மறுநாள் 20.11.2006ந்தேதி மேற்கு அண்ணாநகரிலுள்ள எம்.வி.மோகன் டயாபடிஸ் சென்டருக்குக் காலை எட்டு மணிக்கே சென்று விட்டோம்.சர்க்கரை அளவைப் பரிசோதித்த டாக்டர் கயல்விழி என்பவர் எனக்கு டைப் 2 டயாபடிஸ் வந்துள்ளது என்றும்,வெறும் மாத்திரையினால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.உடனே சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய அவசரத்தைச் சொன்னோம்.இரண்டு தினங்கள் இன்சுலின் ஊசி போட்ட் பிறகும் கட்டுக்குள் வரவில்லை என்றால் அடுத்த சிகிச்சை செய்யலாம் என்றார்.
ம்....எனக்காவது.சுகர் கட்டுக்குள் வருவதாவது!மீண்டும் 22.ந்தேதி சென்று டாக்டரைப் பார்த்தோம்.எங்களை கோபாலபுரத்திலுள்ள அவர்களின் தலைமை மருத்துவமனைக்கு மறுநாள் போகுமாறு சொன்னார்கள்.அதன்படி அங்கு 23ந் தேதி காலை அட்மிட் ஆகி சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வந்து மறுநாள் 24ந் தேதி மாலை டிஸ்சார்ஜ் ஆனேன்.அன்று முதல் இன்று வரை தினமும் இன்சுலின் ஊசி மூன்று வேளையும் மாத்திரை இரு வேளையும் போட்டுக்கொள்கிறேன்.இருந்தும் சர்க்கரை அளவு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.பெரும்பாலான கேன்சர் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அவ்வளவாகக் கட்டுக்குள் வராது என்றும்,காரணம் இவர்களுக்குக் கொடுக்கப்படும் கீமோ ஊசி மற்றும் கீமோ மருந்துகளின் பாதிப்பு என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.எனவே முடிந்தவரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அடிக்கடி சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள்.
அடுத்தநாள் 25ந்தேதி சனிக்கிழமை பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்று டாக்டரைப் பார்த்தோம்.ஹைதராபாத் பெட் ஸ்கேன் சென்டருக்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டோம்.அங்கு பணிபுரியும் பீமாராவ் என்ற அலுவரைத் தொடர்பு கொண்டு நாம் செல்லும் தேதியையும் ஸ்கேன் எடுக்கும் தேதியையும் உறுதி செய்துகொள்ளும்படியும் டாக்டர் கூறினார்.
ஹைதராபாத் நகரில் ஜுபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள அபோல்லோ மருத்துவமனையில் உள்ளதாம் இந்த பெட் ஸ்கேன் சென்டர்.நாங்கள் இதுவரை ஹைதராபாத் சென்றதில்லை.அன்றே பீமாராவுடன் தொடர்பு கொண்டோம்.அனைத்து விபரங்களையும் குறித்துக்கொண்டார்.27ந்தேதியே ஸ்கேன் எடுத்துவிடலாம் என்றும் கூறினார்.வந்தால் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் அங்கேயே உள்ளதாகவும் சொன்னார்.நாங்கள் ஞாயிறன்றே விமானத்தில் வருவதாகச் சொன்னவுடன் விமான நிலையத்திற்கு காரை அனுப்புவதாகவும் சொன்னார். சிறிது நேரத்திலேயே டாக்டர் மாதவி என்பவரும் தொலைபேசியில் அழைத்தார்.தான்,இந்த பெட் ஸ்கேன் செண்டரில் உள்ள டாக்டர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.நாங்கள் வரும் விபரங்களை உறுதிப்படுத்திக்கொண்டார். அப்பாடா என்றிருந்ததது.
மறுநாள் 26ந்தேதி பிற்பகல் ஒருமணியளவில் ஹைதராபாத்துக்கு விமானத்தில்புறப்பட்டோம். இரண்டு மணியளவில் சென்றடைந்தோம்.
முதல் நாளே தகவல் அனுப்பியிருந்தபடியால்,எங்களை அழைத்துச் செல்ல காரை அனுப்பியிருந்தார்கள். மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறையை ஒதுக்கியிருந்தார்கள்.விடுதிக்கு மிக அருகாமையிலேயே பெட் ஸ்கேன் சென்டர் இருந்தது. வந்துசேர்ந்ததும் பீமாராவைத் தொடர்பு கொண்டோம்.ந்ன்றாக ரெஸ்ட் எடுக்குமாறும் மறு நாள் காலையிலிருந்து டீ,காபி,காலை டிபன் என்று எதுவும் உட்கொள்ளாமல்
ஒன்பது மணியளவில் சென்டருக்கு வந்துவிடுமாறும் கூறினார்.
