மறுநாள் 04/09/2003ந் தேதி காலை விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில்அமைந்திருக்கும் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்றோம்.மூன்று மாதங்களுக்கு முன் தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் (முன்னாள்)குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகவும் வாசல் பக்கச் சுவரில் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
டாக்டரைப் பார்க்கப் பல நோயாளிகளும் உடன் வந்தவர்களும்காத்துக்கொண்டிருந்தனர்.அவ்வளவாகக் கூட்டமில்லை.ஆனாலும்சீக்கிரமாக டாக்டரைப் பார்க்க முடியவில்லை.ஒரு நோயாளி உள்ளே சென்றால் வெளியே வருவதற்குக் குறைந்தது முக்கால் மணிநேரம் ஆனது.இந்த டாக்டர் என்ன முடிவு சொல்வாரோ என்ற பதைபதைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது.இவர் மட்டும் ஆபரேஷன்தான் ஒரே வழி என்று சொல்லிப் பார்க்கட்டும்.எனக்காச்சி,இந்த டாக்டருக்காச்சி என்று செமையாகச் சண்டையே போட்டுவிடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.
சுமாராக மூன்று மணிநேரம் கழித்து அழைக்கப்பட்டோம்.டாக்டரைப் பார்த்தோம்.டாக்டரின் பெயர் விஜயராகவன்.இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னார்.பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் விசாரிக்க ஆரம்பித்தார்.
எப்பொ இதைக் கண்டுபிடிச்சீங்க?
கொஞ்சநாளா ஹார்டாவே இருக்குங்க
எத்தனை நாளா?
ஒரு ரெண்டு மூணு மாசமா.
நீங்களாவே கண்டுபிடிச்சீங்களா?
ஆமா.
உங்க தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கு?
ஏன்?நல்லாத் தேன் இருக்கு.
டாக்டர் என் கணவருடைய முகத்தைப் பார்த்தார்.
நாங்கள் புரிந்து கொண்டோம்.
நானே பதிலைத் தொடர்ந்தேன்.
என்ன சார்.குழந்தைகளுக்குக் கல்யாணமாகிப் பேரன் பேத்திகளெல்லாம் ஆயிடுச்சு.இன்னமும் என்ன சார்?
இருக்கட்டுமே!
மீண்டும் டாக்டர் என் கணவர் முகத்தைப் பார்த்தார்.
மீண்டும் நானே பதில் சொன்னேன்.
எங்க சாருக்கு ஆபீஸ் வேலையே சரியா இருக்கு.வீட்டுக்கு வந்தாஎப்படா தூங்குவோமோன்னு இருக்கும்.பிள்ளைகளுக்கும் வயசாயிடுச்சு.
இப்போது என் கணவர் பேசினார்.
எங்க இருவருக்கும் செக்ஸ் என்பதுஒரு பிரச்சனையே இல்லை.தேவைப்பட்டா உண்டு.இல்லேன்னா மாசக் கணக்காயிடும்.
அது தானே!ஏன் இவ்வளவு லேட்டா கண்டுபிடிச்சாங்கன்னு காரணம்இப்போத் தெரியுது.
சரியான டாக்டர்!
அதுக்கென்ன சார் இப்போ?
அதுக்கென்னவா?சீக்கிரமா கண்டுபிடிச்சுறீந்திங்கன்னா சீக்கிரமா இங்கோ வேறு ஆஸ்பத்திரிக்கோ வந்திருப்பீங்க.இவ்வளவு லேட்டாவந்திருக்கீங்களேன்ற ஆதங்கந் தான்.வேறெ ஒண்ணுமில்லே.
பழைய மருத்துவ ரிப்போர்ட்டுகளை நீட்டினோம்.டாக்டர் தொடவே இல்லை.
அதெல்லாம் அப்புறம் பாக்கலாம்'.
மீண்டும் பேச ஆரம்பித்தார்.
எப்போ வயசுக்கு வந்தீங்க?
ஒரு வினாடி திடுக்கிட்டேன்.
யாரை.....என்னையா கேக்கிறீங்க?
டாக்டர் தலையசைத்தார்.
