Tuesday, October 23, 2007

எனது இன்றைய நிலை

இவ்வாறாக ஹார்மோன் மற்றும் கீமோ ஊசிமருந்துகள் கொடுக்கும் சிகிச்சைகளின் முதல் நிலை முடிந்தது.அடுத்ததாக 2008ம் ஆண்டில் சனவரி,மே, செப்டம்பர் என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசி மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.அடுத்த செக்கப் வரை நான் உட்கொள்ளவேண்டிய மருந்து மாத்திரைகளையும் எழுதிக்கொடுத்திருக்கிறார்.

எனது உடல்நிலை.

1.கை கால் சோர்வு தொடர்கதையாய் இருக்கிறது.
2.இன்றைக்கும் இடது மார்பகத்தை விட வலது மார்பகம் வெம்மையாக இருக்கிறது.
3.அக்குளில் பிராக்கிதைரபி செய்ததால் உள்ளே பள்ளமாக இருக்கிறது.வலி இருக்கிறது.
4.மார்பகத்தில் அரிப்பு இருக்கிறது.எனவே பிளவுஸ் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் குவாட்ரிடெர்ம் என்ற ஸ்கின் ஆயின்மெண்ட்டைப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
5.கீமோ மாத்திரை உட்கொள்வதால் மலச்சிக்கல் தொடர்ந்து இருக்கிறது.அதற்காக மருந்து,மாத்திரைகள் உட்கொண்டுவருகிறேன்.
6.கீமோ ஊசி குத்தும்போது கையில் ஏற்பட்ட இடம் நன்றாகக் கருத்து இருக்கிறது.சிவந்த நிறமானதால் கருத்திருப்பது பளிச்சென்று தெரியும்.
கை கால் அமுக்கும்போது இந்த இடத்தில் பார்த்து அமுக்கிவிடவேண்டும்.இல்லையென்றால் பயங்கரமாக வலிக்கும்.
7.கை,கால் நகங்கள் கருத்துவிட்டன. நகப் பாலிஷ் பூசி மறைத்துள்ளேன்.கால்களின் மேற்புறங்கள் லேசாகக் கருத்திருக்கிறது.உடலில் பல இடங்களில் திட்டுத் த்ட்டாகக் கருத்திருக்கிறது.
8.இடதுகையைவிட வலது கை வீங்கியபடி இருக்கிறது.என்னதான் எக்சர்ஸைஸ் செய்தாலும் இடதுகையை ஆட்டுகிற மாதிரி வலது கையை அவ்வளவாக ஆட்டமுடியாது.
9.அடுப்படியில் ஐந்து நிமிடம் நிற்கமுடியாது.உடம்பெல்லாம் வேர்த்து விருவிருத்துவிடும்.
10.முன்பு பத்துப் பக்கமென்றாலும் வேகமாக எழுதுவேன்.இப்போது அரைப்பக்கம் கூட எழுதமுடியவில்லை. கையெழுத்து முன்போல அழகாக இல்லை.மிகவும் சுமாராக வருகிறது.
11.அதிக பாரம் தூக்கவோ சுமக்கவோ முடியவில்லை.முன்பெல்லாம் பதினைந்து லிட்டர் குடம் ஒன்றை இடுப்பில் தூக்கிகொண்டும்,பத்து லிட்டர் குடமொன்றை இன்னொரு கையில் தூக்கிக்கொண்டும் சாதாரணமாக மாடிப்படி ஏறுவேன்.இப்போது ஐந்து லிட்டர் பாரம் கூட தூக்க முடியாது.
12.என்னதான் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டாலும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறது.இத்தனைக்கும் ஹியூமின்சுலின் 30/70 பேனா டைப் ஊசியை காலை,மதியம் இரவு மூன்று வேளைகளிலும் 25/25/20 அளவுகளில் போட்டுக்கொள்கிறேன்.குளூகோபே 25மி.கி.மாத்திரையை
காலை,மதியம் இருவேளைகளில் உட்கொள்கிறேன்.உடம்பில் ஊசி குத்தாத நாளே இல்லை.
13.தலைமுடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.டை அடித்துக்கொள்கிறேன்.
14. காதில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.வேறு வழி இல்லை.சகித்துக் கொள்கிறேன்.
15.இரவு படுக்கும்போது ஏ.ஸி.நல்ல குளிராக இருக்கவேண்டும்.என்வே
குளிர் 17 டிகிரியிலும் மின்விசிறி வேகம் 5-லும் வைத்துத் தூங்குகிறேன்.

