Tuesday, August 28, 2007

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

சென்ற வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஐந்தரை மணியளவு இருக்கும்.
சரியான மழை பெய்துகொண்டிருந்தது.ஒரு இடி இடித்தது பாருங்கள்.
எங்களின் லேப் டாப் அவுட்!டி.வி அவுட்.
டி.வி.யை ரிப்பேர் பார்த்து விட்டோம்.லேப் டாப் மெயின் சர்க்யூட்
போய் விட்டதாம்!தெரிந்த மென் பொருள்,வன்பொருள்
பொறியாளர்களிடம் காண்பித்தோம். ரூ.8000/-கும் மேல் ஆகுமாம்.
சிங்கப்பூரில் இருக்கும் எங்கள் மகனிடம் விபரம் தெரிவித்து விட்டோம்.
புதிதாக ஒரு லேப்டாப் வாங்கித் தருவதாகச் சொன்னான்.இம்மாதம்
15 ந்தேதி வாக்கில் சிங்கப்பூர் செல்லவிருக்கிறோம். அங்கிருந்து மீண்டும் பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவேன்.
எனவே அதுவரை தற்காலிகமான இடைவேளை.

வடுவூர் குமாருக்கு இவ்வளவு சீக்கிரம் சஸ்பென்ஸை உடைப்பேன்
என்று நினைக்கவில்லை.எனது மெயில் ஐடிக்கு முடிந்தால்,
விருப்பமிருந்தால் உங்களின்
தொலைபேசி எண்ணை அறியத் தாருங்கள்.சிங்கை வந்தபின் தங்களைச் சந்திக்கிறேன்.

Friday, August 24, 2007

ரேடியேசன் முடிந்தது

மறுநாள் 05/09/2003 காலை ஒன்பது மணிக்கெல்லாம் டாக்டர் முன்பு ஆஜரானோம்.வரிசையாகப் பல டெஸ்டுகள் எழுதிக்கொடுத்தார்.அனைத்தையும் எடுத்தோம்.எந்தப் பகுதியில் ரேடியேசன் தரப்பட வேண்டுமோ அது தவிர மற்றப் பகுதிகளை மறைக்கும் வகையில் பின்னல் துணியில் ஒரு மோல்டிங் தயாரிக்க அளவு எடுத்தார்கள்.அடுத்த திங்கட்கிழமை முதல்ரேடியேசன் ஆரம்பிக்கிறது.காலையிலேயே வந்து விடுங்கள் என்றனர்.திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் ஐந்து வாரங்கள் மொத்தம் இருபத்தி ஐந்து சிட்டிங் என்றார்கள்.ரேடியேசன் கொடுக்கும் ரூமிற்குக் கூட்டிச்சென்று காட்டினார்கள்.சி.டி.ஸ்கேன்இயந்திரம் போல இருந்தது.ரேடியேசன் கொடுக்கும்போது ஏதேனும் வலிக்குமா என்று கேட்டேன்.அதெல்லாம் ஒண்ணுமே இருக்காது.எக்ஸ்ரே எடுக்கிறீங்க பாருங்க அதே மாதிரி தான் என்றனர்.இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு விதமான தயக்கம் ஏற்பட்டது.
அடுத்த 08/09/2003 திங்கட்கிழமை காலை முதல் ரேடியேசன் தெரபிஆரம்பித்தது.மேல் உடைகளை அகற்றியபின் பின்னல் துணி மோல்டிங்கை மாட்டி விடுகிறார்கள்.பிறகு இயந்திரத்தில் நீட்டியபடி உள்ள நீண்ட பெஞ்சில் கால்களை நன்றாக நீட்டிப் படுத்துக் கொள்ளவேண்டும்.ரேடியேசன் கதிர்கள் எந்தப் பகுதியில் விழ வேண்டுமோஅந்தப் பகுதியை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளை சிறு சிறு தலையணை மாதிரி இருக்கும் திண்டுகளை வைத்து மறைத்துவிடுகிறார்கள்.பிறகு ரேடியேசன் ரூமிலிருந்து மற்றவர்கள் வெளியேறிவிடுவார்கள்.கதவையும் வெளிப் பக்கம் தாழிடுகிறார்கள்.அடுத்த அறையில் ரேடியேசன் கட்டுப்பாட்டுச் சாதனம் இருக்கிறது.அதை இயக்குகிறார்கள்.சரியாகஒரு நிமிடம் சென்றதும் சாதனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் நான் படுத்திருக்கும் ரேடியேசன் அறையைத் திறந்து உள்ளே வந்து சரி பார்க்கிறார்கள்.மோல்டிங் துணியையும் அதைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள சிறு சிறு தலையணைகளையும் சரி செய்கிறார்கள்.மீண்டும் முன் சொன்னபடியே ரேடியேசன் தருகிறார்கள்.இப்படியேநோயாளியின் நோயின் தாக்கத்தைப் பொறுத்து டாக்டரின் மேற்பார்வையில் மூன்று அல்லது நான்கு தடவை ரேடியேசன் தருகிறார்கள்.அவ்வளவு தான் ரேடியேசன் தெரபி. பூ!அவ்வளவு தானா!!என்று கேட்டேன்.அவ்வளவே தான் மேடம்.இன்றைய ரேடியேசன் முடிந்தது.நாளை வாருங்கள் என்றனர்.


மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.பரவாயில்லையே இந்தசிகிச்சை முறை.இதற்குத் தானா இவ்வளவு தயங்கினேன் என்றுநினைக்கும் போது சிரிப்பு வந்தது. இப்படியாகத் தானே தினமும் காலை மருத்துவமனைக்குச் சென்று ரேடியேசன் எடுத்து முடிந்தது.சில நாட்கள் டாக்டர் ஃபிரீயாக இருந்தால் போய்ப் பார்ப்போம்.டாக்டர் நன்றாகப் பேசுவார். நகைச்சுவையாகவும் பேசுவார்.சிலேடை அவருக்குக் கை வந்த கலை.அருமையாகக் கவிதை எழுதுவார்.என்ன சார்.எங்களுக்கும் உங்களுக்கும் பல வகைகளில் ஒப்பிடலாம் போலிருக்கிறதே என்றோம்.


என் கணவரும்அந்தக் காலத்தில் நிறையக் கவிதைகளெல்லாம் எழுதுவார்.இவருடைய சிநேகிதர்கள் கூடிவிட்டால் நகைச்சுவை நையாண்டிப் பேச்சுகள்பாட்டு என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். டாக்டரும் எங்களைப் போலவே அந்தக் காலத் திரைப்பாடல்களின்ரசிகர்.பேச்சுக்குப் பேச்சு ஒரு பாடலை எடுத்து விடுவார்.ராகத்துடன்பாடியும் காண்பிப்பார். ஒரு நாள் ரேடியேசன் எடுத்துக் கொண்டபிறகு டாக்டரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போது பிரபல பின்னணிப் பாடகர்திரு டி.எம்.எஸ்.அவர்களின் பேச்சு வந்தது

ஒரு நீண்ட விளக்கம்

பின்னூட்டமிட்ட உறவுகளுக்கு நன்றி.கேள்விக்குறிகளாக முகமிட்டுக்கொண்ட ஒருவர் டாக்டரிடம் நான் நடந்து கொண்டவிதத்தைப் பற்றிக் கண்டித்திருக்கிறார்.
தெகா அவர்கள் அதற்குப் பொருத்தமான பதிலும் கொடுத்திருக்கிறார்.
நான் யாரையும் விட உயர்ந்தளுமல்ல.யாரையும் விடத் தாழ்ந்தவளுமல்ல.என்னைப் பொருத்தவரையில் அனைவரும் சமமே.

நோயுற்று இருக்கும் ஒரு மாட்டை மாட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாலும்,மாடு வழக்கத்திற்கு மாறாக என்ன செய்யுது என்னென்ன கொடுத்தீங்க சாணம் எப்படிப் போட்டுச்சு,என்பதையெல்லாம் நம்மிடம் கேட்டுவிட்டுப் பிறகு வைத்தியம் பார்க்க ஆரம்பிப்பார்.

நான் மனுஷி.நாலு வார்த்தை பேசத் தெரிந்தவள்.நோய் வந்ததினால் டாக்டரை அணுகி என்ன சிகிச்சை பார்க்க்கலாம் என்று கேட்கிறோம்.அவர் விசாரிக்கிறார். நாமும் பதில் சொல்கிறோம்.இதில் என்ன பாசாங்கு வேண்டிக் கிடக்கிறது?பதிலே சொல்லாமல் சிகிச்சை கொடுத்துவிட முடியுமா?எவ்வளவு பெரிய டாக்டரானாலும் கேள்விகள் கேட்பேன்.என் சந்தேகங்கள் தீரும் வரை கேட்டுக்கொண்டே இருப்பேன்.என் சந்தேகங்களுக்கு டாக்டர் சரியான பதில் கொடுக்கவில்லை என்றால் அவருக்குத் தெரியவில்லை என்று தானே அர்த்தம்?

டாக்டரென்ன,அந்த எமனே உயிரை எடுக்க வந்தாலும் கேள்விகள் கேட்பேன்

"அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எண்ணித் தடுமாற்றம் அடைய வேண்டாம்.எவர் சொன்ன சொல்லானாலும் ஏன் எதற்காகச் சொன்னார் என்று தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்"என்று சாக்ரடீஸ் சொன்னது எதற்கு?