ஒரு பனிரெண்டு பதிமூணு வயசிலெ.
எப்பொ கல்யாணமாச்சு?
சார்.நான் பொறந்தது 1953 சனவரி.கல்யாணமானது 1971 ஆகஸ்டு 25 ந்தேதி.கணக்கு போட்டுக்குங்க.
மொதோக் குழந்தெ எப்போ பிறந்துச்சு?
1972 டிசம்பர்லெ.
அடுத்து?
சார்.முதல்லெ பெண் குழந்தை 1972 டிசம்பரிலெ பிறந்துச்சு.அடுத்து பையன்1974ஜூலையிலே பிறந்தான்.அடுத்து மீண்டும் ஒரு பொண்ணு 1978 நவம்பர்லே.
அவ்வளவு தான்.
ம்.மாத விடாய் எப்படி ஆகுது?
அதெல்லாம் ஒழுங்கா ஆகுது.
ரெண்டு நாள் மூணு நாள் முன்னே பின்னே?
இல்லே சார்.ஒவ்வொரு மாசமும் கரெக்டா ஆகுது.லேட்டெல்லாம் கிடையாது.போன வருஷந்தான் திடீர்னு ஒரு நாள் ராத்திரி பெட்டுலேர்ந்து கீழே விழுந்துட்டேன்.வாயல்லாம் சுரு சுருன்னு இழுத்தமாதிரி ஆயிருச்சு.ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணினதுக்கப்புறம் நீரோ டாக்டருங்க செக் பண்ணிப்பாத்துட்டு மெனோபாஸ் நிக்குறதுக்க்கு முன்னாடி இப்படியெல்லாம்சில பேர்களுக்கு ஆகும்னாங்க.கொஞ்ச காலம் மாத்திரை சாப்பிடணும்னுசொல்லி எழுதிக் கொடுத்தாங்க. அதெத் தினந்தோறும் சாப்பிட்றேன்.
சரி. உங்க சொந்தக்காரகளில் யாருக்கேனும் இந்த நோய் வந்திருக்கா?
ஆமா சார். என்னோட தாய் மாமனுக்குத் தொண்டைலெ வந்துச்சு.மத்தபடி வேறெ யாருக்கும் இல்லே
உங்களுக்கு டைபாய்ட் காய்ச்சல்,டி.பி.ன்னு ஏதாச்சும் முந்தி வந்திருக்கா?இல்லை.
சிறிது நேரம் என் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தார்.
சரி ஆபரேஷன் செஞ்சிரலாமா?
அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆத்திரமும் அழுகையும் பொங்கிப் பீறிட்டு எழுந்தது.
ஏன் சார்.இவ்வளவு நேரம் கதையா கேட்டுகிட்டு இருந்தீங்க?எங்கெங்கே போனோம்,எந்தெந்த டாக்டருங்களெப் பாத்தோம் என்னென்ன சொன்னாங்க.அவ்வளவையும் ஒண்ணு விடாமெ சொல்லிட்டபிறகும் இப்படிக் கேட்டா எப்படி சார்?எல்லோருமே ஆபரேஷன்னு சொல்றீங்களே சார்.இதை விட்டா வேறெ வழியே இல்லையா?கேட்ட கேள்விக்கெல்லாம் ஒழுங்கா பதில் சொன்னேன்லே.என்ன சார் தப்பு கண்டீங்க?
ஒருடாக்டரிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வாக்குவாதங்களைஇவ்வளவு விலா வாரியாக எப்படிச் சொல்ல முடிகிறது என்கிறீர்களா?அந்த நிமிடம்(க்ஷணம் என்று சொல்வார்களே)என் வாழ்க்கையைத் திருப்பிப்போட்டது இந்த ஆவேசமான எனது பதில் தான்.
என்னடா(டீ!)இது வரைக்கும் பார்த்த எந்த டாக்டரும் இவ்வளவுகேள்விகளைக் கேட்கவில்லையே.எப்போ பிறந்தே,எப்பொ வயசுக்கு வந்தே,எப்போ கல்யாணமாச்சி,எத்தனை குழந்தைகள்,மாதவிடாய் எப்பப்பொ ஆகுது?கேள்வியாம் கேள்வி. கொஞ்சங்கூட சம்பந்தம் சம்பந்தமில்லாமெ.டாக்டராம் டாக்டர்!
