Friday, August 24, 2007

ரேடியேசன் முடிந்தது

மறுநாள் 05/09/2003 காலை ஒன்பது மணிக்கெல்லாம் டாக்டர் முன்பு ஆஜரானோம்.வரிசையாகப் பல டெஸ்டுகள் எழுதிக்கொடுத்தார்.அனைத்தையும் எடுத்தோம்.எந்தப் பகுதியில் ரேடியேசன் தரப்பட வேண்டுமோ அது தவிர மற்றப் பகுதிகளை மறைக்கும் வகையில் பின்னல் துணியில் ஒரு மோல்டிங் தயாரிக்க அளவு எடுத்தார்கள்.அடுத்த திங்கட்கிழமை முதல்ரேடியேசன் ஆரம்பிக்கிறது.காலையிலேயே வந்து விடுங்கள் என்றனர்.திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் ஐந்து வாரங்கள் மொத்தம் இருபத்தி ஐந்து சிட்டிங் என்றார்கள்.ரேடியேசன் கொடுக்கும் ரூமிற்குக் கூட்டிச்சென்று காட்டினார்கள்.சி.டி.ஸ்கேன்இயந்திரம் போல இருந்தது.ரேடியேசன் கொடுக்கும்போது ஏதேனும் வலிக்குமா என்று கேட்டேன்.அதெல்லாம் ஒண்ணுமே இருக்காது.எக்ஸ்ரே எடுக்கிறீங்க பாருங்க அதே மாதிரி தான் என்றனர்.இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு விதமான தயக்கம் ஏற்பட்டது.
அடுத்த 08/09/2003 திங்கட்கிழமை காலை முதல் ரேடியேசன் தெரபிஆரம்பித்தது.மேல் உடைகளை அகற்றியபின் பின்னல் துணி மோல்டிங்கை மாட்டி விடுகிறார்கள்.பிறகு இயந்திரத்தில் நீட்டியபடி உள்ள நீண்ட பெஞ்சில் கால்களை நன்றாக நீட்டிப் படுத்துக் கொள்ளவேண்டும்.ரேடியேசன் கதிர்கள் எந்தப் பகுதியில் விழ வேண்டுமோஅந்தப் பகுதியை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளை சிறு சிறு தலையணை மாதிரி இருக்கும் திண்டுகளை வைத்து மறைத்துவிடுகிறார்கள்.பிறகு ரேடியேசன் ரூமிலிருந்து மற்றவர்கள் வெளியேறிவிடுவார்கள்.கதவையும் வெளிப் பக்கம் தாழிடுகிறார்கள்.அடுத்த அறையில் ரேடியேசன் கட்டுப்பாட்டுச் சாதனம் இருக்கிறது.அதை இயக்குகிறார்கள்.சரியாகஒரு நிமிடம் சென்றதும் சாதனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் நான் படுத்திருக்கும் ரேடியேசன் அறையைத் திறந்து உள்ளே வந்து சரி பார்க்கிறார்கள்.மோல்டிங் துணியையும் அதைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள சிறு சிறு தலையணைகளையும் சரி செய்கிறார்கள்.மீண்டும் முன் சொன்னபடியே ரேடியேசன் தருகிறார்கள்.இப்படியேநோயாளியின் நோயின் தாக்கத்தைப் பொறுத்து டாக்டரின் மேற்பார்வையில் மூன்று அல்லது நான்கு தடவை ரேடியேசன் தருகிறார்கள்.அவ்வளவு தான் ரேடியேசன் தெரபி. பூ!அவ்வளவு தானா!!என்று கேட்டேன்.அவ்வளவே தான் மேடம்.இன்றைய ரேடியேசன் முடிந்தது.நாளை வாருங்கள் என்றனர்.


மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.பரவாயில்லையே இந்தசிகிச்சை முறை.இதற்குத் தானா இவ்வளவு தயங்கினேன் என்றுநினைக்கும் போது சிரிப்பு வந்தது. இப்படியாகத் தானே தினமும் காலை மருத்துவமனைக்குச் சென்று ரேடியேசன் எடுத்து முடிந்தது.சில நாட்கள் டாக்டர் ஃபிரீயாக இருந்தால் போய்ப் பார்ப்போம்.டாக்டர் நன்றாகப் பேசுவார். நகைச்சுவையாகவும் பேசுவார்.சிலேடை அவருக்குக் கை வந்த கலை.அருமையாகக் கவிதை எழுதுவார்.என்ன சார்.எங்களுக்கும் உங்களுக்கும் பல வகைகளில் ஒப்பிடலாம் போலிருக்கிறதே என்றோம்.


என் கணவரும்அந்தக் காலத்தில் நிறையக் கவிதைகளெல்லாம் எழுதுவார்.இவருடைய சிநேகிதர்கள் கூடிவிட்டால் நகைச்சுவை நையாண்டிப் பேச்சுகள்பாட்டு என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். டாக்டரும் எங்களைப் போலவே அந்தக் காலத் திரைப்பாடல்களின்ரசிகர்.பேச்சுக்குப் பேச்சு ஒரு பாடலை எடுத்து விடுவார்.ராகத்துடன்பாடியும் காண்பிப்பார். ஒரு நாள் ரேடியேசன் எடுத்துக் கொண்டபிறகு டாக்டரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போது பிரபல பின்னணிப் பாடகர்திரு டி.எம்.எஸ்.அவர்களின் பேச்சு வந்தது

16 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த பதிவு படிக்க கொஞ்சம் இதமாக இருக்கிறது. :-)

Suja said...

Hello Mrs Anuratha,

Even though I am a tamilian, I don't know how to post a comment in Tamil.Sorry for the inconvenience. I came upon your site from a another blog. I have to say I admire your Strong will to fight this Cancer and I hope you get better every day. I can relate to your blog, b'cos my mom had ovarian cancer and she had her 4 th chemo 2 days ago. She is in her early stage luckily. She has 2 more to go. Did you tell your relatives about your cancer, my mom hasn't told anybody except her sister and she stays there .My mom fears that if she says she has cancer and then no one will give "ponnu" for her son! Do you have any advice on that?

Thanks
Suja

நந்தா said...

என்னமோ தெரியலை இதைப் படிக்க கொஞ்சம் சந்தோஷமா இருந்தது.

அப்புறம் உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன். எனது தாத்தாவிற்கும் தொண்டையில் புற்று நோய் இருந்து வந்தது. கோவையிலுள்ள குப்புசாமி நாயுடு மருத்துவ மனையில் இருந்து ரேடியேஷன் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

அப்போது அவருக்கு வயது 74 என்று நினைக்கிறேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த வயதிலும் இந்த டரீட்மெண்ட் அவரை ரொம்ப பெரிய அளவில் கஷ்டப் படுத்த வில்லை. நன்றாக தேறியும் விட்டார்.

இது நடந்து 7 வருடங்கள் இருக்கும். இப்போது எவ்வளவு முன்னேற்றங்கள் அடைந்திருக்கும். நீங்கள் முற்றிலும் குணமடைவீர்கள் நம்பிக்கை அபரிதமாய் எங்களிடம் உள்ளது.

http://blog.nandhaonline.com

Thekkikattan|தெகா said...

இந்த ரேடியேசன் கொடுத்த டாக்டர் மாதிரியே எல்லா பெரீய்ய்யா டாக்டர்களும் இருந்து விட்டால் பாதி குணம் நாம் அடைந்து விடுவோம்... என்ன ஒரு பாசிடிவ்வான மனிதராக படுகிறார்...

கீதா சாம்பசிவம் said...

Hearty Congratulations to your Wedding Anniversary, 36th, Of Course and for your strong will power. Many more returns of the day.

மங்கை said...

நந்தா சொன்ன மருத்துவமனையில் தான் பணி புரிந்தேன்...அங்க டாக்டர் லீலா மீனாட்சி..பேசாத மொழி கிடையாது...அதானால் வருபவர்கள் அவரை ஒரு அன்னியனாக நினைக்க மாட்டார்கள்...

