Monday, August 20, 2007

அப்பல்லோ மருத்துவமனையில் எனது அனுபவங்கள்

அடையாறிலிருந்து ஓர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று விபரங்களைப் பதிந்தோம்.புற்றுநோய்ப் பிரிவில் அவ்வளவாகக் கூட்டமில்லை.அரை மணி நேரத்தில் ஜூனியர் டாக்டரைப் பார்த்தோம்.மீண்டும் ஒரு எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட் எடுக்க வேண்டும்.பிரிசிசன் சென்டரில் எடுக்கப்பட்டதை இந்த மருத்துவமனையில் ஏற்றுக் கொள்ளமுடியாது.இங்கேயே எடுக்க வேண்டும் என்றார்.எங்களுக்கு வேறு வழி புலப்படவில்லை.சரிதான்.பிரிசிசன் சென்டரில் எடுத்ததைவிட இங்கே நவீனமுறையில் எடுப்பார்களோ.எதுவாயினும் ஓகே!சரி சார்.எடுக்கிறோம் என்றோம்.அடுத்த பத்து நிமிடத்தில் எஃப்.என்.ஏ.சி.டெஸ்ட் எடுத்தாகிவிட்டது.நவீனமுறையுமில்லை.ஒரு புடலங்காயுமில்லை.பிரிசிசன் சென்டரில் எடுத்த மாதிரி தான்.போய்விட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வாங்க.அதற்குள் ரிசல்ட் ரெடியாகிவிடும் என்றார்.வீட்டுக்குத் திரும்பினோம்.திரும்பும் வழியிலெல்லாம் பயங்கரமான சிந்தனை.
கண்ணக் கட்டிக் கொண்டு ரோட்டில் நடந்து சென்றால் எதிலாவது மோதிவிடுவோமோ கால் தடுக்கிவிழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன் நடப்பது மாதிரி ஓர் உணர்வு. மனது அலை பாய்ந்தது.எதையோ இழந்துவிட்டமாதிரி தோன்றியது.ஆடிமாதக் காற்றில் ஆட்டம் போடும் மரம் மாதிரி.....ஐயையோ!காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேரோடு சாய்வது போல் நானும்
சாய்ந்துவிடுவேனோ?
என் கணவரைப் பார்த்தேன்.எனது எண்ணஓட்டங்களை அவர் புரிந்துகொள்வது போல ஆண்டவனால் கூடப் புரிந்துகொள்ளமுடியாது.
"என்ன.மனம் அலை பாய்கிறதா?ஒரு பிடிக்குள் அடங்க மறுக்கிறதா?"
ஆமென்று தலையசைத்தேன்.இதோ பாரு.நோய் என்னமோ வந்துவிட்டது.சிகிச்சை எடுத்தாகவேண்டும்.நல்ல ஆஸ்பத்திரியில் நல்ல டாக்டரிடம் நாம் விரும்பும்
வகையில் அந்தசிகிச்சை அமைய வேண்டும்.அதற்காகத் தான் கொஞ்சம் அலையவேண்டியிருக்கிறது.ஒண்ணும் கவலைப் படாதே.
இன்னும் மூன்று நாட்கள் தானே."என்றார்.
மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அப்பல்லோவிற்குப் படையெடுத்தோம். லேப்பில் ரிசல்ட்டைப் பெற்றுக்
கொண்டோம்.இந்தமுறை ஜூனியர் டாக்டர் இல்லை.
நேரடியாகப் பெரிய டாக்டர்.
இவரைப் பற்றி சமீபத்தில் தினமலர் நாழிதழில் ஏற்கனவே வெளியாகியிருந்த கட்டுரையைப் படித்திருந்தோம்.மிகவும் புகழ்பெற்ற டாக்டர்.அமெரிக்காவில் 23 ஆண்டுகள் இதே துறையில் பணியாற்றிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பி தற்போது இங்கு பணியாற்றுகிறார்.பெயர் ரமேஷ் சென்னாகட்டா.
கொண்டுசென்ற மருத்துவஜாதகங்களை ஒரே நிமிடத்தில் ஆராய்ந்தார்.
"உங்களுக்கு கேன்சர் மூணாவதுஸ்டேஜ்.(அதாந்தெரியுமே!)உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.எனது முடிவை எழுதித் தருகிறேன். அடுத்த அறையில் சர்ஜன் இருக்கிறார்.அவரிடம் சென்று சர்ஜரிக்கான அப்பயிண்ட்மெண்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

நான் சிரித்தேன்.

"என்ன சிரிக்கிறீர்கள்.வெரி கரேஜியஸ் வுமன் இண்டீட்!"என்றார் டாக்டர்.
ஒண்ணுமில்லே டாக்டர்.என் மனசுக்கு சிரிக்கணும் போலிருந்திச்சி.சிரிச்சேன்.
தப்புன்னா....சாரி கேட்டுக்கிறேன்."
"நோ நதிங் சீரியஸ் பிளீஸ்."என்றார் டாக்டர்.
"டாக்டர்.உங்க கிட்டெ ஒன்னு கேக்கலாமா?"
எஸ்.. என்பது போல் புருவத்தை உயர்த்திக்கொண்டே என்னைப் பார்த்தார்.
எனக்குக் கேன்சர் மூணாவது ஸ் டேஜ் என்றும்,ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என்றும் பல டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.அதையேதான் நீங்களும் கூறுகிறீர்கள்.
இதைக்கேட்பதற்கா இங்கு வந்தேன்?"

"உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை."
"ஏன் சார்.கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.நீங்க ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்.அமெரிக்காவிலெல்லாம் டாக்டராக வேலை(!)பார்த்திருக்கிறீங்க.ஆபரேஷன் இல்லாமல் வேறு எந்த சிகிச்சையும்இதற்குக் கிடையாதா?"
நோ மேடம்.மூன்றாவது ஸ்டேஜுக்கெல்லாம் சர்ஜரி தான் ஒரே வழி.
சொல்லிக்கொண்டே ஃபைலை மூடி எங்கள் பக்கம் நகர்த்தினார்.
ரொம்ப தேங்ஸ் டாக்டர்.என்று சொல்லிவீட்டு வெளியே வந்தோம்.
பின் அவரது ஆலோசனையின் படி சர்ஜனைப் பார்த்து விடுவோம்.
என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என முடிவு செய்தோம்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சர்ஜன் ரூமில் இருந்தோம்.
அவர் பெயர் டாக்டர் ஹேமந்த் ராஜ்.சென்னை ,தில்லி,ஹைதராபாத் என்று ஓடிக்கொண்டிருப்பவராம்.ரொம்ப பிஸியான டாக்டராம்.நர்ஸ் சொன்னார்.
நான் நர்சிடம் கேட்டேன். எப்படி ஆபரேஷனுக்காகக் கட்டுகின்ற பணத்தையெல்லாம் பிளேனில் போகும் போது தான் எண்ணிக்கொண்டு போவாரோ!அப்போது தான் நேரம் கிடைக்குமோ!!
நர்ஸ் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்.

டாக்டர் ஹேமந்த் ராஜைப் பார்த்தோம்.

அவரது வசனம் இதோ!
ஓகே மேடம்.உங்களுக்கு கேன்சர் மூன்றாவ்து ஸ்டேஜ் .சர்ஜரிக்கு ரெகமண்ட் செய்யப்பட்டிருக்கிறீர்கள்.இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோ டைம்.நீங்கள் சரி என்றால் இருபது நாட்கள் கழித்து ஒரு தேதி ஃபிக்ஸ் செய்கிறேன்.அல்லது உடனே சர்ஜரி செய்ய வேண்டுமென்றால் வருகிற புதன் கிழமை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கேன்சல் ஆகியிருக்கிறது.அன்றைக்கு வைத்துக் கொள்ளலாம்.பட் ஒன் திங்.அதற்கு இன்றே நீங்கள் பணம் கட்டியாக வேண்டும்.ரைட்?
எவ்வளவு டாக்டர்?
ஜஸ்ட் ஃபிஃப்டி தவுசன்ட் ருபீஸ்!
சரி.அதற்கப்புறம்?
யு மீன் நெக்ஸ்ட் ?
யெஸ்.
அதற்குப் பின் சர்ஜரி ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு ரேடியேஷன் கொடுக்க வேண்டும்.
அதுவும் நீங்க கொடுப்பீர்களா டாக்டர்.
நோ நோ.அதற்கு வேறு டாக்டர்.
அதற்கு எவ்வளவு சார் பீஸ்?
டாக்டர் ஹேமந்த் ராஜுக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது.சரி தான். பார்ட்டி
பசையான ஆள்தான்.விட்றக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ
மடமடவன்று சொல்லத் தொடங்கினார்.
"முதல் கட்டமாக எனது ஃபீஸ் மட்டும் ஐம்பதாயிரம்.ஹாஸ்பிடல் சார்ஜ்,இன் பேஷண்ட் பெட் சார்ஜ்,நர்சிங்,இன்ஸ்ட்ருமெண்ட்
,ஆபரேஷன் தியேட்டர் ரெண்ட்,மெடிசின் எல்லாம் சேர்த்து அனதர் ஃபிஃப்டி
தவுசண்ட்,பிறகு ரேடியேசன் அனதர் ஃபிப்டி,ரேடியேசன் டாக்டருக்கு....
அது பிறகு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
சரி டாக்டர்.பின் எதற்காக டாக்டர் ரமேஷ் சென்னாகட்டாவைப்


பார்த்தோம்?
ஓ.அவர் ஆன்காலஜிஸ்ட் எம்டி.சர்ஜரி,ரேடியேஷன் எல்லாம் முடிந்தபின்
கீமோ மருத்துவ சிகிச்சை கொடுப்பார்.
சரி டாக்டர்.நீங்க சொன்னபடியே வரிசையாக சிகிச்சை தரப்படுமா?
மே பி.இதெல்லாம் நாங்க ஒரு டீமா இருந்து டிஸ்கஸ் செய்து சிகிச்சை தருவோம்
ஓரிரு விநாடி கழிந்தது.
ஏன் டாக்டர்.பிரெஸ்ட்டை எடுத்த பிறகு பாத்தா அசிங்கமா இருக்குமே?
டோண்ட் ஒர்ரி.ஆர்டிபிசியல் பிரெஸ்ட் பிரா பல ரேஞ்சுக்கு வந்திருக்கு.உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி வாங்கி தினமும் போட்டுக்
கொள்ளலாம்.
எனி கொஸ்டின்ஸ் ஃபர்தர்?
இல்லைடாக்டர்.
தென் இன்னிக்கே ஃபீஸ் கட்டிவிடுங்க.என்று கூறிக் கொண்டே
ஃபைலைக் கையில் கொடுத்தார்.

வீட்டுக்குச் சென்று முடிவெடுத்தபின் தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு
வெளியே வந்தோம்.
எனக்கு ஒருவிஷயம் புரிய மாட்டேன் என்கிறது.
இந்த டாக்டர்கள் எல்லாருமே(வேணுமென்றால் பெரும்பாலானவர்கள் என்று வாசித்துக் கொள்ளுங்கள்.) ஏன்ஒரே முறையைக் கையாளுகிறார்கள்?
என்ன ஸ்டேஜாகத் தான் இருக்கட்டுமே!ஏன் மாற்றி யோசிப்பதில்லை?
மருந்து மாத்திரைகள் எவ்வளவோ இருக்குமே.வேறு சிகிச்சை வழிமுறைகள்
இருக்குமே.அதில் ஆரம்பிக்கிறது.இப்படி எடுத்த எடுப்பிலேயே ஆபரேஷன்
என்று ஆரம்பித்தால் எப்படி?
ஒரு பெண்ணின் மார்பகத்தை அறுத்து ஆபரேஷன் செய்து அகற்றுவது
என்பது என்ன அவ்வளவு சுலபமா?என்னதான் சேலையால்
மூடி மறைத்தாலும் கொஞ்சம் உற்றுநோக்கினாலே தெரியுமே!
இவளுக்கென்ன நெஞ்சுக்கூடு ஒரு மாதிரியாத் தெரியுதேன்னு!!
மற்ற உடல் உறுப்புகள் போல் இதை ஒப்பிட இயலாதே.கருப்பை,பித்தப்பை,கல்லீரல் இதெல்லாம் முற்றிலும் உடம்புக்குள்ளே இருப்பது.இவைகளை ஆபரேஷன் செய்து அகற்றி விட்டாலும் வெளியே
கொஞ்சமும் வித்தியாசம் தெரியாது.அது மட்டுமல்ல.இந்த உறுப்புகளை
இழந்த பெண்களின் எண்ணிக்கையும் சமூகத்தில் அதிகம்.
ஆனால்.... ஆனால்.....
ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்,அதுவும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர் என்பதை இந்தக்
கேடு கெட்ட சமுதாயம் எப்படி நோக்குகிறது என்பது குறித்து யாராவது
சிந்தித்திருக்கிறார்களா?

ஓ என்று அழ வேண்டும் போல் இருந்தது.

35 comments:

delphine said...

அனுராதா, உங்க பதிவு பார்த்து மிகவும் மனசு கஷ்டமா இருந்துச்சு.
நீங்க பார்த்த இரண்டு டாக்டர்கலும் மிகவும் கைதேர்ந்தவர்கள். டாக்டர் ரமேஷ் நிம்மகட்டா
(பெயர் ரமேஷ் சென்னாகட்டா இல்லை).
டாக்டர் ஹேமந்த்ராஜும் ரொம்ப நல்ல டாக்டர். அவ்ர்களால் முடிந்த வரை breast restore பண்ணுவார்கள்.
உங்களை மாதிரி தினம் தினம் இது மாதிரி பார்த்து பார்த்து எனக்கும் என்ண்டா வாழ்க்கை என்றாகிவிடுகிறது. ஏதாவது உதவி வேண்டுமானால் என்னை அணுகுங்கள்.
'நல்ல ஆஸ்பத்திரி, நல்ல டாக்டர்கள்"
not because I am working there, but because I know them well.

பங்காளி... said...

மனசு பாரமாகிவிட்டது சகோதரி...யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம்....எனக்கு அதில் விருப்பமில்லை...

என்னுடைய பிரார்த்தனைகளை தருகிறேன்...எல்லோருக்கும் பொதுவான இறைவன் உங்களுக்கு நல்லது செய்வார் என உறுதியாக நம்புகிறேன்....

சாய்ராம்....

delphine said...

அதுமட்டுமல்ல அனுராதா..
இந்த டாக்டர்களுக்கு அஸ்ஸிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்கும் எல்லா டாக்டர்களும், கேன்ஸரில் வைத்யம் பண்ணுவதில் மிகவும் தேர்ந்தவர்கள். நாளடைவில் அவ்ர்களுடன் நீங்களே மிக பரிச்சயமாகி விடுவீர்கள். மூன்றாவது ஸ்டேஜ் வரும் வரை ஏன் விட்டு வைத்தீர்கள்?

சிவபாலன் said...

உங்கள் மன தைரியத்தற்கு எனது வணக்கங்கள். இதை கடைசி வரை கைவிடாதீர்கள். நிச்சயம் வெற்றி பெற்று வருவீர்கள்.

வாழ்த்துக்கள்!

சுல்தான் said...

எதற்கும் கவலைபடாதீர்கள் அனுராதா மேடம். (சொல்வது ரொம்ப சுலபம் என்று உங்கள் மனது சொல்லும் - என் மனதும் சொல்கிறது). கவலைப்படுவதால் ஏதும் பயன் என்றால் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கலாம். இப்போதுதான் துணிவைக் காட்ட வேண்டிய நேரம். நிதானமாய் தைரியமாய் இருங்கள்.

இறைவன் நமக்கொரு நோயை விதித்து விட்டான் - உறுதிப்படுத்தியாகி விட்டது.
இனி அதிலிருந்து தப்ப அடுத்து என்ன? இறைவன் ஒரு வழி விட்டிருப்பான் - அதைத் தேடுங்கள்.

மருத்துவர்கள் என்ன செய்வார்கள்! - இந்த மாதிரி முயற்சி செய்வோம் என்று உங்கள் உடலை சோதனைக் கூடமாக்காமல் - அனுபவத்தில் உள்ளதை சொல்லி விட்டார்கள். அதுதான் நல்லதும் கூட.

பண லிஸ்ட்தான் கொஞ்சம் பதற வைக்கிறது - அது பற்றியும் ஆராயுங்கள்.

இந்த வேளையிலும் உங்களை எழுதத் தூண்டுவதே உங்கள் மனத்துணிவுக்கு சான்று.

நீங்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். (ஏதும் தவறாயிருந்தால் ஸாரி மேடம்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அம்மா!
சத்திர சிகிச்சை மூலம் தான் தீர்வென வைத்தியர்கள் பலரும் தீர்மானமாகக் கூறிய பின் காலதாமதம் செய்வது நன்றல்ல!!
அடுத்து இந்தச் சமுதாயம் பற்றிச் சிந்திக்க வேண்டாம். அது வாழ்ந்தாலும் ஏசும்;தாழ்தாலும் ஏசும்.
என் மனைவிக்கு சில வைத்தியங்கள் செய்த தாக்கத்தால் குழந்தை இல்லை என ஆனபோது; வைத்தியரிடம் என் சமுதாயம் பற்றிக் கூறியபோது; அவர் என்னைக் கேட்டது. இந்தச் சமுதாயமா?
உனக்குச் சாப்பாடு போடுகிறது.
அத்துடன் இப்படி அகற்றிய பெண்களுக்கு,விருப்பத்தின் பேரில் சிலிக்கோனால் ஆன செயற்கை மார்பு பொருத்தி விடுவது; பற்றித் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
வைத்தியரின் ஆலோசனையை நாடுங்கள். மனம் தளரவேண்டாம்.
சகோதரி டெல்பினும் இருக்கிறார். நம்பிக்கையுடன் செல்லுங்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தாயே, மருத்துவர்கள் அவரவர் கடமையைத்தான் செய்கிறார்கள். மனித நாகரிகம் வளர, வளர நோய்களும் புதிது புதிதாக வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனுடன் அதற்கான சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்பட்டுத்தான் வருகிறது.

இது நாள் வரையிலும் நம் முருகன் உங்களை புன்னகையோடு வாழ வைத்தவன் கொஞ்சம் அழ வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறான். அதனால்தான் இவ்வளவு நோயிலும் பதிவெழுதும் அளவுக்கு உடல் திறனையும் கொடுத்திருக்கிறான்.

கலங்காதிருங்கள்.. மருத்துவர் காட்டும் வழிபடி செயல்படுங்கள்.. உடல் உறுப்புக்களை இழப்பது பெரிய விஷயமில்லையே.. உயிரை இழப்பதுதான் இப்போது கூடாது. ஆகவே, யாரையும் நிந்திக்காதீர்கள். கொடுத்தவனே எடுத்துக் கொள்கிறான் என்று நினைத்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்..

பூரண உடல் நலம் பெறுவீர்கள்.. வாழ்க வளமுடன்..

மங்கை said...

மன தைரியம்..ஹ்ம்ம் அது உங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது...நாங்கள் புதுசாக சொல்ல ஒன்றும் இல்லை..

உங்களின் இந்த பதிவைப் படித்த பின் ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது...கோவையில் பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் கவுன்சிலிங் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.. இது போல பல சம்பவங்கள்...
அதில் ஒன்று..

ஒரு பெண் 40 -45 வயது இருக்கும்..இதே போல மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றிய நிலை. கவுன்சிலிங்காக என்னிடம் வந்தார்..முதல் நாள் ரொம்பவே கலங்கி இருந்தார்..ரெண்டாவது நாள் கொஞ்சம் சமாதானம் ஆனார்.. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் கழித்து அவரைப் பார்த்த போது நலம் விசாரித்தேன்....அவர் சொன்னது..
'' நோயுடன் வாழ பழகிக் கொண்டேன்.. பிரச்சனை ஒன்றும் இல்லை ஆனால்... அறுவைச் சிகிச்சைக்கும் பின் என் கணவர் என்னிடம் சரியாக பேசுவது கூட இல்லை... தள்ளியே இருக்கிறார்.. அது தான் என்னால் தாங்க முடியவில்லை...இதற்கு நான் செத்திருக்கலாம்'' என்றார்....என்ன கொடுமை.?

