வலது மார்பகத்தில் புண்கள் ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் வெளியுலகத் தொடர்புகளைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டேன்.வீட்டில் நான்,என் கணவர் இருவரைத் தவிர வேறு யாருமில்லை.சொந்தஊர் மதுரை.என் கணவர் பணி புரிந்தது திண்டுக்கல் மாவட்டம்.என் மூத்த மகள் சென்னையிலும் ஒரு மகனும் ஒரு மகளும் சிங்கப்பூரிலும் வாழ்கின்றனர்.அனைவருக்கும் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கின்றன.மருத்துவ சிகிச்சையை முன்னிட்டு நாங்கள் சென்னைக்குக் குடி வந்துவிட்டோம்.மூத்த மகளைத் தவிர வேறு நெருங்கிய /தூரத்து உறவினர்கள் என்று யாருமே அருகில் இல்லை.இது எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது.வெளியே எங்கும் செல்ல முடியாது.எங்கு செல்வது?எப்படிச் செல்வது?ரவிக்கை போடமுடியாது.மருத்துவ மனைக்கு நைட்டியுடன்செல்லும் போதே இந்தா அந்தா என்று ஆகி விடுகிறது.எப்போ வீட்டுக்குத் திரும்புவோம் நைட்டியைக் கழற்றி வீசுவோம் என்று இருக்கும்.வீட்டுவேலைக்காரி வந்து போகும் நேரங்களில் ஒரு பெரிய துண்டைப் போர்த்திக்கொள்வேன்.தப்பித் தவறியும் எனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன்.சமயத்தில்
தரையைக் கூட்டுகிறேன் பேர்வழி என்று தடாலென்று அறைக்குள் நுழைந்துவிடுவாள் வேலைக்காரி.ஏனம்மா படுத்தே இருக்கிறீர்கள் என்று சில தடவை கேட்டுவிட்டாள்.முதுகு வலிப் பிரச்சனையம்மா என்று சொல்லி சமாளித்தேன்.நம் வீட்டு விஷயமோ விவகாரமோ வெளியே தெரிவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன.ஒன்று நாமே சொல்வது.இன்னொன்று வேலைக்காரி மூலம் பரவுவது.நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இம்மாதிரியான நேரங்களில் மனது அலை பாய்ந்தது.யாருக்கு என்ன தீங்கு
செய்தேன்?எனக்கு ஏன் இந்த நோய் வந்தது? ஏன் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது?எப்போது தீரும் இந்த நோவு?
இதைத்தவிர வேறு சிந்தனையே ஓடவில்லை.ஒரு நேரத்தில் இப்படியே
தாறுமாறாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால் பைத்தியமே பிடித்துவிடுமோ
என்று கவலைப்பட்டேன்.
குமுதம்,ஆனந்தவிகடன்,துக்ளக்,அவள் விகடன்,குமுதம் சிநேகிதி,மங்கையர் மலர் ஆகிய புத்தகங்களை நான் எப்போதுமே படிப்பதுண்டு.தற்போது படித்தாலும் கவனம் சிதறியது.படிப்பதில் நாட்டமே ஓடவில்லை.
இதைக் கவனித்த என் கணவர் மேற்கண்ட புத்தகங்களில்
உள்ள சுவையான தகவல்களைப் படித்துக் காண்பிப்பார்.அவர் ஒரு அறிவாளி.ஒரு காலத்தில் புத்தகப் புழுவாக இருந்தார்.எனவே மற்ற
நூல்களிலும் உள்ள பல பொதுஅறிவுத் தகவல்களையும் என்னிடம்
சொல்லிக் கொண்டே இருப்பார்.என்னைக் கவனிப்பதிலும்,உரிய நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதிலும்,அவருக்கு நேரம் சரியாக இருந்தது.அவர் ரிட்டயர் ஆனதிலும் ஒரு நன்மை இருக்கிறது என்றே நினைத்துக் கொண்டேன்.
என் வீட்டுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்குத் தையல் வகுப்பு யோகா வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள்.மேலும்கம்பு,கேழ்வரகு போன்ற தானியங்களை மாவாக்கி சத்து மாவு என்று விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.ஒருநாள் உடல் நிலை கொஞ்சம் தேறியிருந்ததால் அங்கு சென்று பார்த்துவிட்டு வருவோமே என்று போயிருந்தேன்.
எம்.எஸ்.சி.பட்டதாரிப் பெண்மணி ஒருவர் தன்னார்வ சேவையாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார்.கிட்டத்தட்ட அவர்தான் மேலாளர் எனலாம்.
நன்றாகப் பேசினார்.பழகினார்.சத்துமாவு உட்கொண்டால் என்னென்ன குறைபாடுகள் தீரும் என்று விளக்கினார்.பெண்கள் தொடர்பான பல கருத்துகளைச் சொன்னார்.எனக்கு ஒரு சிந்தனை ஓடியது.எனக்கு இந்த நோயை வந்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர் எப்படி அதை எதிர் கொள்வார்?அவரிடம் இப்படிக் கேட்டேன்".ஏங்க பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் பற்றி என்ன நினைக்கிறீங்க?"
"ஐயையோ!பிரஸ்ட் கேன்சர் வந்திருக்கிற பெண் என்றாலே காத் தூரம் ஓடிப் போயிடுவேன்!!பக்கத்திலேயே நெருங்கமாட்டேன்.அந்த நோய் நம்மளைத் தொத்திருச்சின்னா?"
எம்.எஸ்.சி.படித்த இந்தப்பெண்ணுக்கே இது தொற்றுநோயா இல்லையா என்று தெரியவில்லையே,படிக்காத பாமர மக்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள்?அடப்பாவமே!
சரிதான்.தவறான இடத்தில் இக்கேள்வியைக் கேட்டுவிட்டேன்போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.
நாளாக நாளாகப் புண்கள் ஆறிக்கொண்டே வந்தன.எனது சிந்தனைகளும் மாற
ஆரம்பித்தன.எப்படியாகிலும் இந்த நோயை வெற்றி கொள்ள வேண்டும்,
என்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகத் தோன்ற ஆரம்பித்தது.
Sunday, October 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
புற்று நோயை எதிர்த்துப் போராடும் சகோதரியே !! அதை வெற்றி கொள்ள வேண்டும் என நினைக்கும் - எண்ணும் உன் மனத்துணிவு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் எச்செயல் செய்தாலும் என்னால் முடிந்த அளவு உன் செயலில் உதவ விரும்புகிறேன்.
படித்தேன்...சொல்லுங்கள்.
வெல்வீர்கள் என்று நம்பிக்கை வருகிறது.
உங்கள் எண்ணம் கைகூட மனதார வாழ்த்துகிறேன்!! :-)
கண்டிப்பாக வெல்வீர்கள்...வாழ்த்துக்கள் ;-)
வாங்க சீனா,யோகன் பாரீஸ்,சிவிஆர்,கோபிநாத்.வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் வாக்குறுதிக்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment