Wednesday, March 19, 2008

கேன்சர் நோயாளியை ஒரு வழியாக்கும் "ஆறுதல் வார்த்தைகள்"

சங்கமம் எனக்களித்த விருதினை என் கணவருக்கும் என் அருமை மகனுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன்.

டிசம்பர் 18,20007 வரை ரேடியேசன் வைத்துக் கொண்டேன்.இதுவரை இருபது முறை ரேடியேசன் வைக்கப்பட்டுள்ளது.இது போதும் என்றும்,ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்து பார்க்குமாறும் டாக்டர் சொல்லிவிட்டார்.டயாபடிஸ் டாக்டரிடம் சென்று சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

என்னால் முன்போல நன்றாகப் பேச முடிந்தது.கை கால்கள் இயக்கம் முன்பிருந்தது போல் ஆகிவிட்டது.சிந்தனையும் தெளிவடைந்தது.பரவாயில்லையே!நானும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டேனேஎன்ற எண்ணமே என்னை உற்சாகம் கொள்ள வைத்தது.தினமும் உறவினர்கள் வர ஆரம்பித்தனர்.கூடவே புதுப் பிரச்சனைகள் உண்டாக ஆரம்பித்தன

வருபவர்கள் அனைவருமே என்னை மிகுந்த அனுதாபத்துடனும்,பரிதாபத்துடனும் விசாரித்தனர்.இந்த நோய் வந்தது குறித்து நான் எந்த அளவுக்குக் கவலைப்பட்டிருப்பேனோ அதைவிட அதிகமாகவே கவலைப்பட்டனர்.

ஒரு மூதாட்டி சொன்னார்."நீ போன ஜன்மத்திலே ரொம்ப பாவம்பண்ணியிருப்பே,அதனாலேதான் இந்த ஜன்மத்திலெ இம்முட்டுகொடிய நோய் வந்திருக்கு.நீ என்ன செய்றே,மாப்பிள்ளையஅழைத்துக் கொண்டு ........கோவிலுக்குப் போயி அர்ச்சனை செஞ்சி சாமியக் கும்பிட்டு பரிகாரம் செஞ்சிரு.பிறகு இன்னொரு........கோவிலுக்குப் போயி.........."

இன்னொருவர் சொன்னார்."பாருப்பா.வராத நோயி வந்துருச்சு........கோயிலுக்குப்போயி சாமியெக் கும்பிட்டு ஒரு "யானைக்குட்டியெக் காணிக்கை செலுத்திறேன்னு வேண்டிக்க.எல்லாஞ் சரியாப் போயிரும்.

அவருடன் வந்தவர் சொன்னார்."யானைக்குட்டிக்கு யார் இரை போடுறதுன்னு யோசிக்காதே.அதுக்குன்னு இன்னொருத்தர் ஏற்கனவே வேண்டிகிட்டாச்சு."

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது."ஏன் பாட்டி.இந்த ஜன்மத்திலேஇவ்வளவு நல்லது பண்ணியிருக்கேனே......"

முதல் மூதாட்டி இடைமறித்து"அதுக்கு வரப் போற ஜன்மத்துலே கண்டிப்பா நல்ல பலன் கிடைக்கும்.கண்டிப்பா கடவுள் தருவார்."என்றார்.

"அதெப்படிப் பாட்டி,இந்தஜன்மத்திலெ பண்ற நல்லதுக்கு இந்த ஜன்மத்திலேயேதானே பலன் கிடைக்க வேண்டும்?"

"என்னமோடியம்மா,பெரியவுங்க அப்படித்தான் சொல்லியிருக்காங்க...."

பிறகு யானைக்குட்டிப் பாட்டியைப் பார்த்தேன்.

"என்ன சொன்னீங்க?யாரோ ஒருத்தர் யானைக்குட்டிக்கு இரை போட்றதுக்கு வேண்டிகிட்டாரே,யானைக்குட்டியையும் அவரே வாங்கித்தர வேண்டிக்கச் சொல்றது தானே!

