மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
தமிழ்நாட்டில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மடலைத் தங்களுக்கு எழுதுகிறேன்.
ஏதேனும் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் தயவுசெய்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என் பெயர் அனுராதா.வயது 55 ஆகிறது.கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அன்று முதல் இன்றுவரை நான் எடுத்துகொண்ட மருத்துவ சிகிச்சைகள்,மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அடைந்த துன்பங்கள் அனைத்தையும் விரிவாக விளக்கி "கேன்சருடன் ஒரு யுத்தம்' என்ற பெயரில் ஒரு வலைப்பதிவில் எழுதிவருகிறேன்.
தயவு செய்து அந்த வலைப் பதிவைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இன்றைய உலகில் சற்று வசதியான குடும்பத்தில் உள்ள பெண்களில் யாருக்கேனும் இந்த மார்பகப் புற்றுநோய் வந்திருக்குமேயானால் என்னென்ன துன்பம்,துயரம் அடைந்திருப்பார்களோ,அவ்வளவையும் நான் அடைந்திருக்கிறேன்.விலை உயர்ந்த ஊசிமருந்துகளைப் போட்டுக்கொண்டும் குணமடைய வைக்காமல் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது இந்தப் பாழும் புற்றுநோய்.மார்பகத்தில் வந்தது,கல்லீரலுக்குப் பரவி தற்போது மூளைக்கும் பரவியுள்ளது.இலட்சக்கணக்கில் செலவு செய்தும் நோய் குணமானபாடில்லை.
என் நிலையே இவ்வாறெனில் தமிழ்நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை எளிய தாய்மார்களில் இந்த நோய் வந்தவர்கள் எவ்வளவு துயர்ப்படுவார்கள் என்பதை நினைக்கும்போது என்னால் தாங்க முடியவில்லை.
இந்த நோயினால் நான் படுகின்ற துயரம் சொல்லி மாளாது.என்னைக் கவனித்துக் கொள்வதற்காகவே என் கணவர், தான் பார்த்துக் கொண்டிருந்த அரசுப் பணியிலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்றார்.தொடர்ந்து சிகிச்சை பெறுவதும் மருந்து மாத்திரைகளைச்சாப்பிடுவதும் மட்டுமே ஒரு மார்பகப் புற்றுநோயாளியைக் குணமாக்காது.உளரீதியாகவும் எந்நேரமும் அவருக்கு ஆதரவு தேவை. அந்த வகையில் காலையில் எழுந்தது முதல் இரவு நான் தூங்கச் செல்வது வரை, ஏன்? நான் தூங்கியபிறகும் கூட அவர் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொள்வதால் மட்டுமே இன்று நான் உயிரோடு இருக்கிறேன்.
மார்பகப் புற்றுநோயானது எந்த கெட்ட நடவடிக்கையாலும் வருவதில்லை.
உதாரணமாக
1) புகையிலை போடுவதால் வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது.
2)சிகரட் குடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது.
3)மூக்குப் பொடிபோடுவதால் மூச்சுக்குழலில் புற்றுநோய் ஏற்படுகிறது.
4)மதுப் பழக்கத்தினால் கல்லீரலில் புற்றுநோய்,மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
ஆனால்.........
பெண்களுக்கு இயற்கையாகவே மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
இது இயற்கையின் சாபமோ என்னவோ!
இன்று எத்தனையோ பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.பெரும்பாலும் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பெண்களுமே இந்நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவமனையையே நாடி வருகிறார்கள்.காரணம் அவர்களிடம் தரையில் படிந்த பாசமாய் நிலவி வரும் இந்தப் பாழும் மூட நம்பிக்கை தான்.'ஏதோ,நான் போன பிறவியில் செஞ்ச பாவம் தான் என்னைஇந்த நோய்க்கு ஆளாக்கியிருக்கிறது'என்று தான் நினைக்கிறார்கள்.ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து மருத்துவமனையை அணுகினால் இந்தநோயை முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புள்ளது என்ற உண்மை யாருக்குமே தெரியவில்லை.
அது மட்டுமல்ல.மார்பகப் புற்றுநோய் வந்துள்ள ஒரு பெண்ணைக் கவனித்துக் கொள்ள அவரது குடும்பத்தில் உள்ளவர்களே தயங்குகிறார்கள்.காரணம் புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான தொற்றுநோய்.அருகில் சென்றாலோ,அவர்களைத் தொட்டாலோ,நெருங்கிப் பழகினாலோ தமக்கும் வந்துவிடும் என்றுதான் நினைக்கிறார்கள்.
