Friday, October 26, 2007

ஒரு வேண்டுகோளும் மார்பகப் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும்.

மார்பகப் புற்று நோய் என்னைத் தாக்கியதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்துச் சம்பவங்களையும்,எனக்குக்கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளையும்,நான் பெற்ற அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த நடையில் சொல்லிவிட்டேன்.

புற்றுநோய் வந்துள்ள மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று பல டாக்டர்கள் வலியுறுத்தியபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.அதற்கான காரணங்களை ஏற்கனவே விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.அவையே எல்லோருக்கும் பொருந்தும் என்று எடுத்துக்கோள்ளக்கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும்.எனக்கு மார்பகம் அகற்றாமல் இருப்பதுதான் சரி என்று அப்போது பட்டது."இவ்வளவு கஷ்டப்படும்பொழுது முதலிலேயே மார்பக அறுவை சிகிச்சையே செஞ்சிருக்கலாமேன்னு தோணினது உண்டா?இப்பொழுது நடந்தவைகளை மாற்றமுடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா? என்று இலவசக்கொத்தனார் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.சரியான கேள்வி.

எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.படும் துன்பங்களுக்கு இடையில் முதலிலேயே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்கலாமோ என்று சில நேரம் தோன்றியது உண்டு.ஆனால் நான் சந்தித்த மார்பகப் புற்றுநோயாளிகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்குமே ரேடியேசன் கொடுக்கப்பட்டுள்ளது.கீமோதைரபி கொடுக்கப்பட்டுள்ளது.அப்போதெல்லாம் 'அறுவைசிகிச்சை செய்தும் இவர்களுக்கும் ரேடியேசன் மற்றும் கீமோ கொடுக்கப்படுகிறதே!நல்லவேளை. அறுவை சிகிச்சையிலிருந்து நான் தப்பித்தேன்.' என்று நினைப்பதும் உண்டு.

இப்பொழுது நடந்தவைகளை மாற்றமுடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா?

கேள்வியை இப்படி மாற்றிப் போட்டுக்கொள்கிறேன்.மீண்டும் இதே மார்பகத்திலோ அல்லது இடது மார்பகத்திலோ இந்நோய் வந்தால்,அறுவைசிகிச்சைக்கு ஒப்புக்கொள்வீர்களா?

எனது பதில்:அது அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையையும்,என் மனப்பக்குவத்தையும் பொறுத்தது.அந்த முடிவை அந்த நேரத்தில் தான் எடுக்கமுடியும்.உலகில் மாறாதது எதுவுமே இல்லை.மாற்றம் என்பதைத் தவிர.

கேன்சரைப் பொறுத்தவரைக்கும் இப்போதைய அவசிய அவசரத் தேவை
1.மருத்துவ உலகில் இன்னும் புதிய கண்டுபிடிப்புகள்
2.சமுதாயத்தில் அனைவருக்கும் இந்நோய் குறித்தான விழிப்புணர்வு.

கேன்சர் நோய் வருவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மருத்துவம் முன்னேறிய பிறகு மார்பகப் புற்றுநோய் வந்த நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள்,அவர்களின் வாழ்க்கைமுறைகள் போன்ற விபரங்களைப் புள்ளிவிபரங்களாகத் தொகுத்துக் கணக்கிட்டுப் பார்த்ததில் சில உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவை என்ன?