நான் கதை எழுதவில்லை.என் வாழ்வில் எனக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் பற்றியும்,அவைகளை நான் எதிர்கொண்ட/கொள்கிற முறைகளைப் பற்றியும் தான் எழுதி வருகிறேன்.மற்ற நாளிதழ்களில் வருகிற மாதிரி "கிசு கிசு"என்றோ பட்டும் படாமலோ யார் என்பதைச் சொல்லாமலோ எழுதவில்லை.பக்காவாகப் பெயர்களைப் போட்டுத்தான் எழுதியிருக்கிறேன். இந்நோயைப் பொறுத்த மட்டில் யாருக்கு எப்படியோ எனக்கு வாழ்வா சாவா என்பதியே மையமாக வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறேன்.எனக்கு வலிக்கிறது என்பதோடு முடிந்து விடுகிறதா பிரச்சனை?இந்த வலி கணந்தோறும் வலித்துக் கொண்டே இருக்கும் சார்!வெளியே சொல்ல முடியாது.விவரிக்கவும் முடியாது.ஒரு நேரத்துக்கு ஒருமாதிரி இருக்கும் கொஞ்சநேரம் கழித்து வேறு மாதிரி வலிக்கும்.திடீரென்று உடம்பு உஷ்ணமாகி விடும்.அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா?மார்பகப் புற்றுநோயின் விளைவுகள்,கொடுமைகள் சிகிச்சை முறைகளினால் ஏற்படும் கொடுமையான பாதிப்புகள் ஆகியவகளைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்?ஆண்களோ பெண்களோ எத்தனை பேருக்கு இது குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?

என் எழுத்துக்களுக்கு எனது மருத்துவ ரிக்கார்டுகளே ஆதாரம்.என் எழுத்தில் கற்பனை சுத்தமாகக் கிடையாது.வார்த்தை அலங்காரம் கிடையாது.பாராட்ட வேண்டுமா?பாராட்டியிருப்பேன்.கண்டிக்க வேண்டுமா?கண்டித்திருப்பேன்.உதவி கேட்டு வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லவேமாட்டேன்.முடிந்த வரை உதவுவேன்.மனசாற உதவுவேன்.எங்களால் உதவி பெற்றுப் படித்தவர்களும் சரி வேலை பார்ப்பவர்களும் சரி ஏராளம்.எங்கெங்கேயோ கேட்டும் கிடெக்கல்லேம்மா ஒங்களெ நம்பி வந்திருக்கோம்.உதவி பண்ணுங்கம்மா என்று கை ஏந்தியவர்களை இதுநாள்வரைக்கும் ஏமாறவிட்டதில்லை. வருத்தத்துடன் வந்தவர்கள்
சந்தோஷத்துடன் தான் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
அட!கையில் இருந்தும் அடுத்தவர்களுக்கு உதவ மனசில்லை என்றால் மனிதப்பிறவி எடுதததற்கு என்ன தான் அர்த்தம்?
அதுக்குப் பதிலா செத்துப் போகலாம்.
எங்கும் எதிலும் மிச்சம் மீதி என்பதே இல்லை.
இப்படித்தான் இது வரையிலும் வாழ்ந்திருக்கிறேன்.

ஆனால் யாரையும் திட்டியதில்லை.வைததில்லை.நகைச்சுவைபிடிக்கும்.மதன் ஜோக்ஸை ரசிப்பேன்.ஆனால் நகைச்சுவையே வாழ்க்கை ஆகி விடாது.அது தயிர் சோறுக்கு ஊறுகாய் மாதிரி.அளவோடு தான் இருக்கும்.

இன்னும் இருக்கிறது சார்.முடிந்த வரை தினமும் எழுதுகிறேன்.இரண்டு மூன்று மாதம் பொறுங்கள்.இன்றைய தேதி வரை வந்து விடுவேன்.அப்புறம் தெரிவியுங்கள் உங்கள் விமரிசனங்களை.அதற்கும் பதில் சொல்வேன்.(தேவைப்பட்டால்)

எனக்கு ஆங்கிலம் தெரியாது.என் கணவர் உதவியால் உங்கள் விமர்சனத்தைத் தெரிந்துகொண்டேன்.அது சரி.உங்களுக்குத் தமிழ் தெரியாதா?நீங்கள் தமிழ் தானே.ஆங்கிலம் கற்றுக்கொண்ட அளவிற்கு நாகரிகத்துடன் எழுதவும் கொஞ்சம் கற்க முயற்சித்திருக்கலாமே!

ம்....எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிகிறது.எப்படியாகிலும் தங்களின் வருகைக்கு நன்றி.


இலவசக் கொத்தனார் அவர்களே.நீங்கள் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் ஒரு சராசரி மனுஷி தானே.8ஆங் கிளாஸ் தான் படித்திருக்கிறேன்.திருமணமாகி பிறந்த வீட்டை விட்டு வெளியே வந்த
பிறகுதானே வெளி உலகம்னா என்ன என்று தெரிந்தது?

மார்பகத்தை எடுத்து விட்டால் என்ன ஆவேனோ மற்றவர்கள் முன் எப்படி நடமாடுவது அக்கம்பக்கத்திலுள்ளோர் எப்படி நம்மிடம் பழகுவார்கள் சொந்தக் காரர்கள் என்னென்ன நினைப்பார்கள்பெண்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுத்த இடத்திலும் மாப்பிள்ளைகளும் என்னென்ன நினைப்பார்களோ.ஆத்தாவுக்கு வந்தது மகள்களுக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்னுட்டு சம்பந்தி வீட்டுக்காரர்கள் ஏதேனும் பேச ஆரம்பித்து விட்டால் அதனால் மகள்களின் வாழ்க்கை பாதிக்கப் படுமே?இப்படித் தான் குழம்பினேன்.

உற்றமும் சுற்றமும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம்
எப்படி அணுகுகிறார்கள் என்பது குறித்துப் பின் வரும் வாரங்களில் எழுதுவேன்.அதையும் படித்தபின் மீண்டும் இக்கேள்விக்கான விடைகளை
எல்லோரும் தேடுவோம்.

"புத்தி கெட்ட தேசம் பொடி வச்சிப் பேசும்"னு வைரமுத்து சும்மாவா எழுதினாரு?

2003 ஆகஸ்டில் இந்தநோய் கண்டுபிடிக்கப் பட்டபிறகு இதே மாதிரி எண்ணங்கள் மாறி மாறி வந்து ரொம்பத்தான் குழம்பி விட்டேன்.இன்றைக்கும் குழம்பிக்கொண்டுதான் இருக்கிறேன்.அப்பவே அறுத்து எறிந்திருந்தால் வேதனைகள் குறைந்திருக்குமோ,சிகிச்சை முறைகள் மாறியிருக்குமோ என்று ஒரு நேரம் நினைக்கிறேன்.ஆனால் ரேடியேஷன்,கீமோ சிகிசைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் மார்பகத்தை இழந்த பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவேளைஇம்மாதிரி இழப்பிலிருந்து நான் தப்பித்துவிட்டேனோ நம்ம பரவாயில்லையோ அப்பாடா சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேன் என்று மனதை ஆசுவாசப்படுத்திகொள்கிறேன்.நான் அப்போது எடுத்த முடிவு சரியா தவறா என்று இன்றைக்கும் என்னால் சொல்லமுடியவில்லை.

அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்.

