Saturday, July 21, 2007

வாழ்வின் அர்த்தம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை

மண வாழ்க்கையின் தத்துவத்தை நான்கே வரிகளில் அடக்கிய பாடல்.
முதலிரண்டு வரிகளும் அநேகமாக வெற்றி கொள்ளப்படுகின்றன.
பெரும்பாலான காதல் ஜோடிகள் (திரு)மணமுடித்து விடுகின்றனர்.
அத்துடன் முடிகிறதா காதலின் வெற்றி?இல்லை.இல்லவே இல்லை.
அதற்குப் பிறகு தான் பிரச்சனையே.
வாழ்ந்து பார்க்க வேண்டும்.பிறர் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும்.
சின்னஞ் சிறு வயது முதல் சேர்ந்து விளையாடியதும்-பின்
கன்னத்தில் முத்தமிட்டுக் கனிவாய்க் கொஞ்சியதும்
வளர் பருவம் கண்டுக் காதல் அரும்பியதும்
உளமிரண்டின் செயல் கண்டு பெற்றோர் காட்டிய எதிர்ப்பைத்
திடங் கொண்டு சந்தித்ததும், மண வாழ்வு காணச்
சிந்தித்ததும்,பின் செயலாக்கியதும்
பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பின் கற்பனையாய் மெல்லப்
போய் விடும்.உண்மையான காதல் அதற்குப் பிறகு தான் தொடங்குகிறது.

வீட்டுக்குள்ளேயும் பிரச்சனை. வெளியேயும் பிரச்சனை.பெற்றோர் உற்றோர் இடத்தும்
பிரச்சனை.எங்கெங்கு காணினும் பிரச்சனையடா(டீ!)
அவ்வளவையும் சமாளித்து வெற்றி கொள்ள வேண்டும்.
கணவன் மனைவிக் கிடையே ஆயிரமாயிரம் கருத்து வேற்றுமைகள் வரும்.
உங்கள் ஈகோ உங்களையே கர்வம் கொள்ளச் செய்து சண்டையைக்
காட்டுத் தீ போல வளர்த்துவிடும்.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள்.பிரச்சனைகளைச் சந்தியுங்கள்.சமாளியுங்கள்.வெற்றி கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்.மேலே சொன்ன பாடலின் மூன்றாவது வரியையும்
வெற்றி கொண்டு விடலாம்.

காதலின் அர்த்தமும் வெற்றியும் அத்துடன் முடிந்துபோய் விடுகின்றது.
சேர்ந்து போவதோ தனித் தனியாகப் போவதோ இயற்கை பார்த்துக் கொள்ளும்.

என் வாழ்வில் மூன்றாவது வரியை வெற்றி கொண்ட கதையை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மணமுடிப்பதும்,குழந்தைகளைப் பெறுவதும் வளர்ப்பதும் ஒவ்வொருவரின்
வாழ்வின் பகுதிகள்.குழ்ந்தைகளை நன்மக்களாக வளர்த்தேன்.ஒவ்வொன்றும் படிப்பில் படு சுட்டி.கணவரோ சதா சர்வ காலமும் ஆபீஸ்,ஆபீஸ் என்று
அலைபவர்.ஆபீஸ் தான் என்னுடைய முதல் பொஞ்சாதி என்று வேடிக்கையாச் சொல்வார்.அது கிட்டத்தட்ட உண்மை தான்.
குழந்தைகள் அனைவருக்கும் மணமுடித்துப் பேரன் பேத்திகளையும்
கண்டாயிற்று.அப்புறம் வேறென்ன என்று கேட்கிறீர்களா?கதையே அப்புறம் தான்!

2002 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தின் பிற்பகுதி வாக்கில் ஒரு நாளிரவு
நல்ல தூக்கத்திலிருந்தேன்.திடீரென்று படுக்கையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.
வாய்,நாக்கு,உதடு என்று எல்லாமே ஜிவு ஜிவு என்று இழுத்து விட்டது.என்னங்க என்னங்க என்று கணவரைக் கூப்பிட முயன்றேன்.வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்ட மாதிரி உணர்ந்தேன்.அதற்குள் என் கணவரும் எழுந்து விட்டார்.என் நிலையைப் பார்த்து உடனே ஆட்டோவை வரவழைத்து மருத்துவ மனைக்கு விரைந்தோம்.போகும் வழியெல்லாம் முருகா முருகா என்று வாய் விட்டுக் கூறிக் கொண்டே இருந்தேன்.முருகன் மீது உள்ள பக்தியினால் என்று தவறுதலாக நினைத்து விடாதீர்கள்.ஒன்றுமே பேசாமல் சும்மா 'கம்'ன்று இருந்துவிட்டால் ஒருவேளை வாய் கோணிகொண்டு விடுமோ என்ற பயம் தான்.மருத்துவமனை போய் சேர்வதற்குள் ஜிவு ஜிவு போய் விட்டது.
வாய் நன்றாக ஆகி விட்டது.இருந்தாலும் அட்மிட் ஆனேன்.ஏதோ ஊசி போட்டார்கள்.மறுநாள் வந்து பரிசோதித்த டாக்டர் சி.டி.ஸ்கேன்,பிரைய்ன் மேப்,பிளட் டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டும்என்றார்.எடுத்தோம்.காட்டினோம்.
இது ஒன்றுமில்லை. இந்த வயதில் பெண்களுக்கு வரும் வியாதி தான் இதற்கு 'பிரி மெனோபாஸ் சிண்ட்ரோம்' என்பார்கள்.சிறிது காலம் மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார் டாக்டர்.
மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் அதிசயத்தக்க முடிவை எடுத்தார் என் கணவர்.
ஆபீஸ் ஆபீஸ் என்று இருந்தது போதும்.இனி உன்னைக் கவனிப்பது தான்
என் முதல் வேலை என்றார்.தன் விருப்ப ஓய்விற்கு(விஆர்.எஸ்) விண்ணப்பித்து விட்டார்.வருவாய்த் துறையில் முப்பத்து ஒன்பது ஆண்டுகள் சீரும் சிறப்புமாகப் பணி புரிந்து துணைக் கலெக்டர் பதவி உயர்வு வரும்
நேரம்.வருவாய்த் துறை அலுவலர் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு இப் பதவி உயர்வு.என் மனைவியின் உடல் நலம் பராமரிப்பது தான் என் முன் நிற்கும் முதல் பணி.இதற்கு இடைஞ்சலாக வரும் எதுவும் (பதவி உயர்வு உட்பட)எனக்குத் தூசு என்றார்.ஒரு முடிவெடுத்தால் சாதிக்காமல் விடவே மாட்டார். வி.ஆர்.எஸ்.பெற்று விட்டார்.மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள்
பணி புரிந்திருக்கலாம்.56ஆவது வயதிலேயே ஓய்வு பெற்றார்.
சொல்ல மறந்து விட்டேன்.அவர் இதய நோய் காரணமாக பை பாஸ் ஆபரேஷன் பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டவர்.எனவே
மருத்துவ சிகிச்சை முன்னிட்டு தருமமிகு சென்னைக்குக் குடி பெயர்ந்தோம்.

ஏறத்தாழ ஓராண்டிற்குப் பிறகு
வலது மார்பகத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.ஒரு வாரம் தான் போயிருக்கும்.வலிக்கிற மாதிரி இருந்தது.கொஞ்சம் கட்டி மாதிரி தோன்றியது.எதற்கும் ஒரு கைனகாலஜிஸ்டிடம் காட்டுவோம் என்று முடிவு செய்து போனோம்.பரிசோதித்துப் பார்த்த மகப் பேறு மருத்துவர் சீரியஸாக முகத்தை வைத்துக் கண்டு இது கேன்சர் மாதிரி இருக்கிறது.ஒரு மேமோகிராம் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்.இரண்டு கால்களையும் வாரியது போல் இருந்தது எனக்கு.

5 comments:

Thekkikattan|தெகா said...

தொடர்ந்து எழுதி வாருங்கள். வாழ்வில் எதார்த்தம் எப்படியெல்லாம் கை சொடுக்கும் கால அவகாசத்தில் ஒருவர் வாழ்வையே புரட்டி போட்டு விடுகிறது, என்பதற்கினங்க உங்களின் கட்டுரையை படிக்கும் பொழுது உணர முடிகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அம்மா!
தமிழ் மனத்தில் மேயும் போது; தட்டுப் பட்டதே என வந்தேன். வேதனையிலும் உங்கள் எழுத்துப் பரிமளிக்கிறது.தங்கள் ஆறுதலுக்கும்; துணைக்குமாக எழுதுங்கள்.
நல்லது நடக்குமென நம்புவோம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
Ramani said...

மன உறுதியுடன் இருங்கள். இதைச் சொல்வது எனக்கு இலகுதான். ஆனாலும், இதனையே சொல்லமுடிகின்றது.

அனுராதா said...

வருகை தந்து கருத்துகள் தந்த தெகா,யோகன் பாரிஸ்,ரமணி ஆகியோருக்கு நன்றி.