கிராமத்தில் இருக்கும் படிக்காத பாமரன் மட்டுமல்ல,நகரத்தில் உள்ள மெத்தப் படித்தவர்களிடத்திலும் இந்த நினைப்பு இருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும்.அதற்குத் தேவை மக்களிடையே போதுமான விழிப்புணர்ச்சி மற்றும் அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான உதவி.
இதற்கான ஆக்கபூர்வமான சில யோசனைகளை எனக்கு எட்டியவரையில்சொல்கிறேன்.
இந்த நோய்க்குத் தான் ஏழை பணக்காரன் என்ற பாராபட்சமில்லையே!தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் எத்தனையோ பெண்கள் இந்த நோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பார்கள்/சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.அவர்களில் சிலர் அந்தந்த கிராம நிருவாக அலுவலர்களின் குடும்பத்திலேயே கூட இருப்பார்கள்.அல்லது கிராமங்களில் பணிபுரியும் பல்வேறு அரசு அலுவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்களாகவோ அல்லது அவர்களது உறவினர்களாகவோ இருப்பார்கள்.அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கு தாலுகா அளவில் ஏற்பாடு செய்யுங்கள்.மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் உள்ள பெரிய அதிகாரிகளையும் கூட இந்தக் கூட்டங்களில் பங்கேற்க வைக்கலாம்.(அவர்களின் குடும்பத்தைச்சேர்ந்தவர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களோ மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம்).மாவட்ட அளவிலான புற்றுநோய்க்கான சிகிச்சை நிபுணர்கள்(ONCOLOGIST)மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் ஆகியோரும் பங்கேற்க வேண்டும்.
அவர்களைக்கொண்டு கலந்துரையாடினாலே போதும்.
1) இந்த நோய் குறித்து ஒவ்வொருவர் கொண்டுள்ள எண்ணங்கள்
,2)இந்த நோய் வந்தபின் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்
3)பார்த்த டாக்டர்கள்
4)கொடுக்கப்பட்ட சிகிச்சைகள்
5)மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சந்தித்த துன்பங்கள்
6)நோய் வந்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு
7)அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் அணுகுமுறை
8)மற்றவர்களுக்கு அவர்கள் கூறும் அறிவுரை.
இன்னும் இதுபோன்ற பல தகவல்களச் சேகரிக்கலாம்.அதன்பின் அனைத்துப் பொதுமக்களிடையேயும் குறிப்பாகத் தாய்மார்களிடையேயும் இந்நோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஒரு திட்டம் வகுத்துச் செயற்படுத்தலாம்.
ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மனுநீதிநாளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரின் தலைமையில் நடக்கும் மனு நீதி நாளின் போதும் சுகாதார அலுவலர்களைக் கொண்டு விழிப்புணர்ச்சிப் பிரச்சாரம் செய்யலாம்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மேமோகிராம் பரிசோதனை இயந்திரம் நிறுவி 30 வயதைத் தாண்டிய அனைத்துப் பெண்களையும் இலவசமாகப் பரிசோதிக்கலாம்
ஆந்திராவில் அனைத்து மக்களுக்கும் என ஒரு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப் படுவதாகக் கேள்விப்பட்டேன்.
அதாவது ஒரு இலட்சம் ரூபாய் வரை ஒவ்வொருவரையும் இலவச மருத்துவக் காப்பீடு செய்து அதற்கான அட்டை ஒன்றைக் கையில் கொடுத்திருக்கிறார்களாம். ஒருவருக்கு எந்த நோய் வந்தாலும் சரி.அதற்கான சிகிச்சையை ஆந்திராவில் எங்கு வேண்டுமானாலும் அது அரசு மருத்துவமனையாகட்டும் அல்லது தனியார் மருத்துவமனையாகட்டும் அங்கே சென்று அந்த அட்டையைக் காட்டி ஒரு இலட்சம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமாம்.
அந்த மாதிரி தமிழ்நாட்டிலும் கொண்டு வரலாம். குறைந்தபட்சம் அனைத்துத் தாய் மார்களுக்கு மட்டுமாவது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தலாம்.
மக்கள் நல அரசாங்கம் என்பது எப்படிச் செயல் பட வேண்டும் என்பதற்குத் தங்களது சீரிய தலைமையின் கீழ் செயற்படும் இந்த அரசே சாட்சி.
இதற்கு மேலும் வலுவேற்றும் முயற்சியாக மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு உதவும் வகையில் அனைத்துத் தாய்மார்களையும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல் போன்ற திட்டங்களைச் செயற்படுத்தினாலே போதும்,எதிர்வரும் தேர்தலிலும் அனைத்துத் தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவுடன் மிகப் பெரும்பான்மையான வித்தியாசத்தில் மீண்டும் தாங்களே ஆட்சியில் அமர்வீர்கள் என்பது திண்ணம்.