Thursday, August 23, 2007

எனது போர்க்களமான பேட்டர்சன் கேன்சர் சென்டர்

மறுநாள் 04/09/2003ந் தேதி காலை விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில்அமைந்திருக்கும் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்றோம்.மூன்று மாதங்களுக்கு முன் தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் (முன்னாள்)குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகவும் வாசல் பக்கச் சுவரில் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
டாக்டரைப் பார்க்கப் பல நோயாளிகளும் உடன் வந்தவர்களும்காத்துக்கொண்டிருந்தனர்.அவ்வளவாகக் கூட்டமில்லை.ஆனாலும்சீக்கிரமாக டாக்டரைப் பார்க்க முடியவில்லை.ஒரு நோயாளி உள்ளே சென்றால் வெளியே வருவதற்குக் குறைந்தது முக்கால் மணிநேரம் ஆனது.இந்த டாக்டர் என்ன முடிவு சொல்வாரோ என்ற பதைபதைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது.இவர் மட்டும் ஆபரேஷன்தான் ஒரே வழி என்று சொல்லிப் பார்க்கட்டும்.எனக்காச்சி,இந்த டாக்டருக்காச்சி என்று செமையாகச் சண்டையே போட்டுவிடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.
சுமாராக மூன்று மணிநேரம் கழித்து அழைக்கப்பட்டோம்.டாக்டரைப் பார்த்தோம்.டாக்டரின் பெயர் விஜயராகவன்.இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னார்.பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் விசாரிக்க ஆரம்பித்தார்.
எப்பொ இதைக் கண்டுபிடிச்சீங்க?
கொஞ்சநாளா ஹார்டாவே இருக்குங்க
எத்தனை நாளா?
ஒரு ரெண்டு மூணு மாசமா.
நீங்களாவே கண்டுபிடிச்சீங்களா?
ஆமா.
உங்க தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கு?
ஏன்?நல்லாத் தேன் இருக்கு.
டாக்டர் என் கணவருடைய முகத்தைப் பார்த்தார்.
நாங்கள் புரிந்து கொண்டோம்.
நானே பதிலைத் தொடர்ந்தேன்.
என்ன சார்.குழந்தைகளுக்குக் கல்யாணமாகிப் பேரன் பேத்திகளெல்லாம் ஆயிடுச்சு.இன்னமும் என்ன சார்?
இருக்கட்டுமே!
மீண்டும் டாக்டர் என் கணவர் முகத்தைப் பார்த்தார்.
மீண்டும் நானே பதில் சொன்னேன்.
எங்க சாருக்கு ஆபீஸ் வேலையே சரியா இருக்கு.வீட்டுக்கு வந்தாஎப்படா தூங்குவோமோன்னு இருக்கும்.பிள்ளைகளுக்கும் வயசாயிடுச்சு.
இப்போது என் கணவர் பேசினார்.
எங்க இருவருக்கும் செக்ஸ் என்பதுஒரு பிரச்சனையே இல்லை.தேவைப்பட்டா உண்டு.இல்லேன்னா மாசக் கணக்காயிடும்.
அது தானே!ஏன் இவ்வளவு லேட்டா கண்டுபிடிச்சாங்கன்னு காரணம்இப்போத் தெரியுது.
சரியான டாக்டர்!
அதுக்கென்ன சார் இப்போ?
அதுக்கென்னவா?சீக்கிரமா கண்டுபிடிச்சுறீந்திங்கன்னா சீக்கிரமா இங்கோ வேறு ஆஸ்பத்திரிக்கோ வந்திருப்பீங்க.இவ்வளவு லேட்டாவந்திருக்கீங்களேன்ற ஆதங்கந் தான்.வேறெ ஒண்ணுமில்லே.
பழைய மருத்துவ ரிப்போர்ட்டுகளை நீட்டினோம்.டாக்டர் தொடவே இல்லை.
அதெல்லாம் அப்புறம் பாக்கலாம்'.
மீண்டும் பேச ஆரம்பித்தார்.
எப்போ வயசுக்கு வந்தீங்க?
ஒரு வினாடி திடுக்கிட்டேன்.
யாரை.....என்னையா கேக்கிறீங்க?
டாக்டர் தலையசைத்தார்.
ஒரு பனிரெண்டு பதிமூணு வயசிலெ.
எப்பொ கல்யாணமாச்சு?
சார்.நான் பொறந்தது 1953 சனவரி.கல்யாணமானது 1971 ஆகஸ்டு 25 ந்தேதி.கணக்கு போட்டுக்குங்க.
மொதோக் குழந்தெ எப்போ பிறந்துச்சு?
1972 டிசம்பர்லெ.
அடுத்து?
சார்.முதல்லெ பெண் குழந்தை 1972 டிசம்பரிலெ பிறந்துச்சு.அடுத்து பையன்1974ஜூலையிலே பிறந்தான்.அடுத்து மீண்டும் ஒரு பொண்ணு 1978 நவம்பர்லே.
அவ்வளவு தான்.
ம்.மாத விடாய் எப்படி ஆகுது?
அதெல்லாம் ஒழுங்கா ஆகுது.
ரெண்டு நாள் மூணு நாள் முன்னே பின்னே?
இல்லே சார்.ஒவ்வொரு மாசமும் கரெக்டா ஆகுது.லேட்டெல்லாம் கிடையாது.போன வருஷந்தான் திடீர்னு ஒரு நாள் ராத்திரி பெட்டுலேர்ந்து கீழே விழுந்துட்டேன்.வாயல்லாம் சுரு சுருன்னு இழுத்தமாதிரி ஆயிருச்சு.ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணினதுக்கப்புறம் நீரோ டாக்டருங்க செக் பண்ணிப்பாத்துட்டு மெனோபாஸ் நிக்குறதுக்க்கு முன்னாடி இப்படியெல்லாம்சில பேர்களுக்கு ஆகும்னாங்க.கொஞ்ச காலம் மாத்திரை சாப்பிடணும்னுசொல்லி எழுதிக் கொடுத்தாங்க. அதெத் தினந்தோறும் சாப்பிட்றேன்.
சரி. உங்க சொந்தக்காரகளில் யாருக்கேனும் இந்த நோய் வந்திருக்கா?
ஆமா சார். என்னோட தாய் மாமனுக்குத் தொண்டைலெ வந்துச்சு.மத்தபடி வேறெ யாருக்கும் இல்லே
உங்களுக்கு டைபாய்ட் காய்ச்சல்,டி.பி.ன்னு ஏதாச்சும் முந்தி வந்திருக்கா?இல்லை.
சிறிது நேரம் என் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

சரி ஆபரேஷன் செஞ்சிரலாமா?

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆத்திரமும் அழுகையும் பொங்கிப் பீறிட்டு எழுந்தது.
ஏன் சார்.இவ்வளவு நேரம் கதையா கேட்டுகிட்டு இருந்தீங்க?எங்கெங்கே போனோம்,எந்தெந்த டாக்டருங்களெப் பாத்தோம் என்னென்ன சொன்னாங்க.அவ்வளவையும் ஒண்ணு விடாமெ சொல்லிட்டபிறகும் இப்படிக் கேட்டா எப்படி சார்?எல்லோருமே ஆபரேஷன்னு சொல்றீங்களே சார்.இதை விட்டா வேறெ வழியே இல்லையா?கேட்ட கேள்விக்கெல்லாம் ஒழுங்கா பதில் சொன்னேன்லே.என்ன சார் தப்பு கண்டீங்க?

ஒருடாக்டரிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வாக்குவாதங்களைஇவ்வளவு விலா வாரியாக எப்படிச் சொல்ல முடிகிறது என்கிறீர்களா?அந்த நிமிடம்(க்ஷணம் என்று சொல்வார்களே)என் வாழ்க்கையைத் திருப்பிப்போட்டது இந்த ஆவேசமான எனது பதில் தான்.

என்னடா(டீ!)இது வரைக்கும் பார்த்த எந்த டாக்டரும் இவ்வளவுகேள்விகளைக் கேட்கவில்லையே.எப்போ பிறந்தே,எப்பொ வயசுக்கு வந்தே,எப்போ கல்யாணமாச்சி,எத்தனை குழந்தைகள்,மாதவிடாய் எப்பப்பொ ஆகுது?கேள்வியாம் கேள்வி. கொஞ்சங்கூட சம்பந்தம் சம்பந்தமில்லாமெ.டாக்டராம் டாக்டர்!

இப்படித்தான் என் மனதில் எண்ணங்கள் தறிகெட்டு ஓடின.
டாக்டர் ஒன்றும் பேசவில்லை.சிறிது நேரம் கழித்து நான் சுயநிலைக்கு வந்தேன்.என்னைப் பார்த்து எனக்கே கூச்சமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. டாக்டரிடம் உடனே மன்னிப்பு கேட்டேன்.
சார்.தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.ரொம்ப ஆவேசப்பட்டுட்டேன்.சாரி சார்.
இதெப் பாருங்க அனுராதா.நீங்க பேசியதிலே ஒண்ணுமே தப்பில்லே.பேசியது நீங்க இல்லே.உங்க உடம்பிலெ வந்திருக்கும் இந்த நோய் தான் இப்படிப் பேசுது.கவலைப்படாதீங்க.
இப்போது தான் டாக்டர் எனது பழைய மருத்துவ ரிக்கார்டுகளக் கேட்டார்.ஆராய்ந்தார்.அருகிலிருந்த ஒரு நர்ஸிடம் குறிப்புகளைச் சொன்னார்.பிறகு பேச ஆரம்பித்தார்.
இவ்வளவு நேரம் உங்களைப் பத்திக் கேள்விகள் கேட்டுத் தெரிஞ்சிகிட்டேன்.இப்ப நான் சொல்றதைக் கவனமாகக் கேளுங்க.உங்களைத் தாக்கியிருக்கிறது கேன்சர் நோய் மூன்றாவது ஸ்டேஜ் தான்.அது எப்படி வந்திருக்க வாய்ப்பு இருந்ததுன்னு கண்டுபிடிக்கத் தான் இவ்வளவு கேள்விகளைக் கேட்டேன்.
நம் உடம்பே வெறும் செல்களால் ஆனது.உடம்பைப் பகுதி பகுதியாப் பிரிச்சுஆராய்ஞ்சோம்னா கடைசிலே பிரிக்கமுடியாமெ ஒரு பார்ட்லெ வந்துநிக்கும்லெ.அது தான் செல். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.இம்மாதிரிப் பிரிக்கிறதுக்கே பல விஞ்ஞான முறையல்லாம் செஞ்சாங்கணும்.அதெ விடுங்க.

இந்த செல்லுன்னு சொன்னேன்லியா.அது எப்பவும் வளர்ந்துகிட்டே இருக்கு.எப்படி?ஒன்னு ரெண்டாகுது அந்த ரெண்டும் நாலாகுது,நாலும் எட்டாகுதுஎட்டு பதினாறாகுது.இப்படியே ரெட்டை ரெட்டையாப்பிரிஞ்சுகிட்டேஇருந்தா பிரசனையே இல்லே.ஆனா சில பேர்களுக்கு ஒன்னு மூணாப் பிரியஆரம்பிக்கும்.அல்லது வேற எண்ணிக்கையிலெ பிரியும்.அப்படிப் பிரிஞ்ச செல்களும் மூணாவோ,நாலாவோ பத்தாவோ கணக்கில்லாமே பிரிய ஆரம்பிக்கும்.இயற்கைநியதி என்னன்னா,ஒரு செல் ரெண்டாத் தான் பிரியணும்.ஒரு உதாரணத்துக்குஉங்க உடம்பிலெ பத்து லட்சம் செல் இப்போதைக்கு இருக்குன்னு வச்சுக்குவோம்.அதுகள்ளாம் பிரியும்போது இருபது லட்சமாத்தான் பிரியணும்.நீங்க என்ன சொல்றது.நானென்ன கேக்குறதுன்னு அது பாட்டுக்கு இருபத்தெட்டு லட்சமோநாப்பத்தொன்பது லட்சமோ பிரிய ஆரம்பிச்சாசின்னா........

அது தான் கேன்சர் என்று அழைக்கப்படும் நோய்.கரையான் புற்றைப்பாத்திருக்கிங்களா?அதிகமா வளர்ந்த இந்த ஒழுங்கில்லாத செல்கள் பாக்குறதுக்கு புற்றாட்டம் இருக்கும் அதனாலேதான் இதுக்குப் புற்றுநோய்ன்னு பெயராயிருச்சு.இந்த நோய் வருவதற்கானசரியான காரணம் இன்று வரைகண்டுபிடிக்கப் படவில்லை.ஆனால் மருத்துவமும் விஞ்ஞானமும் வளர்ந்த இன்றைய காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டமக்களை வைத்து இது குறித்துப் புள்ளிவிவரம் எடுக்க ஆரம்பிச்சாங்க.இதை வச்சு சில உண்மைகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க.என்ன உண்மைகள் அப்படீங்கிறீங்களா?சிலதெச் சொல்றேன்.

பெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோய் மட்டும் எடுத்துக்கிட்டோம்னா,ரொம்ப லேட்டா வயசுக்கு வருகிற பெண்களுக்கு இந்த நோய் வர்ரதுக்கு வாய்ப்பு இருக்கு.
ரொம்பொ லேட்டா குழந்தை பிறந்தாலும் இந்நோய் வரலாம்.
மாதவிடாய் பிரச்சனையாலெ மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாலும்பிற்காலத்தில் இந்நோய் வரலாம்.
உங்க பெற்றோர்,தாத்தாக்கள்,பாட்டிகள் இப்படி உங்க முன்னோர்கள் யாருக்காச்சும் இருந்துச்சுன்னா அது உங்களுக்கும் வர வாய்ப்புண்டு.
இப்படிப் பல உண்மைகள் கண்டுபிடிச்சாங்க.இன்னும் கண்டுபிடிச்சிகிட்டேஇருக்காங்க.

இப்படி எதிலேயும் இல்லாமெ இருந்தாலும் வரலாம்.

பொதுவா பெண்களுக்கு நாப்பது வயதைத் தாண்டினாலே தினமும் செக் செஞ்சிக்கணும்.அது ஒண்ணும்பெரிய விஷயமில்லே.காலையிலெ குளிக்கும்போதே உங்க இரண்டு மார்பகங்களையும் நன்றாகத் தடவியும் அமுக்கியும் பார்த்து ஏதாவது வேறுபாடுகள்,கட்டிகள் தெரிகின்றனவா,உணரமுடிகிறதா என்று செக் செய்து கொண்டாலே போதும்.கணவன் மனைவிகளைப் பொறுத்த வகையில் இரவு தாம்பத்திய வாழ்க்கையின்போதே தெரிந்துவிடுமே.அப்படி ஏதேனும் வேறுபாடுகள் தெரிந்தாலோ உணரமுடிந்தாலோ தாமதிக்காமல் தகுந்த மருத்துவரை அணுக வேண்டும்.இப்படி கொஞ்சமும் தாமதிகாமல் கண்டுபிடிக்கப்படும் கேன்சர் கட்டிகளை முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.
லேட்டா வந்தா.........நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை தரப்படும்.

டாக்டர் நிறுத்தினார்.

திரைப்படம் பார்க்கும் போது உணர்சிகரமான ஒரு வசனத்தை நம்மை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் போது "சட்"டென்று இடைவேளை என்று போட்டால் அப்போது தான்முழிப்பு வருமே.அந்த மாதிரி ஒரு முழிப்பு வந்தது.ஆஹா.இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா.இப்படியெல்லாம் இருக்கிறதா.திக்பிரமை பிடித்தவளாய் உட்கார்ந்திருந்தேன்.

என்ன சொல்லுகிறீர்கள் அனுராதா?
ஒண்ணுமில்லே சார்..........
என்ன இழுக்கிறீங்க?
பாத்தா ரொம்ப நல்லவராத் தெரியிறீங்க!எந்த டாக்டரும் இவ்வளவு விவரமா விளக்கிச் சொன்னதில்லே.இவ்வளவு கேள்விகளையும் கேட்டதில்லே.ரொம்பத் தேங்ஸ் சார்.உங்க மேலே எனக்கு முழு நம்பிக்கை வந்துருச்சு.எனக்கு ஆபரேஷன் மட்டும் வேணாஞ் சார்.வேறென்ன சிகிச்சை செஞ்சாலும் ஓகே சார்.

டாக்டர் பரிதாபமாக என்னைப் பார்த்தார்.அதாவது டாக்டரைப் பார்க்கஅவ்வளவு பரிதாபமாக இருந்தது!

இதப் பாருங்க அனுராதா,மெடிகல்லெ இது இதுக்கு இப்படித் தான்னு விதிமுறையே இருக்கு.ஒரு பந்தல் போடணும்னா நாலு கால் நட்டு அதுக்கு மேலேமேயறோம்லியா.அந்த விதிமுறைகளை எப்படிம்மா மீறுவது?

சார்.ஆபரேஷன் செஞ்ச பிறகு எப்படி சார் வெளியே நடமாட்றது.அபார்ட்மெண்ட்லெ பாக்குற மத்த பெண்களெல்லாம் எங்கிட்டே நெருங்கிப் பேசவே பயப்படுவாங்களே சார்.வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு நான் அவல் ஆகி விடுவேனே சார்.சொந்த பந்தங்களெல்லாம் தூர விலகி விடுமே சார்.ஒரு கல்யாணம் காச்சிக்கும் போகமுடியாமெ போயிடுமே சார்.மீறிப் போனாலும் ஒரு ஆளும் முந்தி மாதிரி நெருங்கிப் பேசமாட்டார்களே சார்.ஒரு பொண்ணுக்கு மார்புங்கிறது குழந்தைக்குப் பால் கொடுக்கிறதுக்கு மட்டுமில்லையே.பொண்ணுன்னு சொல்றதுக்கு வெளிப்படையாத் தெரியிற உறுப்புல்லையா?அதை இழக்கஎந்தப் பெண் சார் சம்மதிப்பாள்?வேண்டாம் சார். நான் சம்மதிக்க மாட்டேன்.

ஏன் சார்.சூரியன் தான் பூமியெச் சுத்துதுன்னு ரொம்ப காலமா நம்பிகிட்ருந்தோம்.பூமிதான் சூரியனைச் சுத்துதுன்னு ஒருத்தர் கண்டுபிடிச்சபிறகு நம்பிக்கை மாத்திகிட்டோம்லியா?

ஆயிரந்தடவை முயற்சி செஞ்சு தோல்வியடைஞ்சும் மனந்தளராமெ மீண்டும் ஆயிரத்துஓராவது தடவையா முயற்சி செஞ்ச்ப்பொ தானே எடிசன்றவரு பல்பைக்கண்டுபிடிச்சாராம்.அது மாதிரி நீங்களும் ஒரு முயற்சி செய்யுங்களேன்.

விதிமுறைகள்ளாம் சாதாரணமானவர்களுக்கு மட்டுந்தான்னு கேள்விப்பட்ருக்கேன்.உங்க மாதிரி டாக்டருங்கல்லாம் அதுக்கெல்லாம் அப்பார்பட்டவங்க இல்லையா?நீங்களும் முயற்சி செஞ்சி பாருங்க சார்.ஆபரேஷன் மட்டும் வேண்டவே வேண்டாம்.

இப்படியாக டாக்டருக்கும் எனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நர்சுகளும்,அலுவலர்களும் வியப்புடன்ஆ...என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

கடைசியாக டாக்டர் என் வேண்டுகோளுக்குச் சம்மதித்தார்.

அனுராதா.ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.நான் ஆரம்பிக்கும்இந்த சிகிச்சைமுறை என் விருப்பப்படியல்ல.உங்கள் விருப்பப்படி.அதாவதுஎன்னமாதிரி சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோஅதன்படியேதான் கொடுக்கப்படும்.

