Monday, October 15, 2007

ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்

2004 பிப்ரவரி மாத முடிவில் மார்பகத்தில் ஏற்பட்டிருந்த் புண்கள் ஏறத்தாழ முழுதும் ஆறி விட்டன.ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பொக்கு உதிராமல் இருந்தன.அரிப்பு தாங்க மாட்டாமல் லேசாகச் சொரிந்தாலே மீண்டும் ரணமாகிவிடும்.
2004 மார்ச் 2ந் தேதி அடுத்த செக்ககப்பிற்காக மருத்துவமனை சென்றேன்.வரிசையாக டெஸ்டுகள் எழுதிக் கொடுக்கப்பட்டன.பிளட் டெஸ்டிலேயே பல வகை,ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே,எக்கோ,அல்ட்ரா சவுண்டு,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளியர் ஸ்கேன் ஆகியவை எடுக்கப்பட்டன.5.3.2004 அன்று அனைத்து ரிசல்டுகளுடன் டாக்டரைப் பார்த்தோம்.ரிசல்ட் நன்றாக வந்திருப்பதாக டாக்டர் சொன்னார்.
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்பாடா!பட்ட துயரம் போதும்.இனிமேல் ஒரு பிரச்சனையுமில்லை.மற்ற பெண்களைப் போலவே உடலளவில் நானும் சாதாரண மனுஷியாகிவிட்டேன்.
டாக்டரிடம் என் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன்.
"எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை டாக்டர்.ரொம்ப தாங்ஸ் டாக்டர்."
"எனக்கென்னம்மா நன்றி.எல்லாம் அந்த இறைவனுக்குச் சொல்லுங்கள்."
"சரி சார்."
டாக்டர் மெள்ள ஆரம்பித்தார்."இதுவரை எல்லாம் ஓகே.இன்னும் ஒரு சின்ன
சிகிச்சை இருக்கிறது.அதைச் செய்துவிட்டால் போதும்."
நான் திடுக்கிட்டேன்.
"என்ன சார் சொல்றீங்க?இன்னும் ஒண்ணா?''
''ஆமா அனுராதா.இப்போ மார்பிலே இருந்த கேன்சர் செல்களையெல்லாம் அழிச்சாச்சில்லே?ஆனாலும் மார்பிலேயே கொஞ்சம் கேன்சர் செல்கள்
இவ்வளவு ரேடியேஷனுக்குப் பின்னாலும் உயிரோடு இருக்கும்.இருக்க அதிக
வாய்ப்புண்டு. அதனாலே பிராக்கிதைரபி என்ற ஒரு சிகிச்சை அவசியம்
செய்ய வேண்டும்.அதாவது உங்க வலது மார்பகத்தில் ரொம்பவும் மெலிதான ஊசிகளை இடது பக்கத்திலேருந்து குத்தி வலது பக்கம் வெளியே வருமாறு
குத்தி வைப்போம்.ஒவ்வொரு ஊசியிலேயும் இரிடியம் கம்பிகளைச் சொருகுவோம்.அந்தக் கம்பிகள் வழியே கதிரியக்கம் மார்பகத்துக்குள் சென்று
மிச்சம் மீதி இருக்கிற கேன்சர் செல்கள் எல்லாத்தையும் அழிச்சுடும்.''
எனக்குப் புரிந்த மாதிரி இருந்தது."ஏன் சார்.பழனிகோயில்லே நாக்கிலே அலகு குத்திகிட்டு பக்தர்கள் வருவாங்களே,அந்த மாதிரி சொல்றீங்களா?
''கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க அனுராதா.அதே மாதிரி தான்''
"ஏன் சார்.இது தேவையா?"
"கண்டிப்பாத் தேவை அனுராதா."
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
என் கணவர் என்னைச் சமாதானப்படுத்தினார்."டாக்டர் ந்ம்ம நல்லதுக்குத் தானே சொல்றாரு.இவ்வளவு பெரிய ரேடியேசன் பாதிப்பையே
தாங்கிகிட்டே.இதையும் செஞ்சிக்கிறது நல்லதுன்னு தான் தோணுது."
வேறு யாரைக் கேட்பது?ஒரு பக்கம் டாக்டர். ஒரு பக்கம் என் கணவர்.
இரண்டு பேருமே என் நல்லதுக்குத் தான் சொல்றாங்க.சரி ஒத்துக் கொள்வோமே!
"சரி சார்.செஞ்சுக்கிற்றேன்."
"ஓகே அனுராதா.இந்த பிராக்கிதைரபி இங்கே செய்யறதில்லே.நந்தம்பாக்கத்தில் இருக்கிற செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆஸ்பத்திரியில் தான் செய்து வருகிறோம்.நீங்க வர்ர 12ந்தேதி அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிடுங்க.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"என்று கூறி டாக்டர் எங்களுக்கு விடை கொடுத்தார்.

13 comments:

காட்டாறு said...

