Wednesday, March 19, 2008

வார்த்தையின்றிப் போகும்போது மெளனத்தாலே நன்றி சொல்வேன்.

வலைப்பதிவில் கடைசியாக எழுதி மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டன.தாமதத்திற்குக் காரணம் இருக்கிறது.

என் உடல்நிலை முன்பு போல இல்லை.மருந்து கசக்கிறது.அதற்கும் மேல் மனம் கசக்கிறது.சிந்தனை எங்கெங்கோ அலை பாய்கிறது.இனியும் நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்?மருத்துவ சிகிச்சைகள் முடிகிற மாதிரி தெரியவில்லை.அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எத்தனை முறை எழுதுவது?

ஓரளவுக்கு மேல் அமுதமும் விஷமாகுமல்லவா?சரி.பின் எதைத் தான் எழுதுவது?என் கணவருக்கோ என்னைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.எனவே தான் மேற்கொண்டு எழுத வேண்டாம் என்று என் கணவரிடம்கண்டிப்பாகக் கூறியிருந்தேன்.

ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னால் சக பதிவர் திரு சீனா அவர்கள் செல் போனில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தார் சங்கமம் தமிழ் வலைப்பூ 2007 க்கான விருதுகளில் முல்லைப் பிரிவுக்கான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்ற இனிய செய்தியைத் தெரிவித்திருந்தார்.

என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.ஒரு வினாடி சில்லென்றுபுல்லரித்தது."அப்பொ என் அனுபவங்களைப் படித்தவர்களின் சிந்தனை என்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவர்களைப் பாதித்திருக்கிறது!" ஆஹா!அந்த அளவுக்கா எழுதியிருக்கிறேன்? என்று ஒரு கணம் நினைத்தேன்."இல்லை.இல்லை.என் எழுத்தில் உண்மை இருக்கிறது.நேர்மை இருக்கிறதுசத்தியம் இருக்கிறது.அதற்குத்தான் இந்த விருது"என்று மனம் தெளிந்தேன்.

இந்த விருதினை யாருக்குக் காணிக்கையாக்குவது?

1.எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கா?
2.எனக்குக் கொடுக்கப்படும் மருந்துகளுக்கா?
3.என்னை அல்லும் பகலும் கவனித்துக் கொள்ளும் என் அருமைக் கணவருக்கா?
4.என்னையும் உங்களையும் இணைக்கும் வலைப் பூ உலகத்திற்கா?
5.அல்லது என்னைப் பாடாய்ப் படுத்திவரும் இந்தக் கேன்சர் நோய்க்கா?

தெரியவில்லை.நிஜமாகத் தெரியவில்லை.

வாக்களித்த சக வலை பதிவு நண்பர்,நண்பிகளுக்கும்,மதிப்பார்ந்த நடுவர்,துணை நடுவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

இந்த தேர்வின் மூலமாக வலைப்பதிவர்களிடையே என்னை வெளிச்சம்போட்டுக் காட்டிய "சங்கமம்"ஆசிரியக் குழுமத்திற்கு என் பணிவானநன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நோயிலிருந்து மீண்டு வருவேனோ இல்லையோ தெரியவில்லை.வலைப்பூவில் எழுத நாளை முதல் மீண்டும் வருவேன்.அந்த அளவிற்குஎன்னை உற்சாகப் படுத்தியிருக்கிறது இந்த விருது.

நிம்மதியாகத் தூங்கிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.இப்போது என் உள்ளம் குளிர்ந்திருக்கிறது.இன்று நான் நிம்மதியாகத்தூங்கப் போகிறேன்.

22 comments:

ILA (a) இளா said...

முதலில் வாழ்த்துக்கள்!
தங்களை தொடர்பு கொள்ள பல நபர்களிடம் முயற்சி செய்தும் பலன் கிட்டாததால், பதிவிலேயே தொடர்பு எண் வேண்டி பதிவிட்டு இருந்தேன். சீனா அவர்களுக்கு முதற்கண் நன்றி. பின்னூட்டமாகவும் உங்க தொடர்பு எண்ணை தந்து இருந்தார். சங்கமம் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்களும், நீங்க நீண்ட நெடு நாள் வாழ ஆண்டவனை பிராத்திக்கிறோம். மேல் விவரங்களுக்கு, சங்கமம் சார்பாக திரு. ராம் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்.
நன்றி!

நந்து f/o நிலா said...

வாழ்த்துக்கள்.
அதே உற்சாகத்துடன் எழுத வாருங்கள்.

Unknown said...

உங்கள் கணவருக்கு இந்த விருதில் பெரும் பங்குண்டு. அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். திரும்ப வாருங்கள்.

தமிழச்சி said...

///நிம்மதியாகத் தூங்கிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.இப்போது என் உள்ளம் குளிர்ந்திருக்கிறது.இன்று நான் நிம்மதியாகத்தூங்கப் போகிறேன்.///


சந்தோஷமான இனிய கனவுகளுடன் மெல்ல வருடியபடி தாலாட்டு பாடும் அம்மாவின் இதமான சூட்டில் தொடரட்டும் கனவுகள்.....

இரவு வணக்கம்!

மாதங்கி said...

அனுராதா விருதுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள்..;))

தொடர்ந்து எழுதுங்கள்.

Aruna said...

அன்பு அனுராதா அவர்களுக்கு,
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் நீக்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.இருந்தும் உங்களின் அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்ல மனம் ஏங்குகின்றது.உங்களை நோயிலிருந்து மீட்டு வர நல்ல உள்ளங்கள் பலரின் பிரார்த்தனை உதவும்.....கண்டிப்பாக நோயிலிருந்து மீண்டு வருவீர்கள்......வலைப்பூவை உங்கள் வார்த்தைகளால் அலங்கரித்து எங்களின் பார்வைக்குத் தரத்தான் போகிறீர்கள்!!!
அன்புடன் அருணா

அனுராதா said...

அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாழ்த்துக்கள். தக்க தேர்வு.

."இல்லை.இல்லை.என் எழுத்தில் உண்மை இருக்கிறது.நேர்மை இருக்கிறதுசத்தியம் இருக்கிறது.அதற்குத்தான் இந்த விருது"

சகோதரியே!
உண்மை,முற்றிலும் உண்மை.
எழுதுங்கள்...அதன் மூலம் எங்களுடன் பேசுங்கள்.

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள் அனு.

விருது உங்களுக்கும் உங்கள் மறுபாதிக்கும்தான்:-)))))

அனுராதா said...

வாங்க யோகன் பாரிஸ்.நன்றி
வாங்க வாங்க துளசி கோபால்.நீங்கள் சொன்னது சரி தான்.இருந்தாலும் என் மகன் எனக்காகச் செய்யும் செலவு மிகவும் அதிகம்.பணம் ஒரு பக்கம் இருக்கட்டும்.மனசுன்னு ஒண்ணு இருக்குல்லையா.அந்த நல்ல மனசுக்கு இந்த விருதின் மறுபாதியைப் பெற முற்றிலும் தகுதி இருக்கிறது.எனவேதான் என் கணவருக்கும் அருமை மகனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

மணியன் said...

வாழ்த்துகள் !! நோயிலிருந்து முழுமையாக குணமடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள் அம்மா....2 நாள் முன்னமே போன் பண்ண நினைத்தேன். அடுத்த 2 நாட்களில் பண்ணுகிறேன்.

Unknown said...

இந்த விருது உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்தது குறித்து மகிழ்ச்சி!

நடுவர்களில் ஒருவனாக இருந்ததற்கு பெருமை கொள்கிறேன்!

வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்...

அனுராதா said...

வாங்க மணியன்.நன்றி.
வாங்க மதுரையம்பதி.போன் பண்ணுங்க.மதுரைக்கு வரும்போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.
வாங்க தஞ்சாவூரான்.வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

தருமி said...

உங்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

உங்கள் துணைவருக்கும், அன்பு மகனுக்கும் என் வணக்கங்கள்.

Unknown said...

விரைவில் நலம் பெற பிரார்த்தனையாடு
வாழ்த்துக்களும்.

சுரேகா.. said...

அம்மா..!
வணக்கமும்....

வாழ்த்துக்களும்!

Anonymous said...

Amma,

This is Suganthi from USA.

Last night when I was reading Vikatan, I got to see your blog. No words can express my feelings reading the whole of your experiences. There were some people suffered with this whom I knew. But, never knew the pains in detail.

You took great efforts in creating the awareness among people inspiteof your problems. Hats off to you and to your family for supporting you through your problems.

I felt I was with you during your treatment, when I read your writings. As you said you wrote the truth. You have to write continuously for the wellwishers. Now, it is one of my family matters.

Praying god to give you more and more mental and physical strength. Long live Anuradha Amma!

cheena (சீனா) said...

சகோதரி அனு,

நீண்ட நாட்களுக்குப் பின் பதிவு கண்டு மகிழ்ந்தேன். சங்கமம் விருதிற்கு முற்றிலும் தகுதி வாய்ந்த பதிவு தங்களுடையது. எழுதுக எழுதுக !
இறைவன் கருணையூம் சக வலைப் பதிவர்களின் பிரார்த்தனையும் தங்களுக்கு கை கொடுக்கும். நல்வாழ்த்துகள்.

அன்புக் கணவருக்கும் அருமை மகனுக்கும் வணக்கத்துடன் கூடிய பாராட்டுகள்.