ரொம்ப சந்தோஷம் சார்.
இன்னொன்று.இந்த சிகிச்சை முடியும் வரை இங்குதான் சிகிச்சையை மேற்கொண்டீர்கள் என்றோ நான் தான் சிகிச்சை அளித்தேன் என்றோவெளியில் யாரிடமும் பகிரங்கமாகக் கூறக் கூடாது.

கண்டிப்பாக சார்.யாரிடமும் கூறமாட்டேன்.

ம்..........நாளை மார்னிங் ஒன்பது மணிக்கெல்லாம் இங்கு வந்து விடுங்கள்.நிறைய டெஸ்ட்கள் எடுக்க வேண்டும்.

சரி சார். வந்துவிடுகிறேன்.
போய் வாருங்கள் என்பதற்கு அடையாளமாக இரு கரமும் கூப்பினார்.
வெளியே வரும்போது என் கணவர் சற்றுப்பின் தங்கினார்.
டாக்டர் ஏதோ கேள்வி கேட்பதும் என் கணவர் அதற்குப் பதில் சொல்வதும் கீழ்க் கண்டவாறு என் காதில் விழுந்தன.

"ரொம்பப் படிப்பாங்களோ?

ம்..ரொம்பப் பேசவும் செய்வாங்க!!

Wednesday, August 22, 2007

வார்த்தையின்றிப் போகும் போது மெளனத்தாலே நன்றி சொல்வோம்

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் முதலில் என் இதயத்தின்
ஆழத்திலிருந்து எழுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு பின்னூட்டங்கள் வருமென்று கொஞ்சம் கூட
எதிர்பார்க்கவில்லை.அனைவருக்கும் தனித்தனியாகப்
பதில் பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக ஒன்றாக ஒருங்கிணைத்து
புதிதாக ஒரு பதிவு பதியலாம் என்று என் கணவர் ஆலோசனை கூறினார்.

2003 ஆகஸ்டில் தான் இந்த நோய் தாக்கியிருப்பதை உணர்ந்தேன்.
அன்றிலிருந்து இன்றைய தேதி வரை இந்நோயை எதிர்த்து நான்
மேற்கொண்ட முயற்சிகள்,சிகிச்சை முறைகள்,மருத்துவமனை
அனுபவங்கள்,நல்லோரின் சந்திப்புகள்,அனைத்தையும் எழுத
எண்ணினேன்.அதன்படியே ஒவ்வொன்றாக எழுதி வருகிறேன்.

ஒரு மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்தபின் அவருடைய அணுகுமுறை,
பதில் சொன்ன பாங்கு,மருத்துவமனையின் செயல்பாடு
ஆகியவகளைப் பற்றிய எண்ணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கருத்தை
எனக்குள் உருவாக்கிவிடும்.பிற்காலத்தில் அந்த எண்ணங்கள்
தவறானவை என்றோ,சரியானவை என்றோ அனுபவம் தான் பாடம்
கற்பிக்கும்.அதன்படியேதான் நான் சந்தித்த ஒவ்வொரு மருத்துவரைப்
பற்றியும் மருத்துவமனையைப் பற்றியும் பதிந்து வருகிறேன்.

உதாரணமாக அப்பல்லோ டாக்டர் திரு ரமேஷ் நிம்மகட்டா
(நன்றி டெல்ஃபின்) மற்றும் டாக்டர் ஹேமந்த் ராஜ் ஆகியோரைப்
பற்றி நான் கொண்டிருந்த கருத்துகள் மிகவும் தவறானவை
என்பதைப் பிற்காலத்தில் நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் அவை கண்டிப்பாக இடம் பெறும்.

ஆனால்........மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏற்பட்ட
கருத்துகளை இன்றைக்கு மாறியிருப்பதால் ஒவ்வொன்றையும்
இப்போது பதியும்போதே திருத்தித் திருத்தித் தான் எழுத வேண்டும் என்றால்........"எனக்கு கேன்சர் வந்தது. சிகிச்சை பெற்றுக்
கொண்டிருக்கிறேன்"......என்ற இரண்டே வாக்கியங்களில்
எனது பதிவு முற்றுப் பெற்று விடும்.(இன்னும் சுருக்கலாமோ!!)

எனக்கு எழுத அவ்வளவாக வராது.என் நெருங்கிய தோழியொருத்தியை
நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும்போது இந்நோயைப் பற்றிய
எனது அனுபவங்களை எவ்வகையில் பகிர்ந்து கொள்வேனோ
அதேவகையில் தான் உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு சம்பவத்தையும் எப்படி விவரிப்பேனோ அப்படியே
இங்கும் விவரிக்கிறேன்.

நான் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் பற்றியும் இன்றைய
தேதியில் என் உடல் நிலை பற்றியும் அறிந்து கொள்ள
விழைவோர் உட்பட மற்றவருக்காகவும் சுருக்கமான தகவல்.

1) ரேடியேஷன் 25 அமர்வு முடிந்துள்ளது,
2) மார்பகம் முழுதும் புண் ஆகிப் பிறகு ஆறியிருக்கிறது.
இருப்பினும் பாதிப்புகள் உள்ளன.
3) வலது கை அக்குளில் அறுவை சிகிச்சை செய்து இருபத்து ஒன்பது
நிண நீர் சுரப்பிகள் (Axillarylimbnodes) அகற்றப்பட்டுள்ளன.
அங்கும் பாதிப்பை உணர்கிறேன்.
4) பிராக்கி சிகிச்சை(Brachy treatment)முடிந்துள்ளது.
5) கர்ப்பப் பை அகற்றப்பட்டது.
6) கல்லீரலிலும் புற்றுநோய் பரவியது கண்டுபிடிக்கப் பட்டது.
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பெட் ஸ்கேன்
எடுத்து உறுதி செய்ய்ப்பட்டது.
7) ஹெர்சப்டின்(Herceptin)என்னும் ஹார்மோன் ஊசி மருந்துடன்
கீமோ மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.இன்றுவரை
ஹெர்சப்டின் மருந்து நான்கு முறையும் கீமோ மருந்து
இருபத்து நான்கு முறையும் செலுத்தப்பட்டுள்ளது.
8) எதிர்வரும் 27/08/2007 28/08/2007 ஆகிய தேதிகளில்
ஹெர்சப்டின் ஊசி மருந்து ஐந்தாவது முறையாகச்
செலுத்தப்பட இருக்கிறது.
9) மார்பகம் அகற்றப்படவில்லை!!!
10)கடந்த நவம்பர் 2006லிருந்து டயாபடீஸ் "டைப் 2"வந்துள்ளது.
அதற்காகத் தினமும் மூன்று வேளை இன்சுலின் ஊசி போட்டுக்
கொள்கிறேன்.
11) இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
உங்கள் அனைவரோடும் இருக்கிறேன்.
12)வலி?...வலி?....எப்படி இருக்கிறது என்கிறீர்களா?
வலி என்று ஒரு காகிதத்தில் எழுதிப் படியுங்கள்.
நான் உணர்கிறேன்.

இனி கேள்விகளை எழுப்பிக் காத்திருப்பவர்களுக்குப்
பதில் தரவேண்டுமல்லவா?

'மூன்றாவது ஸ்டேஜ் வரும் வரை ஏன் விட்டு வைத்தீர்கள்?'
என டெல்ஃபின் கேட்டுள்ளீர்கள்.யாருக்குத் தெரியும்?
சாவும் நோவும் சொல்லிட்டா வருது?என்று மதுரையில்
ஒரு சொலவடை உண்டு.கேன்சரைப் பொருத்தமட்டில்
அது வளரும் வேகம் ஆளாளுக்கு வேறுபடும் என்பது
எனதுஅனுபவத்தில் கண்டேன்.ஒருவருக்கு கடுகு சைஸில்
இன்று காணப்படுவது ஒரு வருடம் கழித்து மிளகு அளவுக்கு
வளரலாம்.அல்லது எலுமிச்சை அளவுக்கு ஒரே மாதத்தில்
வளரலாம்.
'பண லிஸ்ட் தான் கொஞ்சம் பதற வைக்கிறது.அது பற்றியும்
ஆராயுங்கள்'என்று சுல்தான் ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆராயப்பட வேண்டிய முக்கியமான விஷயம் தான்.

சிலிக்கான் மார்பகம் பற்றி யோகன் பாரிஸ்' தெரிவித்த கருத்துக்கு
நன்றி.இதைப்
பொருத்துவதனால் விளையும் சாதகங்களை விடப்
பாதகங்களே அதிகம். இது குறித்து மட்டுமல்ல. புற்றிநோய்
குறித்து இணையத்தில் ஏராளமான தகவல்களைச்
சேகரித்து வைத்துள்ளேன்.

'உண்மைத் தமிழன்'அவர்களே! நான் யாரையும் நிந்திக்கவில்லை.
அந்த எண்ணமே என் வாழ்நாளில் இல்லை.என் எழுத்துக்கள்
அவ்வகையில் அமைந்திருப்பதாக எண்ணினால் மன்னியுங்கள்
நான் பட்ட படுகின்ற துன்பங்கள்,துயரங்களின்
வெளிப்பாடுகள் தான் அவை.


'மங்கை' ஆறுத்லுக்கு நன்றி.கவுன்சிலிங்கில் நீங்கள் சந்தித்த
பெண் போல நானும் பலரைப் பார்த்திருக்கிறேன்.இதே
கொடுமையைத்தான் அவர்களும் சொன்னார்கள்.