1.பெண்ணாக இருப்பதுவே மார்பகப் புற்றுநோய் வர முதல் காரணம்.
2.பெண்கள் வயது ஆக ஆக இந்நோய் வர வாய்ப்பு கூடுகிறது.நாற்பத்துஐந்து வயதுக்கும் கீழே உள்ள பெண்களுக்கு எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்திலும்
ஐம்பத்துஐந்து வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயது ஆனவர்களுக்கு
மூன்றில் இரண்டு என்ற விகிதத்திலும் இந்நோய் காணப்படுகிறது.
3.பரம்பரையாக இந்த நோய் வந்தது என்று கண்டறியப்பட்ட நோயாளிகள் ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர்.
4.உங்கள் தாயாருக்கோ,சகோதரிக்கோ,மகளுக்கோ இந்நோய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்நோய் வ்ருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு ஆகிறது.இவ்வாறு மிகநெருங்கிய உறவினர்கள் இரண்டு பேர்களுக்கு இருந்தாலோ உங்களுக்கு வரும் வாய்ப்பு ஐந்து மடங்கு ஆகிறது.
5.மார்பகப் புற்றுநோய் உள்ள ஒரு பெண்ணுக்கு அதே மார்பகத்தில் வேறு பாகத்திலோ அல்லது மற்றொரு மார்பகத்திலோ புதிய புற்று நோய் தோன்றக்கூடிய அபாயம் மூன்றிலிருந்து நான்கு மடங்காகும்.
6.பனிரெண்டுவயதுக்குள் வயதுக்கு வந்தவர்களுக்கும்,ஐம்பத்துஐந்து வயதுக்கு மேல் மெனோபாஸ் அடைந்தவர்களுக்கும் இந்நோய் வரலாம்.
7.குழந்தை பெறாத பெண்கள்,முப்பது வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறும் பெண்கள் ஆகியோருக்கும் வரலாம்.
8.கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களுக்கும் வரலாம்.
9குழந்தை பெற்ற தாய்கள் குறைந்தது ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரையிலாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.
10.ஆல்கஹால் உபயோகிக்கும் பெண்களுக்கு இந்நோய் வரக்கூடிய அபாயம் உண்டு.
11.அதிக எடையுள்ள பெண்களுக்கும் இந்நோய் வரலாம்.மெனோபாஸ் வந்த குண்டானபெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம்.
12.நைட் ஷிஃப்ட் பார்க்கும் பெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் உண்டு என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.வெளிச்சத்தின் காரணமாக ''மெலடோனின்''என்ற ஹார்மோன் பாதிக்கப்படுவது தான் காரணம் என்கிறார்கள்.

இவ்வாறாக ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.மனித குலத்தின் நன்மைக்காக இவர்களின் தொண்டு மகத்தானது.

அடுத்ததாக சமுதாயத்தில் அனைவருக்கும் இந்நோய் குறித்தான விழிப்புணர்வுக்கு வருகிறேன்.

எத்தனை பேர்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்பு உணர்வு இருக்கிறது?இந்த நோய் என்னைத் தாக்கும் வரை எனக்கே விழிப்புணர்வு இல்லையே.எங்கே போய் முட்டிக்கொள்வது?

இதற்கு அரசு தான் போதிய பிரச்சாரம் செய்ய வேண்டும்.இதை மிகச் சுலபமாகச் செய்யலாம்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு துணைக் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் நடக்கிறது.மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்திலும் ,கலெக்டர் தலைமையில் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இன்னொரு கிராமத்திலும் மனுநீதி நாள் நடக்கிறது.அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகள் அவைகளில் பங்கேற்று மக்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்.கலெக்டர் தலைமையில் நடக்கும் மனுநீதிநாளில் மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை அதிகாரிகளும் டாக்டர்களும் பங்கேற்கிறார்கள்.புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இங்கேயே ஆரம்பிக்கலாமே!


இதைச் செய்யும்போது அனைத்துப் பெண்களும் மருத்துவக்காப்பீடு செய்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.அந்தக் காப்பீட்டில் அடங்கும் நோய்களுக்கான பட்டியலில் கேன்சர் நோயும் இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.மிக மிக அதிகமான செலவு பிடிக்கும் கொடுமையான நோய் இந்த நோய்.

சரி.அரசும் அதிகாரிகளும் பிரச்சாரம்தான் செய்யமுடியும்.மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

எனவே எனது வேண்டுகோளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் தனித்தனியாக வைக்கிறேன்.
முதலில் மார்பகப் புற்றுநோய் வந்த பெண்களுக்கு.

ஐயையோ,இவ்வளவு கொடிய நோய் வந்து விட்டதே என்று மனம் கலங்காதீர்கள்.இதற்கான முதல் சிகிச்சையே மனதைத் திடமாக்கிக்கொண்டு வந்ததை எதிர்கொள்வதுதான்.பிரச்சனைகள் எதுவானாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.துவண்டுவிடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை.
நோயும் கொடுமையானதுதான்.அதற்கான சிகிச்சைமுறைகளும் கொடுமையானவை தான்.அனைத்து சிகிச்சைகளும் உங்கள் நலனை முன்னிட்டே செய்யப்படுகின்றன என்பதை மறவாதீர்கள்.இதைத் தவிர வேறு எதுவும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களுக்கு,