இவ்வளவு இருந்தும் நான் நானாக இருக்கிறேன்.2003 செப்டம்பரில் இந்த நோய் தாக்கியபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தேன்.இந்த நோய் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததும் ஒரு முக்கியமான காரணம்.ஒவ்வொரு டாக்டரும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டும் என்று கூறும்போது மனதளவிலும் மிகவும் பலவீனப்பட்டிருந்தேன்.

ஆனால் இப்போது?

பலவகையில் உடல் ஊனமாகியிருந்தாலும்,உள்ளம் ஊனமாகவில்லை.
பாதிப்புகள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சையால் சமாளித்துவருகிறேன்.
இவ்வுலகில் இருக்கும்வரை இந்த சமூகத்திற்கு என்னால் முடிந்த அளவு நல்லது செய்து வருகிறேன்.மேற்கொண்டும் செய்ய விரும்புகிறேன்.

ரேடியேசன் கொடுக்கும் காலகட்டத்தில் நானும் என்கணவரும் இந்நோய் குறித்து அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் இது குறித்த புத்தகங்களை லேண்ட்மார்க்,ஹிக்கின்பாதம்ஸ் போன்ற கடைகளில் தேடினோம்.
மணிமேகலை பிரசுரத்திலிருந்து வெளீயாகியிருந்த "புற்றுநோய்"என்ற புத்தகமும்,டாக்டர் முத்துக்குமரன் எழுதிய வாய்ப் புற்றுநோயும், பிற புற்றுநோய்களும் என்ற புத்தகமும் கிடைத்தன.படித்துப் பல விபரங்களைத்தெரிந்துகொண்டேன்.என் கணவர் உதவியால் இன்டர்நெட்டில் தேடி அநேக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.அமெரிக்காவில் இயங்கும் "breastcancer.org "என்ற இணையதளத்தில் மார்பகப் புற்றுநோய் வந்து உயிர் பிழைத்த பெண்களுக்கென்று ஒரு சாட்டிங் அறை இருக்கிறது.என் கணவர் உதவியால் அதில் தீவிரமாகப் பங்கேற்றுப் பல விபரங்களைத் தெரிந்துகொண்டேன்.

இவைகளெல்லாம் என்னுள் ஒரு புது உலகத்தைத் திறந்துவிட்டது.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நபர்களைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தித் தந்தது.

குமுதம் சினேகிதி இதழில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் கவுன்சிலிங் செய்து வரும் நீரஜா மற்றும் கிரிஜா ஆகிய இருவரைப் பற்றிய பேட்டி வெளிவந்திருந்தது.இவர்களைப் போய்ச் சந்தித்துப் பேசினால் என்ன?என்று எண்ணினேன்.உடனே குமுதம் சினேகிதி இதழ் அலுவலகத்திற்குப் ஃபோன் செய்தேன்.கிரிஜாவின் ஃபோன் நம்பர் கிடைத்தது. அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன்.நேரில் வந்து பார்க்கலாமா என்று கேட்டேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார். மறுநாளே அண்ணாநகர் மேற்கில் இருக்கும் அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.மிகவும் அன்பாகப் பேசினார்.அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு மாதா மாதம் சென்று புற்றுநோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் செய்து வருவதாகச் சொன்னார்.நோயாளிகளைவிட அவர்களுடைய குடும்பத்தார்களுக்குத் தான் கவுன்சிலிங் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்றார்.இருவரும் சேர்ந்து "சஹாயிகா"என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவி, மாத்திரைகள்கூட வாங்க முடியாத வறிய நிலையில் உள்ளவர்களுக்கு மாதாமாதம் மூன்றாயிரம் ரூபாய்க்கும் குறையாமல் மாத்திரைகள் இலவசமாக வழங்கி வருவதாகச் சொன்னார்.இவர்களின் சேவையைக் கண்ட நெருங்கிய உறவினர்கள் சிலரும் நண்பர்கள்சிலரும் அவ்வப்போது கொடுக்கும் தொகையுடன் தாங்களும் பெருமளவு பணம் போட்டு இப்பணியைச் செய்துவருவதாகச் சொன்னார்.
அவர் சொன்ன ஒரு சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்தது.அடையாறு கேன்சர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் இவருக்கு நல்ல பழக்கம்.நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது முகத்தைக்கூடத் தூக்கிப் பார்க்க மாட்டாராம்.மளமளவென்று அறுவை சிகிச்சைக்கு எழுதி அனுப்பிவிடுவாராம்.அந்த டாக்டருக்கே மார்பகப் புற்றுநோய் வந்து விட்டது.பரிசோதனை எல்லாம் முடிந்து அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சக டாக்டர்கள் சொன்னதும் அந்த டாக்டர் இவரிடம் வந்து அழுத அழுகை இருக்கிறதே,"எத்தனையோ பேர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு எழுதும்போதெல்லாம் அவர்களின் மனநிலையையோ குடும்பத்தில் உள்ளவர்களின் நிலையையோ கொஞ்சம்கூட நினைக்கவேஇல்லை.இப்போது எனக்கே அந்த நிலைமை வந்த பிறகு என்னால் தாங்கமுடியவில்லை."என்றுகூறி ஓ என்று வாய் விட்டுக் கதறி அழுதாராம்.

