Friday, March 21, 2008

நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு.

டாக்டர் சொன்னபடி 2008 சனவரி 11ந் தேதியன்று மருத்துவமனைக்குச் சென்றோம்.அன்று அவாஸ்டின் மருந்து ஸ்டாக் இல்லையாம்மூன்று நாட்கள் கழித்து போன் செய்துவிட்டு வருமாறுசொல்லிவிட்டார்கள்.வாய்ப்புண்ணைப் பற்றிக் கேட்டேன்.நிறையத் தண்ணீர் குடிக்குமாறு டாக்டர் அறிவுறுத்தினார்.

16ந் தேதியன்று மருந்து வந்திருப்பதை போனில் உறுதிசெய்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்று இரண்டாவது முறையாக அவாஸ்டின் மருந்தும் பேக்லிடாக்ஸல் கீமோ மருந்தும் போட்டுக் கொண்டேன்.

நாளாக நாளாக வாய்ப்புண் அதிகமானது.என்னால் பேசக் கூட முடியவில்லை.சரியாகச் சாப்பிட முடியவில்லை.காலையில் நெய்யுடன் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மதியமும் இரவும் வெறும் சாதத்துடன் நிறையத் தண்ணீர் சேர்த்துக் கொஞ்சம் உப்பு போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.என்ன செய்வது?சாப்பிட்டாக வேண்டுமே!முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.பிறகு பழக்கப்படுத்திக் கொண்டேன்.தினமும் சாத்துக்குடிஆரஞ்சு கொய்யா வாழைப்பழம் மற்றும் இளநீர் ஆகியவைகளைச் சேர்த்துக் கொண்டேன்.

இதற்கிடையில் கடுமையான ஜலதோஷம் வேறு வந்து வாட்டியது.உடம்பெங்கும் ஒரே வலி.எனவே ஒவ்வொரு வாரமும் அவாஸ்டின் போட்டுக் கொள்ள வேண்டிய கெடுவும் தள்ளிப் போனது.ஜலதோஷம் அதிகமாக இருக்கும்போது அவாஸ்டின் போடவேண்டாம் என்று டாக்டர் சொல்லி விட்டார்.

இந்நிலையில் தினமும் தலை வலிக்க ஆரம்பித்தது.அவ்வப்போது முதுகுக்குப் பின்னாலும் வலி இருந்தது.டாக்டரிடம் காண்பித்ததில் ஒரு வாரத்திற்கு ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு கொடுத்தார்.ஒரு வாரம்முடிவதற்குள் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிட்டாலும் தலைவலி வர ஆரம்பித்தது.

எனக்குப் பயமாகி விட்டது.மீண்டும் தலையில் ஏதாவது பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதோ என்ற சந்தேகம் தான்.எனவே டாக்டரின் சொல்படி பிப்ரவரி 2ந் தேதியன்று தலையை சி.ட்டி.ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டியைக் காணோம்!இன்னொரு கட்டி முன்பிருந்ததைவிடப் பாதிக்கும் மேல் குறைந்திருந்தது.எனவே தலைவலியானது சாதாரணமானது என்று உறுதியானது.
எங்களுக்கும் டாக்டருக்கும் நிம்மதியானது.

ஜலதோஷமும் கொஞ்சம் குறைந்திருந்ததால்,மறுநாள் பிப்ரவரி 6ந் தேதி மூன்றாவது முறையாக அவாஸ்டினும் கீமோவும்போட்டுக் கொண்டேன்.
வாய்ப்புண் குறைந்தபாடில்லை.டாக்டரிடம் கேட்டதற்கு பேக்லிடாக்ஸல் என்னும் கீமோ மருந்து போட்டால் அதன் பக்கவிளைவாக ஏதேனும் பாதிப்பு வரத்தான் செய்யும் என்றும் கூடிய மட்டும் சகித்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

பிறகென்ன.சாப்பாடு பழையகதை தான்.