இப்படித்தான் என் மனதில் எண்ணங்கள் தறிகெட்டு ஓடின.
டாக்டர் ஒன்றும் பேசவில்லை.சிறிது நேரம் கழித்து நான் சுயநிலைக்கு வந்தேன்.என்னைப் பார்த்து எனக்கே கூச்சமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. டாக்டரிடம் உடனே மன்னிப்பு கேட்டேன்.
சார்.தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.ரொம்ப ஆவேசப்பட்டுட்டேன்.சாரி சார்.
இதெப் பாருங்க அனுராதா.நீங்க பேசியதிலே ஒண்ணுமே தப்பில்லே.பேசியது நீங்க இல்லே.உங்க உடம்பிலெ வந்திருக்கும் இந்த நோய் தான் இப்படிப் பேசுது.கவலைப்படாதீங்க.
இப்போது தான் டாக்டர் எனது பழைய மருத்துவ ரிக்கார்டுகளக் கேட்டார்.ஆராய்ந்தார்.அருகிலிருந்த ஒரு நர்ஸிடம் குறிப்புகளைச் சொன்னார்.பிறகு பேச ஆரம்பித்தார்.
இவ்வளவு நேரம் உங்களைப் பத்திக் கேள்விகள் கேட்டுத் தெரிஞ்சிகிட்டேன்.இப்ப நான் சொல்றதைக் கவனமாகக் கேளுங்க.உங்களைத் தாக்கியிருக்கிறது கேன்சர் நோய் மூன்றாவது ஸ்டேஜ் தான்.அது எப்படி வந்திருக்க வாய்ப்பு இருந்ததுன்னு கண்டுபிடிக்கத் தான் இவ்வளவு கேள்விகளைக் கேட்டேன்.
நம் உடம்பே வெறும் செல்களால் ஆனது.உடம்பைப் பகுதி பகுதியாப் பிரிச்சுஆராய்ஞ்சோம்னா கடைசிலே பிரிக்கமுடியாமெ ஒரு பார்ட்லெ வந்துநிக்கும்லெ.அது தான் செல். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.இம்மாதிரிப் பிரிக்கிறதுக்கே பல விஞ்ஞான முறையல்லாம் செஞ்சாங்கணும்.அதெ விடுங்க.
இந்த செல்லுன்னு சொன்னேன்லியா.அது எப்பவும் வளர்ந்துகிட்டே இருக்கு.எப்படி?ஒன்னு ரெண்டாகுது அந்த ரெண்டும் நாலாகுது,நாலும் எட்டாகுதுஎட்டு பதினாறாகுது.இப்படியே ரெட்டை ரெட்டையாப்பிரிஞ்சுகிட்டேஇருந்தா பிரசனையே இல்லே.ஆனா சில பேர்களுக்கு ஒன்னு மூணாப் பிரியஆரம்பிக்கும்.அல்லது வேற எண்ணிக்கையிலெ பிரியும்.அப்படிப் பிரிஞ்ச செல்களும் மூணாவோ,நாலாவோ பத்தாவோ கணக்கில்லாமே பிரிய ஆரம்பிக்கும்.இயற்கைநியதி என்னன்னா,ஒரு செல் ரெண்டாத் தான் பிரியணும்.ஒரு உதாரணத்துக்குஉங்க உடம்பிலெ பத்து லட்சம் செல் இப்போதைக்கு இருக்குன்னு வச்சுக்குவோம்.அதுகள்ளாம் பிரியும்போது இருபது லட்சமாத்தான் பிரியணும்.நீங்க என்ன சொல்றது.நானென்ன கேக்குறதுன்னு அது பாட்டுக்கு இருபத்தெட்டு லட்சமோநாப்பத்தொன்பது லட்சமோ பிரிய ஆரம்பிச்சாசின்னா........