விடைபெற்றுக் கிளம்பும்போது வாசல்வரை வந்து கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் தந்தார்.இந்த முத்தத்தின் அர்த்தம் எனக்கு நன்றாகப் புரிந்தது.இந்தநோய் கண்டிப்பாகத் தொற்றுநோய் அல்ல.இந்த நோய் வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையைக்காட்டிலும் மற்றவர்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும் ஆதரவும் வேண்டும் என்பதே அது.

பின்னொருநாளில் விஜய் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகை லட்சுமி நடத்தும் "அச்சமில்லை அச்சமில்லை" தொடரில் ஒரு பேட்டி ஒளிபரப்பானதைப் பார்த்தேன்.அடையாறு கேன்சர் மருத்துவமனையில் "சகி"என்ற பெயரில் கவுன்சிலிங் செய்துவரும் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.அவர் தெரிவித்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.வேதவல்லி என்பவர் பேசினார்.மேற்சொன்ன சகி என்ற அமைப்பை நடத்தி வருவதாகச் சொன்னார். சென்னை திருவல்லிக்கேணியில் குடி இருக்கிறார்.இரு தினங்களில் அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.வயது முப்பத்துஐந்துகூட ஆகவில்லை.நன்கு படித்து செஷல்ஸ் நாட்டில் ஃபோர்டு கார் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாராம்.இந்தநோய் தாக்கியதாகக் கண்டுபிடிக்கப்பட்டதும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மற்றும் ரேடியேசன் செய்துகொண்டாராம்.பத்து வயதில் ஒரு மகளும் எட்டு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.கணவர் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.அறுவை சிகிச்சையின்போது டாக்டரிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டாராம்."டாக்டர்.என் இரண்டு குழந்தைகளும் பெரியவர்களாகும் வரை தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.பிறகு கடவுள் விட்ட வழி"கஷ்ட ஜீவனம் தான்.கணவரின் ஒரே வருமானத்தில் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளதால் வாழ்த்து அட்டைகள்,ஸ்டேசனரிப் பொருட்கள்,பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வீட்டில்வைத்து விற்பனை செய்கிறார்.கொடுமை என்னவென்றால் இவர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் உள்ள ஒருத்தர் கூட இவரிடம் வாங்க மாட்டார்களாம்.எல்லாவாடிக்கையாளர்களும் வெளியிலிருந்து வருபவர்கள் தானாம்.காரணம் இவருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது மற்ற குடித்தனக்காரர்களுக்குத் தெரிந்ததால் தானாம்.ஒருவர் கூட இவரிடம் பழக மாட்டார்களாம், ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது பாழும் இந்தப் புற்றுநோய்.


