Wednesday, October 17, 2007

ஹிஸ்டரக்டமி எனப்படும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கு இடையில் பல் வலி வந்தது.அப்பல்லோ மருத்துவமனை பல் டாக்டர் தினகரன் என்பவர் என் வீட்டுக்கு அருகில் கிளினிக் வைத்திருக்கிறார்.25.05.2005 ந்தேதி அவரைப்போய்ப் பார்த்தேன்.
வலதுபக்கம் மேல்கடைவாய்ப் பற்கள் மூன்றும்,இடதுபக்கம் கீழ்க்கடைவாய்ப் பற்கள் மூன்றும் சொத்தை விழுந்துள்ளது என்றார்..முன் பற்கள் வரிசையில் பற்கள் கருக்க ஆரம்பித்துள்ளன என்றார்.காரணம் கதிரியக்கத்தின் பாதிப்பு என்றார்.பற்களைப் பிடுங்கி ரூட் சேனல் டிரீட்மெண்ட் செய்தால் முன் போலவே செயற்கையாகப் பற்களைப் பொறுத்திவிடலாம் என்றார்.அத்ன்படியே ஆறு பற்களும் பிடுங்கப்பட்டன.ரூட் கேனல் டிரீட்மெண்ட் மூலம் செயற்கைப் பற்கள் பொறுத்தப்பட்டன.

ஜனவரி2006 வரை அவ்வப்போது டாக்டர் வரச் சொல்லும் நாட்களில் சென்று செக்கப் செய்து கொண்டேன்.அப்போது இன்னொரு பிரச்சனை முளைத்தது.

2003ம் ஆண்டு என் ஐம்பதாம் வயதில் எனக்கு மாதவிடாய் நின்று விட்டது.
மூன்று ஆண்டுகள் கழித்து 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் ஆரம்பித்தது.நாளாக நாளாக ஓவர் பிளிடிங்.எனக்கே சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.என் இள வயதுக் காலத்தில் என்றுமே இப்படி ஓவர் பிளீடிங் ஆனதில்லை. உடனே எனது டாக்டரைப் பார்த்தோம்.
ரேடியேசன் ஆரம்பிக்கு முன்னரே ''நால்வடாக்ஸ்'' என்ற டாமாக்சிபன் மாத்திரை தினமும் இரவு இரண்டு மாத்திரை உட்கொள்ளவேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார்.இப்போது அம்மாத்திரைகளை உடனே நிறுத்தச் சொல்லிவிட்டார்.அதற்குப் பதிலாக ''லேட்ரொனேட்'' என்ற மாத்திரையை தினமும் இரவு ஒரு மாத்திரை மட்டும் உட்கொள்ளச் சொன்னார். அது தவிர பிளீடிங் நிறுத்துவத்ற்குச் சில மாத்திரைகளையும் தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மட்டும் உட்கொள்ள எழுதிக்கொடுத்தார்.அதன்படியே உட்கொண்டதில் மாத்திரைகளின் தாக்கத்தினால் மூன்று நாட்கள் மட்டும் மாத விடாய் நின்றது. நான்காவது நாள் இரவு மீண்டும் ஆரம்பித்தது. மறுநாள் மதிய ம் டாக்டரைத் தொலைபேசியில் கேட்டேன்.மறுநாள் வரச் சொன்னார்.மறுநாள் சென்றோம்.இதற்கு மேல் ஒரு கைனகாலஜிஸ்ட் தான் பார்க்கவேண்டும் என்று கூறி விஜயா மருத்துவமனையில் உள்ள டாக்டர் மாலா என்ற கைனகாலஜிஸ்டிடம் அனுப்பினார்.

டாக்டர் மாலா மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.என்னை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பரிசோதித்தபின் சில மாத்திரைகளை மூன்றுநாட்கள் மட்டும் உட்கொள்ளுமாறும் பிளீடிங் நின்று விடும் என்றும் நான்காவது நாள் பிளீடிங் மீண்டும் ஆரம்பித்தால் உடனே வருமாறும் கூறி அனுப்பினார்.அவர் சொன்னவாறே மூன்றுநாட்கள் மாத்திரை உட்கொண்டேன்.பிளீடிங் நின்றது. நான்காவது நாள் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

