Tuesday, October 16, 2007

ஆக்ஸிலரி லிம்ப் நோட்ஸ் டிஸெக்சன் ஏன் செய்ய வேண்டும்?

"இன்னும் என்ன சார் ஆபரேசன்.அது வேண்டாமின்னு தானே எல்லா ஆஸ்பத்திரிகளையும் விட்டு விட்டு இங்கே வந்தேன்.இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினதுக்கப்புறம் இன்னும் என்ன சார்?"
''வேண்டாமென்றீங்களா?இப்ப நான் சொல்ற ஆபரேசன் மார்பகத்தில் செய்யப் போறதில்லே.மார்பகத்தை எடுக்கப் போறதும் இல்லே.''
வெறுமனே டாக்டரைப் பார்த்தவாறே இருந்தேன்.
நிண நீர் சுரப்பி அப்படின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா?ஆங்கிலத்தில் லிம்ப் நோட்ஸ்ன்னு சொல்வோம்.நம்ம உடம்பிலே ரத்தம் ஓடுதில்லே.அதிலெ கலந்திருக்கும் கழிவுகளையும்,பேக்டீரியா,வைரஸ் கிருமிகளையும் வடிகட்டும் வேலையை இந்த சுரப்பிகள் செய்கின்றன.ஒவ்வொருத்தரோட உடம்பில் சுமார் 500 முதல் 600 வரை இந்த நிணநீர் சுரப்பிகள் இருக்கும்.இப்போ உங்க வலது மார்பகத்தில் ஓடும் ரத்தத்தை வடிகட்டும் நிணநீர் சுரப்பிகள் மார்பகத்திலேருந்து
வலது கை அக்குளில் இருக்கும் கிளான்ஸுகளில் முடியும்.அந்த கிளான்ஸுகளைத் தான் ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும். மார்பகத்தில் இன்னும் மிச்சம் மீதி இருக்கிற கேன்சர் செல்கள் இந்த நிணநீர் சுரப்பிகள் வழியே போனால் உடம்பில் மற்ற பாகங்களில் பரவ வாய்ப்புண்டு.எனவே இந்த கிளான்ஸுகளை ஒரு சின்ன ஆபரேசன் செஞ்சி எடுத்திட்டா
மார்பகத்தில் தப்பித்தவறி இருக்கிற கேன்சர் செல்கள் மார்பகத்தை விட்டு வெளியேற முடியாது.இத்னாலே உடம்பில் வேறு உறுப்புகளுக்குமார்பகத்திலேருந்து கேன்சர் பரவுவது தடுக்கப்படும்.''
என்னவோ பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது.
" என்ன சொல்றீங்க அனுராதா?"
"சொல்றதுக்கு என்ன இருக்கு சார்.என்னை என்னமோ பண்ணனும்னு முடிவு பண்ணிட்டிங்க''.
இந்த ஆபரேசன் செஞ்சபிறகு எடுக்கப்படும் நிணநீர் சுரப்பி கிளான்சுகளை
பயாப்ஸி செய்து பார்த்தா அதுலே கேன்சர் செல்கள் பரவியிருக்கான்னு தெரிஞ்சிரும்.இந்த ஆபரேசன் அவசியம் செஞ்சால் ஒழிய ரேடியேசன் கொடுத்த நோக்கம் பூர்த்தியாகாது.ஸோ இந்த ஆபரேசன் அவசியம் செஞ்சாகணும்.''
''ஒரு வழியா என்னை எலியாக்கிட்டீங்க சார்.''
என்னது?
பெரிய பெரிய விஞ்ஞானிகளெல்லாம் பரிசோதனைக் கூடத்திலே எலிகளை வச்சு ஆராய்ச்சி பண்ணுறதை டி.வி.யிலே பாத்திருக்கேன்.அந்த மாதிரி என்னையும் வச்சுப் பரிசோதனை பண்றீங்க.''
டாக்டர் சிரித்தார்.
''என்னால் சிரிக்க முடியாது டாக்டர்.''
''ஏன்?'
''நோவு எனக்குத் தானே?''
பிறகு கேட்டேன்.''இத்தோட முடிஞ்சுருமா.இன்னும் இருக்கா?''
''அவ்வளவே தான் அனுராதா.ஆபரேசனுக்கப்புறம் ஒரு ஐந்து நாள் மட்டும்
அக்குளில் ஒரு டியூபைச் சொருகி வைப்போம்.வழக்கமா சுரக்கும் நிணநீரெல்லாம் டியூப் வழியா வெளியேறும்.ஐந்து நாளைக்குள் சுரப்பது நின்று விடும்.அதுக்கப்புறம் டியூபை எடுத்திடலாம்.''
அப்போது உள்ளே வந்த இன்னொரு டாக்டரை அறிமுகப்படுத்தினார்.
"இவர் தான் டாக்டர் பிரசாத். இந்த ஆபரேசன் செய்யப் போகிற சர்ஜன்."
அவருக்கு வணக்கம் தெரிவித்தேன்.
அவருடன் ஆலோசனை செய்தபிறகு செப்டம்பர் மாதம் 12ந் தேதி ஆபரேசன் செய்வது என்று முடிவானது.