பிரபல எழுத்தாளர் படுதலம் சுகுமாரன் ரத்தப் புற்றுநோய் வந்து சாவின் விளிம்பிற்கே சென்று வந்தவர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் 'அவ்வளவு தான்' என்று டாக்டர்களாலேயே கைவிடப்பட்டவர்.ஆனால் அவரது மனைவி டாக்டர்களுடன் வாதாடியும்,போராடியும் மீண்டும் மீண்டும் சிகிச்சை கொடுக்க வைத்துத் தன் கணவரை உயிர் பிழைகக வைத்திருக்கிறார்.இவரது போராட்டம் பற்றி குமுதம் வார இதழில் ஒரு கட்டுரை வெளியானது.அதைப் படித்தவுடன்,குமுதம் வார இதழ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தொலைபேசி எண்ணைப் பெற்று அவருடன் பேசினேன்.ஒரு வாரத்தில் சிட்லப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம்.நோயின் பாதிப்பு நன்றாகவே தெரிந்தது.மற்றவர்கள் போல சாதாரணமாக எழுந்து நிற்க முடியவில்லை.கை,கால்கள் ஆடின.அவரது மனைவி சிட்லப்பாக்கம் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிகிறார்.நிறைந்த மனதுடன் எங்களை வரவேற்றுப் பேசினார்கள்.சினிமாத்துறையிலிருந்து நடிகர் கமலஹாசன்,கிரேசி மோகன் போன்றோரின் உதவிகளை நினைவு கூர்ந்தார்.எனது நோய் விபரங்களை
ஆதங்கத்துடன் கேட்டார்கள்.அக்கம் பக்கத்தில் இதுவரை சொல்லாமல் இருப்பதுகூட நல்லது தான் என்றார்கள்.சொன்னால் அவர்களுடன் இருக்கும் கொஞ்சநஞ்ச பேச்சுவார்த்தையும் நின்றுவிடும் என்றார்கள்.மனம் விட்டுப் பேசும் ஒருசில நல்லவர்களில் அவரும் ஒருவர்.

பின்னொருதடவை பேராசிரியர் பெரியார்தாச்னின் கட்டுரையைப் படிக்கும்போது எனக்கு ஒரு யோசனை உதித்தது.எல்லா ஊடகங்களிலும் எய்ட்ஸ் பற்றித்தான் பேசுகிறார்களே.புற்றுநோயைப் பற்றியோ,மார்பகப் புற்றுநோயைப் பற்றியோ ஏன் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள்?இது பற்றி பல பிரபலங்களிடம் பேசி வலியுறுத்தினால் தான் என்ன? இந்தக்காலத்தில் என் மாதிரி சாதாரணப் பெண்கள் எழுதினாலே பத்திரிகைகளிலேயே பார்ப்பார்களோ என்னமோ.ஆனால் பெரியார்தாசன் போன்ற பிரபலமானவர்கள் எழுதினாலோ பேசினாலோ ஊடகங்களில் கண்டிப்பாக வெளிவரும்.மக்களும் படிப்பார்கள்.அதுமட்டுமல்ல,புற்றுநோயைப் பற்றி என்மாதிரி சராசரிப் பெண்களை விட அவருக்குக் கூடவே தெரிய வாய்ப்பு இருக்கிறது.பேசித்தான் பார்ப்போமே என்று அவருக்குப் போன் போட்டேன்.அவரே பேசினார்.முத்லில் என்னைப் பற்றியும் நோயைப் பற்றியும் சொன்னேன்.ஆதரவாகக்கேட்டார்.பிறகு என் கேள்வியைக் கேட்டேன்."ஏன் சார்.எய்ட்ஸைப் பற்றி இவ்வளவு பிரசாரம் செய்கிறார்கள்.அரசாங்கத்தில் பணம் தண்ணீராய்ச் செலவழிக்கிறார்கள்.எய்ட்ஸ் என்பது தவறான உறவுகளால் வருவது.ஆனால் மார்பகப் புற்றுநோய் அப்படி இல்லையே.ஒரு தவறும் செய்யாத பெண்களுக்குப் புற்றுநோய் வருகிறதே.ஆனால் எய்ட்ஸூக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மார்பகப் புற்றுநோய்க்கு அரசாங்கமோ தொண்டுநிறுவனங்களோ கொடுப்பதில்லையே.ஏன் சார்?"என்று கேட்டேன்.நீங்கள் கேட்ட கேள்வி ரொம்ப முக்கியமான கேள்வியம்மா.எனக்கு இந்த நோயைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. உங்களிடம் ஏதாவது விபரங்கள் இருந்தால் கொடுங்கள்.என்னால் முடிந்தது என்னமோ அதை அவசியம் செய்கிறேன்."என்றார்.கொண்டுவந்து தருவதாகச் சொன்னேன்.பிறகு படுதலம் சுகுமாரனைப் பற்றிச் சொன்னேன்.ஆர்வமாகக் கேட்டார்.முடிந்தால் அவரையும் அழைத்துக்கொண்டு அடுத்த ஞாயிறன்று காலை பச்சையப்பன் கல்லூரிக்கு வருமாறு சொன்னார்.

