Saturday, October 13, 2007

ரேடியேசனின் பின்விளைவுகள்

2003 அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்துடன்ரேடியேசன் மொத்தம் இருபத்து ஐந்து சிட்டிங் முடிந்தது.ஒவ்வொரு நாளும் மலர்ந்த முகத்துடனும் நன்றாக சேலை அணிந்துகொண்டும் மருத்துவமனைக்குச் செல்வேன்.அங்கிருக்கும் வரவேற்பாளர் முதல் நர்ஸ்,ரேடியேசன் கொடுக்கும் டெக்னீசியன் உள்பட அனைவருமே என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.சில நோயாளிகள் மூன்றாவது நான்காவது முறை ரேடியேசன் கொடுக்கும்போதே உடல் தளர்ந்தும் சோர்ந்தும் நடப்பதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே வருவார்களாம். இதைக் கேட்டுப் பெருமிதம் கொண்டேன்.மகிழ்ச்சியாக இருந்தது.இது பொய்யான தற்காலிகமான மகிழ்ச்சி என்று அடுத்து வந்த நாட்கள் நிரூபித்தன.
ரேடியேசன் முடிந்து மூன்று நான்கு நாட்கள் கழித்து ரேடியேசன் கொடுக்கப்பட்ட வலது மார்பகத்தில் வலி ஆரம்பித்தது.மறுநாளே மேல்தோல் சற்று சுருங்கியது.சுருக்கம் விழுந்த பகுதிகளில் புண்கள் தோன்றின.வலி நாளுக்கு நாள் அதிகமானது.ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் டாக்டரைத் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தேன்.ஒரு வாரம் சென்றதும் மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டார்கள்.டாக்டர் என்னைப் பரிசோதிக்கும்போது மார்பகம் முழுவதும் புண் ஆகியிருந்தது.கை நிறைய பஞ்சு எடுத்துக்கொண்டார்.அருகில் இருந்த நர்ஸிடம் ஒரு கண்ணாடி பாட்டிலைக் கொடுத்தார்அதில் முழுதும் தண்ணீர் மாதிரி ஒரு மருந்து இருந்தது.(லோக்கல் அனஸ்தீசியா மருந்து என்பதைப்
பிற்பாடுஅறிந்து கொண்டேன்.)"இதோ பார். நான்பஞ்சினால்இந்தப்
புண்களைத் துடைத்து விடும்போதே இந்தப் பாட்டிலில் உள்ள மருந்தைத் தாராளமாக மார்பகம் பூராவும் ஊற்ற வேண்டும். ஒரு வினாடி கூடத் தாமதிக்கக் கூடாது."என்று சொல்லிவிட்டுக் கண்மூடிக் கண் திறப்பதற்குள் கையிலுள்ள பஞ்சைக் கொண்டு மார்பகம் பூராவையும் அழுந்தத் துடைத்து விட்டார். நர்ஸும் உடனே அந்த தண்ணீர் மாதிரி இருந்த மருந்தை மள மளவென்று ஊற்றினார்.டாக்டர் துடைப்பதற்கும் நர்ஸ் மருந்தை ஊற்றுவதற்கும் மூன்று அல்லது நான்கு வினாடிகள் தான் ஆகியிருக்கும்.ஏற்கன்வே வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது.கத்தக் கூட முடியவில்லை.நர்ஸ் மருந்து ஊற்றியதுமே வலியும் உடனே குறைந்து விட்டது. மார்பகத்தைப் பார்த்தேன்.புண்கள் முழுதும் துடைக்கப்பட்டு மேல் தோல்பெரும் பகுதி காணோம்.பின்னர் புளு கலரில் இருக்கும் திரவ மருந்தை மார்பகம் முழுவதும் ஊற்றினார். பேண்டேஜ் துணியை சிறு கட்டம் கட்டமாக வெட்டி புண் இருந்த இடங்களில் வைத்து அதன் மேல் பஞ்சு வைத்து மீண்டும் புளு கலர் மருந்தை ஊற்றினார்.
பிறகு என் கணவரை அழைத்து மேற்சொன்னபடிஎப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.தினமும் பலமுறை இவ்வாறு பேண்டேஜ் துணி,பஞ்சு வைத்து மருந்து ஊற்ற வேண்டும் என்றார்.உட்கொள்ள சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.