அனுராதா..என் தாயும் இதே போல பாதிக்கப்பட்டு இப்பொழுது மாஸ்ட்ரக்டமி செய்துகொண்டார்... ஹ்ம்ம்ம்...

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.. ஆண்டவன் உங்களின் இந்த தன்னம்பிக்கையை நிலைத்திருக்கச் செய்யட்டும்...

koothanalluran said...

சகோதரி
எனக்கு மூளையில் inflamatory brain tumor பாலாஜி மருத்துவமனை ராமச்சந்திரா மருத்துவ மனை இரண்டும் பயாப்சி செய்து அறுவை செய்ய வேண்டும் என சொன்னபோது அப்பல்லொ மருத்துவ்மனை மருத்துவர் பாலமுருகன் மட்டும் தேவையில்லை எனச் சொல்லி மருந்து கொடுத்து வருகிறார். சாப்பிட்டு வருகிறேன்
இதற்கென்ன சொல்கிறீர்கள்

உங்களுக்கு பூரண குணமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்

Thamizhan said...

அன்புச் ச்கோதரிக்கு,
ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாகத்தான் இருக்கும்.மற்றவர்கள் ஆறுதல்தான் சொல்ல முடியும்.
மருத்துவத்தைத் தாமதிக்காமல் விரைவில் செய்து கொள்ள வேண்டுகிறேன்.
இது பெரிய பணக்கார நோயாய் இருப்பதும் மற்றும் குடும்பமே சேர்ந்து மன திடத்துடன் நேர் கொள்ள வேண்டியதும் பெரிய ஆதங்கம்.மருத்துவத் தொழிளாளர்கள் அவர்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.பல்ரிடம் உங்கட்கே பின்னர் நல்ல எண்ணம் வந்து விடும்.அவர்கள் தினமும் இந்த அதிர்ச்சிகளைப் பார்ப்பதால் சில சமயம் மறத்துப் போய் நடந்து கொள்வது போலத் தோன்றும்.

தாங்கள் இணையத்தில் துணிவாக எழுதுவ்தே தங்கட்கு மன அமைதி தரும்.
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மார்பகங்களைத் தாங்களே பரிசோதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.பெரிய வித்தை யில்லை.ஏதாவது மாற்றம் ,சிறிய கட்டி மாதிரி சோதனையில் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.ஆண்டுக் கொரு முறை மேமோகிராம் கட்டாயம் ,அதுவும் குடும்பத்தில் மார்பகப் புற்று நோய் இருந்தால் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
பல புற்று நோய்கள் தடுக்கப்படவும்,ஆரம்பத்தில் கண்டறிந்து குணப் படுத்தவும் கூடியவை.

தாங்கள் மனத்திடத்துடன் மருத்துவம் செய்து எவ்வளவோ பேர் குணமடைந்தது மாதிரி குணமடைய வாழ்த்துக்கள்.பெரிதாகத் தெரிபவை நாட்கள் கடந்து விட்டால் குறைந்து விடும்.
மனத்திடம் கொஞ்சம் வலிகளைக் குறைக்க உதவ்வும்.

முகு said...

சகோதரி அநுராதா,

உங்கள் மன உறுதிக்கு
அச்சாரமாய் கணவன் இருக்கிறார்.
பின் என்ன பிரச்சினை,வாழ்ந்து
காட்டுங்கள் மகிழ்ச்சியுடன்.

delphine said...

Please feel free to contact me ..
42291111-extn2030 or 2345....
delphinevictoria@gmail.com
i will be able to give a moral support to you Anuratha.

தருமி said...

நண்பனின் மனைவி ஏறத்தாழ 10-15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இன்று வரை எப்பிரச்சனையுமின்றி நன்றாக இருந்து வருகிறார்.

உங்களின் தைரியமும் துணை நிற்கும் கணவரது அனுசரணையும் பாராட்டுதற்குரியன.

நலம் காண வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

படித்து முடிக்கும் வரை இதனை உண்மையாக இல்லாமல் இது ஒரு கதையாக தான் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் உண்மையிலும் உண்மையாக இருக்கிறது. உங்கள் மன உறுதி தான் உங்களை காக்கும், உங்களுக்கு நிறைய இருக்கிறது , தொடர்ந்து மன உறுதியுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் எனக்கு சொல்ல தெரியவில்லை.

you are really great!