டாக்டர் மாலா மீண்டும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்துப் பரிசோதித்தார்.
''உங்கள் கர்ப்பப் பை நார்மலைவிடக் கொஞ்சம் பெரியதாகவே இருக்கிறது.நன்றாகவும் இருக்கிறது.உங்கள் வயதுக்கு மெனோபாஸ் நின்றூ கர்ப்பப் பையும் நன்றாகச் சுருங்கியிருக்க வேண்டும்.ஆனால் ஆகவில்லை.சாதாரணமாக இப்படிப்பட்ட பிரச்சனைகளுடன் வரும் பெண்களுக்கு நான் கொடுக்கும் மாத்திரைகளுடன் ஓவர் பிளீடிங் நின்று விடும்,ஆனால் உங்களுக்கு நிற்காததற்குக் காரணம் உங்கள் கர்ப்பப் பை ஆரோக்கியமாக இருப்பதுதான்.இதே நேரத்தில் நீங்க்ள் ஒரு கேன்சர் பேஷண்ட் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.எனவே உங்கள் கர்ப்பப் பையை ஆபரேசன் செய்து அகற்றினால் மட்டுமே உங்கள் பிரச்சனை தீரும் ''என்றார்.அதன்படியே எனது டாக்டருக்கும் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் எங்கள் டாக்டரிடம் வந்தோம்.அவருக்கு கர்ப்பப்பையை அகற்றுவதில் விருப்பமே இல்லை.இதை இப்படியே விட்டு விடுங்கள்.கொஞ்சநாள் ஓவர்பிளீடிங் போகும்.பின் தானாக நின்று விடும் என்றார்!சில ஹோமியோபதி மருந்துகளை எழுதிக் கொடுத்து இவைகளை வாங்கிச் சாப்பிடுங்கள்.சரியாகிவிடும் என்றார்.!! வேண்டுமானால் கர்ப்பப் பை சுருங்க ஒரு வாரம் ரேடியேசன் கொடுத்தால் போதும். சுருங்கி விடும் என்றார்.ஒரு ஆறு மாதம் வரை லூஸ் மோசன் போய்க் கொண்டே இருக்கும் என்றார்.ரேடியேசன் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.நோயைவிட நோய்க்கான சிகிச்சை முறைகள்,அதனால் வரும் பாதிப்புகள் தான் பொறுக்கமுடியவில்லை.''வாழ்வு எரித்து ஊனம் வாங்கி எதைச் சாதிக்க''
என்ற வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது.

என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.சரிதான் என்று டாக்டர் சொன்ன ஹோமியோபதி மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

எதுவும் பிரயோசனமில்லை. டாக்டர் எழுதிக்கொடுத்த ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டும் பிளீடிங் நிற்கவில்லை.பல முறை டாக்டரிடம் கேட்டும் ஆபரேசனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.டாக்டர் மாலாவைப் பார்த்தோம்.ஆபரேசன் செய்தால் ஒழிய இதற்குத் தீர்வு இல்லை என்றுகூறி விட்டார்.எங்கள் டாக்டரிடம் ஆலோசியுங்களென் என்று கேட்டோம்."வேண்டிய விளக்கம்,என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எனது கருத்து ஆகியவைகளைச் சொல்லிக் கடிதம் கொடுத்துவிட்டேனே!"என்றார்.இரண்டு டாக்டர்களும் அவரவர் கருத்துகளில் நின்றார்கள்.மகாபாரதத்து அம்பையாக இருவரிடமும் மாறி மாறிப் பல தடவை அலைந்தேன்.


எப்ரல் மாதம் இருபது தேதியானது. ஓவர் பிளீடிங் ஆரம்பித்து இரண்டரை மாதங்களாகி விட்டது.சோர்வடைந்து மிகவும் பலவீனப்பட்டேன்.இதற்கு மேலும் என்னால் பொறுத்திருக்க முடியவில்லை.நானும் என் கணவரும் ஆலோசித்தோம்.டாக்டர் மாலாவின் ஆலோசனைப்படியே கர்ப்பப்பையை அகற்றுவது என்ற முடிவுக்கு வந்தோம்.

26.4.2006 அன்று விஜயா மருத்துவமனையில் அட்மிட் ஆனேன் 27.4.2006 அன்று எனது கர்ப்பப்பை,சினைக்குழாய்களாகியவை முற்றிலும் 'ஹிஸ்டரக்டமி' என்ற அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

5 comments:

PPattian said...

கடவுளே.. என்னங்க இது. படிக்க படிக்க வேதனையும், வாழ்க்கை மீதான பயமும் கூடுது. உங்க தைரியத்தையும், உங்க கணவரின் தைரியம் மற்றும் தியாகமும் வெறும் வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியாது.. அப்பப்பா...

எல்லா வகையான மருத்துவர்களையும், அதிலும் சொற்ப காலத்துக்குள் பார்த்து இருந்தும், நம்பிக்கை குறையாமல் இருக்கும் உங்களை பார்த்து வியக்கிறேன், பிரமிக்கிறேன்...

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி

ஆப்ரல் 2006 வரை வந்து விட்டோம். இன்னும் 18 மாதங்கள் தானே!!

ஆனால் இந்த 18 மாதங்களில் என்ன என்ன நடந்தனவோ?? இறைவா

Anonymous said...

உங்க குடும்பத்தார் உங்களுக்கு குடுத்த ஆதரவும், உங்கள் மன உறுதியையும் நினைச்சுப்பாக்கறேன். கடவுளே. எவ்வளவு கடந்து வந்திருக்கீங்க. இனி எல்லாம் சுகமாயிருக்க கடவுளைப் பிரார்த்தனை செய்கிறேன்

seethag said...

திரும்பிப்பார்க்கும் போது இவ்வளவையும் சஹித்தது நாந்தானா என்ற எண்ணம் வருகிரதா அனுராதா?அதே நேரம் பரவாயில்லை ஜெயித்துவிட்டேனே என்றும் தோன்றும்.god bless you anuradha

அனுராதா said...

வாங்க புபட்டியன்,சீனா,சின்ன அம்மிணி.இன்னும் இருக்கிறது.வாங்க சீதா.ஆமாம்.சகித்தது நான்தானா என்ற எண்ணம் வருகிறது.ஆனால் யுத்தம் தொடர்கிறது.