'கூத்த ந்ல்லூரான்'எனக்கும் மார்பகம் அகற்றப்படவில்லையே!
'தமிழன்' மருத்துவத்தின் இறுதிக் கட்டத்திற்கு இப்போது
வந்துள்ளேன்.இந்த ஆறு பகுதிகளில் பதிந்திருப்பது
2003 ஆகஸ்டு மாத இறுதியில் நடந்தவை.

'தருமி'மதுரைக்கு வரும்போது தங்களைக் காண
விழைகிறேன்.
'வவ்வால்' நல்ல புனைப் பெயர்.வலைப் பதிவர்களிலேயே
பொதுஅறிவு மிக்கவர் என்று தங்களைப் பற்றி என் கணவர்
கூறியுள்ளார்.

'இயற்கையை நேசி தெகா'' கண்டிப்பாக டாக்டர் டெல்ஃபினுடன்
தொடர்பு கொள்வேன்.அமெரிக்காவில் ஏழு பெண்களுக்கு
ஒருவர் வீதம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்
கொண்டே போகிறது.அமெரிக்காவில் இதற்கான
சிகிச்சைக்கான செலவுகள் மிக அதிகம்.ஆனால் அனைவருமே
மருத்துவக்காப்பீட்டுக்குள்ளாக்கப் பட்டிருப்பதால்
பிரச்சனை இல்லையாம்!

வி அவர்களே.எனக்கு ஆங்கிலம் தெரியாது. மன்னியுங்கள்.
நான் 8 ம் வகுப்பு வரை தான் படித்தவள்.

'துளசி கோபால்' சமூகம் மாற வேண்டியது குறித்து இன்னும் நான்
நிறைய எழுத இருக்கிறேன்."தேசி பண்டிட்லே இணைத்ததற்கு
நன்றி.

'வடுவூர் குமார்' உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.

'அபி அப்பா' பொறுங்க பொறுங்க'


'ஒப்பாரி' உங்களைக்கண்டு பரிதாபப்படுகிறேன்.அப்பாவின்
கம்பீரம் குறைந்தால் தானென்ன?அப்பா அப்பா தானே?
அவர் துவண்டால் தோள் கொடுப்பதை விட்டுவிட்டு....
உடன் பிறந்த அக்காவும் அண்ணனும் அவஸ்தைப்
பட்டபோது பார்ப்பதைத் தவிர்த்தது ஏன்?ஏன்?

'பத்மா அரவிந்த்' கண்டிப்பாகத் தொடர்பு கொள்கிறேன்.நன்றி.


பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்த் தோழர்களுக்கும்
தோழியர்களுக்கும் மீண்டும் நன்றி.




Monday, August 20, 2007

அப்பல்லோ மருத்துவமனையில் எனது அனுபவங்கள்

அடையாறிலிருந்து ஓர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று விபரங்களைப் பதிந்தோம்.புற்றுநோய்ப் பிரிவில் அவ்வளவாகக் கூட்டமில்லை.அரை மணி நேரத்தில் ஜூனியர் டாக்டரைப் பார்த்தோம்.மீண்டும் ஒரு எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட் எடுக்க வேண்டும்.பிரிசிசன் சென்டரில் எடுக்கப்பட்டதை இந்த மருத்துவமனையில் ஏற்றுக் கொள்ளமுடியாது.இங்கேயே எடுக்க வேண்டும் என்றார்.எங்களுக்கு வேறு வழி புலப்படவில்லை.சரிதான்.பிரிசிசன் சென்டரில் எடுத்ததைவிட இங்கே நவீனமுறையில் எடுப்பார்களோ.எதுவாயினும் ஓகே!சரி சார்.எடுக்கிறோம் என்றோம்.அடுத்த பத்து நிமிடத்தில் எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட் எடுத்தாகிவிட்டது.நவீனமுறையுமில்லை.ஒரு புடலங்காயுமில்லை.பிரிசிசன் சென்டரில் எடுத்த மாதிரி தான்.போய்விட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வாங்க.அதற்குள் ரிசல்ட் ரெடியாகிவிடும் என்றார்.வீட்டுக்குத் திரும்பினோம்.திரும்பும் வழியிலெல்லாம் பயங்கரமான சிந்தனை.
கண்ணக் கட்டிக் கொண்டு ரோட்டில் நடந்து சென்றால் எதிலாவது மோதிவிடுவோமோ கால் தடுக்கிவிழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன் நடப்பது மாதிரி ஓர் உணர்வு. மனது அலை பாய்ந்தது.எதையோ இழந்துவிட்டமாதிரி தோன்றியது.ஆடிமாதக் காற்றில் ஆட்டம் போடும் மரம் மாதிரி.....ஐயையோ!காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேரோடு சாய்வது போல் நானும்
சாய்ந்துவிடுவேனோ?
என் கணவரைப் பார்த்தேன்.எனது எண்ணஓட்டங்களை அவர் புரிந்துகொள்வது போல ஆண்டவனால் கூடப் புரிந்துகொள்ளமுடியாது.
"என்ன.மனம் அலை பாய்கிறதா?ஒரு பிடிக்குள் அடங்க மறுக்கிறதா?"
ஆமென்று தலையசைத்தேன்.இதோ பாரு.நோய் என்னமோ வந்துவிட்டது.சிகிச்சை எடுத்தாகவேண்டும்.நல்ல ஆஸ்பத்திரியில் நல்ல டாக்டரிடம் நாம் விரும்பும்
வகையில் அந்தசிகிச்சை அமைய வேண்டும்.அதற்காகத் தான் கொஞ்சம் அலையவேண்டியிருக்கிறது.ஒண்ணும் கவலைப் படாதே.
இன்னும் மூன்று நாட்கள் தானே."என்றார்.
மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அப்பல்லோவிற்குப் படையெடுத்தோம். லேப்பில் ரிசல்ட்டைப் பெற்றுக்
கொண்டோம்.இந்தமுறை ஜூனியர் டாக்டர் இல்லை.
நேரடியாகப் பெரிய டாக்டர்.
இவரைப் பற்றி சமீபத்தில் தினமலர் நாழிதழில் ஏற்கனவே வெளியாகியிருந்த கட்டுரையைப் படித்திருந்தோம்.மிகவும் புகழ்பெற்ற டாக்டர்.அமெரிக்காவில் 23 ஆண்டுகள் இதே துறையில் பணியாற்றிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பி தற்போது இங்கு பணியாற்றுகிறார்.பெயர் ரமேஷ் சென்னாகட்டா.
கொண்டுசென்ற மருத்துவஜாதகங்களை ஒரே நிமிடத்தில் ஆராய்ந்தார்.
"உங்களுக்கு கேன்சர் மூணாவதுஸ்டேஜ்.(அதாந்தெரியுமே!)உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.எனது முடிவை எழுதித் தருகிறேன். அடுத்த அறையில் சர்ஜன் இருக்கிறார்.அவரிடம் சென்று சர்ஜரிக்கான அப்பயிண்ட்மெண்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

நான் சிரித்தேன்.

"என்ன சிரிக்கிறீர்கள்.வெரி கரேஜியஸ் வுமன் இண்டீட்!"என்றார் டாக்டர்.
ஒண்ணுமில்லே டாக்டர்.என் மனசுக்கு சிரிக்கணும் போலிருந்திச்சி.சிரிச்சேன்.
தப்புன்னா....சாரி கேட்டுக்கிறேன்."
"நோ நதிங் சீரியஸ் பிளீஸ்."என்றார் டாக்டர்.
"டாக்டர்.உங்க கிட்டெ ஒன்னு கேக்கலாமா?"
எஸ்.. என்பது போல் புருவத்தை உயர்த்திக்கொண்டே என்னைப் பார்த்தார்.
எனக்குக் கேன்சர் மூணாவது ஸ் டேஜ் என்றும்,ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என்றும் பல டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.அதையேதான் நீங்களும் கூறுகிறீர்கள்.
இதைக்கேட்பதற்கா இங்கு வந்தேன்?"

"உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை."
"ஏன் சார்.கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.நீங்க ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்.அமெரிக்காவிலெல்லாம் டாக்டராக வேலை(!)பார்த்திருக்கிறீங்க.ஆபரேஷன் இல்லாமல் வேறு எந்த சிகிச்சையும்இதற்குக் கிடையாதா?"
நோ மேடம்.மூன்றாவது ஸ்டேஜுக்கெல்லாம் சர்ஜரி தான் ஒரே வழி.
சொல்லிக்கொண்டே ஃபைலை மூடி எங்கள் பக்கம் நகர்த்தினார்.
ரொம்ப தேங்ஸ் டாக்டர்.என்று சொல்லிவீட்டு வெளியே வந்தோம்.
பின் அவரது ஆலோசனையின் படி சர்ஜனைப் பார்த்து விடுவோம்.
என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என முடிவு செய்தோம்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சர்ஜன் ரூமில் இருந்தோம்.
அவர் பெயர் டாக்டர் ஹேமந்த் ராஜ்.சென்னை ,தில்லி,ஹைதராபாத் என்று ஓடிக்கொண்டிருப்பவராம்.ரொம்ப பிஸியான டாக்டராம்.நர்ஸ் சொன்னார்.
நான் நர்சிடம் கேட்டேன். எப்படி ஆபரேஷனுக்காகக் கட்டுகின்ற பணத்தையெல்லாம் பிளேனில் போகும் போது தான் எண்ணிக்கொண்டு போவாரோ!அப்போது தான் நேரம் கிடைக்குமோ!!
நர்ஸ் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்.