ஹைதராபாத்தில் ஜுபிலி ஹில்ஸில் உள்ளது அபோல்லோ மருத்துவமனை.இங்குதான் பெட் ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளது.
ஆங்கிலத்தில் பொசிட்ரான் எமிஸன் டோமோகிராபி( POSITRON EMISSION TOMOGRAPHY)அழைக்கப்படுகிறது.ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்துப் படித்தால் பெட் என்று வருகிறதல்லவா?
ஒருவருக்குக் கேன்சர் வந்துள்ளதைக் கண்டுபிடிப்பதற்காகவும் ஏற்கனவே கேன்சர் வந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு,அந்த சிகிச்சைகள் எந்த அளவுக்குச் செயல்பட்டுள்ளது
என்பதைக்கண்டுபிடிப்பதற்காகவுமே பொதுவாகப் பெட் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. வெளிநோயாளியாகவே வந்து நான்கைந்து மணிநேரங்களில் எடுத்துவிடலாம்.ஸ்கேன் எடுப்பதற்கு நான்குமணிநேரத்திற்கு முன்பிருந்தே எதுவும் சாப்பிடக்கூடாது. என்வே காலைலேயே ஸ்கேன் எடுத்துக்கொள்வது நல்லது.
சி.டி.ஸ்கேன்.,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவைகள் ஒரு நேரத்தில் உடம்பின் ஏதேனும் ஒரு பகுதியைத்தான் ஸ்கேன் எடுக்க முடியும்.ஆனால் பெட் ஸ்கேனில் முழு உடம்பையும் ஒரே நேரத்தில்
ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம்.அதுமட்டுமல்லாமல் இதயத்தின் தசைகளில் எந்த அளவுக்கு ரத்தம் பாய்கிறது என்பதை முடிவு செய்யவும் இதயத்தின் பல்வேறு செயல்பாடுகளையும் அறிந்து கொள்ளவும்,மூளையின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் பெட் ஸ்கேன் மிகவும் உதவியாக இருக்கிறது.
மறுநாள்27ந் தேதி காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் பெட் ஸ்கேன் சென்டருக்குச் சென்று பதிவு செய்து கொண்டோம்.ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்கள் நான்கு பேர் இருந்தனர்.பத்து மணிக்கெல்லாம் என்னைக்கூப்பிட்டுச் சென்றனர்.காலையிலிருந்தே எதுவும் உட்கொள்ளவில்லை என்பதைக் கேட்டு உறுதி செய்துகொண்டனர். கதிர் இயக்க மருந்து கலந்த தண்ணீரை அரை மணிநேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் மொத்தம் ஒன்றரை மணி நேரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் குடிக்க வைத்தனர்.பிறகு முதல் மாடியில் உள்ள ஓய்வு அறையில் ஒரு மணி நேரம் தங்க வைத்தனர்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் பீமாராவ் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். என் கணவர் அவருடன் பேசி இந்த ஸ்கேன் தொடர்பான செயல்முறைகள் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார்.பிறகு எனக்கும் விளக்கிச் சொன்னார்.
சிங்கப்பூரில் உள்ள கிளென் ஈகிள் என்ற நிறுவனத்துடன் இணைந்து
இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும்,நிமிடத்துக்கு நிமிடம் வழக்கத்துக்கு மாறாக வளரும் செல்களின் வளரும் வேகம்,இருக்கும் இடம்,என்ன உருவில்(shape)உள்ளது,சரியான அளவு(exact size)போன்றவைகளை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் சொன்னார்.
ஒன்றரை மணிநேரத்திற்குப் பின் பெட்ஸ்கேன் இயந்திரம் உள்ள அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.அங்கு கதிர் இயக்கம் கலந்த மருந்தைக் கையில் உள்ள நரம்பு வழியாகச் செலுத்தினர்.உடனே உடலெங்கும் வெப்பம் பரவியது. சுமார் ஒரு மணிநேர ஸ்கேன் எடுக்கப்பட்டது.
மணி பிற்பகல் மூன்று ஆகியிருந்தது.பின் முன்பு சொன்ன மேல்மாடியிலுள்ள ஓய்வு அறையில் எங்கள் இருவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
உணவு முடித்துக்கொண்டு எங்கள் அறைக்கு வந்தோம்.மாலை ஐந்தரை மணியளவில் மீண்டும் கூப்பிட்டு அனுப்பி ஒரு ஐந்து நிமிடத்தில் இன்னொரு முறை ஸ்கேன் எடுத்தார்கள்.அப்போது அங்கிருந்த டெக்னீசியன், எனது இடது மார்பகம் நார்மலாக உள்ளது.வலது மார்பகம் சுருங்கி சின்னதாக இருக்கிறதே காரணம் என்ன என்று கேட்டார்.ரேடியேசன் கொடுக்கப்பட்ட விபரம்,பிராக்கிதைரபி செய்யப்பட்ட விபரம் எல்லாம் சொன்னேன்.ஆச்சரியமாக எல்லா விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
"ஓ!இந்த சிகிச்சைகளெல்லாம் செய்தால் இப்படி ஆகுமோ?"