8 comments:

வடுவூர் குமார் said...

இது பதிவு மாத்திரம் அல்ல.பல வித விபரங்கள் அடங்கிய புத்தகம்.ஏன்? டாக்டருக்கு படித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் கூட.

அனுராதா said...

நன்றி வடுவூர் குமார்.

இலவசக்கொத்தனார் said...

அனுராதா,

தொடர்ந்து படிச்சுக்கிட்டு இருக்கேன். ரொம்பவே கஷ்டமா இருக்கு படிக்க. தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி.

இவ்வளவு கஷ்டப் படும் பொழுது முதலிலேயே மார்பக அறுவை சிகிச்சையே செஞ்சிருக்கலாமேன்னு தோணினது உண்டா? இப்பொழுது நடந்தவைகளை மாற்ற முடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா?

இது உங்களுக்கு வருத்தத்தைத் தரும் வகையில் இருக்குமானால் மன்னிக்கவும். வெளியிட வேண்டாம்.

PPattian said...

வழக்கமான ட்ரீட்மென்டுக்கும் உங்களுக்கு நடந்த ட்ரீட்மென்டுக்கும் இருக்கும் வேறுபாடுகள் (எவ்வளவு நாட்கள் மருத்துவம், எத்தனை அறுவை சிகிச்சைகள், செலவுகள் etc.) குறித்து இப்போது ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

அனுராதா said...

வாங்க இலவசக் கொத்தனார்.மிக முக்கியமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள்.இன்னும் ஓரிரு வாரங்களில் இன்றைய தேதிக்கான சிகிச்சை வரை பதிவுகள் இட்டு விடுவேன்.அதன் பிறகு இக்கேள்விக்கான விடையைஅனைவரும் தேடுவோம்.
வாங்க புபட்டியன்.வழக்கமான டிரீட்மெண்ட் என்று எதைக்குறிப்பிட விழைகிறீர்கள்?அறுவை சிகிச்சை தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளும் எனக்குத் தரப்பட்டுள்ளன.நீங்கள் கேட்ட அனைத்து விபரங்களையும் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சிகிச்சையும் மேற்கொண்ட தேதி முதல்,என்னென்ன மருந்துகள் தரப்பட்டன,ஊசிகள் போடப்பட்டன,ஒவ்வொன்றிற்குமான செலவு அனைத்தையும் குறித்து வைத்திருக்கிறேன்.எஃப்.என்.ஏ.சி.,எண்டாஸ்கோபி,பிளட் டெஸ்ட்,எக்ஸ்ரே,ஈ.சி.ஜி.,அல்ட்ரா சவுண்ட்டு,எக்கோ,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்,ஐ.ஸ்கேன்,பெட் ஸ்கேன்,நியூக்ளியர் போன் ஸ்கேன்உள்பட தற்போது தரப்பட்டு வரும் ஹெர்சப்டின் என்ற மிக விலை உயர்ந்த ஹார்மோன் ஊசி,கீமோ ஊசிகள் கீமோ மருந்துகள் வரைக்கும் மருத்துவமனை செலவுகள்,டாக்டர் ஃபீஸ் போன்ற அனைத்திற்கும் விபரங்கள் வைத்திருக்கிறேன்.

Unknown said...

அம்மா, இந்த பின்னூட்டங்களைப் பார்த்து விட்டும் சொல்கிறேன்.

தன்னம்பிக்கை தான் பெண்ணுக்கு அழகு. அந்த அழகு நிறையவே இருக்கிறது உங்களிடம். உங்கள் வாழ்க்கை, விருப்புக்களை மற்றவருக்கு விளக்க வேண்டியது தேவையில்லை என்பது என் கருத்து.

அம்மா என்று அழைத்தது வயதுக்கில்லை, உங்கள் வாழ்க்கைக்காக.

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி,

மருத்துவர்கள் கூறியதை எல்லாம் இது வரை கேட்ட நீங்கள் இதற்கு மட்டும் மறுக்கப் போகிறீர்களா என்ன ??

அனுராதா said...

வாங்க கெக்கேபிக்குணி.இந்தநோய் வந்து அவதிப்படும் ஒவ்வொரு பெண்ணைப் பொறுத்தவரைக்கும் தனது வாழ்க்கை விருப்பங்களைக் கண்டிப்பாக மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.அப்போது தான் பலவீனமான மனநிலை உள்ள பெண்களுக்குச் சரியான ஆலோசனை தொடர்ந்து வழங்க முடியும்.கவுன்சிலிங் என்பது இது தானே!
வாங்க சீனா.உண்மையைச் சொன்னீர்கள்.