ஜலதோஷம் அதிகமானதால் பிப்ரவரி 19ந் தேதிடாக்டரைப் பார்த்தோம்.அவரின் ஆலோசனையின் பேரில் காது மூக்கு தொண்டை டாக்டரைப் பார்த்தோம்.அவர் பரிசோதித்துவிட்டு ஸைனஸ் பிரச்சனை இருப்பதால்தான் தலைவலியும் ஜலதோஷமும் இருப்பதாகக் கூறி அதற்கான மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

இவ்வாறாக வாராவாரம் போட வேண்டிய அவாஸ்டின் மருந்து மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்றானது.

அடுத்து பிப்ரவரி26ந் தேதியன்று டாக்டரைப் பார்க்கும்போது கீமோ ஊசி மருந்தினால் தானே இவ்வளவு பாதிப்புகள் வருகின்றன?அதற்குப் பதிலாக மாத்திரைகளாகக் கொடுங்களேன்என்று கேட்டேன்."பேக்லிடாக்ஸல் கீமோ மருந்து சேராதபட்சத்தில் மட்டுமேதான் மாத்திரைகள் தரலாம். இப்போ உங்களுக்கு இந்த கீமோமருந்து சேராததால் இம்முறை கீமோ மாத்திரைகள் தருகிறேன்"என்றார்.

அடுத்தநாள்பிப்ரவரி 27ந் தேதி நான்காவது முறையாக அவாஸ்டின் ஊசி போட்டுக் கொண்டேன்.தினமும் உட்கொள்வதற்கு "CAPECITE" என்ற கீமோ மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

என்ன ஆச்சரியம்!இரண்டு மூன்று நாட்களிலேயே வாய்ப்புண் குறைய ஆரம்பித்தது.நாள் செல்லச் செல்லகாரமில்லாமல் உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன்.

இப்போது தலைவலியுடன் முதுகு வலியும் சேர்ந்துகொண்டது.மீண்டும்
இம்மாதம் 5ந் தேதி டாக்டரைப் பார்த்தோம்.அதற்கு குறைந்த பவர் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு எழுதிக்கொடுத்தார்.

அடுத்ததாக இன்று மார்ச்சு 21ந் தேதி மருத்துவமனை சென்று ஐந்தாவது
முறையாக அவாஸ்டின் போட்டுக் கொண்டேன்.முதுகு வலி குறைந்தபாடில்லை.டாக்டர் என்னைப் பரிசோதித்துவிட்டு அடுத்த வாரம் 24 அல்லது 25ந் தேதிஎலும்பு ஸ்கேன்(Bone scan)செய்து பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

ஆக இந்த நோயும் என்னை விட்டபாடில்லை.உடம்பின் ஒவ்வொரு பாகமாக
வருவேன் என்று சொல்லாமல் சொல்கிறது.என்னைக் கொல்லாமல்
கொல்கிறது.நானும் விடுவதாக இல்லை.

ஒருவழியாக இன்றைய நாள் வரை வந்து விட்டேன்.எனவே இனிமேல் மார்பகப் புற்றுநோயைக் குறித்தான நான் அறிந்த,சேகரித்து வைத்துள்ள தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.அத்துடன,இனிமேல் இந் நோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் உங்களுடன் விவாதிக்கலாம் என்றிருக்கிறேன்.
இது குறித்து விபரம் நாளை தருகிறேன்.

17 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் உடல் நிலைபற்றிய தகவல்களுக்கு நன்றி அம்மா.

ILA (a) இளா said...

தகவலுக்கு நன்றிங்க. ஒவ்வொரு மருந்தா விளக்கம் தெரியுது.

SP.VR. SUBBIAH said...

யாருக்கும் கேன்சர் வர வேண்டாம் தாயே!
என் சகோதரியின் கணவருக்கு அது வந்து சிகிச்சைக்காக ஒரு வருடம் அல்லாடியிருக்கிறோம். அதன் கோர முகத்தை அப்போதுதான் உணர்ந்தோம்

சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவர் இன்று உள்ளார்.அனால் கேன்சர் பதித்துவிட்டுப்போன
வடுக்கள் (அவர் உடம்பிலும், மனதிலும்)
மருத்துவ மனையில் இருந்து அவர் மேல் குதிரை ஏறிக்கொண்டு வந்துவிட்டன!