அதுக்கு அவர்கிட்ட வசதி இல்லையாம்மா.

அப்ப யானைக்குட்டிக்குப் போடுற இரைக்கு என்ன செலவாகுமோ அதைக் கோவில்ல கட்டச் சொல்லுங்க.வேற யாராச்சும் எப்பவாச்சிலும் யானைக்குட்டியை வாங்கித் தந்தாங்கன்னா அப்பக் கோயில்லேயே இரை வாங்கிப் போடுவாங்க.

"ஏன் பாட்டி,யானைக்குட்டியை வாங்கிக் காணிக்கை செலுத்துறதாயிருந்தாஅதுக்கான உணவுக்கும் ஏற்பாடு நானே செஞ்சுறமாட்டேனா."

பாட்டி பரிதாபமாக என்னைப் பார்த்தார்.

இவர்களெல்லாம் பரவாயில்லை.பிறிதொரு நாள் என்னைப் பார்க்க வந்தஇன்னொரு உறவினர் சொன்னார்.

"அனு.உங்கிட்டெ இருக்கிற எல்லா நகைகளையும் தினந்தோறும் போட்டுக்க.இருக்கிற பட்டுப் புடவைகளைநாளுக்கு ஒன்றாகக் கட்டிக்க.திருப்தியா சாப்பிடு.இருக்குற வரை சந்தோசமா இரு."என்றாரே பார்க்கலாம்!

இவ்வளவு செலவு செய்து மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டுநோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று வந்தவர் கூறிய ஆறுதல்வார்த்தைகளைப் பார்த்தீர்களா!!
சரி.ஒரு முடிவோடுதான் வந்திருப்பார் போலிருக்கிறது என்றுநினைத்துக்கொண்டேன்.சரி சரி என்று தலையாட்டி அனுப்பி வைத்தேன்.
இவர்களின் ஆறுதல் மொழிகளைக் கேட்டபின்பு இதுவரை இல்லாத
அளவிற்கு என்மேலேயே எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது.

அன்றிரவு என் கணவரிடம் கேட்டேன்."ஏங்க,வந்து பாக்கிறவங்க,விசாரிக்கிறவங்க எல்லாம் இப்படித் தான் பேசுவாங்களா?

"அனு.இவங்க எல்லாருமே இப்படித்தான் பேசிப் பேசிப் பழக்கப் பட்டவங்க.வயசான காலத்திலே நாம சொல்ற விளக்கங்கள் எல்லாம் இவங்களுக்குப் புரியாது. ஆனா இவங்க பேச்சிலே கொஞ்சமும் களங்கமில்லே.ரொம்ப நல்லவங்க.இப்படியே பேசிப் பேசிக்காலத்தை ஓட்டிட்டாங்க.நாமும் அவங்களிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது.சரி சரின்னு சொல்லிட்டு அப்படியே விட்டுவிட வேண்டும்"

