வெற்றிக்கோ படத்தோட வெற்றிக்கோ சந்தேகமே வராதே!ஆனா ஒண்ணு எங்க போட்டியிலே
பொறாமையில்லெ.வெறுப்பு இல்லெ.ஒவ்வொருத்தரும் உண்மையா உழைச்சோம்.
எந்தப் பாட்டானாலும் உயிர்த்துடிப்போட பாடணும்.லயிச்சுப் பாடணும்.ஜீவன் இருக்கணும்.சுருதி சுத்தமாப் பாடணும்.ஒரு ஆளு எங்கிட்டெ வந்து அண்ணே,ஒரே ஒரு பாட்டு சுருதிபேதமாப் பாடுங்க.நீங்க கேக்குற காசைத் தர்றேன்னான்.ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் சுருதிபேதமாப் பாடமுடியாதுன்னுட்டேன்.காசுக்காகப் பாட்றதுன்னா இன்னிக்கு எங்கேயோ இருப்பேன்.ஆனா மனத் திருப்தி இருக்காது.நிம்மதி இருக்காது.அம்மாதிரிப் பாட்டுக்கள் மனசிலேயும் நிக்காது.அப்படியெல்லாம் எனக்குப் பாடவுந்தெரியாது."

நேரம் போனதே தெரியவில்லை.காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்தது மதியம் மூன்று மணி
ஆனபிறகும் பேசிக்கொண்டே இருந்தோம். பிறகு தான் வாங்கிய பரிசுகளைக் காட்டினார்.அடுக்கி வைக்க இடமில்லாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.சில பரிசுகளை எங்களிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.நன்றியுடன் வாங்கிக் கொண்டோம்.சமீபத்தில் வெளியாகியிருந்த அவரின் வாழ்க்கை வரலாறுப் புத்தகம் ஒன்றையும் கொடுத்தார்."பண்(பாட்டு)நாயகன்"என்ற தலைப்பில் மணிவாசகம் பதிப்பகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

நன்றி தெரிவித்துவிட்டு வெளியே வந்தோம்."நல்லா உழைச்சு முன்னேருங்க.கடைசிக் காலத்துலெ உங்களுக்குன்னு போதுமான பணத்தெ இப்போதிருந்தே சேமியுங்க.குழந்தெகளெ
நல்லாப் படிக்க வையுங்க.நல்லா நிம்மதியா வாழுங்க.அடிக்கடி வாங்க.உங்க மாதிரி ஆளுங்க
வந்துட்டுப் போனாத் தான் எங்களுக்கும் திருப்தியா இருக்கும்"என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.

வெளியே வரும் போது எதையோ பெற்ற மாதிரியும்,எதையோ இழந்த மாதிரியும் இருந்தது.
மனசெல்லாம் நிறைவாக இருந்தது.