படுக்கை அறையிலுள்ள குளிர் சாதனப் பெட்டியை உபயோகிக்கக்கூடாது என்றும்
ஒரு பெடஸ்டல் மின் விசிறியை வாங்கி அதிகபட்ச வேகத்தில் காற்றுப்
படும்படி வைத்துக்கொள்ளுமாறும் டாக்டர் கூறினார்.அத்துடன் வீட்டுக்கு வந்தோம்.
வரும் வழியில் துணிக்கடைக்குச் சென்று பத்து ஃபுல் ஓபன் நைட்டிகள் மொத்தமாக வாங்கினோம்.கழுத்து வரை ஓபனாகத் தைக்கப்பட்ட
நைட்டிகளை அணிந்து கொள்வதில் மிகுந்த சிரமமாக இருந்தது.
வரும் வழியிலேயே மீண்டும் வலி ஆரம்பித்தது.இப்போது வலியுடன் சரியான எரிச்சலும் சேர்ந்து கொண்டது.
வலது கை அவ்வளவாகத் தூக்க முடியவில்லை.துணி பட்டாலே எரிந்தது.வீட்டுக்கு வந்தபின்
நைட்டியை(அதைத் தான் உடுத்திக்கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன்.)க் கழற்றிப்
பார்த்தால் மார்பகம் முழுவதும் நீர் சுரந்து ஈரமாகி நைட்டியும் நனைந்திருந்தது.என் கணவர்
பஞ்சினால் லேசாகத் துடைத்தார்.வலி உயிர் போனது.கத்தோ கத்து என்று கத்திவிட்டேன்.என் கணவர் மிரண்டு விட்டார்.லேசாகத் துடைத்தாலே எரிந்தது.
பேண்டேஜ் துணியால் ஒற்றி ஒற்றி எடுத்தார்.புது பேண்டேஜ் துணிகளை கொஞ்சம் கனமாக இருக்கும் வகையில் நான்காக மடித்துச் சதுரங்களாக வெட்டி மார்பகம் முழுதும் வைத்து
அதன் மேல் புளு மருந்தை ஊற்றினார்.சீலிங் மின்விசிறியையும் பெடஸ்டல் மின்விசிறியையும் அதிகபட்ச வேகத்தில் வைத்தும்
எரிச்சல் குறையவில்லை.படுக்கையில் படுக்க முயன்றேன்.முடியவில்லை.பெட் ரூமிலேயே ஒரு சேரைப் போடச் சொல்லி அதில் இரண்டு போர்வைகளை மடித்துப் போடச் சொல்லி சேரில் உட்கார்ந்து கொண்டேன்.
அன்று சாயங்காலத்திற்குள் பத்துப் பதினைந்து தடவை பேண்டேஜ் துணி,பஞ்சு மாற்றி
புளு மருந்தை ஊற்றி விட்டார்.
இரவானதும் மீண்டும் படுக்க முயன்றேன்.முடியவில்லை.அப்படியே சேரில் அமர்ந்தவாறே தூங்கினேன்.தூக்கம் வரவில்லை. இரவு நீண்ட நேரம் என் கணவர்
அருகில் நின்றுகொண்டு அடிக்கடிபேண்டேஜ் துணி,பஞ்சு மாற்றி புளு மருந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
மறுநாள் விடிந்தது.விழித்துப் பார்த்தால் சேரிலேயே தூங்கியிருக்கிறேன்.
மெதுவாக எழுந்து பல் விளக்கி காலைக் கடன்களை முடித்தேன்.என் கணவர் தேநீர்
தயாரித்துக் கொடுத்தார்.அடுத்தத்தாகக் குளிக்க வேண்டும்.மார்பகத்தில் தண்ணீர் படாமல்
குளிக்கவேண்டும்.அதற்கு என் கணவர் ஒரு தீர்வு கண்டார்.
கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொண்டார்.
ஒரு முனையை நீளவாக்கில் கத்தரித்தார்.இப்போது பார்த்தால் மழையில் நனையாமலிருக்க
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குழந்தைகள் தலையில் போட்டுக் கொண்டு செல்வார்களே
அது மாதிரி இருந்தது.மேல்முனையில் குறுக்காகக் கை நுழையும் அளவுக்குக் கத்தரித்தார்.
அவ்வளவு தான்.அதில் வலது கையை மெதுவாகவும் கவனமாகவும் நுழைத்தேன்.
வலது மார்பகம் முழுதும் கச்சிதமாக மறைத்திருந்தது.ஆகத் தண்ணீர் படாமல்
குளிக்க வழி கண்டாகிவிட்டது.
இப்படியே ஒருவாரம் கழிந்தது.தினமும் படுக்கையில் படுக்க முயல்வேன் முடியவில்லை.
சேரில் அமர்ந்தவாறே தூங்கப் பழகிக் கொண்டேன்.அவ்வாறே கிட்டத்தட்டப் பத்து நாட்கள்
தூங்கியிருப்பேன்.அது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு என்பதைப் பிற்பாடு
தெரிந்துகொண்டேன்.
இந்த இடத்தில் என் கணவரைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும்.
வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தவர்,முப்பத்து ஒன்பது ஆண்டுகளாகப் பணியாற்றி தாசில்தார் நிலையிலும் பணிபுரிந்து பின் என் உடல்நிலையை
உத்தேசித்து இரு ஆண்டுகள் முன்னதாகவே தன்விருப்ப ஓய்வு பெற்றவர்.அவர் கையாண்ட எந்த ஃபைலைப் பார்த்தாலும் கண்ணில் வைத்து ஒற்றிக் கொள்ளும்படியாக இருக்கும் .அவ்வளவு நேர்த்தியாகவும்,பக்கங்கள் சீராகவும் கிட்டத்தட்ட பைண்டிங்
செய்தது போலவே இருக்கும்.அவர் படிக்கும் காலத்தில் அவரது தந்தையார்(எனது மாமனார்)
மதுரையில் பேப்பர் கடை மற்றும் பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார்.தினமும் பள்ளி முடிந்ததும்
நேராகக் கடைக்குச் சென்று விடுவார்.கடையில் பேப்பர்களை லாவகமாகக் கையாள்வதிலும்
சீராக அடுக்குவதிலும் அவருக்கு நிகர் அவர் தான்.கடையிலும் அலுவலகத்திலும் பழகிய பழக்கம் இங்கே வீட்டில் பஞ்சையும் பேண்டேஜ் துணியையும் அளவாகவும் சீராகவும் வெட்டுவதில் கை கொடுத்தது.
பத்து நாட்கள்கழித்து மீண்டும் மருத்துவமனைக்குச் சென்ற போது மார்பகத்தில்
வைக்கப் பட்டிருந்த பேண்டேஜ் துணிகளையும் பஞ்சையும்எடுத்த டாக்டர்
மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டார்.
"யார் இவ்வளவு நீட்டாக வெட்டி வைத்தது?யாராவது நர்ஸை வீட்டில் வேலைக்கு
வைத்திருக்கிறீர்களா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே டாக்டர்.நான் தான் வெட்டி வைத்திருக்கிறேன்"என்றார் என்
கணவர்.
எக்ஸலண்ட் ஜாப்.எங்க ஸ்டாப் கூட இவ்வளவு நேர்த்தியாக டிரஸிங் செய்ய முடியாது.
என்று டாக்டர் பாராட்டினார்.
அடுத்து மார்பகத்தைப் பரிசோதித்தார் டாக்டர்.புண் ஆறவேயில்லை.மாறாக மார்பகத்தின் அடிப் பக்கம் உரசும் இடத்தில் புண் பரவி இருந்தது.டாக்டர் ஒரு நிமிடம் திகைத்தார்.
இந்த இடத்தில் எப்படிப் புண் ஆனது?ஆகாதே!என்றார்.எங்களைப் பல வகையில் விசாரித்தார்.
இறுதியாக "இரவு எப்படித் தூக்கம் வருகிறது?"என்று கேட்டார்.
"எங்கே சார் தூங்குறது?ஒரு பக்கம் வலி. மறு பக்கம் எரிச்சல்.தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தூங்கினாலும்
தூக்கம் வரமாட்டேங்கிறது.ஒரு வழியா சேரில் உட்காந்துகிட்டே தூங்குறேன்."
"என்னது சேரிலேயா?"
"ஆமா சார்."
"எப்படி?'
"இப்படித்தான்.இப்ப நான் உக்கர்ந்திருக்கேன்லே.இதேமாதிரி தான்."
அப்படியே டாக்டர் என்னை முறைத்துப் பார்த்தார்."அது தான் இங்கேயும் புண் ஆகியிருக்கு!"
என்றார்.இப்படியே சேரில் உட்கார்ந்துகிட்டே தூங்கினா புண் ஆறவே ஆறாது. மார்பகம் உரசும் இடத்தைப் பாருங்க.எப்படிப் புண்ணாகியிருக்குன்னு.''
டாக்டரே பஞ்செடுத்துச் சுத்தம் செய்து மீண்டும் மருந்திட்டார்.உட் கொள்ளமாத்திரைகளை