அது தான் கேன்சர் என்று அழைக்கப்படும் நோய்.கரையான் புற்றைப்பாத்திருக்கிங்களா?அதிகமா வளர்ந்த இந்த ஒழுங்கில்லாத செல்கள் பாக்குறதுக்கு புற்றாட்டம் இருக்கும் அதனாலேதான் இதுக்குப் புற்றுநோய்ன்னு பெயராயிருச்சு.இந்த நோய் வருவதற்கானசரியான காரணம் இன்று வரைகண்டுபிடிக்கப் படவில்லை.ஆனால் மருத்துவமும் விஞ்ஞானமும் வளர்ந்த இன்றைய காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டமக்களை வைத்து இது குறித்துப் புள்ளிவிவரம் எடுக்க ஆரம்பிச்சாங்க.இதை வச்சு சில உண்மைகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க.என்ன உண்மைகள் அப்படீங்கிறீங்களா?சிலதெச் சொல்றேன்.
பெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோய் மட்டும் எடுத்துக்கிட்டோம்னா,ரொம்ப லேட்டா வயசுக்கு வருகிற பெண்களுக்கு இந்த நோய் வர்ரதுக்கு வாய்ப்பு இருக்கு.
ரொம்பொ லேட்டா குழந்தை பிறந்தாலும் இந்நோய் வரலாம்.
மாதவிடாய் பிரச்சனையாலெ மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாலும்பிற்காலத்தில் இந்நோய் வரலாம்.
உங்க பெற்றோர்,தாத்தாக்கள்,பாட்டிகள் இப்படி உங்க முன்னோர்கள் யாருக்காச்சும் இருந்துச்சுன்னா அது உங்களுக்கும் வர வாய்ப்புண்டு.
இப்படிப் பல உண்மைகள் கண்டுபிடிச்சாங்க.இன்னும் கண்டுபிடிச்சிகிட்டேஇருக்காங்க.
இப்படி எதிலேயும் இல்லாமெ இருந்தாலும் வரலாம்.
பொதுவா பெண்களுக்கு நாப்பது வயதைத் தாண்டினாலே தினமும் செக் செஞ்சிக்கணும்.அது ஒண்ணும்பெரிய விஷயமில்லே.காலையிலெ குளிக்கும்போதே உங்க இரண்டு மார்பகங்களையும் நன்றாகத் தடவியும் அமுக்கியும் பார்த்து ஏதாவது வேறுபாடுகள்,கட்டிகள் தெரிகின்றனவா,உணரமுடிகிறதா என்று செக் செய்து கொண்டாலே போதும்.கணவன் மனைவிகளைப் பொறுத்த வகையில் இரவு தாம்பத்திய வாழ்க்கையின்போதே தெரிந்துவிடுமே.அப்படி ஏதேனும் வேறுபாடுகள் தெரிந்தாலோ உணரமுடிந்தாலோ தாமதிக்காமல் தகுந்த மருத்துவரை அணுக வேண்டும்.இப்படி கொஞ்சமும் தாமதிகாமல் கண்டுபிடிக்கப்படும் கேன்சர் கட்டிகளை முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.
லேட்டா வந்தா.........நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை தரப்படும்.
டாக்டர் நிறுத்தினார்.
திரைப்படம் பார்க்கும் போது உணர்சிகரமான ஒரு வசனத்தை நம்மை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் போது "சட்"டென்று இடைவேளை என்று போட்டால் அப்போது தான்முழிப்பு வருமே.அந்த மாதிரி ஒரு முழிப்பு வந்தது.ஆஹா.இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா.இப்படியெல்லாம் இருக்கிறதா.திக்பிரமை பிடித்தவளாய் உட்கார்ந்திருந்தேன்.
என்ன சொல்லுகிறீர்கள் அனுராதா?
ஒண்ணுமில்லே சார்..........
என்ன இழுக்கிறீங்க?
