Thursday, July 26, 2007

மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்

நான் சாதாரணப் பெண் இல்லை.மற்ற பெண்களினின்றும் சற்று வித்தியாசமானவள்.அனாவசியமான பேச்சுக்கள்
பேசமாட்டேன்.மற்றவர்களுடன் வம்பு தும்புகளுக்குப் போகமாட்டேன்.
அரட்டை சுத்தமாகப் பிடிக்காது.நாளிதழ்,வார இதழ்களைப் படிப்பேன்.சரித்திர நாவல்களில் சாண்டில்யனின்
கடல்புறா,யவன ராணி படித்திருக்கிறேன்.எந்த ஒரு பிரச்சனை என்றாலும்
சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு முறைக்கு இரு முறை சந்தேகம் தீரக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.பொது அறிவு கொஞ்சம் அதிகம் தான்.இவ்வளவு தூரம் தன்னம்பிக்கை கொண்ட நானே டாக்டர் கூறியதைக் கேட்டதும் திகைத்து நின்று விட்டேன்.
மயக்கம் வந்து விட்டது.என் கணவர் அருகிலுள்ள கடைக்குச் சென்று மினரல் வாட்டர் பாட்டில் ஒன்று வாங்கி வந்தார்.குடிக்கக் கொடுத்தார்.சிறிதுநேரத்திற்குள் சமாளித்து வீட்டுக்கு வந்தோம்.ஒன்றும் புரியவில்லை.டாக்டர் கூறியது உண்மையாகிவிடக் கூடாது என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டேன்.

மறு நாள் காலை ஆட்டோவில் பச்சையப்பா கல்லூரிக்கு அருகில் உள்ள பிரிசிசன் டயாக்னசிக் சென்டர் என்ற பரிசோதனை நிலையத்திற்குச் சென்றோம்.மேமோகிராம் என்ற டெஸ்ட் எடுத்துக்கொண்டேன்.
மேமோகிராம் என்பது இரண்டு மார்பகங்களையும் எக்ஸ்ரே எடுப்பதாகும்.
டாக்டரிடம் கொண்டு வந்து காண்பித்தேன்.எனது வலது மார்பகத்தில் புற்றுநோய்வந்திருக்கிறது என்றும் மேற்கொண்டு சிகிச்சைக்காக அதற்குரிய டாக்டரை அணுகுமாறும் அறிவுறுத்தினார்.அவர் என்ன செய்வார் பாவம்.பிரச்சனை எனக்குத்தானே!
எங்கு போவது யாரை பார்ப்பது ஒன்றுமே புரியவில்லை.அண்ணாநகரில் உள்ள எஸ்.எம்.எஃப். என்று அழைக்கப்படுகிற சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் லட்சுமி நாராயணன் என்ற டாக்டர் புற்றுநோய்க்கான மருத்துவர் இருக்கிறார் என்று விசாரித்ததில் தெரிந்தது.இரு நாட்களில் அவரிடம் அப்பாய்ன்மெண்ட் பெற்றுச் சந்தித்தேன்.நேரில் போனபின் தான் தெரிந்தது அந்த மருத்துவர் ஓர் ஆண் என்று.

அதற்குமுன் எந்த ஓர் ஆண் டாக்டரிடம் என் அந்தரங்க உறுப்புகளைக் காட்டியதில்லை.இவ்வளவு ஆண்டு வாழ்க்கையில் வெறும் தலைவலி
காய்ச்சல் என்றுதான் டாக்டரிடம் சென்றிருக்கின்றேன்.
என்ன சார் பெயர் லஷ்மிநாராயணன் என்று பார்த்தவுடன் பெண்டாக்டர் என்று
தவறுதலாக நினத்து விட்டேனே என்றேன்.ஒருநிமிடம் திகைத்துநின்றுவிட்டார் அந்த டாக்டர்.சென்னையில் எந்தப் பெண்ணும் ஒரு ஆண் டாக்டரிடம் இப்படிக் கேட்டிருக்க மாட்டார் போலிருக்கிறது.
டாக்டரும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு "ஆமாம்.உங்களுக்கு கேன்சர் வந்திருக்கிறது.அதன் வீரியம் எவ்வளவு தூரம் உள்ளது என்று பார்க்க வேண்டும்."எஃப்.என்.ஏ.சி.என்ற டெஸ்ட் எடுக்க வேண்டும்.
நான் இங்கு வாரம் இரண்டு நாட்கள் தான் வருகிறேன்.அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வருகிறேன்.மற்றபடி பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் உள்ள கே.எஸ்.மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்கிறேன்.எனவே எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட்எடுத்துக் கொண்டு பிறகு அங்கு வந்து பாருங்கள் என்று கூறினார்.மீண்டும் பிரிசிஸன் டயாக்னஸ்டிக் சென்டருக்கு வந்தோம்.

எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட் என்பது ஒரு நீண்ட மிக நுண்ணிய துவாரம் உள்ள ஊசியை மார்பகத்தினுள் செலுத்தி நோய் வந்திருக்கும் பகுதியிலிருந்து சிறிதளவு எடுத்துப் பரிசோதிப்பதாகும்.அந்த சோதனையின் போது உயிரே போகும்படி இருந்தது.மறுநாள் அந்த ரிசல்டைக் கொண்டு டாக்டரிடம் காண்பித்தோம்.உங்களுக்கு கேன்சர் வந்திருப்பது மூன்றாவது ஸ்டேஜ்.
நோய் வந்திருக்கும் மார்பகத்தை ஆபரேஷன் செய்து எடுத்துவிட வேண்டும்.
அடுத்து....என்று வரிசையாகக் கூற ஆரம்பித்தார்.

என்ன ஆண்டவனிடம் முறையிட்டு என்ன பிரயோசனம்?
இதெல்லாம் என்ன சாதாரணமான பிரச்சனையா?ஓகே என்று ஒப்புக்கொண்டு விடுவதற்கு?டாக்டர் கூறியதெல்லாம் ஒன்றும் காதில் ஏறவே இல்லை.
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.ஒரு பெண்ணுக்குரிய உடல் உறுப்பை அதுவும் மார்பகத்தை இழப்பதற்கு எந்தப் பெண் சம்மதிப்பாள்?அப்புறம் வெளிஉலகில் எப்படி நடமாடுவாள்?ஐயோஇதென்ன சோதனை?
என்ன செய்வது?
ஏன் சார்.இதற்கு வேறெ சிகிச்சையே இல்லையா?என்றேன்
ஏம்மா.இவ்வளவு நேரம் விலாவாரியாக வரிசையாக சொல்லிக் கொண்டு வந்தேனே
தலையாட்டிக் கொண்டே வந்தீர்களே?
எனக்கென்ன சார் கேட்டது.என்ன சொன்னீங்க?
டாக்டர் பரிதாபமாக என்னைப் பார்த்தார்.பாவம் ஒருமுறை தான் விளக்கிச் சொல்லி அனுபவம் போலிருக்கிறது.
"டாக்டர்.கடைசியாக ஒரு கேள்வி"
"கேளுங்கள்"
'வேறெ ஒரு (நல்ல என்று கேட்கவில்லை)டாக்டரிடம் காண்பிக்கலாமா?"
டாக்டருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
வெளியே வந்து விட்டோம்.

என்ன படித்து என்ன பிரயோசனம்.கேன்சர் என்ற நோய் பற்றி ஏதும் படிக்கவில்லையே,ஒன்றுமே தெரியவில்லையே.
எனக்கு எப்படி இந்த நோய் வந்திருக்கும்?
என்ன காரணம்?ஒரு குற்றமும் செய்யவில்லையே?
ஆண்களுக்கு இருப்பதுபோல் தண்ணியடிப்பது,சிகரெட்,புகையிலை என்று
பெண்களுக்கு ஒரு கெட்ட பழக்கமும் பெண்களுக்கு இல்லையே.
எவ்வளவோ பேர்களுக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறேன்.
எனக்கா எந்த நிலைமை?
என் கணவரைப் பார்த்தேன்.அவருக்கும் கேன்சர் தொடர்பாக ஏதும் தேரியவில்லை,படிக்கவில்லை.ஒரே குழப்பமாக இருந்தது.

ஆபரேஷனைத் தவிர்க்க முடியுமா?அதற்கு என்ன செய்யலாம்?
வேறெ டாக்டரைப் பார்ப்போமா?
பார்ப்போம் என்றமுடிவுக்கு வந்தோம்.
சரி.எந்த டாக்டரைப் பார்ப்பது?

3 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நலம் பெற வாழ்த்துக்கள். அனேகமானோரைப் போல துவண்டு விடாமல் உங்கள் அனுபவத்தை எழுத வந்தீர்கள் பாருங்கள் அதற்கு hats off.

என்னென்ன சிகிச்சை முறைகள் கிடைக்கின்றன, எதை மேற்கொண்டீர்கள், மற்றும் நாளாந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்பனவும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணவர் மெச்சப்பட வேண்டியவர்.

அனுராதா said...

தங்களின் வருகையும் பாராட்டுகளும் மயிலின் தோகையாக இதமாக வருடி என் நோவைக் குறைக்கும்.நன்றி.

தேவன் மாயம் said...

தாங்கள் அடையாறு கேன்சர்
மருத்துவமனையை அணுகவும்.
தங்களுக்கு வந்திருப்பது
குணப்படுத்தக்கூடிய
ஒன்றுதான் என்பதையும்,
நீண்ட நாள் நலமுடன்
எல்லோரையும் போல
வாழமுடியும் என்பதையும்
அறிவீர்கள் என எண்ணுகிறேன்.
உங்களுக்கு எங்கள் உதவி
என்றும் உண்டு.
அபிதேவா.