எழுதிக் கொடுத்தார்.இன்னையிலேருந்து பெட்டில் தான் படுக்க்கவேண்டும்.அவ்வப்போது எழுந்து உட்காரலாமே தவிர பெரும்பாலும் படுத்தே இருக்க வேண்டும்."என்றார்.
டாக்டரிடம்"ஏன் சார்.இந்தப் புண்கள் எப்போதுதான் ஆறும்.?"என்று கேட்டேன்.
"கவலைப்படாதீங்க.சீக்கிரமே ஆறி விடும்"
இப்படியாக நாட்கள் வாரங்களாகி மாதங்களாகிக் கழிந்தன.

12 comments:

CVR said...

இறைவா!!
அப்புறம் புண்கள் எல்லாம் எப்பொழுது ஆறியது??

அனுராதா said...

புண்கள் ஆறி மீண்டும் வந்து மீண்டும் ஆற மூன்றரை ஆண்டுகள் ஆனது.இருப்பினும் அதன் பாதிப்புகள் இன்னும் இருக்கிறது.நன்றி சிவிஆர் அவர்களே.

cheena (சீனா) said...

புற்று நோய்க்கு இன்னும் முறையான தீர்வு காணப்படவில்லை. ரேடியும் - கீமோதெரபி = இவை யெல்லாம் பக்க விளைவுகளைக் கொண்டவைதான். பயனாளிகள் படும் துயரம் எழுத்தில் வடிக்க முடியாது. என் தாய் புற்று நோயினால் 1976-1987 காலகட்டத்திலேயே மருத்துவ முறைகள் முன்னேறாத காலத்தில் ரேடியம் கீமோதெரபி முறைகள் மூலம் சிகிச்சை பெற்றவர்கள். அவர்கள் அடைந்த துன்பம் கூடவே இருந்த எனக்குத் தான் தெரியும்.

ஆண்டவனைப் பிரார்த்திப்பதை விட எனக்கு வேறு வழி தெரியவில்லை. தங்களுக்கு ஆறுதல் கூற.

துளசி கோபால் said...

அனு,

படிக்கும்போதே வலியால் எப்படித் துடிச்சுப் போயிருப்பிங்கன்னு தெரியுது.

வருத்தமா இருக்கு(-:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி!
படிக்கவே வேதனையாக உள்ளது.
உங்கள் மனோதைரியம் பிரமிக்க வைக்கிறது.
தங்கள் கணவர் ,கணவான்..

CVR said...

நான் உங்க பையன் வயசுதான் இருப்பேன்!
எனக்கு எதுக்கு அவர்களே எல்லாம்?? :-)

சின்ன அம்மிணி said...

அம்மாடி. எவ்வளவு கொடுமை இந்த ரேடியேஷன் தெரபி. இப்ப உங்களுக்கு முழுக்க குணமாயிடுச்சா

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

அழுதுகிட்டே படிச்சேன். உங்களுக்கு குணமாயிடுச்சுன்னு சொல்லுங்க ப்ளீஸ்! (சாமிகிட்ட வேண்டிக்கறேன்)...

கெ.பி.

வடுவூர் குமார் said...

எனக்கு... கத்தனும் போல இருக்கு.

அனுராதா said...

சீனா,துளசி கோபால்,யோகன் பாரிஸ்,சிவிஆர்,சின்ன அம்மிணி,
கெக்கேபிக்குணி வாங்க.என்ன ஒரே சோக மயமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?இளமை,காதல்,இன்பம்,மகிழ்ச்சி என்பன மட்டுமே வாழ்க்கையல்ல.சுவை என்று எடுத்துக்கொண்டாலே ஆறு சுவைகள் இருக்கின்றன.வாழ்வும் அப்படித்தான்.சோகம் என்பது ஒருவகை அனுபவம்.வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம்.யாருமே அழாதீர்கள்.வருத்தப்படாதீர்கள்.உங்கள் அனைவரின் ஆறுதல் மொழிகள் தான் எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய சிறந்த மருந்து.
மேலும் ஒரு விஷயம்.இன்றைய தலைமுறையினர் பலருக்கு இந்த நோயின் கொடுமை,பாதிப்பு குறித்து அவ்வளவாகத் தெரியவில்லை.உங்கள் ஒவ்வொருவரையும் என் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.உங்கள் ஒவ்வொருவரையும் நானாகவே என் குழந்தைகளாகவே பார்க்கிறேன்.எனவே இந்நோய் குறித்து ஒரு பெண் படும் துயரங்கள் உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்.
இந்தத் துயரம், துன்பம்,கொடுமை அனைத்துமே நான் ஒருத்தி மட்டும் அனுபவிப்பதில்லை.இந்த நோய் வந்த ஒவ்வொரு பெண்ணும் பட்டது.பட்டுக்கொண்டிருப்பது.இனியும் படப்போவது.இது...இது பெண்களுக்குக் கடவுள் கொடுத்த சாபம்.
அனைவருக்கும் நன்றி.

அனுராதா said...

தயவு செய்து கத்தாதீர்கள் வடுவூர் குமார்.இன்னும் இருக்கிறது.மன உறுதியுடன் படியுங்கள்.

Geetha Ramkumar said...

பதிவை படிக்க முடியவில்லை கண்ணீர் மறைத்தது. நீங்களும் உங்கள் கணவரும் நீண்ட நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நான் பிறந்த வருடமும் எழுபத்திரெண்டுதான்.