பாத்தா ரொம்ப நல்லவராத் தெரியிறீங்க!எந்த டாக்டரும் இவ்வளவு விவரமா விளக்கிச் சொன்னதில்லே.இவ்வளவு கேள்விகளையும் கேட்டதில்லே.ரொம்பத் தேங்ஸ் சார்.உங்க மேலே எனக்கு முழு நம்பிக்கை வந்துருச்சு.எனக்கு ஆபரேஷன் மட்டும் வேணாஞ் சார்.வேறென்ன சிகிச்சை செஞ்சாலும் ஓகே சார்.
டாக்டர் பரிதாபமாக என்னைப் பார்த்தார்.அதாவது டாக்டரைப் பார்க்கஅவ்வளவு பரிதாபமாக இருந்தது!
இதப் பாருங்க அனுராதா,மெடிகல்லெ இது இதுக்கு இப்படித் தான்னு விதிமுறையே இருக்கு.ஒரு பந்தல் போடணும்னா நாலு கால் நட்டு அதுக்கு மேலேமேயறோம்லியா.அந்த விதிமுறைகளை எப்படிம்மா மீறுவது?
சார்.ஆபரேஷன் செஞ்ச பிறகு எப்படி சார் வெளியே நடமாட்றது.அபார்ட்மெண்ட்லெ பாக்குற மத்த பெண்களெல்லாம் எங்கிட்டே நெருங்கிப் பேசவே பயப்படுவாங்களே சார்.வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு நான் அவல் ஆகி விடுவேனே சார்.சொந்த பந்தங்களெல்லாம் தூர விலகி விடுமே சார்.ஒரு கல்யாணம் காச்சிக்கும் போகமுடியாமெ போயிடுமே சார்.மீறிப் போனாலும் ஒரு ஆளும் முந்தி மாதிரி நெருங்கிப் பேசமாட்டார்களே சார்.ஒரு பொண்ணுக்கு மார்புங்கிறது குழந்தைக்குப் பால் கொடுக்கிறதுக்கு மட்டுமில்லையே.பொண்ணுன்னு சொல்றதுக்கு வெளிப்படையாத் தெரியிற உறுப்புல்லையா?அதை இழக்கஎந்தப் பெண் சார் சம்மதிப்பாள்?வேண்டாம் சார். நான் சம்மதிக்க மாட்டேன்.
ஏன் சார்.சூரியன் தான் பூமியெச் சுத்துதுன்னு ரொம்ப காலமா நம்பிகிட்ருந்தோம்.பூமிதான் சூரியனைச் சுத்துதுன்னு ஒருத்தர் கண்டுபிடிச்சபிறகு நம்பிக்கை மாத்திகிட்டோம்லியா?
ஆயிரந்தடவை முயற்சி செஞ்சு தோல்வியடைஞ்சும் மனந்தளராமெ மீண்டும் ஆயிரத்துஓராவது தடவையா முயற்சி செஞ்ச்ப்பொ தானே எடிசன்றவரு பல்பைக்கண்டுபிடிச்சாராம்.அது மாதிரி நீங்களும் ஒரு முயற்சி செய்யுங்களேன்.
விதிமுறைகள்ளாம் சாதாரணமானவர்களுக்கு மட்டுந்தான்னு கேள்விப்பட்ருக்கேன்.உங்க மாதிரி டாக்டருங்கல்லாம் அதுக்கெல்லாம் அப்பார்பட்டவங்க இல்லையா?நீங்களும் முயற்சி செஞ்சி பாருங்க சார்.ஆபரேஷன் மட்டும் வேண்டவே வேண்டாம்.
இப்படியாக டாக்டருக்கும் எனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நர்சுகளும்,அலுவலர்களும் வியப்புடன்ஆ...என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
கடைசியாக டாக்டர் என் வேண்டுகோளுக்குச் சம்மதித்தார்.
அனுராதா.ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.நான் ஆரம்பிக்கும்இந்த சிகிச்சைமுறை என் விருப்பப்படியல்ல.உங்கள் விருப்பப்படி.அதாவதுஎன்னமாதிரி சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோஅதன்படியேதான் கொடுக்கப்படும்.
ரொம்ப சந்தோஷம் சார்.
