Thursday, October 18, 2007

இங்கிவனை யான் மகனாகப் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.'ஏற்கனவே பல லட்சங்கள் செலவாகி விட்டன.இப்போது மேலும் பதினைந்து இருபது லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று டாக்டர் கூறுகிறார்.ஏற்கனவே போதுமான அளவுக்கு உடல் ஊனமாகிவிட்டது.வயதோ ஐம்பத்துமூன்று ஆகிவிட்டது.குடும்பக் கடமைகள் என்று ஏதுமில்லை. குழந்தைகள் அனைவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.ஒரே மகனோ கேட்கக் கேட்கக் கொடுத்துக்கொண்டே இருக்கிறான்.அவனை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது.
சாதாரண நோயாக இருந்தால் பரவாயில்லை.இவ்வளவு பெரிய மேஜர் நோயுடன் இவ்வளவு நாள் போராடியது போதும்.வருவது வரட்டும் மேற்கொண்டு சிகிச்சை அது இது என்று எடுக்க வேண்டாம்.வெறும் மாத்திரைகள் கொடுங்கள் என்று டாக்டரிடம் கேட்கலாம்.
இந்த உலகத்தில் வறிய நிலையில் இருக்கும் எத்தனையோ பெண்களுக்கும் இந்நோய் வந்திருக்குமல்லவா?அவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு நிலை வந்தால் என்ன பாடுபடுவார்கள்? என் காலத்திற்குப் பின்னால் இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு ஏற்பாட்டை நான் உயிருடன் இருக்கும்போதே செய்துவைக்க வேண்டும்'

இவ்வாறு சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.என் கணவரோ பணத்தைப் பற்றிக் கவலை இல்லை.மகனிடம் விபரத்தைச் சொன்னாலே வேண்டிய பணம் அனுப்பிவிடுவான்.விடிந்ததும் மகனுடன் பேசலாம் என்றார்.

மறுநாள் 2006 நவம்பர்19ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.காலையில் சிங்கப்பூரில் இருக்கும் என் மகனுடன் பேசினேன்.விபரமெல்லாம் சொன்னேன்.ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை என் மகன்.''அதுக்கென்னம்மா.இருபது லட்சந்தானே.நீங்க என்ன பண்றீங்க.இப்பவே டாக்டரை செல்லில் கூப்பிடுங்க.அவர் சொன்ன சிகிச்சைக்குச் சரின்னு சொல்லிடுங்க.கேக்குற பணத்தை இப்பவே ஆன்லைனில் அப்பாவோட கணக்குக்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுகிறேன்.நாளைக்கே ஆஸ்பத்திரிக்குப் போங்க.மளமளனு ஒவ்வொரு சிகிச்சையா முடிங்க."

''டேய்.பணம் கொஞ்சநஞ்சமில்லேடா.''

என்மகன் சிரித்தான்.

''தெரியுதும்மா.''
''போதும்டா எனக்கு செலவு பண்ணினது.''
''ஏம்மா''
''எனக்குச் செலவு பண்றதைவிட வேறெ நல்ல.....''
அவன் குறுக்கிட்டான்."சரிம்மா.நீ சொல்றதும் செய்றேன்.''
''என்ன சொல்றே?''
''உன் கனவே அது தானம்மா.இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவவேண்டும்.அதுவும் செய்யலாம்மா.உன்னை வச்சுத்தானே செய்யணும்? "
என்னால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
எனக்குப் பணம் முக்கியமில்லேம்மா.நீ தான் முக்கியம்மா.எனக்கு நீ வேணும்மா."
என் உள்ளம் நெகிழ்ந்தது.

அன்றிரவு பதினோரு மணிக்குமெல் டாக்டர் செல்லில் கூப்பிட்டார்.
என் மகன் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக டாக்டருடன் பேசியதாகச் சொன்னார்.விபரங்கள் அனைத்தையும் கேட்டதாகவும்,பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சிகிச்சையை உடனே தொடருமாறும் கூறினானாம்.அதிகமான செலவு எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர் ஞாபகப்படுத்தியதாகச் சொன்னார்.
"அதற்கு உங்கள் மகன் என்ன சொன்னார் தெரியுமா?"
"சொல்லுங்கள் சார்."
"பணம் முக்கியமில்லை டாக்டர்.இன்றைக்குப் பெரிய தொகையா இருக்கிற பணம் நாளைக்குச் சிறியதா மாறிவிடும்.இப்போது இந்த செலவைச் செய்றதுக்குத் தயங்கினா, பணம் இருந்தும் அம்மாவைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற குற்ற உணர்ச்சி பிற்காலத்தில் எனக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். அது என்னால் தாங்கமுடியாது. பதினைந்து இருபது லட்சம் தானே செலவாகும்.கோடி ரூபாயாக ஆனாலும் ஆகட்டும் டாக்டர்.இந்தக் கோடி ரூபாயை என்றைக்கு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.ஆனால் என் அம்மாவைச் சம்பாதிக்கமுடியாதே டாக்டர்.எனக்கு என் அம்மா வேண்டும் டாக்டர்.'என்று சொன்னார் உங்கள் மகன் அனுராதா."
இப்படிப்பட்ட பையனைப் பெற நீங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அனுராதா.''என்றார் டாக்டர்.

13 comments:

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி, அள்ளிக் கொடுக்க (மனமுவந்து) அன்பு மகன் இருக்க என்ன கவலை. தொடர்க சிகிச்சையை.
என் தாய்க்கு, இறுதி வரை, பல வித துன்பங்களுக்கு நடுவிலும், கொடிய புற்று நோய்க்கான சிகிச்சை செய்தேன் என்ற முறையில் சொல்கிறேன்.

//டாக்டர்.இந்தக் கோடி ரூபாயை என்றைக்கு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.ஆனால் என் அம்மாவைச் சம்பாதிக்கமுடியாதே டாக்டர்.எனக்கு என் அம்மா வேண்டும் டாக்டர்.'என்று சொன்னார் //

இந்த மாதிரி மகன்கள் பிறக்க முன் பிறவியில் செய்த புண்ணியங்கள் தான் காரணம்

ILA (a) இளா said...

ஒரு நிமிஷம் கண்கலங்க வெச்சுட்டாரு உங்க மகன். அவர் எங்கேஇருந்தாலும் நல்லபடியா வாழனும்னு என்னோட பிராத்தினைகள்.

இந்த மாதிரி மகன் பிறக்க முன் பிறவியில் நீங்க செய்த புண்ணியங்கள் தான் காரணம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ulagaththil Amma vukku kanakkuparppavan manithane illai.
Ungal magan MANIDHAN.Avarukku en vazhththukkal
T.V.Radhakrishnan

துளசி கோபால் said...

உங்க மகன் நல்லா இருப்பார் அனு.

போனஜென்மப் புண்ணியம்தான் உங்களுக்கு.

ஆமாம், பட்டகாலில் படும் ன்னு பழமொழி இருக்குன்னாலும், உங்களை இந்த நோய் இப்படிச் சுத்திச்சுத்தி வந்து தாக்குறதைப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமா இருக்குப்பா.

CVR said...

இந்த மாதிரி பையன் இருக்கும் போது என்ன பயம்??
கவலையே படாதீங்க!

ஒரு கை பாத்துருவோம்!!!!

அனுராதா said...

வாங்க சீனா,இளா,கே.வி.ராதாகிருஷ்ணன்,துளசி கோபால்,சி.வி.ஆர்.தங்களின் பிரார்த்தனைகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி

கோபிநாத் said...

\\எனக்குப் பணம் முக்கியமில்லேம்மா.நீ தான் முக்கியம்மா.எனக்கு நீ வேணும்மா."\\

உங்கள் மகனுக்கு என் வணக்கங்கள் ;)

கவலையை விடுங்கம்மா ;)

வடுவூர் குமார் said...

சொல்ல வேண்டியதெல்லாம் பல பின்னூட்டங்களே சொல்லிவிட்டன.
பையன் இங்கு தானா?
முன்பு சொல்ல வந்த சஸ்பென்ஸ்..இது தானா? பக்கத்திலேயே இருக்கிறார் போலும்.

BadNewsIndia said...

உங்கள் மகன் அவர் கடமையைத் தான் செய்கிறார்.

நீங்கள் செய்யும் பணி உன்னதமானது.

இவ்வளவு இன்னல்களுக்கு நடுவிலும், மனம் தளராமல், நோயை எதிர்கொள்வதோடில்லாமல், உங்கள் அனுபவத்தையும் இங்கு பதிகிறீர்களே. இது பலருக்கு உதவியாக இருக்கும்.

இதைப் படிக்கும் பல மகன்கள், தங்கள் கடமையில் தவறாமல் இருக்க ஒரு உங்களின் இந்த பதிவு உதவும்.


உங்களின் மகனுக்கு என் வந்தனங்கள்.

அனுராதா said...

வாங்க கோபிநாத்,வடுவூர் குமார்,பேட் நியூஸ்இந்தியா.வாழ்த்துகளுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெற்றவர்களை விடுதிகளில் தவிக்கவிடும் உலகில் தங்கள் மகன் போற்றத் தக்கவர்.
நீங்கள் கொடுத்துவைத்தவர்..இந்த வகையில்..
தங்கள் மகனாருக்கு மரியாதை கலந்த அன்பு

அனுராதா said...

நன்றி யோகன் பாரிஸ்

கிரி said...

//இந்தக் கோடி ரூபாயை என்றைக்கு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.ஆனால் என் அம்மாவைச் சம்பாதிக்கமுடியாதே டாக்டர்//

என்னை கண்கலங்க வைத்து விட்டார் உங்கள் மகன். உங்களை சுற்றி நல்லவர்களே இருக்கிறார்கள், நீங்கள் எதுக்கும் கவலை படத்தேவை இல்லை.