Monday, August 20, 2007

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எனது அனுபவம்.


  1. மறுநாளே விசாரிக்க ஆரம்பித்தார் என் கணவர்.சென்னை மாநகரில் புற்றுநோய்க்கெனத் தனிப் பிரிவுகள் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகளின் பட்டியல் ரெடியானது.முதலில் இருப்பது அடையாறிலுள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்.கைவசமிருக்கும் எனது மருத்துவ ஜாதகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றோம்.உள்ளே நுழைந்ததும் ஒரே அதிர்ச்சி.யம்மாடி!எவ்வளவு கூட்டம்!!ஆண்களும் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளிலிருந்து வயது முதிர்ந்த
    பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராது குழுமியிருந்தனர்.வாசற்படியில் இரண்டு ஆயாக்கள் ஒவ்வொருவராகப் பதிந்துகொண்டு மணிக்கட்டிலோ
    தோள்பட்டையிலோ ஒரு நம்பர் எழுதிய பேப்பரை ஒட்டி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
    பேரைக் கூப்பிடமாட்டார்களாம்.நம்பரைத்தான் கூப்பிடுவார்களாம்.
    இதென்ன கூத்து!ஆயிஅப்பன் வச்ச பேரை விட்டு விட்டு ஜெயிலில்
    கைதிகளைக் கூப்பிடுவது போல் நம்மளையும் கூப்பிடுவாங்களே!என்று குழம்பிக் கொண்டிருந்தேன். வர்ற கூட்டத்திலே எப்படிப் பேர்
    சொல்லிக் கூப்பிட முடியும்?"ராஜா..ஆ..ஆ.."ன்னு கூப்பிட்டா ஒரு பத்துப் பேராவது பாப்பாங்க.:பிச்சை"....ன்னு கூப்பிட்டாலும்
    பத்துப் பேர் வருவாங்க.இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் பேரனும் இன்னார் மகனுமாகிய....ன்னு கூப்பிட்றதுக்குள்ளே பொழுது விடிஞ்சிடும்.
    சரி சரி வந்த இடத்திலெ நமக்கு எதுக்கு இந்த யோசனை. வா வா உள்ளே போய்ப் பார்ப்போம் என்று என் கணவர் முன்னேறினார்.வாசலில்இருந்த ஆயாக்கள் தெலுங்கில் ஏதோ சத்தம் போட்டுக் கேட்டனர்.எங்களுக்குத் தெலுங்கு சுத்தம்!முழி முழி என்று முழித்தோம்.பிறகு தமிழில் கேட்க ஆரம்பித்ததும் என் கணவர் முந்திக் கொண்டார். 'நான் ரிட்டயர்டு தாசில்தார்.உள்ளே போய்......"
    முடிக்க விடவில்லை.இரண்டு பேரும் மிகப் பணிவாக"சாரி சார்.யாரோ
    பேஷண்ட்ன்னு நினைச்சுட்டோம்.உள்ளே போங்க சார்."என்றனர்.

  2. இல்லம்மா.நாங்களும் டாக்டரைத்தான் பாக்க வந்திருக்கோம்.என்றார் என் கணவர்."உள்ளே போங்க சார்.எந்த டாக்டரை வேணுன்னாலும் போய்ப் பாருங்க சார்."உள்ளே நுழைந்தோம்.ஒரு பெரிய கூடம்.சுமாராக ஐநூறு இருக்கைகள் இருக்கும்.அனைத்துமே நிரம்பி வழிந்தது.அனைவரும் தத்தம் அழைப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.பல அறைகளிலும் கன்சல்டிங் நடந்துகொண்டிருந்தது.ஏதோ ஓர் அறைக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தோம்.ஒரு டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார்..."இதப் பாருப்பா.உனக்கு வந்திருக்கிறது கேன்சர்.ஆபரேஷன்தான் செய்யணும்.வேற வழியில்லெ.அப்பிடியே மூணாவது ரூமுக்குப் போ.எங்கே பணம் கட்டணும்.எங்கே மருந்து வாங்கணும்னு சொல்லுவாங்க.ஏழைன்னா ஒரு பாரம் தருவாங்க எழுதிக் கொடுத்திட்டுப் போ.கூப்பிடும்போது வா.நெக்ஸ்ட்.."அந்த நோயாளி பித்துப் பிடித்தவர் போல எங்களைக் கடந்து சென்றார்.இதே வகையில் அடுத்து நான்கைந்து நோயாளிகளிடம் சொல்லி அனுப்பிக்கொண்டே இருந்தார்.நாங்களும்வெளியே வந்து வேறு சில அறைகளில் நடப்பதைக் கண்ணுற்றோம்.ஜெராக்ஸ் நகலாட்டம் காட்சிகள் ஒரே மாதிரியாக நிகழ்ந்துகொண்டிருந்தன.நோயாளிகள் நம்பர்களாகி விட்டனர்.டாக்டர்கள் ரோபோக்கள்ஆகி விட்டனர்.மனது எதற்கோ வலித்தது.மீண்டும் ஹாலின் பக்கம் வந்தோம்.ஒரு தலைமை நர்சாகத் தென்பட்டவரிடம்அறிமுகப்படுத்திக்கொண்டோம்.அவர் சொன்னார்."சார்.சென்னை ராஜதானியாஇருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி ஆசியாவிலேயே பெரியது.அப்ப கர்நாடகா,கேரளா எதுமே இல்லெ.இதெ ஆரம்பிச்ச டாக்டரு முத்துலெச்சுமியம்மா.தெலுங்குக்காரரு.இங்க தெனமும் அறுநூறு பேரு வர்ராங்க.அதுலெ மெஜாரிட்டி ஆந்திராதான்.இங்க வேல பாக்குற டாக்டருங்க நர்சுங்கரொம்பப் பேரு ஆந்திரா தான்.தமிளு ரொம்பக் கம்மி.கக்கூசு சுத்தம் பண்றவளுங்கதொடெக்கிறவங்க தான் தமிளு.ஆனா வர்ற எல்லாத்துக்குமே ஒரே சிகிச்சை தான்.துட்டு கட்டினா அறுவெ(அறுவை சிகிச்சை!)சீக்கிரம் நடக்கும்.ஏழென்னா எல்லாமே வரிசெ தான்.போறுமா.டாக்டரெப் பாக்கணுன்னா வெளியெ போயி சீட்டுவாங்கிட்டு அப்புறமா உள்ளெ வாங்க.போங்க போங்க"நர்ஸ் விடு விடு என்று எங்களைக் கடந்து சென்றுவிட்டார்.ரொம்பவே சிந்தித்தேன்.வெளியே சென்று பதிந்து நம்பர் வாங்கி வரிசையில் ஏதோ ஒரு டாக்டரைப் பார்த்து அவரிடம் விலாவாரியாகச் சொல்லி,அவர் சொல்லும் பரிசோதனைகளைச் செய்தபின்...செய்தபின்..அறுவைசிகிச்சை தான்ஒரே வழி என்று அவரும் சொல்லி விட்டால்?இருவரும் விவாதித்தபடியே வெளியே வந்தோம்.நாம் விரும்பும் தனிப்பட்ட கவனமான சிகிச்சை நிச்சயம் இங்கே கிடைக்காது.இன்று பார்க்கும் டாக்டரை அடுத்தடுத்துப் பார்க்க முடியாது.ஒவ்வொரு முறையும்வேறுவேறு டாக்டர்கள் தான். அடையாறு மருத்துவமனை நமக்கு லாயக்கில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
    ரெடி.ஜூட்...
    நெக்ஸ்ட் ஸ்டாப் அப்பல்லோ ஹாஸ்பிடல்!

4 comments:

Geetha Sambasivam said...

உங்கள் உடல்நலம் தேறி விடும். உங்கள் மனோபலம் உங்களைக் கைவிடாது. வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

அம்மா..

படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு சோகத்திலுமா எழுதுகிறார்கள்.. ஆச்சரியமாக இருக்கிறது அம்மா..

நிச்சயம் முருகன் உங்களைக் கைவிட மாட்டான். முருகன் சோதனைகளைக் கொடுப்பான். ஆனால் இறுதியில் அவனே வருவான்.. அதுதான் உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகிறது..எது வந்தாலும் அதை முருகன் கொடுத்ததாகவே நினைத்துக் கொள்ளுங்கள்..

உங்களுடைய அன்புக் கணவர், பிள்ளைகளின் பாசத்தில், முருகனின் அருளால் புற்று நோய் உங்களைவிட்டு கண்டிப்பாக விலகிவிடும். நம்பிக்கையோடு காத்திருங்கள்..

PPattian said...

நீங்கள் சீக்கிரம் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

அனுராதா said...

கீதா சாம்பசிவம் மற்றும் பிபட்டியான் ஆகியோருக்கு நன்றி.
உண்மைத் தமிழன் சார்,
என் முந்திய பதிவிற்கான தங்கள் பின்னூட்டம் இ மின்அஞ்சலில் வந்தது.பதில் பின்னூட்டமிட்டேன்.என்ன ஆயிற்றோ தெரியவில்லை.மறு நாள் பார்த்தால் காணோம்.நான் டோண்டு சார் இல்லை.வலைக்குப் புதியவள்.தங்களின் ஆறுதலான ஆலோசனைக்கு நன்றி.