Thursday, October 18, 2007

மெடாஸ்டிக் கேன்சருக்கான இன்றைய நவீன சிகிச்சை முறைகள்.

''உங்களுக்கு வலது மார்பகத்தில் மீண்டும் புற்றுநோய் தாக்கியுள்ளது.அது மட்டுமில்லாமல் அங்கிருந்து கல்லீரலுக்கும் பரவியுள்ளது.அது போதாதென்று டயாபடிஸ் வேறு வந்திருக்கிறது.இவை அனைத்திற்கும் உடனே உடனே சிகிச்சை செய்தாக வேண்டும்.''

இவ்வாறு டாக்டர் சொன்னார்.இப்போதுதான் இன்னதென்று புரியாத பயம் வந்தது. டாக்டர் சொல்லச் சொல்ல பயம் அதிகரித்தது.

டாக்டர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார்.அதே நேரத்தில் பலவழிகளில் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

நான் கேட்டேன்."ஏன் சார்.இவ்வளவு சிகிச்சைகள் செய்தும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டும் மார்பகத்திலேயே மீண்டும் வரக் காரணம் என்ன?கல்லீரலிலும் பரவக் காரணம் என்னவாக இருக்கும்?"

''வந்திருச்சு.எப்படி வந்ததுன்னு யோசிக்க இது நேரமில்லை.வந்திருக்கிறதுக்கு என்ன சிகிச்சை செய்தாகணும்னு தான் யோசிக்கணும்.''என்றார் டாக்டர்.


"இவ்வளவு டெஸ்டுகள் எடுத்தாச்சு. இன்னும் ஒரு ஸ்கேன் இருக்கு. பெட் ஸ்கேன் னு பேரு. இந்தியாவில் டெல்லி,பூனே,ஹைதராபாத்.இந்த மூன்றே இடங்களில் தான் அந்த ஸ்கேன் எடுக்கிற வசதி இருக்கு.நமக்கு ஹைதராபாத் தான் கிட்டே இருக்கு.சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன் ஆகியவகளில் இருந்து கேன்சர் செல்கள் வந்திருக்கு,பரவி இருக்குன்னு மட்டும்தான் தெரியும்.ஆனா இந்த பெட் ஸ்கேனில் அந்த செல்கள் உயிருடன் இருக்கிறதா இல்லையான்னும் தெளிவாத் தெரியும்.எவ்வளவு தீவிரமா அந்த செல்கள் இயங்கிக் கொண்டுஇருக்குன்னும் தெரிஞ்சுரும்.
ஆனா ஸ்கேன் சார்ஜ் தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்."

''சரி சார்.அந்த ஸ்கேனை எடுத்திடலாம்.அப்புறம்?''

"புதுசா ஒரு ஊசி வந்திருக்கு.அதோட விலை ஒன்றரை லட்சம் ரூபாய்.அந்தஊசியை மாதா மாதம் ஒரு ஊசி வீதம் ஆறு மாதத்திற்கு ஆறு ஊசியையும் அத்தோட வேறு சில கீமோ ஊசிமருந்துகளையும் போடணும்."

"என்னது கீமோவா?"

"ஆமா அனுராதா. இந்தமுறை கீமோதைரபி சிகிச்சைக்கான ஊசிகளையும் கண்டிப்பாகப் போட்டாகணும்.வேறு வழியில்லை.என்ன?தலைமுடி பூராவும் கொட்டிவிடும்.சிகிச்சை முடிஞ்சதும் மீண்டும் நல்லா வளர்ந்திடும்"

"வேறெ சைட் எஃபக்ட் சார்?"

"டிரீட்மெண்டின்போது வாந்தி,மலச்சிக்கல்,அலர்ஜின்னு பலது இருக்கு.எல்லா சைட் எஃபக்டும் எல்லாருக்கும் வரும்னு சொல்ல முடியாது.ஒரு சில பேருக்கு சிலது வரும்.சில பேருக்கு சைட் எஃபக்டே இருக்காது.தலைமுடி கொட்றதைத் தவிர மற்ற அனைத்துக்கும் மாற்று மருந்து கொடுத்திடுவோம்.சரியாயிரும்.

"சரி சார்.நீங்க சொல்றபடியே அந்த ஊசிகளெல்லாத்தையும் ஆறு மாசத்துக்குப் போட்டா?"

"போட்டாத் தான் வந்திருக்கிற கேன்சர் செல் எல்லாம் அழிஞ்சிடும்."

மீண்டும் டாக்டர் தொடர்ந்தார்.''என்ன.செலவுதான் பதினைஞ்சு இருபது லட்சத்தைத் தாண்டிவிடும்.நல்லா யோசிச்சுச் சொல்லுங்க.நீங்க சரின்னா
அடுத்து என்னென்ன செய்யணும்னு சொல்றேன்.அவ்வளவு செலவு செய்யமுடியாதுன்னா கீமோ ஊசி மருந்து மட்டுமாவது கொடுத்தாகணும்.
எதைச் செய்யணுமென்றாலும் முதலில் இந்த சுகர் அளவைக் கட்டுக்குள் கண்டிப்பாகக் கொண்டு வந்தே ஆகணும். எந்த முடிவானாலும் சீக்கிரமே சொல்லுங்க.லேட் பண்ணவே பண்ணாதீங்க.கொஞ்சம் சீரியஸா யோசிச்சி நல்ல முடிவுக்கு வாங்க."

8 comments:

வடுவூர் குமார் said...

அய்யோடா!!
அடுத்த கொடுமை ஆரம்பம் ஆகிறதா?
தேவுடா,வேறு யாருக்கும் கொடுக்காதே இதை மாதிரி.

இலவசக்கொத்தனார் said...

http://www.cnn.com/2007/HEALTH/conditions/10/18/ep.breast.cancer/index.html

தொடர்புள்ள சுட்டி.

Radha Sriram said...

தொடர்ந்து படித்து வருகிரேன் அனுராதா, நல்ல திடமாக எதிர்த்து போரடியுள்ளீர்கள்....நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு வருகிரேன்.....

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்,ராதா ஸ்ரீ ராம்.இன்னும் இருக்கிறது.தொடர்ந்து படியுங்கள்.
வாங்க இலவசக்கொத்தனார்.சுட்டிக்கு நன்றி.

cheena (சீனா) said...

பணம் பணம் - இது ஒரு பணக்கார வியாதி. ம்ம்ம் - எதிர்த்துப் போராடுங்கள். அன்புக் கணவர், அருமை மகன்கள், அழகு மகள் மற்றும் சுற்றம் - உறவுகள் இருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். வலை உலகம் இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக

அனுராதா said...

வாங்க சீனா.நீங்கள் குறிப்பிட்ட இந்தப் போராடும் குணம் தான் என்னை வாழவைக்கிறது.நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நம் நாடுகளில் உள்ள வசதியற்றவர்கள், நிலையை நினைக்க வைக்கிறது.
ஆனாலும் உங்கள் தைரியம் ..எல்லோருக்கும் வராது.

அனுராதா said...

நன்றி யோகன் பரிஸ்