மறுநாள் 28ந் தேதி காலை பத்து மணிக்கெல்லாம் ஸ்கேன் ரிப்போட்டுகளைக் கையில் கொடுத்துவிட்டார்கள்.அன்று பிற்பகல் நான்கு மணியளவில் விமானத்தில் புறப்பட்டு ஐந்து மணிக்கெல்லாம் சென்னை வந்துசேர்ந்தோம்.
மறுநாள் 29ந் தேதி காலை பத்து மணிக்குப் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்று டாக்டரைச் சந்தித்தோம்.ரிப்போர்ட்டுகளைப் பரிசீலித்த டாக்டர்,மார்பகத்தில் மீண்டும் கேன்சர் வந்துள்ளதும்,கல்லீரலில் கேன்சர் பரவியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது என்றும் ,அனைத்துக் கேன்சர் செல்களும் ஆக்டிவாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் மிக வேகமாக வளர்வதாகவும் சொன்னார். அதாவது,17ந் தேதியன்று எடுத்த சி.டி.,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்களில் தெரிந்த கேன்சர் செல்களின் அளவுகளை விட
இப்போது 27ந் தேதி எடுத்த பெட் ஸ்கேனில் இரு மடங்காகத் தெரிகிறது என்று சொன்னார். இவ்வளவு சிகிச்சைகள் செய்தும் பதினோரு நாட்களில்
இருமடங்காக வளர்ந்த கேன்சர் செல்களின் வேகத்தை என்னவென்று சொல்வது?
அன்றே டாக்டரின் அறிவுரையின்படி,விஜயா மருத்துவமனை இதயநோய் டாக்டர் ஏ.எல்.நாராயணன் என்பவரிடம் சென்றுமீண்டும் ஒரு எக்கோ எடுக்கப்பட்டது .கீமோ மருந்து செலுத்துவது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.அதன் பிறகு ஒரு நாள் கழித்து டிசம்பர் ஒன்றாம் தேதி வந்து கீமோ சிகிச்சைக்காக மருத்துவமனை வருமாறு டாக்டர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தொழிற்நுட்பம் இவ்வளவு வளர்ந்திருந்தும் ஏன் இரண்டு மடங்காக கேன்சர் செல்கள் வளருகின்றன?டாக்டர் ஏதாவது சொன்னாரா?
இரு மடங்கென்ன வடுவூர் குமார்.இன்னும் அதிக வேகத்திலும் வளரும்.என் அனுபவத்தில் ஒரு நபருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை நடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் அதே அளவுக்கு மீண்டும் வளர்ந்து விட்டது.கேன்சரைப் பொறுத்தமட்டில் ஏறத்தாழ முப்பது விழுக்காடு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்னும் எவ்வளவோ போக வேண்டும்.கரையான் புற்று வளர்வதைப் பார்த்திருக்கிறிர்களா?இன்றைக்கு அழித்தால் ஒரே நாளில் வளர்ந்து விடும்.அதன் வளர்ச்சியோடு ஒப்பிட்டுத்தானோ என்னவோ இந்நோய்க்குப் புற்றுநோய் என்று தமிழில் பெயர் வைத்தார்களோ என்னவோ!
(-:
சகோதரி, மனம் கலங்குகிறது. என்ன செய்வது ?? படிக்கும் எங்களுக்கே இப்படி என்றால் அனுபவிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும். ம்ம்ம்ம்
கடவுள் விட்ட வழி. இன்னும் 2006 டிசம்பர்த் திங்களில் தான் இருக்கிறோம். இன்னும் 11 மாதங்கள் இருக்கின்றன - தற்போதைய நிலைமை அறிய. கடவுளே கடவுளே
வாங்க துளசி கோபால்.
வாங்க சீனா.இதோ சீக்கிரம் வந்து விடுகிறேன்.
நல்ல செய்தி சொல்லுவீங்க எனும் நம்பிக்கையுடன் தொடர்ந்து படிக்கிறேன்.
நன்ன்றி யோகன் பாரிஸ்
God will be with you.
Vazhga Valamudan.
-Ramprasath
Post a Comment