எனது மின்னஞ்சல்: sks_anu@hotmail.com
எனது கைப் பேசி எண்: 98404 56066
தங்கள் நன்றியுள்ள,
அனுராதா.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
தங்களுடைய பொதுநலன் கருதிய இந்தக் கடித முயற்சிக்கு எனது ஆதரவையும், உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் சொல்வதைப் போல் பெண்களுக்கு தங்களைத் தாக்கக்கூடிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு.
என்னுடைய தாயாரும் இது போன்ற அலட்சியப் போக்கினால்தான், கர்ப்பப் பை புற்றுநோய் பாதித்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார்.
நீங்கள் இதை எழுதியவுடன் எனக்கு அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.. எனது தாயார் பள்ளிக்கூடத்திற்கே செல்லாதவர்.. கையெழுத்து கூட போடத் தெரியாது.. அவருக்கு ஏன் அந்த நோய் அவரைத் தாக்கியது என்ற அவரது கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.
தங்களுடைய முயற்சி சில நூறு பேரையாவது நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
நல்லதே நடக்கும்.. எதிர்பார்ப்போம்..
வாழ்க வளமுடன்..
தங்களுடைய பொதுநலன் கருதிய இந்தக் கடித முயற்சிக்கு எனது ஆதரவையும், உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் சொல்வதைப் போல் பெண்களுக்கு தங்களைத் தாக்கக்கூடிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு.
என்னுடைய தாயாரும் இது போன்ற அலட்சியப் போக்கினால்தான், கர்ப்பப் பை புற்றுநோய் பாதித்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார்.
நீங்கள் இதை எழுதியவுடன் எனக்கு அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.. எனது தாயார் பள்ளிக்கூடத்திற்கே செல்லாதவர்.. கையெழுத்து கூட போடத் தெரியாது.. அவருக்கு ஏன் அந்த நோய் அவரைத் தாக்கியது என்ற அவரது கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.
தங்களுடைய முயற்சி சில நூறு பேரையாவது நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
நல்லதே நடக்கும்.. எதிர்பார்ப்போம்..
வாழ்க வளமுடன்..
தங்களுடைய முயற்சி சில நூறு பேரையாவது நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
நல்லதே நடக்கும்.. எதிர்பார்ப்போம்..
வாழ்க வளமுடன்..
வாருங்கள் உண்மைத் தமிழன்,இம்சை.தங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.
நீங்களே இப்பதிவின் நகலை - cmcell@tn.gov.in -என்ற முகவரிக்கு அனுப்பினால் நல்லதென எண்ணுகிறேன்.
ஆஹா! வாருங்கள் தருமி.சிஎம்.செல்லுக்கு அனுப்பிய பிறகே வலையில் பதிந்தேன்.
Anbulla Amma,
Very good effort.
Hearfelt appreciations.
சகோதரி!
முயற்சி திருவினையாக்கும்.
தட்ட வேண்டிய கதவைத் தட்டியுள்ளீர்கள்...நல்லது நடக்குமென நம்புவோம்.
முன்பே படித்து, மனம் நெகிழ்ந்து, சிறிது ஆசுவாசத்துக்கப்புறம் இந்த பின்னூட்டம்.
மிகப் பயனுள்ளது அம்மா இது. வாழ்க்கைப் பயனாய் பலருக்கும் இந்த விழிப்புணர்வு உண்டாகட்டும்.
என் உறவினர் (அவரது கணவர் அரசாங்க கடைநிலை ஊழியர்) அவருக்கு மார்பகப் புற்று நோய் வந்தபோது அரசாங்க மருத்துவமனைகளில் பட்டபாட்டை தெரிந்திருக்கிறேன்.
இன்னும் பத்திரிகைகளும் இதற்கு உரிய அடையாளம் தந்து பலரும் அறியவும் வேண்டும். சி.எம். செல்லுக்கும் அனுப்பியது நல்ல விஷயம்.
விருப்பம் இல்லை என்றால் வெளியிடவேண்டாம்.
ஆதங்கமாக இருக்கு.... இதை ஒரு பொதுஜனம் சொல்லித்தான் அரசாங்கத்துக்கு தெரியனுமா? அப்படியென்றால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மற்றும் பெரியவர்கள் சொல்வதையை அமைச்சர்கள் கேட்பதில்லையா?
என்னவோ! நல்லது நடந்தால் சரி.
இது பண்ணா அது கிடைக்கும் என்ற எண்ணம் தோனும் வகையில் இருக்கும் கடைசி பத்தி வரிகள் கொஞ்சம் அன்னியமாக இருக்கு.
//என் நிலையே இவ்வாறெனில் தமிழ்நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை எளிய தாய்மார்களில் இந்த நோய் வந்தவர்கள் எவ்வளவு துயர்ப்படுவார்கள் என்பதை நினைக்கும்போது என்னால் தாங்க முடியவில்லை//
அம்மா உங்களின் இளகிய எண்ணத்தை கண்டு மனம் நெகிழ்ந்தேன். பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு இருதயம் இல்லை என்று யார் சொன்னது? அந்த கூற்றை தவிடு பொடியாக்கி இருக்கிறீர்கள். தன்னை போலவே இன்னும் எவ்வளோ பேர் கஷ்டபடுவார்களே? என்ற உங்கள் உயர்ந்த எண்ணத்திற்க்காகவே நீங்கள் விரைவில் நலம் பெறுவீர்கள்.
சிரித்தே பல நாட்கள் ஆகி விட்டது என்று கூறி இருந்தீர்கள் (மனது கனத்து விட்டது), மற்றவர்களின் கஷ்டங்களை உங்க கஷ்டமாக நினைக்கும் உயர்ந்த எண்ணமும் முதிர்ச்சியான பேச்சை கொண்ட நீங்கள், இதை நினைத்து கவலை படலாமா?, நீங்கள் கவலை படுவதால் என்ன பயன், அதனால் உங்கள் பிரச்சனை குறைந்து விட போகிறதா? அதனால் இருக்கும் இந்த நிமிடத்தை சந்தோசமாக கழிப்பதே உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. நடந்ததை நினைத்து கவலை படாதீர்கள். நமக்கு கீழே உள்ளவர் 1000 ம் கோடி உங்கள் கூற்றை போலவே. எனவே நடப்பவை நல்லவையாக நடக்கட்டும். நான் கூறியது அதிகபிரசங்கி தனமாக இருந்தால், அன்பு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை காயப்படுத்தும் எண்ணத்தில் கூறவில்லை.
சகோதரி,
முயற்சிக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள் - அரசு இயந்திரம் மெதுவாகத்தான் வேலை செய்யும். யானை எழ நேரமாகும்- எழுந்து விட்டால் வெற்றி தான். அரசு இயந்திரம் நினைத்தால் முடியாதது இல்லை. பார்ப்போம்.
//மக்கள் நல அரசாங்கம் என்பது எப்படிச் செயல் பட வேண்டும் என்பதற்குத் தங்களது சீரிய தலைமையின் கீழ் செயற்படும் இந்த அரசே சாட்சி.//
அனுராதா அம்மா,
முதலில் உங்களுக்கும்,உங்கள் கணவருக்கும்,எனது வனக்கமும்,நமஸ்காரங்களும்.உங்களது மன உறுதியைக் கண்டு பல முறை பிரமித்து போயிருக்கிறேன்;இந்த நிலையிலும் நீங்கள் உங்கள் அனுபவம் தந்த பாடத்தினை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல பயனுற யோசனை செல்லும் உயர்ந்த எண்ணத்தை போற்றுகிறேன்.ஆனால் அதற்காக நம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்கு இப்படி ஒரு முகஸ்துதி செய்ய வேண்டுமா?சினிமா கும்பல்,வைர முத்து,மானமிகு,லக்கிலுக்,ஜாலிஜம்பர் போன்ற ஜால்ராக்கள் சொல்லும் பொய்யை நீங்கள் சொல்ல வேண்டாமே.ஆனால் இப்படி ஐஸ் வைத்தா தான் நம்ம மஞ்ச துண்டு கட்டுமரம் அய்யா கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார் என்று கருதி, இதை செய்திருக்கும் பட்டசத்தில் நீங்கள் பொய் சொன்னது சரி என்று ஏற்றுக் கொள்கிறேன்.நீங்கள் குன்மடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பாலா
வாருங்கள் சுகந்தி,யோகன் பாரிஸ்,கெக்கேபிக்குணி,வடுவூர் குமார்,கிரிராஜ்,சீனா.வருகைக்கு நன்றி.
வாருங்கள் பாலா.நன்றி
சகோதரி,
உங்கள் மன உறுதியுடன் பொதுநல ஆர்வத்தையும் பாராட்டுகிறேன். உங்கள் முயற்சி பலனளிக்க வாழ்த்துகள்.
வாருங்கள் காசி ஆறுமுகம்.நன்றி
இன்றுதான் இதை படித்தேன். உங்களது இந்த நல்லுள்ளம், மற்றோரை காக்க நினைக்கும் பாங்கு, இதற்காகவே இறைவன் உங்களை பல்லாண்டு, பல்லாண்டு வாழ வைப்பான், வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டுவீர்கள்.
:(
Post a Comment