Friday, October 12, 2007

டி.எம்.எஸ்.அவர்களுடன் மற்றுமொரு சந்திப்பு

மறுநாளே திரு டி.எம்.எஸ்.அவர்களைத் தொடர்பு கொண்டோம்.அடுத்த சனிக்கிழமையன்று
காலைநேரத்தில்வரச் சொன்னார். டாக்டரிடம் உடனே விவரம் தெரிவித்தோம்.டாக்டருக்கு ஒரே சந்தோஷம்.அன்றைக்குரிய மற்றபணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு வந்துவிட்டார்.டி.எம்.எஸ்.அவர்களின் வீட்டை அடைந்தபோது காலை மணி பத்து இருக்கும்.டி.எம்.எஸ்.வெள்ளைப் பேண்ட்,வெள்ளை சர்ட் அணிந்திருந்தார்.எங்களைப் பார்த்தபின் வெளியே செல்ல ஆயத்தமாக இருக்கிறாரோ என்று எண்ணினேன்.டி.எம்.எஸ்.ஸும் அவரது மனைவியாரும் இன்முகத்துடன் வரவேற்றார்கள்.டாக்டரை அறிமுகப் படுத்தினேன்.
கதிரியக்க சிகிச்சை முறைகளைப் பற்றியும்,பலவிதமான புற்றுநோய்கள் அவைகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.எனக்கும் டாக்டருக்கும்ஒரேஆச்சரியம்.பிறகு திரைப்படப் பாடல்களைப் பற்றி பேசத் தொடங்கினோம்.சென்றமுறை எங்களிடம் கூறிய தகவல்கள் மட்டுமல்லாது பிற சுவாரசியமான தகவல்களையும் சொன்னார்.
அவரது இளமைக் கால வாழ்க்கை,திரையுலக அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்ட
தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.அது குறித்த டிரைலர்
சி.டி.யை டி.வி.யில் போட்டுக் காண்பித்தார்.சுமார் பதினைந்து நிமிடம் ஓடியது.நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் பேட்டி காணுவதாக அமைக்கப்பட்டிருந்தது.
தொடர் முழுதும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும்,ஸ்பான்ஸர் செய்ய சரியான நபர் அல்லது நிறுவனத்தைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.தினமும் அதிகாலையில் சாதகம்
செய்வதாகவும் சொன்னார்.முருகன் பாட்டுஒன்றையும் பாடினார்.குரலில் கொஞ்சமும் நடுக்கமில்லை. மதியம் இரண்டாகிவிட்டது.பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.ஒரு வழியாக விடை பெற ஆயத்தமானோம்.உடனே டி.எம்.எஸ்.தனது மனைவியாரிடம் இரண்டு சால்வைகளை எடுத்துவரச் சொன்னார்."நான் என்ன சாதனை செய்திருக்கிறேன்?ஏதோ வேறு தொழில் தெரியாமல் திரையுலகில் பாட்டுப் பாடி வந்தேன்.நீங்கள் இவ்வளவு பெரிய படிப்புப் படித்து டாக்டர் தொழில்
செய்து மக்களுக்கும் சமுதாயத்துக்கும் பெரிய சேவை செய்து வருகிறீர்கள்.என்னையும்
மதித்துப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழவும்
உங்கள்மருத்துவச் சேவை தொடரவும் என்னை ஆளும் அந்த முருகப் பெருமானை வேண்டுகிறேன்"என்று டாக்டரை வாழ்த்தி ஒரு சால்வையைப்
போர்த்தினார்.தனது பண்(பாட்டு)நாயகன் நூலையும் வழங்கினார்.இன்னொரு சால்வையை என் கணவருக்குப் போர்த்தினார். டாக்டர் அப்படியே டி.எம்.எஸ்.அவர்களின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசிகள் பெற்றுக் கொண்டார்.
அவரிடமிருந்து விடை பெற்று வெளியே வந்தோம்.
இன்றைய தினம் என்னால் மறக்கமுடியாது.ரொம்பத் தேங்ஸ் அனுராதா.என்றார் டாக்டர்.
டாக்டரிடம் விடை பெற்று நாங்கள் வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.

5 comments:

அறிவன் /#11802717200764379909/ said...

உங்கள் வலைப் பக்கத்தை இன்றுதான் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது.
உங்கள் நோக்கமும் உறுதியும் பாராட்டத் தகுந்தவை.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்.
என்ற நாவலன் வாக்கும்,
'...சற்றே என் காலருகே வாடா,உனை சிறு புல்லென மிதிக்கிறேன்' என்ற ஆசைக் கவிஞன் வாக்கும் நமக்கே..
உங்கள் உறுதியால் எதையும் வெற்றி கொள்வீர்கள்,உங்கள் அனுபவத்தை எழுத முன்வந்தது பாராட்டப் பட வேண்டிய செயல்.

வெற்றி said...

நல்ல பதிவு.
உங்களின் அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

/* அவரது இளமைக் கால வாழ்க்கை,திரையுலக அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்ட
தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார் */

பல சுவையான தகவல்கள் இத் தொடரின் மூலம் கிடைக்குமென நம்புகிறேன். வெளிவந்ததும் தவறவிடாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர்.

அனுராதா said...

வாங்க அறிவன் மற்றும் வெற்றி.வருகைக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நீங்கள் இவ்வளவு பெரிய படிப்புப் படித்து டாக்டர் தொழில்
செய்து மக்களுக்கும் சமுதாயத்துக்கும் பெரிய சேவை செய்து வருகிறீர்கள்.என்னையும்
மதித்துப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழவும்
உங்கள்மருத்துவச் சேவை தொடரவும் என்னை ஆளும் அந்த முருகப் பெருமானை வேண்டுகிறேன்"என்று டாக்டரை வாழ்த்தி ஒரு சால்வையைப்
போர்த்தினார்.//

அப்பப்பா...எவ்வளவு பெரிய மனம்..இன்று இதெல்லாம் அருகிவிட்டதே..
அர்மையான் செய்திகள்.

அனுராதா said...

நன்றி யோகன் பாரிஸ்.