வடுவூர் குமார் said...

தலைப்பு....
செம சூப்பர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

'நான்கு பக்கமும் துன்பம் வந்தால்
நாத்திகர்க்கும் கடவுள் உண்டு'
எனென்றால் அவர் தான் திரும்பக் கேள்வியே கேட்காமல் கேட்டுக் கொண்டே இருப்பவர்.
சகோதரி!!
உங்கள் மனவலிமைக்குக் குறைவராமல்
இருக்கட்டும்.

அறிஞர். அ said...

Writing 'eases stress of cancer'//

http://news.bbc.co.uk/2/hi/health/7304294.stm

இன்றைய பிபிசி தளத்தில் வந்துள்ள நல்ல சேதி அம்மா, நீங்கள் தமிழில் முன்மாதிரியாய் இருக்கிறீர்கள்.

விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

எழுதுங்கள் அம்மா.. தொடர்ந்து எழுதுங்கள்..

மன உறுதிக்கு மறுபெயராக உங்களை மனதில் கொண்டு நாங்களும் எங்களை வளர்த்துக் கொள்கிறோம்.

இனி தாங்களே விரும்பியதைப் போல, நீங்கள் ஒரு மருத்துவ நோய்கள் மற்றும் அதன் தீர்க்கும் வழிமுறைகள் பற்றி எழுதும் அறிவார்ந்த சக பதிவர் மட்டுமே..

என் அப்பன் முருகன் என்றும் உங்கள் துணையிருப்பான்..

வாழ்க வளமுடன்..

அபி அப்பா said...

வேண்டாம், கஷ்டப்பட்டு எழூத வேண்டாமே! பீ ரிலாக்ஸ்! வந்துவிட்டேன் ஊருக்கு, முடிந்தால் சீனா சார், தருமி சார் கூட வந்து அபி,நட்ராஜ் கூட பார்க்கிறேன்!

துளசி கோபால் said...

உடம்பைப் பார்த்துக்கோங்க அனு.

எழுதணுமுன்னு தோனும்போது கட்டாயம் கொஞ்சம்கொஞ்சமா எழுதுங்க.

அனுராதா said...

வாங்க கோவி கண்ணன்,இளா.நன்றி.

வாங்க சுப்பையா சார்."......குதிரை ஏறிக்கொண்டு வந்து விட்டன.....".இவ்வளவு வேதனையிலும் சிரிப்பை வரவைத்து விட்டன உங்கள் வரிகள்.இன்று தான் உங்கள் கதைகளில் ஒன்றை(கோடியில் ஒரு பெண்) என் கணவர் படித்துக் காண்பித்தார்.வாழ்க்கை நடைமுறைத் தத்துவங்களை மிக அழகாகச் சொல்லிவருகிறீர்கள்.நன்றி.

வாங்க வடுவூர் குமார்.இத்தலைப்பிற்கு அடுத்த வரியும் உண்டு."காண்பதெல்லாம் துயரம் என்றால் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு"எல்லாம் அந்தக் காலத்துப் பாடல் வரிகள்."நினைப்பதற்கு நேரமில்லை.நினத்துவிட்டால் மறப்பதில்லை" என்று முதல் வரி
வரும்.

வாங்க யோகன் பாரிஸ்.மாஹிற்.உண்மைத்தமிழன். நன்றி.

வாங்க அபி அப்பா.கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க.குழந்தைகளுடனும்,மறக்காமல் சீனா,தருமி ஆகியோரையும் கூட்டிகிட்டு வாங்க.

வாங்க துளசி கோபால்.இந்த நோவெல்லாம் உடம்புக்குத்தான்.உள்ளத்துக்கு இல்லை.நான் எங்கே எழுதறேன்.இன்ன விஷயம்னு கணவர் கிட்டே சொல்றது மட்டும் தான் என் வேலை.மத்ததை அவர் பார்த்துக் கொள்வார்.

அனைவருக்கும் நன்றிங்க.

Unknown said...

அன்புத் தாய்க்கு..!
உணர்வுப் பகிர்தல் என்பது உயிரை நீட்டிக்கும் ஓர் மாமருந்து...நீங்கள் பகிர்வதோடு மட்டுமல்லாமல் எங்களுக்குப் பாடமாகவும் இருக்கிறீர்கள்....எதையுமே சொல்லாது என் குறித்தே கவலைப் பட்டவள் என் தாய் ....நெஞ்சில் முட்டிய உணர்வின் உச்சம் சமீபத்தில் அவர்களின் உயிரையே எடுத்து விட்டது.... (நான் சினிமாவில் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டு விரக்தியானதும்,தன் ஒற்றைப் பிள்ளையின் தவம் நீள்கிறதே என்று தன் கவலையை நீட்டித்ததுமே காரணம்..)
நான் உங்களள வியக்கிறேன்..புற்று நோயை ஒரு பொருட்டாக மதிக்காது..அது குறித்து மனதால் முடங்காது....எங்களோடு பயணிக்கிறீர்களே நான் உங்களை வியக்கிறேன்...உங்களுக்காகவும், குடும்ப மஹிழ்ச்சிக்காகவும் உங்கள் இன்னொரு மகனாக இறைவனைப் ப்ரரர்த்திக்கிறேன்.....நான் நெல்லையைச் சார்ந்தவன் தற்பொழுது சென்னையில் மேடைநாடகங்கள்,குறும் படங்கள் நடித்து வருகிறேன்...சென்னை வந்தால் எம் நாடகத்திற்கு வரவும்....
அன்புடன்
சிவா
shiva.urs@gmail.com
www.aaraamthinai.blogspot.com

Anonymous said...

Sorry for not writing in tamil. I was told that Art of living pranayama helps in overcoming the side effects of chemotherapy. If possible give that course a try. I wish you all the best in fighting this dreaded disease.
- Suresh

cheena (சீனா) said...

சகோதரி,

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்க இருக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தரத் தயார். மனோ தைரியம் பாராட்டுதலுக்குரியது. நல்வாழ்த்துகள். தொடர்க தொடர்க - இறைவன் கருணையுடன் தொடர்வான்.

கிரி said...

//காலையில் நெய்யுடன் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்//

மனது கனத்து விட்டது அம்மா. கவலையே படாதீர்கள், உங்கள் கஷ்டங்களை எல்லாம் அடித்து தூள் பண்ணிட்டு பட்டய கிளப்பிட்டு வந்து..... "பாருங்க நான் பக்காவா ஆகிட்டேன்னு" எங்களிடம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கண்டிப்பாக கை விட மாட்டான். கடவுளை நம்புங்கள். உங்களுக்காக இவ்வளவு பேர் வேண்டுகிறோம், கடவுள் கை கொடுக்கிறாரோ இல்லையோ, இத்தனை உண்மையான வேண்டுதலுக்கும், எண்ணங்களுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு, இருந்தே ஆக வேண்டும்.

அனுராதா said...

வாருங்கள் சன் ஷிவா,சுரேஷ்,சீனா,கிரிராஜ்.அனைவரின் ஆறுதலுக்கு ந்ன்றி.

துளசி கோபால் said...

ரெண்டு நாளைக்கு முன்னே உங்களை ரொம்ப நினைச்சேன்.

SurveySan said...

நல்ல தலைப்பு.

உங்கள் மனதைரியம் வியப்பைத் தருகிறது.
எங்க ப்ரச்சனையெல்லாம் பூன்னு ஊதிடலாம் உங்களத பாக்கும்போது.

/////இனிமேல் இந் நோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் உங்களுடன் விவாதிக்கலாம் என்றிருக்கிறேன்.////

கண்டிப்பா செய்யணும்.