இன்னொன்று.இந்த சிகிச்சை முடியும் வரை இங்குதான் சிகிச்சையை மேற்கொண்டீர்கள் என்றோ நான் தான் சிகிச்சை அளித்தேன் என்றோவெளியில் யாரிடமும் பகிரங்கமாகக் கூறக் கூடாது.
கண்டிப்பாக சார்.யாரிடமும் கூறமாட்டேன்.
ம்..........நாளை மார்னிங் ஒன்பது மணிக்கெல்லாம் இங்கு வந்து விடுங்கள்.நிறைய டெஸ்ட்கள் எடுக்க வேண்டும்.
சரி சார். வந்துவிடுகிறேன்.
போய் வாருங்கள் என்பதற்கு அடையாளமாக இரு கரமும் கூப்பினார்.
வெளியே வரும்போது என் கணவர் சற்றுப்பின் தங்கினார்.
டாக்டர் ஏதோ கேள்வி கேட்பதும் என் கணவர் அதற்குப் பதில் சொல்வதும் கீழ்க் கண்டவாறு என் காதில் விழுந்தன.
"ரொம்பப் படிப்பாங்களோ?
ம்..ரொம்பப் பேசவும் செய்வாங்க!!
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
தோழி,
உங்களுடனே இருந்து மருத்துவர் சொல்லவதையெல்லாம் நேரடியாக கேட்டது போல் ஒரு உணர்வு.
விளக்கமாக பதிலளித்த டாக்டர் எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளார். அமெரிக்காவில் நோயாளிகளிடம் முழு உண்மையையும் பக்குவமாய் கூறுவதோடு மட்டுமில்லாமல், அதன் பின் அவர்கள் மனநிலை சிதலமடையாமல் இருக்க கவுன்சிலிங் குரூப்புக்கு அனுப்புவார்கள். ம்ம்ம்... நம் நாட்டிலும் இந்த முறை இருக்கிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 10 வருடங்களுக்கு முன் இவ்வாறில்லை.
உங்கள் கணவருக்கு என் வணக்கத்தை கூறவும்.
நன்றே நடக்க இறைவனைப் பிராத்திக்கிறோம்.
அன்புடன்,
காட்டாறு
ஆரம்பத்தில் உங்களை மிக மூத்தவராகக் கருதினேன்.
இப்போ என் அக்கா வயதுதான் உங்களுக்கு என அறிந்தேன்.
சகோதரி!
மிகப் பயனுள்ள தகவல்கள் பல இந்த உரையாடலில் கிடைத்தது.
தங்கள் அனுபவம் ,எங்களுக்குப் பாடம்
அனு அக்கா,ஒவ்வொரு பதிவும் உங்க பக்கத்துல நின்னுகிட்டு இருந்த மாதிரி இருக்கு. இந்தப் பகுதி .. அப்பப்பா நேரில பார்த்த மாதிரியே ஒரு உணர்வு
தன்னுடைய கஷ்டத்திலும் தான் அறிந்து கொண்டவைகளை பிறகு ஒரு சேவையாகக் கருதி பகிர்ந்து கொள்ளும் உங்களின் மனோ பக்குவத்தை எண்ணி மிகப் பெருமையாக இருக்கிறது... தொடருங்கள்...
Hey, anony, do you know what you are talking about? When someone find out and goes through a shock of an unbelievable disease has struck her, how she would react; can you be in her shoe and think that way a minute?
No matter with what kind of great doctor you are talking to, when it comes to your own life and it is threated, you would react just like how Anuradha behaved with the doctor, of course, you have alrights to discuss with your doctor as to know what kind of procedure he is going to employ on you...
So, please restrain your mouth and speak appropriately, if not just walk away quietly, man...
!!!!!
எதேச்சையாக படிக்க ஆரம்பித்து, எண்ண அலைகளிலும் கேள்வி அலைகளிலும் சிக்கி நிற்கிறேன்!
எனது தாயின் வயதுதான் உங்களுக்கு! திடமாயும் தீவிரமாயும் போராடும் உங்கள் குணம் அனைவரும் பின்பற்றத் தேவையானது!