இது ரொம்ப நல்லா இருக்கு அனுராதா

கீதா சாம்பசிவம் said...

உங்கள் வேதனையை என்னால் உணர முடிகிறது அனுராதா, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு இப்போத் தான் படிச்சேன். மன்னிக்கவும். உங்கள் திருமண நாள் வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் சொல்லி இருக்கேன். மறுபடியும் சொல்றேன். பல்லாண்டு நீங்களும், உங்கள் கணவரும் நல் இல்லறம் ந்சடத்தை அந்த இறைவனை வேண்டிக் கொண்டு,
கீதா &சாம்பசிவம்

ILA(a)இளா said...

சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தப் பதிவு படிக்கையில் இதமாக இருந்தது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
தற்போது சொல்வது 2003 சம்பவம், மிகுதி அறிய, அது தங்கள் பற்றிய மகிழ்வான செய்தியாக இருக்கப் பிராத்திக்கிறேன்.

CVR said...

வாழ்த்துக்கள் சங்கம் வழியாக இங்கு வந்தேன்!!
உங்கள் இடுகைகள் அனைத்தையும் ஒரேடியாக படித்தேன்!!!!

உங்கள் நோய் குணமடைய எந்தன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
உங்கள் எழுத்து நடை மிக்க அருமை ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வாருங்கள். உங்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்,மற்றும் எங்களுக்கும் புற்றுநோய் பற்றிய தகவல் களஞ்சியமாக இருக்கும்!!!

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!
உங்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ உளமாற வாழ்த்துகிறேன்.
:-)

வடுவூர் குமார் said...

நகைச்சுவையாக பேசும் மருத்துவர் என்றாலே ஓரளவு நோய் பற்றிய உணர்வு குறைந்ததாக தோனும்,இதை பல முறை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கேன்.

அடுத்து TMS வருகிறாரா?

காட்டாறு said...

திருமண நல்வாழ்த்துக்கள் தோழி! பல்லாண்டு நலமாக வாழ உளமார வாழ்த்துகிறேன்.

மா சிவகுமார் said...

அம்மா,

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். கொசுக் கடிகளைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் வாழும் வழி காட்டும் உங்களுக்கு நன்றி.

நீங்களும் ஐயாவும் எண்பது, நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவ்வளவு தான் ரேடியேசன் தெரபி. பூ!அவ்வளவு தானா!!என்று கேட்டேன்//

நண்பனின் அம்மாவுடன் முதலில் சென்ற ஞாபகம் தான் வந்தது இதைப் படித்தவுடன்!

பதிவு இதமாகவும் அமைதியாகவும் இருந்தது!
மணநாள் வாழ்த்துக்கள் அனு அக்கா.
தங்கள் உறுதுணை கணவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

இன்னும் நிறைய எழுதுங்கள்.
பல சமயங்களில் பிடித்த ஒன்றைப் பதிவுலகில் எழுதுவது ஒரு ஜன்னல் அருகில் அமர்ந்து ரசிப்பது போல!
தென்றல் காற்று வீசி பல துக்கங்களை ஒரே வீச்சாகப் போக்கடித்து விடும்! நானே என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை அக்கா! :-)

உங்கள் பதிவே நாளை மற்றவர்களுக்கு ஒரு கவுன்சலிங் பதிவாகக் கூட ஆகலாம்!
மருந்து மாத்திரைகள் பற்றிய தகவல் மட்டுமே இல்லாது, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜன்னலோரத் தென்றல் காற்றாய் உங்கள் பதிவு வீசும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என் கணவரும்அந்தக் காலத்தில் நிறையக் கவிதைகளெல்லாம் எழுதுவார்//

ஆகா...ஒவ்வொன்றாய் பதிவிடுங்கள்!
உங்களைப் பற்றிய கவிதைகளா? :-)))

அனுராதா said...

அன்புள்ள சுஜா,
எனது மின் அஞ்சல்
anurathass@gmail.com க்கு
உங்களஇமெயில் ஐடி தெரிவியுங்கள்.
அனைவருக்கும் நன்றி.