என் கணவர் சொன்னது சரிதான்.இவர்கள் பேச்சின்படி நடப்பதாகஇருந்தால்,சுய சிந்தனையை இழப்போம்.வெட்டியாகப் பணத்தை இழப்போம்.நிம்மதியை இழப்போம்.மொத்தத்தில் வாழ்க்கையையே இழந்துவிடுவோம்.அதற்குக் கண்டிப்பாக நானோ என் கணவரோ தயாராக இல்லை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் எப்படிப் பேச வேண்டும்,எப்படி அணுக வேண்டும் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது கணவர்/மனைவி/பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் விளக்கமாகக் கவுன்சிலிங் வைக்க வேண்டும்.பெரும்பாலான மருத்துவமனைகளில் கவுன்சிலிங்கே இல்லை."பேஷண்டை நல்லாப் பாத்துக்குங்க.ஓகே?"என்று டாக்டர் கூறும் ஓரிரு வார்த்தைகள் தான் இப்போதைக்கு நடக்கும் கவுன்சிலிங்.இது எப்படி கவுன்சிலிங் ஆகும்?இதற்கென மருத்துவமனைகளில் உளவியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நோயாளியைப் பார்க்க வரும் மற்றவர்கள் நோயாளியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மேற்சொன்ன நெருங்கிய உறவினர் யாராவது உடன் இருக்க வேண்டும்.நோயாளியின் மனம் பாதிக்கும்வகையில் பேச்சு தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கேன்சர் நோயாளிகள் ஆரம்பக் கட்டத்தில் மனதளவில் தயாராகி விடுவார்கள்.நாளாக நாளாக நோயின் கொடுமையும் சிகிச்சைகளின்பாதிப்பும் அவர்களை ஒருவழியாக்கிவிடும்.இந்த நேரத்தில் ஒரு கைக் குழந்தையை எப்படிக் கையாளுகிறோமோ அப்படி அவரைக் கையாள வேண்டும்.
அவர்களின் எண்ணம் நல்லமுறையில் வலுப்பெறும்வகையில் மட்டுமே ஆறுதல் கூறுபவர்களின் அணுகுமுறை அமைய வேண்டுமே ஒழிய மேற்கொண்டு மனம்சிதையும் வகையில் போகக் கூடாது.

11 comments:

அப்துல் கபூர் said...

அன்பு சகோதரி, தற்செயலாக தங்கள் வலைப்பூ பார்க்க நேர்ந்தது, உங்களுக்கு பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். (அப்துல் கபூர்-USA)

Anonymous said...

/அவர்களின் எண்ணம் நல்லமுறையில் வலுப்பெறும்வகையில் மட்டுமே ஆறுதல் கூறுபவர்களின் அணுகுமுறை அமைய வேண்டுமே ஒழிய மேற்கொண்டு மனம்சிதையும் வகையில் போகக் கூடாது/

I agree with you on the above statement.Also we all praying for you to get well completely soon sis.

Ramya

வேளராசி said...

சகோதரிக்கு,எங்கள்அம்மாவிற்க்கு இதுபோல் ஏற்பட்டபோது பார்க்கவரும் உறவினர்களிடம் முதலிலேயே கூறிவிடுவோம்.நோயைப்பற்றியோ,சிகிச்சை பற்றியோ,மருந்துகளை பற்றியோ எதுவும் கேட்க்கூடாது,பொதுவானவிஷயங்களை பற்றிமட்டும் பேசவேண்டும் என்று.அப்படியிருந்தும் சிலர்தடம் மாறிவிடுவார்கள்.கூடவே இருந்து அவர்களை கண்ட்ரோல் செய்யவேண்டும்.இறைவனை சரண்அடையுங்கள்,இதுவும் கடந்து போகும்

ஜோதிபாரதி said...

தாங்கள் குணமடைவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. அதுவே அருமருந்து, உரம். மற்ற அறிவுரைகளை இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக விட்டு விடுங்கள். அவைகளை விவாதிக்கவோ, நினைத்து வருத்தப்படவோ வேண்டாம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

அனுராதாவை பார்க்கபோகிறோம்,ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்திவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து...
கொல்கிறார்களோ என்னவோ??
உங்க வீட்டுக்காரர் சொன்னதுதான் சரி.

-/சுடலை மாடன்/- said...

உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். புற்று நோயுடன் நீங்கள் நடத்தும் போராட்டங்களை நீங்கள் விவரித்துள்ளவை எல்லோருக்கும் மிகப்பயனுள்ளவையாக இருக்கும். வலைப்பதிவுகளையும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவர் குழுமங்களையும் சுயவிளம்பரக் கூச்சல்களுக்குப் பயன்படுத்தி அனைவர் நேரத்தையும் வீணடிக்கும் சிலர் மத்தியில் வலைப்பதிவுகளின் தேவையை/மேன்மையை உணரவைக்கின்றன உங்கள் இடுகைகள்.

நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று விரும்புகிறேன/நம்புகிறேன்.

//புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் எப்படிப் பேச வேண்டும்,எப்படி அணுக வேண்டும் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது கணவர்/மனைவி/பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் விளக்கமாகக் கவுன்சிலிங் வைக்க வேண்டும்.பெரும்பாலான மருத்துவமனைகளில் கவுன்சிலிங்கே இல்லை."பேஷண்டை நல்லாப் பாத்துக்குங்க.ஓகே?"என்று டாக்டர் கூறும் ஓரிரு வார்த்தைகள் தான் இப்போதைக்கு நடக்கும் கவுன்சிலிங்.இது எப்படி கவுன்சிலிங் ஆகும்?இதற்கென மருத்துவமனைகளில் உளவியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.//

மிகவும் தேவையான/அடிப்படையான ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
கவுன்சலிங்க் என்பதையே கெட்ட வார்த்தையாக நினைக்கும் அமைப்பில் வேறு என்ன இருக்கும்? உங்களைப் போன்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தொண்டு நிறுவனங்களாவது முன்வரவேண்டும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி!
.//"நீ போன ஜன்மத்திலே ரொம்ப பாவம்பண்ணியிருப்பே,அதனாலேதான் இந்த ஜன்மத்திலெ இம்முட்டுகொடிய நோய் வந்திருக்கு!//

அதற்கு நீங்கள் ' இப்பிறப்பில் செய்த புண்ணியம்' பற்றிய கேள்வி
நல்ல நெற்றியடி...
பிசத்தும் சாமிமாரையும் கேட்க வேண்டிய கேள்வி...

இந்த மூதாட்டிக்கு இப்படி எல்லாம் பேச எப்படி மனம் வந்தது.

அத்துடன் காட்டில் உலாவும் யானையைக் கோவிலில் கட்டியதால்
அவை விடும் பேசாக் கண்ணீர் கொஞ்சமல்ல.
அந்தத் தவறை எவருமே செய்ய வேண்டாம்.
நீங்கள் செய்யமாட்டீர்கள்..அந்த நம்பிக்கை எனக்குண்டு.

அனுராதா said...

வாங்க அப்துல் கபூர்,வேள ராசி மற்றும் சுடலை மாடன்.முதன்முறையாக வருகிறீர்கள்.நன்றி.

வாங்க ஜோதிபாரதி.உங்கள் வலைப்பதிவில் உள்ள கவிதைகளை ரசித்தேன்.மெல்லிய உணர்வுகளை அழகாக வடிக்கிறீர்கள்.வருகைக்கு நன்றி.

வாங்க வடுவூர் குமார்.நலமா?என் கணவர் சொன்னதும் சரி.நீங்க சொல்றதும் சரி.உண்மையிலேயே வார்த்தைகளால் கொல்கிறார்கள்.
".....போகட்டும் கண்ணனுக்கே......"என்று கர்ணன் படப் பாடல் வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.

வாங்க யோகன் பாரிஸ்.கனவில் கூட அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன்.நன்றி .

cheena (சீனா) said...

சகோதரி அனுராதா,

உறவினர்கள் நண்பர்கள் அனைவருமே அன்பின் வெளிப்பாட்டினால் தான் பேசுகிறார்கள். தங்களின் மனநிலையும் புரிகிறது. முடிந்த வரை பார்வையாளர்களைத் தவிர்த்தல் நலம். ஆறுதல் சொல்வது - மனோ தைரியத்தை வளர்ப்பது என்பது நாம் கற்றுக் கொள்ளாத ஒன்று. கற்றுக் கொள்ள வேண்டும்.

ம்ம்ம்ம்ம் - ஆண்டவன் அருள் புரியட்டும்

Anonymous said...

Please visit this hospital if you are in Tamilnadu. My aunty had similar type of problem and now she is good.
http://www.breastcancerfoundation.in/members.htm

Dr. K.Govindaraj and Dr.K.N.Srinivasan are really Great.

You will be alright!!

-Baskaran (USA)

பிரேம்ஜி said...

நீங்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.என் பிரார்த்தனை கண்டிப்பாக பலிக்கும்.