உங்கள் வலியை அனைவருக்கும் அறியத் தருவது எளிதான செயலுமல்ல! பேசத் தயங்கும், பேசவே மறுக்குமளவு மனவலியைத் தாங்கி எழுத வந்திருக்கும் உங்களின் மன வலிமை பெரிது! சீரான இயல்பான எழுத்துநடை உங்களின் உள்ளப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.
எழுத வேண்டியன எழுத/எழுதி வந்திருக்கும் உங்கள் நோய் முற்றிலும் குணமாகுமென நம்புவோம்!
அன்புடன்,
நம்பி.பா.
அனு,
அட்டகாசமா எழுதிட்டீங்க.
நாளைக்கு உங்கள் திருமணநாள். அதற்கு எங்கள் இனிய
வாழ்த்து(க்)கள்.
உங்க வயசு ஒரு வயசே இல்லைப்பா. ரெண்டு பேரும்
வாழ்க்கையை நல்லா அனுபவிங்க.
அனுராதா, இந்த மாதிரி எனக்கு வேண்டுமென்ற மாதிரி சிகிச்சைதான் தர வேண்டும் என்ற நிலைப்பாடு சரியா? எனக்குத் தெரியவில்லை. நமக்கு தெரியாத விஷயங்களில் அதற்கென தனிப்பட்ட படிப்பின் மூலம் தகுதி பெற்றவர்கள் சொல்வதைத்தானே கேட்க வேண்டும்?
ஏன் இப்படி நான் நினைத்த மாதிரி சிகிச்சை தரும் மருத்துவரிடம்தான் போவேன் என்ற நிலைப்பாடு எடுத்தீர்கள்?
உங்களுடனே இருந்து மருத்துவர் சொல்லவதையெல்லாம் நேரடியாக கேட்டது போல் ஒரு உணர்வு.
இதே உணர்வு தான் எனக்கும்.
காட்டாறு கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்.
நாளை திருமண நாளா? சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
நல்ல ஒரு விளக்கம். நானும் அதே அறையில் நின்னு டாக்டர் சொல்வதை கேட்பதைப்போல் உணர்ந்தேன்.
உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்
உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள். ஒளிவு மறைவு இல்லாமல் அறிவுரை தருபவர்கள் இந்த உலகத்தில் குறைவு உங்கள் சேவை போற்றத்தக்கது. ஆனாலும் ஒரு சந்தேகம்.
உங்களுக்கு கர்ப்பபையிலும், கல்லீரலிலும் புற்று நோய் பரவ காரணம் என்ன? முறையாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் இது போல பரவி இருக்காதா? இந்த புதிய சிகிச்சைதான் இப்படி நோய் மேலும் பரவ காரணமா?
அப்புறம் இலவசக்கொத்தனார் கேட்டதையே நானும் கேட்கிறேன்...
//அனுராதா, இந்த மாதிரி எனக்கு வேண்டுமென்ற மாதிரி சிகிச்சைதான் தர வேண்டும் என்ற நிலைப்பாடு சரியா? எனக்குத் தெரியவில்லை. நமக்கு தெரியாத விஷயங்களில் அதற்கென தனிப்பட்ட படிப்பின் மூலம் தகுதி பெற்றவர்கள் சொல்வதைத்தானே கேட்க வேண்டும்? //
பொறுங்கள் பிபட்டியான் அவர்களே.உங்கள் சந்தேகங்களுக்கு விடை விரைவில் வரும்.
HAPPY WEDDING ANNIVERSARY. ANURADHA.
KEEP YOUR COURAGE AND TAKE CARE.
திருமண நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்துப் படித்து வருகிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் போது் நெருங்கிய தோழியோ, கூடப்பிறந்த சகோதரியோ அருகில் உட்கார்ந்து பல விஷயங்களை விளக்கியது போல் இருந்தது.
உங்கள் கணவருக்கு என் வணக்கங்கள். நீங்கள் மிக நன்றாய் இருக்க வேண்டும் என்று மண்தார வேண்டுகிறேன்.
அம்மா,
திருமண நாள் வாழ்த்துக்கள்.
வாங்க நந்தா மற்றும் இந்திரஜித்.நன்றி
Post a Comment