டாக்டர் ஹேமந்த் ராஜைப் பார்த்தோம்.

அவரது வசனம் இதோ!
ஓகே மேடம்.உங்களுக்கு கேன்சர் மூன்றாவ்து ஸ்டேஜ் .சர்ஜரிக்கு ரெகமண்ட் செய்யப்பட்டிருக்கிறீர்கள்.இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோ டைம்.நீங்கள் சரி என்றால் இருபது நாட்கள் கழித்து ஒரு தேதி ஃபிக்ஸ் செய்கிறேன்.அல்லது உடனே சர்ஜரி செய்ய வேண்டுமென்றால் வருகிற புதன் கிழமை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கேன்சல் ஆகியிருக்கிறது.அன்றைக்கு வைத்துக் கொள்ளலாம்.பட் ஒன் திங்.அதற்கு இன்றே நீங்கள் பணம் கட்டியாக வேண்டும்.ரைட்?
எவ்வளவு டாக்டர்?
ஜஸ்ட் ஃபிஃப்டி தவுசன்ட் ருபீஸ்!
சரி.அதற்கப்புறம்?
யு மீன் நெக்ஸ்ட் ?
யெஸ்.
அதற்குப் பின் சர்ஜரி ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு ரேடியேஷன் கொடுக்க வேண்டும்.
அதுவும் நீங்க கொடுப்பீர்களா டாக்டர்.
நோ நோ.அதற்கு வேறு டாக்டர்.
அதற்கு எவ்வளவு சார் பீஸ்?
டாக்டர் ஹேமந்த் ராஜுக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது.சரி தான். பார்ட்டி
பசையான ஆள்தான்.விட்றக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ
மடமடவன்று சொல்லத் தொடங்கினார்.
"முதல் கட்டமாக எனது ஃபீஸ் மட்டும் ஐம்பதாயிரம்.ஹாஸ்பிடல் சார்ஜ்,இன் பேஷண்ட் பெட் சார்ஜ்,நர்சிங்,இன்ஸ்ட்ருமெண்ட்
,ஆபரேஷன் தியேட்டர் ரெண்ட்,மெடிசின் எல்லாம் சேர்த்து அனதர் ஃபிஃப்டி
தவுசண்ட்,பிறகு ரேடியேசன் அனதர் ஃபிப்டி,ரேடியேசன் டாக்டருக்கு....
அது பிறகு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
சரி டாக்டர்.பின் எதற்காக டாக்டர் ரமேஷ் சென்னாகட்டாவைப்


பார்த்தோம்?
ஓ.அவர் ஆன்காலஜிஸ்ட் எம்டி.சர்ஜரி,ரேடியேஷன் எல்லாம் முடிந்தபின்
கீமோ மருத்துவ சிகிச்சை கொடுப்பார்.
சரி டாக்டர்.நீங்க சொன்னபடியே வரிசையாக சிகிச்சை தரப்படுமா?
மே பி.இதெல்லாம் நாங்க ஒரு டீமா இருந்து டிஸ்கஸ் செய்து சிகிச்சை தருவோம்
ஓரிரு விநாடி கழிந்தது.
ஏன் டாக்டர்.பிரெஸ்ட்டை எடுத்த பிறகு பாத்தா அசிங்கமா இருக்குமே?
டோண்ட் ஒர்ரி.ஆர்டிபிசியல் பிரெஸ்ட் பிரா பல ரேஞ்சுக்கு வந்திருக்கு.உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி வாங்கி தினமும் போட்டுக்
கொள்ளலாம்.
எனி கொஸ்டின்ஸ் ஃபர்தர்?
இல்லைடாக்டர்.
தென் இன்னிக்கே ஃபீஸ் கட்டிவிடுங்க.என்று கூறிக் கொண்டே
ஃபைலைக் கையில் கொடுத்தார்.

வீட்டுக்குச் சென்று முடிவெடுத்தபின் தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு
வெளியே வந்தோம்.
எனக்கு ஒருவிஷயம் புரிய மாட்டேன் என்கிறது.
இந்த டாக்டர்கள் எல்லாருமே(வேணுமென்றால் பெரும்பாலானவர்கள் என்று வாசித்துக் கொள்ளுங்கள்.) ஏன்ஒரே முறையைக் கையாளுகிறார்கள்?
என்ன ஸ்டேஜாகத் தான் இருக்கட்டுமே!ஏன் மாற்றி யோசிப்பதில்லை?
மருந்து மாத்திரைகள் எவ்வளவோ இருக்குமே.வேறு சிகிச்சை வழிமுறைகள்
இருக்குமே.அதில் ஆரம்பிக்கிறது.இப்படி எடுத்த எடுப்பிலேயே ஆபரேஷன்
என்று ஆரம்பித்தால் எப்படி?
ஒரு பெண்ணின் மார்பகத்தை அறுத்து ஆபரேஷன் செய்து அகற்றுவது
என்பது என்ன அவ்வளவு சுலபமா?என்னதான் சேலையால்
மூடி மறைத்தாலும் கொஞ்சம் உற்றுநோக்கினாலே தெரியுமே!
இவளுக்கென்ன நெஞ்சுக்கூடு ஒரு மாதிரியாத் தெரியுதேன்னு!!
மற்ற உடல் உறுப்புகள் போல் இதை ஒப்பிட இயலாதே.கருப்பை,பித்தப்பை,கல்லீரல் இதெல்லாம் முற்றிலும் உடம்புக்குள்ளே இருப்பது.இவைகளை ஆபரேஷன் செய்து அகற்றி விட்டாலும் வெளியே
கொஞ்சமும் வித்தியாசம் தெரியாது.அது மட்டுமல்ல.இந்த உறுப்புகளை
இழந்த பெண்களின் எண்ணிக்கையும் சமூகத்தில் அதிகம்.
ஆனால்.... ஆனால்.....
ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்,அதுவும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர் என்பதை இந்தக்
கேடு கெட்ட சமுதாயம் எப்படி நோக்குகிறது என்பது குறித்து யாராவது
சிந்தித்திருக்கிறார்களா?

ஓ என்று அழ வேண்டும் போல் இருந்தது.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எனது அனுபவம்.


  1. மறுநாளே விசாரிக்க ஆரம்பித்தார் என் கணவர்.சென்னை மாநகரில் புற்றுநோய்க்கெனத் தனிப் பிரிவுகள் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகளின் பட்டியல் ரெடியானது.முதலில் இருப்பது அடையாறிலுள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்.கைவசமிருக்கும் எனது மருத்துவ ஜாதகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றோம்.உள்ளே நுழைந்ததும் ஒரே அதிர்ச்சி.யம்மாடி!எவ்வளவு கூட்டம்!!ஆண்களும் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளிலிருந்து வயது முதிர்ந்த
    பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராது குழுமியிருந்தனர்.வாசற்படியில் இரண்டு ஆயாக்கள் ஒவ்வொருவராகப் பதிந்துகொண்டு மணிக்கட்டிலோ
    தோள்பட்டையிலோ ஒரு நம்பர் எழுதிய பேப்பரை ஒட்டி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
    பேரைக் கூப்பிடமாட்டார்களாம்.நம்பரைத்தான் கூப்பிடுவார்களாம்.
    இதென்ன கூத்து!ஆயிஅப்பன் வச்ச பேரை விட்டு விட்டு ஜெயிலில்
    கைதிகளைக் கூப்பிடுவது போல் நம்மளையும் கூப்பிடுவாங்களே!என்று குழம்பிக் கொண்டிருந்தேன். வர்ற கூட்டத்திலே எப்படிப் பேர்
    சொல்லிக் கூப்பிட முடியும்?"ராஜா..ஆ..ஆ.."ன்னு கூப்பிட்டா ஒரு பத்துப் பேராவது பாப்பாங்க.:பிச்சை"....ன்னு கூப்பிட்டாலும்
    பத்துப் பேர் வருவாங்க.இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் பேரனும் இன்னார் மகனுமாகிய....ன்னு கூப்பிட்றதுக்குள்ளே பொழுது விடிஞ்சிடும்.
    சரி சரி வந்த இடத்திலெ நமக்கு எதுக்கு இந்த யோசனை. வா வா உள்ளே போய்ப் பார்ப்போம் என்று என் கணவர் முன்னேறினார்.வாசலில்இருந்த ஆயாக்கள் தெலுங்கில் ஏதோ சத்தம் போட்டுக் கேட்டனர்.எங்களுக்குத் தெலுங்கு சுத்தம்!முழி முழி என்று முழித்தோம்.பிறகு தமிழில் கேட்க ஆரம்பித்ததும் என் கணவர் முந்திக் கொண்டார். 'நான் ரிட்டயர்டு தாசில்தார்.உள்ளே போய்......"
    முடிக்க விடவில்லை.இரண்டு பேரும் மிகப் பணிவாக"சாரி சார்.யாரோ
    பேஷண்ட்ன்னு நினைச்சுட்டோம்.உள்ளே போங்க சார்."என்றனர்.

  2. இல்லம்மா.நாங்களும் டாக்டரைத்தான் பாக்க வந்திருக்கோம்.என்றார் என் கணவர்."உள்ளே போங்க சார்.எந்த டாக்டரை வேணுன்னாலும் போய்ப் பாருங்க சார்."உள்ளே நுழைந்தோம்.ஒரு பெரிய கூடம்.சுமாராக ஐநூறு இருக்கைகள் இருக்கும்.அனைத்துமே நிரம்பி வழிந்தது.அனைவரும் தத்தம் அழைப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.பல அறைகளிலும் கன்சல்டிங் நடந்துகொண்டிருந்தது.ஏதோ ஓர் அறைக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தோம்.ஒரு டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார்..."இதப் பாருப்பா.உனக்கு வந்திருக்கிறது கேன்சர்.ஆபரேஷன்தான் செய்யணும்.வேற வழியில்லெ.அப்பிடியே மூணாவது ரூமுக்குப் போ.எங்கே பணம் கட்டணும்.எங்கே மருந்து வாங்கணும்னு சொல்லுவாங்க.ஏழைன்னா ஒரு பாரம் தருவாங்க எழுதிக் கொடுத்திட்டுப் போ.கூப்பிடும்போது வா.நெக்ஸ்ட்.."அந்த நோயாளி பித்துப் பிடித்தவர் போல எங்களைக் கடந்து சென்றார்.இதே வகையில் அடுத்து நான்கைந்து நோயாளிகளிடம் சொல்லி அனுப்பிக்கொண்டே இருந்தார்.நாங்களும்வெளியே வந்து வேறு சில அறைகளில் நடப்பதைக் கண்ணுற்றோம்.ஜெராக்ஸ் நகலாட்டம் காட்சிகள் ஒரே மாதிரியாக நிகழ்ந்துகொண்டிருந்தன.நோயாளிகள் நம்பர்களாகி விட்டனர்.டாக்டர்கள் ரோபோக்கள்ஆகி விட்டனர்.மனது எதற்கோ வலித்தது.மீண்டும் ஹாலின் பக்கம் வந்தோம்.ஒரு தலைமை நர்சாகத் தென்பட்டவரிடம்அறிமுகப்படுத்திக்கொண்டோம்.அவர் சொன்னார்."சார்.சென்னை ராஜதானியாஇருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி ஆசியாவிலேயே பெரியது.அப்ப கர்நாடகா,கேரளா எதுமே இல்லெ.இதெ ஆரம்பிச்ச டாக்டரு முத்துலெச்சுமியம்மா.தெலுங்குக்காரரு.இங்க தெனமும் அறுநூறு பேரு வர்ராங்க.அதுலெ மெஜாரிட்டி ஆந்திராதான்.இங்க வேல பாக்குற டாக்டருங்க நர்சுங்கரொம்பப் பேரு ஆந்திரா தான்.தமிளு ரொம்பக் கம்மி.கக்கூசு சுத்தம் பண்றவளுங்கதொடெக்கிறவங்க தான் தமிளு.ஆனா வர்ற எல்லாத்துக்குமே ஒரே சிகிச்சை தான்.துட்டு கட்டினா அறுவெ(அறுவை சிகிச்சை!)சீக்கிரம் நடக்கும்.ஏழென்னா எல்லாமே வரிசெ தான்.போறுமா.டாக்டரெப் பாக்கணுன்னா வெளியெ போயி சீட்டுவாங்கிட்டு அப்புறமா உள்ளெ வாங்க.போங்க போங்க"நர்ஸ் விடு விடு என்று எங்களைக் கடந்து சென்றுவிட்டார்.ரொம்பவே சிந்தித்தேன்.வெளியே சென்று பதிந்து நம்பர் வாங்கி வரிசையில் ஏதோ ஒரு டாக்டரைப் பார்த்து அவரிடம் விலாவாரியாகச் சொல்லி,அவர் சொல்லும் பரிசோதனைகளைச் செய்தபின்...செய்தபின்..அறுவைசிகிச்சை தான்ஒரே வழி என்று அவரும் சொல்லி விட்டால்?இருவரும் விவாதித்தபடியே வெளியே வந்தோம்.நாம் விரும்பும் தனிப்பட்ட கவனமான சிகிச்சை நிச்சயம் இங்கே கிடைக்காது.இன்று பார்க்கும் டாக்டரை அடுத்தடுத்துப் பார்க்க முடியாது.ஒவ்வொரு முறையும்வேறுவேறு டாக்டர்கள் தான். அடையாறு மருத்துவமனை நமக்கு லாயக்கில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
    ரெடி.ஜூட்...
    நெக்ஸ்ட் ஸ்டாப் அப்பல்லோ ஹாஸ்பிடல்!

Saturday, August 4, 2007

சி.டி.ஸ்கேன் எடுத்தாலே மார்பகப் புற்றுநோய் வரும்?

ஜூலை 29 தேதிய தினமலர்(சென்னைப் பதிப்பு)ஐப் பாருங்கள்.இதய கோளாறுகளைக் கண்டறிவதற்காக 'சி.டி.ஸ்கேன் எடுத்தால் அதன் மூலம் இளம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும்அபாயம் உள்ளது'என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறதாம். இதயத்தில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது.ஆனால்20முதல்30வயதுள்ள பெண்களுக்கு இந்த ஸ்கேனை எடுத்தால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.வயதான பெண்களை விட இளம் பெண்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஏனெனில் டாக்டர்கள் இதயக் கோளாறைக் கண்டறிய ஸ்கேன் செய்யும் போது மார்பகங்களை விட்டு விட்டு இதயத்தை மட்டுமே ஸ்கேன் செய்ய முடியாது.அதனால் ஸ்கேன் எடுக்கும்போது வெளியாகும் கதிர்வீச்சால் மார்பகத் திசுக்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும்.அதை அடுத்து மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அதனால் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் 20 வயது பெண்கள் 143 பேர்களில்ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்க எளிய சோதனைமுறை

தினமலர்(சென்னைப் பதிப்பு நாள் ஆகஸ்டு 4)
பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகண்டுபிடிக்க எளிய சோதனைமுறை அறிமுகம்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளைச் சேர்ந்த 85 சதவிகித பெண்கள் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கண்ணால் பார்த்தே நோயைக் கண்டறியும் ஒரு எளிய பரிசோதனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இந்தவகைப் புற்றுநோய் பெரும்பங்கு வகிக்கிறது.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில்உள்ள 85 சதவிகித பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட நான்கு லட்சத்து 93ஆயிரம் பேரில் இரண்டு லட்சத்து 73ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
கர்ப்பப் பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு 'எச்பிவி-ஹூயூமன் பபிலோமா'என்ற வைரஸ் தான் காரணம்.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் பாமர மக்களைச் சென்றடையப் பல ஆண்டுகளாகும்.தற்போது 'பாப் ஸ்மியர்' பரிசோதனை முறை பயன்பாட்டில் உள்ளது.இருப்பினும் சாதாரண மக்களுக்கு 'பாப் ஸ்மியர்' பரிசோதனை முறையிலான சோதனை செய்வது சிரமம் என தலைமை ஆய்வாளர் டாக்டர் ரங்கசாமி சங்கரநாராயணன் கூறியுள்ளார்.இதனால் எளிய பரிசோதனை செய்யும் ஒரு சுலபமான முறையை இவர் ஆய்வு செய்தார்.
இந்த முறையில் நான்கு சதவிகித அசிடிக் அமிலத்தை கர்ப்பப்பை வாயில் தடவிப் பார்க்கும் போது "அசெட்டோ ஒயிட்"வெள்ளை நிறமாகத்தோன்றினால் அது புற்று நோயின் முந்திய நிலையின் அடையாளமாகும்.
இம்முறை குறித்து டாக்டர் பாயில் கூறுகையில்"சங்கர நாராயணனின் இந்த ஆய்வு பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.இது புற்றுநோயைத் தடுப்பதில் தரமான மற்றும் குறைந்ததொழில் நுட்பங்களுடன் கூடிய சிறந்த முறையாகும்.இது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் கடந்த2000ம் ஆண்டிலிருந்து பரிசோதனை செய்யப்படுகிறது."என்று தெரிவித்தார்.
கிறிஸ்தவ சமூக சுகாதார இணையத்தின் இயக்குனர் டாக்டர் ஜேக்கப் செரியன் கூறுகையில்'மற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது,நோயைக் கண்டுபிடிப்பதிலும் உடனே சிகிச்சைக்கு வழி வகுப்பதிலும் இம்முறை சிறந்த முறையாகும்.செவிலியரில்துவங்கி மருத்துவுத் துறையில் உள்ள அனைவரும் இந்த முறையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும்'என்றார்.
மருத்துவத் துறையினருக்குத் தரமான பயிற்சி அளிப்பது,தரமான பரிசோதனையை அனைத்து இடங்களிலும் மேற்கொள்வதுஆகியவை மூலமாக மட்டுமே இந்தமுறை அனைவருக்கும் சென்றடைந்து பயன்பெற வழி வகுக்கும்'என்று டாக்டர்சங்கரநாராயணன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.