*இயற்கை நேசி* said...

நீங்கள் எதற்கும் டாக்டர்.டெல்ஃபின் கொடுத்த தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பேசுவது மிக்க நலம்.

மார்பாக புற்று நோய் இங்கெல்லாம்(அமெரிக்காவில்) மிகவும் அதிகமாக மக்களிடையே காணப்படுவதாக உள்ளது. கவலை வேண்டாம், தாமதிக்காமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள். இதற்கு மருந்து, மாத்திரை ஒரு மாற்று சிகிச்சை அல்ல என்று நிறுபிக்கப்பட்ட ஒன்று, அதுவும் ஸ்டேஷ் மூன்றில் எல்லாம்.

இப்பொழுது உங்களுக்கு வேண்டியது மனோ தைரியம் அதனை நீங்கள் இருவரும் பெற்றே இருக்கீரீகள். குணமடைய பிரார்த்தனைகளுடன்...

தெகா.

வெயிலான் said...

தங்களின் மன உறுதிக்கும், தங்களின் கணவரின் அன்பு, பாசத்திற்கும் முன் மற்றதெல்லாம் தூசு. விரைவில் குணமடைவீர்கள்.

V said...

Hello Anuradha

best wishes for a good recovery. You may already know this; some organizations in Britain which work for breast cancer sufferers.

www.bco.org
www.breastcancercampaign.org
www.breakthrough.org.uk
www.breastcancercare.org.uk
www.breastcancer.org

துளசி கோபால் said...

அன்புள்ள அனு,

இப்ப உங்களுக்கு வேண்டியது மனோ திடம்தான். அது ஏகப்பட்டது இருக்கு உங்ககிட்டே.
என் பாராட்டுக்கள். மார்பகம் பெண்களுக்கு முக்கியமான அவயவம் என்றாலும், நோய்ன்னு
வந்துட்டா அதை அகற்றிடறதுலே தப்பே இல்லை. இப்ப மாறவேண்டியது சமூகம்தான்.

இங்கே நியூஸியில் மார்பகப் புற்றுநோயால், அறுவை சிகிச்சை செய்து, அதை நீக்கிக்கிட்ட
பெண்கள் (முக்காலே மூணு வீசம்) மகிழ்ச்சியாகவே இருக்காங்க.

வெளியில் இருந்து நாங்க ஆயிரம் சொன்னாலும், உங்களுடைய நிலையைப் பூரணமா
உணர்ந்தவங்க நீங்கதானே?

எங்கள் அனைவரின் அன்பும், பிரார்த்தனையும் உங்களோடு எப்பவும் இருக்கு.

துளசி கோபால் said...

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்க எல்லா பதிவுகளையும் படித்து முடித்துவிட்டேன். உங்களுக்கு இருக்கும் மனப்பக்குவமும், மனோதைரியமும் என்னைப்போன்ற மற்ற பெண்களுக்கு மிகவும் வழிக்காட்டாக இருக்கும்.

சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வடுவூர் குமார் said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்தவர் கூட தன் இரு மார்பகங்களை இதற்கு பரிகொடுத்துள்ளார்,பெண்களுக்கு இது உணர்வுப்பூர்வமானது என்பதால் குறிப்பாக சொல்ல முடியவில்லை.
இப்பவாது தெரிந்ததே,சீக்கிரம் சிகிச்சையை முடித்து தெம்பாக வாருங்கள்.
Get Well Soon.

அபி அப்பா said...

மார்பகம் போச்சுன்னா மயிரே போச்சுன்ன்னு விட்டு தள்ளுங்க!நம்மக்கு கஷ்டம் கொடுக்கும் அது தேவையே இல்லை! தைரியாமா இருங்க!

ஒப்பாரி said...

உடல் நலமில்லாதவர்கள் துண்பங்களை பார்க்க முடியாமல் அவர்களிடமிருந்து விளகிவிடுவேன். அப்பாவின் கம்பீரம் குறைந்தபோது, அக்காவும் அண்ணனும் உடல் நலமில்லாமல் அவஸ்த்தை பட்டபோது அவர்களை பார்ப்பதை தவிர்த்திருக்கிறேன். மருத்துவ அஜாக்கிறதையினால் என் குடும்பதிலே பல உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம், இதற்க்குப்பின்னால் இருக்கும் உணர்வுபூர்வமான விடயங்களை ஒதுக்கிவிட்டு உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

முத்துகுமரன் said...

விரைவில் பூரண நலன் பெற என் பிராத்தனைகளும் வாழ்த்துகளும்

தாமோதர் சந்துரு said...

தாங்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

vivekanandan said...

Wishing you a speedy recovery, madam,
may the god gives you a courage to fight the diesease and recover from it at the earliest.
Vivek.

enRenRum-anbudan.BALA said...

சகோதரி அனு,

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்து, தாங்கள் பூரண நலன் பெறவும், இதைச் சமாளிக்க வல்ல
மனத்திடம் பெறவும், இறைவனிடம் உளமார வேண்டுகிறேன்.

என் பிரார்த்தனைகள் தங்களுக்கு துணை நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

விஜயன் said...

மேடம்
சத்தியமாகச் சொல்கிறேன். உங்கள் மன தைரியம் அசாத்தியமானது. எனக்கில்லாதது.

விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்

பத்மா அர்விந்த் said...

அனுராதா
தனிமடலில் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள தோழர்,

உங்கள் பதிவின் அடிக்குறிப்பாக நீங்கள் தெரிவித்திருந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய சிறுவயதுக் காலங்களில் (எனக்கு வயது 37) மருத்துவர்கள் எளிய மருத்துவ முறைகளிலேயே தங்களுடடைய வைத்தியத்தை துவங்குவார்கள். பெரும்பாலும் அதிலேயே நோய் குணமாகிவிடும். ஆனால் இப்போதோ சாதாரண ஜலதோஷம் என்றாலே செலவு வைக்கக்கூடிய பல மருத்துவ உபகரணங்கள் துணையுடன் கூடிய மருத்துவ அறிக்கை அத்தியாவசியமாகும் படிதான் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

நீங்கள் மனஉறுதியுடன் இருக்க என்னுடைய பிரார்த்தனைகள்.

காட்டாறு said...

தோழி,

என் நெருங்கிய தோழிக்கும் இதே. இரு மார்பகங்களையும் அகற்றும் நிலை. அவங்க கூடவே இருந்து அவங்களை கவனிச்சதனால, உங்கள் உள்ளம் படும் வேதனையை உணர முடிகிறது தோழி. என் தோழி நோயினின்று மீண்டு இப்போ சந்தோஷமா இருக்காங்க. உங்களுக்கும் அந்த சந்தோஷம் விரைவில் உண்டு. நம்புங்க.

தைரியமா இருங்க. உங்க மனோதிடம், உங்களையும், உங்களை சுற்றி இருக்கிறவர்களையும் தெம்பாக இருக்கச் செய்யும். அது உங்களுக்கும் உற்சாகம் அளிக்கும். தோழர் தோழியர் நாங்கள் இருக்கிறோம் பிராத்தனை செய்ய, உங்களின் இன்னலை பகிர்ந்து கொள்ள. சீக்கிரம் குணமாகுவீங்க!

ILA(a)இளா said...

என்னுடைய பிரார்த்தனைகளை தருகிறேன்...எல்லோருக்கும் பொதுவான இறைவன் உங்களுக்கு நல்லது செய்வார் என உறுதியாக நம்புகிறேன்....

அனுராதா said...

தோழி காட்டாறு,இளா ஆகியோருக்கு நன்றி.

தென்றல் said...

உங்க பதிவு படித்துவிட்டு மனது வலித்தது.

இதை எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிய உங்களின் மன உறுதி அபாரமானது. தொடர்ந்து நம்பிக்கையுடனும் இதே மன உறுதியுடனும் சிகிச்சை எடுத்து, பூரணமாய் குணமடைய நானும் பெரிய கடவுளை பிராத்திக்கிறேன்.

விரைவில் குணமடைவீர்கள்! உங்கள் கணவருக்கு எனது வணக்கங்கள்!

அனுராதா said...

வாங்க தென்றல்.நன்றி