ஒவ்வொரு பதிவும் வாசிக்கும் போதும் மனசு ரணகளமாகும். இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும் 'அய்யோ'ன்னு வந்தேன். //மற்ற பெண்களைப் போலவே உடலளவில் நானும் சாதாரண மனுஷியாகிவிட்டேன்.
// இதை வாசிச்சதும் கொஞ்சம் நிம்மதியாச்சி. ஆயினும் தலைப்பு மனசை என்னவோ செய்யுதுங்க தோழி.

உங்கள் நலம் விரும்பும் தோழி,
காட்டாறு

Unknown said...

ஒண்ணும் சொல்லத் தெரியல, உங்க போன பதிவுல பதிலையும் பார்த்தேன்.

//உங்கள் நலம் விரும்பும் தோழி//
இதை வழிமொழிகிறேன்!

cheena (சீனா) said...

ஒன்றின் முடிவு மற்றொன்றின் ஆரம்பம் - முடிவே இல்லாத சிகிச்சைகள் - முற்றுப்பெறாத முறைகள் - என்ன செய்வது - அனைத்தும் செய்தே ஆக வேண்டும் - மனந்தளராத சகோதரியின் மனவலிமை பாராட்டத்தக்கது.

cheena (சீனா) said...

சகோதரி - நான் இடும் பின்னூட்டங்கள் எல்லாம் தங்களின் மெயிலைடியில் திருப்பப்படுகிறதே (Bounce) - sariyaana mail id please

துளசி கோபால் said...

வந்தாச் 'சட்'ன்னு போகாதா இந்த பயங்கரமுன்னு மனசு வாடுதுங்க.

Anonymous said...

உங்க பதிவோட தலைப்ப பாத்ததும், கடவுள் அன்பே உருவானவர்னு சொல்றாங்க. ஆனா ஏன் இப்படி உங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டே இருக்கார் அப்படின்னுதான் எனக்கு தோணிச்சு.

CVR said...

இறைவா!!

கவலைபடாதீங்கம்மா என்ன வேணூம்னாலும் நடக்கட்டும்!!
கடற்கரையில் நிற்கும் பாறை போல் அசராமல் நிற்போம்!! இடித்து தோற்று திரும்பும் அலைகளை போல வலிகளும் துன்பங்களும் முயன்றுவிட்டு போகட்டும்!!
உங்கள் மன உறுதி வெற்றிபெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை!!
இன்னும் கொஞ்சம் நாள்தான்!!! :-)

தொடர்ந்து போராடுங்கள்!! எங்கள் மன்மார்ந்த வாழ்த்துக்கள் !! :-)

கோபிநாத் said...

\\சின்ன அம்மிணி said...
உங்க பதிவோட தலைப்ப பாத்ததும், கடவுள் அன்பே உருவானவர்னு சொல்றாங்க. ஆனா ஏன் இப்படி உங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டே இருக்கார் அப்படின்னுதான் எனக்கு தோணிச்சு.\\

வழிமொழிகிறேன்!

seethag said...

அன்புள்ள சஹோதரி,

உங்கள் போராட்டாம் வெற்றீயடய வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்லியபடி விழிப்புணர்வு ஏர்ப்படுத்துவது அவசியம்.மேலும் சுய உதவி குழுக்களும் தேவை.
நான் தர்சமயம் இந்தியாவில் இல்லை.ஆனால் என்னால் ஆஸ்திரேலியாவில் இருந்து ஏதாவது சுய உதவி சம்பந்தமாக அனுப்ப இயலும்.நான் ஒரூ மருத்துவர் கூட.எந்தவிதத்திலும் நான் உபயோகப்பட விரும்புகிறேன்.

வடுவூர் குமார் said...

தலைப்பு சரியாகத்தான் இருக்கு.

அனுராதா said...

வாங்க காட்டாறு,கெக்கேபிக்குணி,சீனா,
துளசி கோபால்,சின்ன அம்மிணி,சிவிஆர்,கோபிநாத்,வடுவூர் குமார் அவர்களே.
சீனா.எனது மெயில் ஐடி anurathass@gmail.com இப்போது முயன்று பாருங்கள்.
சீதா,தங்களைப் போன்றோரின் ஆலோசனைகளும் உதவிகளும் அவசியம் தேவை.விரைவில் நாமெல்லோரும் ஆலோசிப்போம்.
அனைவருக்கும் நன்றி.

மங்கை said...

அனுராதா..

எங்க கானோம்னு நினைச்சுட்ட இருந்தேன்....உங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அன்புள்ளங்களில் நானும் உள்ளேன்..

அனுராதா said...

வாங்க மங்கை.வராமெ இருந்திருவேனா?சிங்கப்பூருக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்டன.வந்ததும் புது லேப்டாப்புக்கு ஆன்லைனில் என் மகன் ஆர்டர் செய்தான்.சென்ற வாரம்தான் வந்தது.உடனே பதிய ஆரம்பித்துவிட்டேன்.நன்றிங்க.