Thursday, May 1, 2008

காண்பதெல்லாம் துயரமென்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு

நாளை மே 2ம் தேதி.மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நாள்.மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அடுத்த பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த இரு தினங்களாக என் வாழ்க்கையில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் என்னை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு புற்றுநோயாளிக்கு மருத்துவச் சிகிச்சை மட்டும் போதவே போதாது.அவளின் மனம் எந்த வகையிலும் சிதைந்துவிடக் கூடாது.அப்படிப்பட்ட பேச்சுக்கள் அவள் காதிலேயே விழக்கூடாது.மீறி நடந்தால் அவளின் மன உறுதி பலமிழந்துவிடும்.அதுவே அவளுக்கு எமனாகி விடும்.இதை எனது பதிவில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
ஆனால் அவ்வளவும் இப்போது என் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

விழிப்புணர்வு வேண்டும்,விழிப்புணர்வு வேண்டும் என்று கூக்குரல் இடுவதெல்லாம் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு முன்னால் தோற்றுப் போகிறது.இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?

மதுரைக்கு நான் வந்தது முதல் என் அண்ணன்,அண்ணி,என் தாயார் ஆகியோர் என்னுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு நாங்கள் தனியாக வேறு வீட்டுக்குப் போகிறோம் என்று என் அண்ணன் அண்ணி இருவருமே சொன்னார்கள். ஏனென்று கேட்டேன்.

"வர்ற தை மாசம் பையங்களுக்குப் பொண்ணுபாக்க ஆரம்பிக்கலாம்னுஇருக்கோம்.அதனால் நாங்க வேற வீட்டுக்குப் போகிறோம்."

பளிச்சென்று பிரச்சனை புரிந்துவிட்டது.

"ஏன்.பையங்களோட அத்தைக்குக் கேன்சர் நோய் என்ற விபரம் வெளியே தெரிஞ்சா கல்யாணம் பண்றதிலே தடங்கல் ஏற்படும். இதுதானே பிரச்சனை?"

அவர்கள் பதில் பேசவில்லை.

கேன்சர் நோயாளியான தங்கையை அருகில் வைத்துக் கொண்டு மகன்களுக்குத் திருமணம் முடிக்கும் மன உறுதி என் அண்ணனுக்கோ அண்ணியாருக்கோ நிச்சயம் இல்லை.

விழிப்புணர்ச்சி,மனித நேயம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறேன்,வலையில் பதிவுகள் எழுதுகிறேன்.சொந்த வீட்டிலேயே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை.மனித நேயத்தைக் காண முடியவில்லை.

தங்கைக்குக் கேன்சர்.அதுவும் ஐந்து ஆண்டுகளாக என்றதும் அண்ணன் துடிக்கிறான்.பெற்ற தாயார் ஓ வென்று கதறுகிறாள்.உறவினர்கள் அனைவுரும் வருந்துகின்றனர்.இவையெல்லாம் யதார்த்தங்கள் அல்ல.

என்னை ஒதுக்கினால் அவர்களின் பிரச்சனை தீரும் என்று வரும்போது ரசத்திலிருந்து எடுத்துப் போடும் கருவேப்பிலையாகிறேன்.தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

இதுதான் வாழ்வின் யதார்த்தம்.

இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு விழிப்புணர்ச்சி போதவில்லை.இப்போது போதும் போதும் என்ற அளவுக்குக் கிடைத்து விட்டது.

இந்த சம்பவங்கள் என்னை உலுக்கி எடுத்தாலும் என் வைராக்கியத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.இப்படிப்பட்ட உறவுகளின் முன் இந்த நிலைமையிலும் நான் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

15 comments:

cheena (சீனா) said...

சகோதரி அனுராதா,

சொல்வதற்கு ஒன்றுமில்லை

தங்களின் வைராக்கியம் மேன்மேலும் உறுதிப்பட நல்வாழ்த்துகள்.

யதார்த்தம் என்பது என்ன ?? அனைத்துமே யதார்த்தம்தான்.

மறு மொழி இடுபவர்கள் சிந்தித்து மறுமொழி இடுவார்கள். மனம் கலங்க வேண்டாம். யதார்த்தத்தை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளுங்கள். உறவுகளை உறவுகளாகவே பாருங்கள். அதிக உணர்ச்சி வசப்படாதீர்கள்.

அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும். பரவாய் இல்லை. மன உறுதி ஒன்று போதும். மனம் தளர வேண்டாம்.

எந்த ஒரு நிகழ்வுக்கும் காரணங்கள் பல உண்டு. சூழ்நிலைகள், மனநிலைகள், உலக இயலின் கட்டாயங்கள், சுற்றத்தின் வற்புறுத்தல்கள் என பலப்பல அழுத்தங்கள் உண்டு.

உடன்பிறப்பினை தவறாக நினைக்க வேண்டாம்.

என் மறு மொழி தவறாகப் படலாம். ஆழ்ந்து சிந்தியுங்கள்.

காலம் சிந்தனைகளை மாற்றும் சக்தி உடையது.

புற்று நோயால் அவதிப்பட்ட தாயுடன் 10 ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் - தங்களின் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படித்து அனைத்திற்கும் சிந்தித்து மறுமொழி இட்டவன் என்ற உரிமையில் எழுதுகிறேன்.

கடவுளின் துணை நாடுக !!
நல்லதே நடக்கும் !!
இறைச்சிந்தனை துணை புரியும்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும். பரவாய் இல்லை. மன உறுதி ஒன்று போதும். மனம் தளர வேண்டாம். //

ரீப்பீட்டே!!!!

வேற ஏதும் சொல்லத் தெரியவில்லை... :(

துளசி கோபால் said...

அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க கவலை இருக்கே அனு.

இதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதின்னு நினைச்சுக்குங்க.

கலங்காதே மனமே
வருங்காலம் நல்ல காலமுன்னு இருங்கப்பா.

Anonymous said...

Anbulla Amma,

Idharkaga varuthap padadheergal.
Thiru. Cheena migavum sariyaga solli irukkirar. Practial-aaga irungal. Avargal innum evvalavo perukku vilakkangal solla vendiyirukkum. Silar vilakkam ketkamaleye vilagi povargal. ungalukku sollum vayadhillai
enakku. Arudhalukkaga solgiren.

Anonymous said...

Ungal indraya treatment patriya thagavalukkaga kathirukkiren.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி , சீனா சொல்வதும் சரிதான் அனு...வாழ்க்கையை அவரவர் கோணங்கள் வேறுவேறு நியாயங்கள்.. கட்டாயங்கள்... மனதை தேற்றிக்கொள்ளுங்கள். உறவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் ...

அனுராதா said...

வாங்க சீனா,மதுரையம்பதி,துளசி கோபால்,சுகந்தி,கயல்விழி முத்துலட்சுமி.நன்றி.

உண்மைத்தமிழன் said...

கலங்காதீர்கள் அம்மா..

மருத்துவமனையில் நீங்கள் பட்டக் கஷ்டத்தைவிடவா இது பெரிய கஷ்டம்.. வந்தார்கள், இருந்தார்கள், சென்றார்கள் என எண்ணிக் கொள்ளுங்கள்..அவ்வளவுதான்..

வேறு வழியில்லை.. வருவதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.. தைரியத்தை இழக்காதீர்கள்..

அனுராதா said...

வாங்க உண்மைத் தமிழன்.நன்றி

Aruna said...

இப்படிப்பட்ட உறவுகளின் முன் இந்த நிலைமையிலும் நீங்கள் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள்.....நம்புங்கள்..
அன்புடன் அருணா

Unknown said...

உங்களை அவர்கள் வெறுக்கவில்லை. அவர்களுடைய கடமையையும் அவர்கள் சரிவர நிறைவேற்ற முயல்கிறார்கள் எனக் கொள்ளுங்கள். நல்ல முறையில் சொல்லிவிட்டுப் போவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஆயாசப்படுவதைத் தவிருங்கள். உங்கள் உடல் நலமாகி விரைவில் அந்தப் பெண் பிள்ளைகளை அவர்களின் குழந்தை குட்டிகளோடு இருப்பதைப் பார்த்து வாழ்த்தத்தான் போகிறீர்கள்.

அனுராதா said...

வாங்க அருணா மற்றும் சுல்தான்.நன்றி

Anonymous said...

Don't worry. Evalavo paathuteenga, unga mana dhairiyathuku munaadi idhallam oru problem illa.
Aana oru vishayam unnmai, namaku kashtamnu onnu varumpodhuthaan yaar closenu theriyidhu.
Neenga nichayam nalla irupeenga.
Geetha

கிரி said...

அம்மா தைரியமான மனமும், பரந்து விரிந்த சிந்தனையும் கொண்ட நீங்கள் இப்படி பேசலாமா? அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள், அவர்கள் தவறு செய்தால் கூட அதை நீங்கள் மன்னிக்க வேண்டாமா? பெருந்தன்மையுடன் வழி அனுப்பி வைக்க வேண்டாமா? உங்களுக்காக எதையும் செய்யும் உங்கள் கணவர் இருக்கையிலே நீங்கள் எதை நினைத்து கவலை பட வேண்டும்.

அவர்கள் தன் பிள்ளைக்காக போவதாக இருந்தாலும், அவர்கள் உங்கள் பிள்ளை தானே? நீங்கள் பார்த்து வளர்ந்தவர்கள் தானே? அவர்கள் எங்கே சென்றாலும் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்தி வழியனுப்புங்கள்.

உங்களுடனே இருந்தவர்கள், உங்களின் அண்ணன் அண்ணி என்று எப்போதும் உடன் இருந்தவர்கள், இவ்வாறு கூறியதால் மனதொடிந்து நீங்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் உங்கள் உள் மனதில் இருந்து வெளியிட்ட வார்த்தைகளாக நான் இதை கருதவில்லை. எதோ அப்போது உங்களுக்கே ஏற்பட்ட கோபத்தில் எழுதியதாகவே கருதுகிறேன்.

எனவே இதை ஒரு பெரிய விசயமாக கருதாமல் மன உறுதியோடு இருங்கள்.

நான் கூறி இருந்தது அதிகபிரசங்கிதனமாக இருந்தால் என்னை மன்னியுங்கள்.

அன்புடன்
கிரி

Geetha Sambasivam said...

//விழிப்புணர்ச்சி,மனித நேயம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறேன்,வலையில் பதிவுகள் எழுதுகிறேன்.சொந்த வீட்டிலேயே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை.மனித நேயத்தைக் காண முடியவில்லை.//

அட, கடவுளே, இந்த 2,008-ம் ஆண்டில் இப்படியா? எங்க அம்மாவுக்குப் புற்று நோய் வந்தப்போ தான் என் தம்பிக்கும், பெரியப்பா பையனுக்கும் திருமணம் நடந்தது, 1982,83-ல், திருமணம் நடத்தி வைத்ததே எங்க அம்மா தான், யாரும், உறவினர் உட்பட ஒதுக்கவில்லை, இது கேட்கவே ஆச்சரியமா இருக்கே! அதுக்கப்புறமும் பல விசேஷங்களில் எங்க அம்மா கலந்து கொண்டிருக்கின்றார்கள். கடவுளே, இவங்க எல்லாம் எப்போ திருந்தப் போறாங்க? :((((((