பெற்றோர்,சகோதர சகோதரிகள்,சொந்தங்கள் என அனைத்தையும் திருமணமான ஒரே நாளில் விட்டுவிட்டு உங்களுடன் வந்தவள்,உங்கள் சுகத்திலும் துக்கத்திலும் பங்கு பெற வந்தவள்,
இவ்வளவு காலம் நீங்கள் சாய்ந்துகொள்ளத் தோள் கொடுத்தவள்,நீங்கள்நோயில் படுத்த படுக்கையில் விழும்போது இரவும் பகலும் உங்களைக் கவனித்துக்கொண்டவள்.அவளுக்கு இந்தநோய் வந்திருக்கிறது.ஆணோ,பெண்ணோ ஒருவருக்கு ஒரு நோய் வருவதற்குக் காரணமே அவருடைய தவறான செயல்களே.ஆனால் ஒரு தவறும் செய்யாமல் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே
இந்த நோய் அவளைத் தாக்கியிருக்கிறது.உங்களை விட்டால் அவளுக்கு வேறு வழி?எனவே தயவு செய்து அவளைக்கவனித்துக்கொள்ளுங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களுக்கு இந்தமாதிரி கொடிய நோய் வந்தால் அவள் எப்படி உங்களைக் கவனித்துக்கொள்வாளோ அந்த அளவுக்கு நீங்கள் அவளைக் கவனித்துக்கொள்ளுங்கள்.நோயினால் அவதிப்படுவது அவள்மட்டுமே. நீங்கள் ஆதரவாக இருந்தாலே போதும்.அவள் படும் துன்பங்கள் எவ்வளவோ குறையும்.


சொந்தங்களுக்கும் சுற்றங்களுக்கும்

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உங்கள் சொந்தவீட்டில் ஒருவருக்கு இந்தநோய் வந்தால் ஒதுக்கிவைப்பீர்களா?இது ஒன்றும் தொற்றுநோயல்ல.முறையான சிகிச்சை கொடுத்தால் குணமாகக் கூடியதுதான்.அவளை ஒதுக்கிவைப்பதால் உங்களுக்கு ஆகக் கூடியது எதுவுமில்லை.ஆனால் உங்களின் அன்பும் ஆதரவும் கிடைத்தால் அவளுக்குக் கிடைக்கும் நிம்மதி இருக்கிறதே!அது அளவிடமுடியாது. அடிக்கடி போய்ப் பாருங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களின் செயலால் ஒரு செலவில்லாமல் ஒரு நோயாளிக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்?அது உங்களுக்கும் பெருமை அல்லவா?

மார்பகப் புற்றுநோய் வராத பெண்களுக்கு

முதலில் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.அதில் அடங்கும் நோய்களில் கேன்சர் நோயும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் வயது நாற்பதை எட்டி விட்டதா? உடனே மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.
குளிக்கும்போது வாரம் ஓரிருமுறை மார்பகங்களை நன்கு அமுக்கியும் தடவியும் ஏதேனும் கட்டியாகத் தென்படுகிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.தென்பட்டால் உடனே டாக்டரை அணுகுங்கள்



டாக்டர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
எனக்கே சிரிப்பாக இருக்கிறது.பைத்தியக்காரத் தனமாகவும் இருக்கிறது.யாருக்குப் போய் யார் சொல்வது?இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.தவறாக இருந்தால் கண்டியுங்கள்.திருத்திக்கொள்கிறேன்.
இன்றைக்கு எல்லாமே எந்திரத்தனமாகிவிட்டது.உங்கள் பணியை அப்படி ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.நோயாளிகள் உங்களை நாடி வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த நோயைப் பற்றி என்ன தெரியும்?நீங்கள் தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.என்னென்ன சிகிச்சை தரப்படும்,ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் தெளிவாகக் கூறுங்கள்.அவள் படும் வேதனைக்குக் கத்துவாள்.கதறுவாள்.ஆனாலும் உங்களின் தரமான சிகிச்சையினாலும் ஆறுதலான அணுகுமுறையினாலும் மட்டுமே அவள் குணமாவாள்.
அவளுக்கு நீங்கள் டாக்டர் மட்டுமல்ல.நீங்கள் தான் கடவுள்.எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயாளிகளிடம் நர்சுகள்"நீ எல்லாம் எதுக்கு சிகிச்சை எடுக்குரே.இன்னும் ஆறு மாசத்துக்குள்ளாரவே செத்துப்பொயிடுவே.உனக்கு டிரீட்மெண்ட் கொடுக்கிறதே வேஸ்ட்"என்றெல்லாம் பேசுவார்களாம்.கையில் பணமில்லாத கொடுமையால் இலவச சிகிச்சை நாடிப் போகும் இடத்தில் இந்தப் பேச்சுகளையும் தாங்கிக் கொண்டு அந்த நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்கள்.டாக்டர் கடவுள் என்றால் நர்சுகள் கடவுளின் உதவியாளர்கள்.அவர்களிடமிருந்து இத்தகைய கொடுமையான வார்த்தைகள் வரலாமா?உங்களைப் போல உங்களை நாடிவரும் நோயாளிகளும் மனிதர்கள் தான்.நீங்கள் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை.சேவை செய்கிறீர்கள்.மனிதநேயத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்.நோயைக் குணமாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளின் கனவைச் சிதைத்துவிடாதீர்கள்.


சமூகச் சிந்தனையாளர்களுக்கும்,பெண் விடுதலைப் போராளிகளுக்கும் ஒரு வேண்டுகோள்.

மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை அறுத்து எறிந்துவிட்ட பெண்களில் எத்தனை பேர் வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறார்கள்?மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து சிகிச்சைகள்,வலி,உறவினர்களின் அணுகுமுறை,மற்றவர்களிடத்திலிருந்து தள்ளிவைக்கப்படும் கொடுமை,எல்லாவற்றிலும் மேலாகக் கட்டிய கணவனே வேறு பெண்ணைத் தேடிச் செல்வதைத் தடுக்கமுடியாத இயலாமை இவைகளோடு மட்டுமல்லாமல் சிகிச்சைகளினால் ஏற்படுகின்ற உடல் ரீதியான பாதிப்புகள் இவைகளுடன் இவர்களும் வாழ்கிறார்கள்.இவர்கள் வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?சொல்லுங்கள்.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் முடிவு ''சக்சஸ்''என்ற இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.''சர்வைவல்''என்ற ஆரம்பக் கட்டத்திலேயேஇருக்கிறது.இதற்கே மாபெரும் யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது.

குறிப்பாகப் பெண்களுக்கு மட்டுமே வரக் கூடிய நோய் என்பதால் இறுதியாக ஒரு எச்சரிக்கையுடன் இப்பதிவை முடிக்கிறேன்.

பெண்களே,நீங்கள் யாராகவும் இருக்கலாம்.மிகப் பெரிய அரசியல் வாதியாகவோ,அரசு அதிகாரியாகவோ,வழக்குரைஞராகவோ,டாக்டராகவோ,சமூகத்தில் அந்தஸ்து மிகுந்தவராகவோ,பணக்காராராகவோ,ஏழையாகவோ இருக்கலாம்.ஆனாலும்
நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது.
எச்சரிக்கையுடன் இருங்கள்.நலமாக வாழுங்கள்.

20 comments:

theevu said...

ஆரம்பத்திலிருந்தே இந்தக்கட்டுரையை தொடர்ந்து வந்துள்ளேன்.

இதை பதிந்தமைக்கு நன்றி.

இன்றும் நாளையும் என்றும் மற்றவர்க்கு பயன்படக்கூடிய ஒரு தொடர்.

விரைவில் புதிய சிகிச்சைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு குணமாதல் துரிதப்படுத்தப்பட வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

உங்கள் எச்சரிக்கையின் மூலம் கண்டிப்பாக நிறைபேர் பயன் பெறுவர்கள்..நன்றிகள் ;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//"நீ எல்லாம் எதுக்கு சிகிச்சை எடுக்குரே.இன்னும் ஆறு மாசத்துக்குள்ளாரவே செத்துப்பொயிடுவே.உனக்கு டிரீட்மெண்ட் கொடுக்கிறதே வேஸ்ட்"என்றெல்லாம் பேசுவார்களாம்//

இந்த வரிகள் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இவற்றைப்போல் பலதை வைத்தியசாலைக்குச் செல்லும் போது காதால் கேட்டுள்ளேன். தாதிகள்; வைத்திய சாலை ஊழியர்கள்;ஏன் சில வைத்தியர்கள் கூட இதயமோ;இரக்கமோ இல்லாதவர்களாகப் பார்த்துள்ளேன்.
நமக்கோ ,நாம் சார்ந்தவரக்ளுக்கோ இவை வந்தால் என அவர்கள் எண்ணுவதே இல்லை.
இதே வேளை பிராஞ்சு வைத்திய சாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த என நண்பர் ஒருவருக்குக் புற்றுநோய் இருந்துள்ளது. அவருக்கு புற்று நோயென்பது எனக்குத் தெரியாது; அவர் உறவினருக்குத் தெரிந்திருக்கலாம் ஆனால் எனக்கு அதைக்கூறவில்லை;
ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க நான் சென்ற போது; அவருக்கு 40 °c,காச்சல் காய்ந்தது. உடனே தாதியின் கவனத்துக்குக் கொண்டுவந்த போது; அவருக்கு ஏற்றிய செலனில் காச்சல் மருந்து கலந்து;1/2 மணியில் காச்சல் தணிந்தது. பின் அவர் இருமிய போது சளியுடன் இரத்தக் கறை கண்டோம்.
அதையும் குறிப்பிட்ட போதும்; உடனே வந்து ஆவன செய்து ஒரு வைத்தியரையும் வரவழைத்து
பார்க்க வைத்தார்கள்.
ஆனால் அடுத்தநாள் காலை என் நண்பர் உயிர் பிரிந்தது.
இது அந்தத் தாதிகளுக்கும், வைத்தியருக்கும் நன்கு தெரிந்திருந்தும்...சிறுதளவும் அசட்டையின்றி
கடைசிச் செக்கன் வரை அவரை நன்கு கவனித்துள்ளார்கள்.
ஒரு அன்னிய நாட்டவனில் அவர்கள் காட்டிய கருணை அக்கறை...எம் மண்ணில் உள்ள எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் பலரால் கிடைக்காதது. மிக வேதனையே..

உங்கள் வேண்டுகோளைப் படிப்போர் ஒரு சிலராவது மாறுவார்கள்; என நம்புவோம்.
மருத்துவ உலகும் இதற்கு வழிகண்டு ;மனித குலத்தை உய்ய வைக்கும் என நம்புவோம்.

மிக நல்ல தகவல்களைத் தங்கள் அனுபவத்தூடு; அடுத்தவர் பயனுற இந்த வேதனைகளுடன் எழுதியதற்கு
மிக்க நன்றி!

அனுராதா said...

வாங்க தீவு,கோபிநாத்.நன்றி.
வாங்க யோகன்பாரிஸ்.அனுபவத்துடன் கூடிய பின்னூட்டத்துக்கு நன்றி.

cheena (சீனா) said...

சகோதரி அனுராதா,

தங்களின் அனைத்துப் பதிவுகளையும் படித்துள்ளேன். தங்களின் மனவலியும் மனவலிமையும் உடல் வலியைப் புறம் தள்ளி விட்டன. உயிர் வாழ வேண்டும் என்ற வெறி ( killer instinct) தங்களிடம் இருக்கும் வரை கூற்றுவனால் ஒன்றும் செய்ய இயலாது.
புற்று நோய்க்கு உயிர் காக்கும் மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் பட வில்லை. தள்ளிப் போடும் மருந்துகள் தான் உள்ளன.

தாங்கள் படும் துயரம் எங்களை வருத்துகிறது. என்ன செய்வது ?

தங்களின் அறிவுறைகள் / வேண்டுகோள்கள் / படிப்பினைகள் அனைத்தும் அனவராலும் பின் பற்றப் பட வேண்டியவைகள்.

எழுதிக் கொண்டே இருங்கள். கணவன் மற்றும் மக்கள் துணையுடன் இன்னும் எழுத வாழ்த்துகள்.

MyFriend said...

பின்னூட்டம் எழுதவில்லையென்றாலும் உங்கள் ஒவ்வொரு பதிவையும் விடாமல் படித்து வருகிறேன். பலவிஷயங்களை கற்றுக்கொண்டேன்.

உங்களுடைய இந்தப்பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு நல்ல விக்கிப்பீடியாவாக இருக்கும். :-)

Geetha Sambasivam said...

அருமையான பதிவுகள், விட்டுப் போயிருந்ததையும் சேர்த்து இன்றுதான் படிக்க முடிந்தது. என்னால் உங்கள் வேதனையை உணர முடிகிறது. கணவர், குழந்தைகளுடன் நீண்ட ஆயுள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். முடியாத போதே இவ்வளவு சிரமப் பட்டு எழுதுகிறீர்கள், உங்களுக்குள் இருக்கும் போராட்ட குணம் உங்களை வாழ வைக்கும். வாழ்த்துக்கள்.

அனுராதா said...

வாங்க சீனா.மை பிரண்ட்.கீதா சாம்பசிவம்.வாழ்த்துகளுக்கு நன்றி.

seethag said...

அனுராதா,
நீங்கள் மருத்துவர்களைப்பற்றி சொன்னது மிகமிக சரி. இந்தியாவில் நான் படிக்கும்போது மன நலம் குறித்து அத்தனை கவனம் இல்லை. அதுவுமின்றி மருத்துவர்களுக்கு நோயாளிகளிடம் எப்படி பேசவேண்டும் என்று பயிர்ச்சி தருவது இல்லை,.இப்பொழுது மாறியிருக்கலாம்.
இதில் நம்முடய கலாச்சாரம் பெரிய பங்கு வஹிக்கும்.மருத்துவர் கடவுள் போலவும் , நோயாளி மிகவும் அண்டிய நிலயில் இருப்பதாலும் தான் இந்த பிரச்சினை.

உங்காள் தொடரைப்போலவே இந்தவாரம் அவுட்லுக் பத்திரிக்கயில், இந்தியாவின் அமெரிக்க தூதரின் மனைவிக்கு மார்பக புற்று நோய் என்றும் அவர் தன்னுடய அனுபவபவஙகளைப் பற்றி பேசினதாகவும் உள்ளது.அவ்ருக்கு இந்த சிகிச்சைக்காக வேண்டி ஓபன் ஹார்ட் சர்ஜரியும் வேண்டி இருன்ததாம்.


the best of wishes from me.

வடுவூர் குமார் said...

இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு கேன்சர் வர வாய்ப்புள்ளதா??
சிங்கையில் பல பெண்கள் இரவில் தான் வேலை செய்கிறார்கள்,ஏனென்றால் பகலில் குடும்பத்தை பார்க்க வேண்டும்.
ஆனால் மெமோகிராம் சிகிச்சைக்காக மருத்துவமனை போக முடியாதவர்கள் கூட இருக்ககூடும் என்ற நம்பிக்கையில் சுற்று வட்டாரத்துக்கு வேனில் வைத்து செய்கிறார்கள்.
காது கேட்க்கும் குறை உள்ளவர்கள் கூட என்ன வென்று கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கும் தொலைக்காட்சியில்/வானொலியில்/விளமபர பலகையில் என்று வெவ்வேறு கோணங்களில் கட்டாயப்படுத்தப்படுகிறது.
சிங்கையில் நீங்கள் இருந்தால் இதெல்லாம் தெரிந்து இருக்ககூடும்.விபரங்கள் வெளி இடங்களில் இருப்பவர்களுக்காக.
யார் என்ன செய்ய வேண்டும் என்று பல கோணங்களில் அலசியுள்ளீர்கள்.

Ramprasath said...

Á¢¸ ¯À§Â¡¸Á¡É ¾¸Åø¸û.


Á¢ì¸ ¿ýÈ¢.

Å¡ú¸ ÅÇÓ¼ý,
áõÀ¢Ãº¡ò

மங்கை said...

இந்த negative attitude இருப்பது உண்மை தான்... ஆனால் கோவை குப்புசாபி மருத்துவமனை புற்றூ நோய் பிரிவு எப்பவுமே ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது..
செவிலியர்களின் சேவையை அங்கு போய் பார்த்தால் தெரியும்... அப்படி ஒரு கலாச்சாரம் முதலில் இருந்தே...

அனுராதா said...

வாங்க சீதா.அவுட் லுக் வார இதழை நானும் படித்தேன்.
வாங்க வடுவூர் குமார்.இரவில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கேன்சர் தாக்கும் அபாயம் இருக்கிறது என்பதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.சிங்கையில் பிரச்சாரம் பற்றித் தாங்கள் கூறியதை நானும் அறிவேன்.
வாங்க மங்கை.கோவை குப்புசாமி மருத்துவமனை செவிலியர்களின் தரமான செயல்பாட்டுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்.அங்கே புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை செய்யப்படுகிறதா?

Anonymous said...

Dear Anuradha,
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு சின்ன மனக் கஷ்டம் உடல்நலக்குறைவு என்றாலும் வாழ்க்கையே வெறுத்து போய்விடும். ஆனால் உங்கள் தைரியத்தைப் பார்த்து அரண்டு போய் இருக்கிறேன்.

என்னுடைய அக்கா முறை பெண் ஒருவருக்கு சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை நடந்து மார்பகம் அகற்றப்பட்டது. அவர்களும் 2 வருடங்களாக நாட்டு வைத்தியமுறையில் பார்த்து விட்டு மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் யோசித்தது பணத்தேவைக்காக! உங்கள் வேதனையை படித்தவுடன் அவர்களை நினைத்தால் இன்னும் பரிதாபமாக உள்ளதை. அவர்களுக்கு 35 வயதுதான் ஆகிறது. இரண்டாவது குழந்தைக்கு இப்போது தான் 4 வயது ஆகிறது.

கடவுளே! எல்லாப் பெண்களுக்கும் மன தைரியத்தைத் தா!

அனுராதா said...

வாங்க கோகிலவாணி கார்த்திகேயன்.இளம் வயதில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட தங்கள் உறவினரின் தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.எங்கிருக்கிறார்,எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்?
அது சரி,உங்கள் பெயரைக் கிளிக் செய்தால் தொடர்பு கிடைக்கவில்லையே!

இளங்கோ-டிசே said...

அனுராதா, அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கும் நல்லதொரு பதிவு. நன்றி.
.....
/உங்கள் வயது முப்பதை எட்டி விட்டதா? உடனே மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்./
நேற்றும் இது சம்பந்தமான ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்....ஆனால் இங்கே (கனடாவில்..) மேமோகிராம் செய்ய நாற்பதுக்கு மேலேதான் அனுமதி கொடுக்கின்றார்கள் (ஆனால் நெருங்கிய உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தால் விதிவிலக்குகள் உண்டென நினைக்கின்றேன்). மற்றது மார்பு புற்றுநோயிற்கும், second hand smokeற்கும் தொடர்பிருக்கா என்று கேட்கப்பட்டபோது, இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய உங்கள் அறிதல்களைத் தர முடியுமா? அதேபோன்று நிறைய பிள்ளைகள் இருந்து, தாய்ப்பால் நீண்டகாலம் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவென்றாலும், அவர்களும் நிச்சயமாக மேமோகிராம் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்கள் (பலர் இதில் அசட்டையீனமாய் இருக்கின்றார்கள் போலும்).
.......
மீண்டும் நனறி. இவ்வாறான பகிர்வுகளும், பதிவுகளும் தமிழ்ச்சூழலில் நிறைய எழுதப்படவேண்டும்.

அனுராதா said...

வாங்க டிசே தமிழன்.நீங்கள் குறிப்பிட்டபடி நாற்பது என்று இருக்க வேண்டும்.தவறைத் திருத்தி விட்டேன்.ஆனால் தாயார்,சகோதரிகள் போன்ற நெருங்கிய உறவினர்களில் யாருக்கேனும் இந்நோய் வந்திருந்தால்,கண்டிப்பாக முப்பது வயதிலிருந்தே மேமோகிராம் செய்துகொள்வது நலம்.

ஒரு பெண்ணின் அருகிலுள்ளவர்கள் புகைக்கும்போது வெளியிடுகின்ற புகையில் ஏராளமான நச்சுகள் கலந்திருக்கின்றன.அவைகளை அப்பெண் சுவாசிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள்.அதன் விளைவாக அப்பெண்ணிற்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.அது மட்டுமல்லாமல் மூக்கில் பின் பகுதியில் உள்ள சைனஸ் அறைகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உண்டு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி!
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அனுராதா said...

ஆஹா!பதிவுகள் முடிந்தபின்னும் ஞாபகமாக தீபாவளி வாழ்த்துகள் அனுப்பிய யோகன் பாரிசுக்கு நன்றி.

Anonymous said...

அன்புள்ள அனுராதா அவர்களுக்கு,
பாலாஜி பாரியின் வணக்கங்கள். உங்களது இந்த தொடர் தகவல் செறிவாகவும், அதே வேளையில் மிகவும் நெகிழ்வானதாகவும் இருக்கின்றது. அனைத்து பகுதிகளையும் இன்று ஒருங்கே படித்தேன்(அக்டோபர் மற்றும் நவம்பர் மாத பதிவுகளை).
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களது நோக்கமான, புற்று நோய் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி