Tuesday, October 16, 2007

பிராகிதைரபி சிகிச்சை முடிந்தது.

11.3.2004 அன்று மாலை ஆறு மணி அளவில் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது.மறுநாள் 12ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நேராக மருத்துவமனைக்கு(பேட்டர்சன் கேன்சர் சென்டர்)காலையிலேயே வந்துவிடுமாறும் இங்கிருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றும் கூறினார்கள்.அதன்படியே மறுநாள் எல்லா மருத்துவ ரிக்கார்டுகளை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம்.டாக்டர் மீண்டும் என்னைப் பரிசோதித்தார்.அங்கேயே மாலை வரை காத்திருந்தோம். மாலை ஆறு மணி அளவில் எங்களை செயின்ட் தாமஸ் மவுண்ட் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறி அங்கே கொடுப்பத்ற்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்கள்.அன்று இரவு சுமார் எட்டு மணியளவில் நந்தம் பாக்கத்திலுள்ள அந்த மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆனேன்.
மிகவும் சிறிய அறை.ஒரே ஒரு படுக்கை.ஏ.சி.இல்லை.ஒரு ஃபேன் மட்டும் இருந்தது.இங்கே என்ன சுற்றுலாவுக்கா வந்திருக்கோம்,சிகிச்சை முடிந்தபின் ஓடிவிட மாட்டோமா!என்று நினைத்துக் கொண்டு சமாதானமானேன்.
மறுநாள் 13ந் தேதி காலையிலிருந்து வழக்கமான பரிசோதனைகள் ஆரம்பமாயின.மாலை 5.30மணியளவில் டாக்டரும் அவரது மனைவியும்(இவர் அனஸ்தீசியா டாக்டராம்)வந்தார்கள்.என்னை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள்.
மாலை 6 மணியளவில் மயக்க மருந்து கொடுத்தபின்
பிராகிதைரபி சிகிச்சை செய்யப்பட்டது.
ஒரு மணி நேரத்தில் நினைவு திரும்பியது.தியேட்டர் ரூமிலிருந்து வெளியே கொண்டுவரும்போதே நினைவு திரும்பிவிட்டது.எழுந்திருக்க முயன்றேன்.முடியவில்லை.வாயெல்லாம் கசந்தது.படுத்தவாறே மார்பகத்தைப் பார்த்தேன்
நீள நீள கம்பிகளால் நிறையக் குத்தியிருந்தார்கள்.அறைக்குக் கொண்டுசென்று படுக்க வைத்தார்கள்.வலி ஆரம்பமானது.பொறுக்க முடியாத வலி.யாரையாவது கூப்பிடமுயன்றாலும் முடியவில்லை.பாதி மயக்கத்திலேயே இருந்தேன்.அறைக்கு வெளியே டாக்டர்களுடன் என் கணவர் காத்திருந்தார்.கொஞ்சநேரம் கழித்து டாக்டர்கள் அறைக்குள் வந்தார்கள்.கதிர்வீச்சைத் தடுக்கும் கோட்டுகளை அணிந்திருந்தார்கள்.என் கணவரோ படுக்கைக்கு அருகில் இருந்த ஒரு ஸ்டாண்ட் பின்னால் வந்து நின்றார்.ரேடியேசன் தடுப்புக் கோட்டு அணியாதவர் அந்த ஸ்டாண்ட் பின்னால் தான் நின்று பார்க்க வேண்டுமாம்.
''எப்படி இருக்கிறது அனுராதா?''என்று டாக்டர் கேட்டார்.
நன்றாக இல்லை என்பதுபோலத் தலையசைத்தேன்.
ஊசிகளை மீண்டும் பரிசோதித்தார்கள்.
''இப்படியே படுத்திருங்க.காலையில் வந்து பார்க்கிறேன்.''என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பிவிட்டார்.
பிறகு என் கணவர் ஊசிகளைப் பற்றி விளக்கினார்.
முன்பு டாக்டர் சொன்னமாதிரியே வலப்பக்கமிருந்து இடப்பக்கமாக மொத்தம் பனிரெண்டு கம்பிகள் சொருகப்பட்டுள்ளன.அனைத்துக் கம்பிகளிலும் இரிடியம் ஊசிகள் உள்ளே சொருகப்பட்டுள்ளன என்றார்.அவைகளின் கதிர்வீச்சு நன்றாகப் பாய மொத்தம் நாற்பத்துஎட்டு மணிநேரம் இருக்க வேண்டுமாம்.
மருந்துகளை உட்கொண்டும் வலி குறைந்தபாடில்லை.
பொறுத்துக்கொண்டே தூங்கினேன்.
மறுநாள் காலையில் எழும்போது வலி குறைந்திருந்தது.வேளாவேளைக்கு மருந்துகள் உட்கொண்டேன்.
அன்று மாலைதான் டாக்டர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.
அடுத்தநாள் 15.ந்தேதி மாலை சரியாக ஆறு மணியளவில் ஒரு டாக்டர் வந்து ஊசிகளையும் கம்பிகளையும் கவனமாக எடுத்துவிட்டார்.எங்கள் டாக்டர் வேறு பணி இருந்ததால் வரவில்லையாம்.எனவே டிஸ்சார்ஜ் ஆனதும் அங்கிருந்து நேராக பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்றோம்.டாக்டரைப் பர்த்தோம். உடனே ஒரு சி,டி ஸ்கேன் எடுக்கப்பட்டது.மேலே பூசுவதற்கு ஆயின்மெண்ட் எழுதிக் கொடுத்தார்.மார்பகத்தில் தண்ணீர் படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.வீட்டுக்குத் திரும்பினோம்.
பின் என்ன?வழக்கம் போல் புண்கள் ஏற்பட்டன.நேரம் தவறாமல் மாத்திரைகளை உட்கொண்டேன்.ஆயின்மெண்ட் போட்டுக்கொண்டேன்.தண்ணீர் படாமல் பார்த்துக்கொண்டேன்.டாக்டரின் அறிவுரையின்படி மாதம் இருமுறையோ மூன்று முறையோ மருத்துவமனைக்குச் சென்று பல ஊசிகளைப் போட்டுக்கொண்டேன்.ஆகஸ்ட் இறுதிவாக்கில் புண்கள் ஆறின.
இருடியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு இன்றைய நாள் வரை இருக்கிறது.எந்த நேரம் தொட்டுப் பார்த்தாலும் கொஞ்சம் வெம்மையாகவே இருக்கிறது.இடது மார்பகத்தைத் தொட்டு ஒப்பிடும்போது இந்த வித்தியாசம் தெரிகிறது.டாக்டரைக் கேட்டால் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு.நல்லது தானே என்றார்!
செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த செக்கப்பிற்குச் சென்றேன்.
"ரொம்ப சூப்பராகப் புண்கள் எல்லாம் ஆறியிருக்கு.இன்னும்
ஒரே ஒரு ஆபரேசன் மட்டும் செஞ்சுகிடீங்கன்னா இன்னும் நல்லாயிரும்
என்று டாக்டர் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்.

8 comments:

வடுவூர் குமார் said...

இன்னும் ஒரு ஆப்பரேசனா??
கொடுமையாக இருக்கு.

வடுவூர் குமார் said...

இன்னும் எளிய முறை இருந்தால் சீக்கிரம் கொண்டுவாங்க விஞ்ஞானிகளே!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் 2004 பற்றிய விபரம் கூறுவதால்; முடிவு இனிதே என உணர்கிறேன்.

அனுராதா said...

ஆஉறா வாங்க வடுவூர் குமார்.உங்கள் கோரிக்கை தேனாய் இனிக்கிறது.
இன்னும் இருக்க்கிறது யோகன் பாரிஸ்.

cheena (சீனா) said...

புற்று நோயை எதிர்த்து
மருத்துவம் துணை கொண்டு
மனத்துவம் கருத்திற் கொண்டு
பணத்துவம் பலம் கொண்டு
போராடிக்கொண்டிருக்க்கும்
சகோதரியே!!

2004 வரை நடந்தவை தான் இதுவரை பதிவுகளில் வந்துள்ளது. 2007 - இக்கணம் தாங்கள் பரி பூரண குணம் அடைந்து இயல்பான வாழ்க்கை சிங்கப்பூரில் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

வாழ்த்துகள் சகோதரி
அன்புடன் சீனா.

அனுராதா said...

வாங்க சீனா.2004க்கப்புறம் இன்னும் என்னென்னவோ நடந்துள்ளது.தொடர்ந்து படியுங்கள்.பரிபூரண குணமும் அடையவில்லை.இயல்பான வாழ்க்கையும் வாழவில்லை.ஆனால் மன உறுதி கொஞ்சமும் தளரவில்லை.உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது.

cheena (சீனா) said...

//வாங்க சீனா.2004க்கப்புறம் இன்னும் என்னென்னவோ நடந்துள்ளது.தொடர்ந்து படியுங்கள்.பரிபூரண குணமும் அடையவில்லை.இயல்பான வாழ்க்கையும் வாழவில்லை.ஆனால் மன உறுதி கொஞ்சமும் தளரவில்லை.உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது//

வருந்துகிறேன் சகோதரி. துன்பத்திலும் மன உறுதி தளராத தங்களைப் பாராட்ட சொற்களே இல்லை. ஆறுதல் சொல்வதற்கு மனம் வலிக்கிறது. என்ன செய்வேன். சகோதரி, என் தாயின் துன்பங்கள் மனதில் நிழலாடுகின்றன. தூக்கம் வரவில்லை சகோதரி.

இறைவன் இருக்கிறானா ?? இல்லையா ??

நிச்சயம் இருக்கிறான் சகோதரி. அன்புக் கணவர், அழகு மகள்கள், தங்களுக்காகவே பிறந்த மகன் அனைவரின் உருவத்திலும்.

புற்று நோயால் வாடும் பெண்களை விட அவர்களின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் படும் பாடு இருக்கிறதே - அது சொல்லில் வடிக்க முடியாது.

அனுராதா said...

கண்டிப்பாக சீனா.ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.சரியாகச்சொன்னீர்கள்.