இந்த விபரங்களைப் படுதலம் சுகுமாரனிடம் சொன்னேன்.இணைய தளத்தில் சேகரித்துவைத்திருந்த தகவல்களையெல்லாம் பிரிண்ட் எடுத்துக்கொண்டும்,புற்றுநோய் பற்றிய என்னிடம் உள்ள புத்தகங்களையும் எடுத்துக்கொண்டும் அடுத்த ஞாயிறன்று படுதலம் சுகுமாரனின் வீட்டுக்குச் சென்றோம்.அவரை அழைத்துக்கொண்டு பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தால் பெரியார்தாசனைக் காணோம்.ஏதோ அவசர வேலையாக்ச் சென்றுவிட்டதாகத் தெரிந்தது.மீண்டும் படுதலம் சுகுமாரனின் வீட்டுக்குச் சென்று அவரை விட்டுவிட்டுப் பின் வீட்டுக்குத்திரும்பினோம்.

அடுத்த வாரத்தில் முன்னரே உறுதிப்படுத்திக்கொண்டு நானும் என் கணவரும் சென்று பெரியார்தாசனைச் சந்திதோம்.கையோடு கொண்டுசென்றிருந்த தகவல்களையும் புத்தகங்களையு,ம் அவரிடம் கொடுத்துவிட்டு வந்தோம்.படித்துப் பார்த்துவிட்டு ஆவன செய்கிறேன் என்று கூறினார்.

இதேபோல் பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களையும் போனில் தொடர்புகொண்டு இதே பிரச்சனையைப் பற்றி அதிகம் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

இக்கால கட்டத்தில்தான் ரேடியேசன் கொடுத்த வலது மார்பகத்தில் புண்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.என்னால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


2004 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிணநீர் சுரப்பி கிளான்சுகளைஅறுவைசிகிச்சை செய்து எடுத்தபின்னர், ஒருவழியாக 2005 ஏப்ரலில் கேன்சர் நோயுடன் நான் போராடிய அனுபவங்களை எழுதி குமுதம் சினேகிதி பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.அது அப்பத்திரிக்கையில்
சூலை 2004 ல்வெளியானது.அக்கட்டுரையைப் படித்த பல பெண்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.இவர்கள் அனைவருமே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே.இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த அளவுக்குப் பதில் சொன்னேன்.இவர்களிடமிருந்து நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம் என்னவென்றால்,இந்நோய் தாக்கியதை வெளியே மற்றவர்களிடம் சொன்ன பெண்களுடன் யாருமே பேசுவதில்லை,பழகுவதில்லையாம்.சொல்லாமல் மறைத்த பெண்களுக்கோ இப்பிரச்சனை இல்லை. ஆனால் இரு தரப்புப் பெண்களின் கணவன்மார்கள் இவர்களை ஒதுக்கிவைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தில் மார்பகப்புற்றுநோய்க்காக ரேடியேசன் சிகிச்சை பெற வந்திருந்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன்.கணவர் காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிள் ஆகப் பணியாற்றுகிறார்.சிகிச்சைக்கு ஆகும் செலவுக்காக அரசாங்கத்திலிருந்து நிதிஉதவிபெற மனுச்செய்திருப்பதாகச் சொன்னார்.
உங்கள் சம்பளத்தில்தான் மாதா மாதம் ஹெல்த் பண்டிற்கு பணம் பிடிக்கப்படுமே,அதிலிருந்து அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாகக் கிடைக்குமே?என்று என் கணவர் கேட்டார்.அதற்காகப் பல மாதங்களுக்கு முன்பே எல்லாவிபரங்களையும்,ரிக்கார்டுகளையும் சேகரித்து மனுச் செய்துவிட்டதாகவும் காவல்துறைத் தலைமை அலுவலகத்திலிருந்தே இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவரின் கணவர் சொன்னார். ''நானும் சென்னைக்கு வரும்போதெல்லாம் சென்று விசாரிக்கிறேன் சார்.டி.ஜி.பி.அய்யாவைக்கூட இரண்டு முறை பார்த்துவிட்டேன்.ஒண்ணுமே நடக்க மாட்டேங்கிறது."என்றார்.''என்ன சார் செய்றது.இந்த நோய் எம்புட்டுக் கொடுமையானதுன்னு ஆபீசிலேருந்துவந்து பாத்தாத்தான் நடவடிக்கை எடுப்பாங்களோ"என்று ஆதங்கப்பட்டார்.
போலிஸ் குவார்ட்டர்சில் குடியிருக்கிறார்களாம்.புற்றுநோய் வந்துள்ளதை வெளியே எல்லோரிடத்திலும் சொல்லிவிட்டார்களாம்.ஒரு பெண்கூட என்னவென்று எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்களாம்.குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்கச் சென்றால் அங்கிருக்கும் அனைவருமே ஓடிப் போய்விடுவார்களாம்."இந்த நோய் தங்களுக்கும் வந்துவிடுமோங்கிற பயம் தான் சார்.படிச்சவங்க படிக்காதவங்கன்னு பேதமே இல்லே சார்.எல்லோருமே இப்படீத்தான் பாக்குறாங்க.இது ஒண்ணும் தொற்றுநோய் கிடையாதுன்னு என் ஃபிரண்ஸ் கிட்டே எல்லாம் சொல்லியும்"நீ சொல்லிட்டா மட்டும் போறுமா?ன்றாங்க சார்.பேசாமெ சொந்த ஊருக்கே போயிடலாம்னு பாக்குறேன்.அங்கே போனாலும் என்ன செய்றதுன்னே தெரியல்லே."

என் உறவினர்கள்,அக்கம்பக்கத்தவர்கள் யாரிடத்திலும் எனக்கு இந்த நோய் வந்திருப்பதைச் சொல்லவில்லை என்று சொன்னேன்.ரொம்ப நல்ல காரியம் பண்ணினீங்கம்மா.அப்பிடியே மெயின்டெயின் பண்ணுங்க."என்றார்கள்.

இப்போது நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் என் வயதில் ஒரு பெண் இருக்கிறார்.எல்லோரிடத்திலும் கல கலவென்று பேசுவார்.இரண்டு,மூன்று வாரங்களாக வெளியே அவரைக் காணவில்லை.ஒரு நாள் மாலைநேரத்தில் தற்செயலாகப் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தேன்.கால் டாக்ஸியிலிருந்து அவரும் அவரின் கணவரும் இன்னும் சிலரும் இறங்கினார்கள்.அந்தப் பெண்ணின் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது.என்னவென்று விசாரிக்கப் போவதற்குள் அவர்கள் அனைவரும் வீட்டுக்குள் சென்று விட்டனர்.வேலைக்காரப் பெண்ணிடம் விசாரித்தேன்.''அந்தம்மாளுக்குப் புத்துநோய் வந்துருக்காம்.அதுக்குத்தான் மொட்டை அடிச்சிருக்காங்களாம்.ஆஸ்பத்திரிக்கிப் போய்ப் போய் வர்ராங்களே.நீங்க கவனிக்கலியா"


இந்த சம்பவங்கள்,அனுபவங்கள்,நான் சந்தித்த நபர்களின் இந்நோய் பற்றிய அணுகுமுறை இவை எல்லாம் சேர்ந்து,எனக்கு வந்துள்ள நோயைப் பற்றி நான் வெளியே கூறாதிருந்தது எவ்வளவு நல்லது என்றே நினைக்கத் தோன்றியது.

11 comments:

seethag said...

நானும் அடிக்கடி நினைப்பது உண்டு அநுராதா,..

பெண்களின் நோய்களான கர்பப்பை புற்றுநோய் தடுகக்கூடியது.ந்மது அரசாங்கம் ஏனோ இதர்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.விழிப்புணர்ச்சி ஏர்ப்படுத்தினாலே போதும் முதலில்.
மார்பகப் புற்று நோயும் இப்பொதெல்லாம் சீக்கிரமே கண்டுபிடிக்க வெளிநாடுகளில் மாம்மோக்ராம் கூட காரணம்.
ப்லாக் எழுதியதனால் நீங்அள் நிறய பேருக்கு உதவிநீர்கள்.

if i can be of help in anyway please let me know.

cheena (சீனா) said...

சகோதரி,

தங்களின் இத்தனை பதிவுகளும் மற்றவர்களுக்கு உதவும் மருத்துவப் புத்தகமாகத் திகழும்.

சமூக சேவை செய்யும் நோக்கம் பாராட்டத்தக்கது. ஊடகங்களில் பிரச்சாரம் செய்யலாம்.

40 வயதுக்கு மேல் பெண்கள் இச்சோதனைகளைச் செய்து கொள்வது நல்லது.

if i can be of help in anyway please let me know.

அன்புடன் சீனா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் பதிவுகள் மூலம் பல விடயங்களை அறிய முடிந்தது.
மிகப் பயனுள்ளது. இன்னும் இந்நோய் பற்றிய அறியாமை உள்ளது, மிக வேதனை.
இங்கே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பரிசோதனை
நமது நாடுகள் ஏதோதே இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஆக்கபூர்வமான மருத்துவ ஆலோசனைகளைக் கொடுக்கலாம்.

துளசி கோபால் said...

அனு,

இது ஒரு சேவை. உங்க பதிவுகளைத்தான் சொல்றேன்.

இனியும் அதிகமான உடல் உபாதையில்லாமல் நீங்கள் வாழணுமுன்னு
வாழ்த்துகின்றேன்.

வடுவூர் குமார் said...

வந்தால் என்னென்ன நேரும் என்று அழகாக சொல்லியுள்ளீர்கள்.
பெரியார்தாசன் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு எங்கோ போய்விட்டது என்னவோ செய்கிறது.
படுதலம் பற்றி எப்போதோ படித்தது- சாகக்கிடக்கிறார் என்று,பிழைத்து வந்த கதையை இதன் மூலம் தான் அறிந்துகொண்டேன்.
ஊசிகுத்தாத நாள் இல்லையா??வரும் காலத்திலாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா? என்று.

இளங்கோ-டிசே said...

விரைவில் நீங்கள் மேலே குறிப்பிட்ட உபாதைகளும் இல்லாது மறைந்து முழுதாக நலம் பெற என் அன்பும் வாழ்த்தும்.
....
இந்நோய் பற்றிய உங்களின் பகிர்வு இந்நோயோடு இருப்பவர்களுக்கு தாமும் நோயை எதிர்த்துப் போராமுடியும் என்ற வலிமையைக் கொடுக்கும். இந்நோய் குறித்து அறியாமையோடு நோயின் பாதிப்பில்லாது இருப்பவர்களுக்கு இன்னும் இந்நோய் பற்றி அதிகம் அறிந்து நோயோடு உள்ளவர்களையும் சகமனிதர்களாய் நேசிக்க வைக்கும். மிகவும் நன்றி, இத்தகை பகிர்தலுக்க்கு.

கோபிநாத் said...

\\இது ஒரு சேவை. உங்க பதிவுகளைத்தான் சொல்றேன்.\\

வழிமொழிகிறேன்.

அனுராதா said...

நன்றி சீதா,சீனா.தேவைப்படும்.அப்போது கண்டிப்பாகத் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி யோகன் பாரீஸ்,துளசி கோபால்,
டிசே தமிழன்,கோபிநாத்.
வாங்க வடுவூர் குமார்.பெரியார் தாசன்
அவர்களைப் பார்த்துவிட்டு வந்த
ஒரு வாரத்தில் புண்கள் ஏற்பட்டு வேதனைகள் ஆரம்பமாகிவிட்டதே!மீண்டும் பிப்ரவரி மாதம் சென்னைக்குத் திரும்பியபிறகு எனது நடவடிக்கைகளைத் துவங்குவதாக உத்தேசித்துள்ளேன்.

தென்றல் said...

NBCல் 'Today Show'வில(அக்டோபர் 26,2007) 'Life After Breast Cancer' என்ற தலைப்பில் ஒரு செய்தி... உங்கள் நினைவு வந்தது.. ஏதாவது ஒரு விதத்தில் பயன்படும் என்ற நம்பிக்கையில்...

http://today.msnbc.msn.com/id/3041426/

Unknown said...

சகோதரி, நீங்கள் விரைவில் முழு நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

இந்தப் பதிவை என் மனைவிக்கு படிக்கக் கொடுத்துள்ளேன். அவரின் முதல் பதிவுலக வாசிப்பு உங்கள் பதிவுதான்.

தகவல்களுக்கு நன்றி!

அனுராதா said...

வாங்க தென்றல்.அருமையான சுட்டி கொடுத்ததற்கு நன்றி.வாங்க தஞ்சாவூரான்.தங்கள் மனைவிக்குப் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி.முழுவதும் படித்த பிறகு என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.