Wednesday, September 3, 2008

அனுராதாவின் கடைசி நிமிடங்கள்

சூலை 28ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வரை அனுராதா நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்.ஆகஸ்டு 3-ந் தேதி வியாழக்கிழமை மாலை சில உறவினர்களும் அவர்களின் குழந்தைகளும் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்.சில நிமிடங்களில் அனு அழ ஆரம்பித்து விட்டார்.'எல்லோரும் அவரவர் குழந்தைகளுடன் வருகிறார்கள்.என் குழந்தைகளைக் காணோமே.உடனே பார்க்க வேண்டும்"என்றார்.உடனே சென்னையில் இருக்கும் மூத்த மகளுடன் பேசி மறுநாளே வரச் செய்தேன்.சிங்கப்பூரில் இருக்கும் மகனும் இன்னொரு மகளும் 6ந் தேதியன்று வந்தனர்.அனுவின் விருப்பப்படி11ந் தேதி திங்கட்கிழமையன்று ஆடி மாதம் என்று கூடப் பார்க்காமல் புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம் நடத்தினோம்.அன்றெல்லாம் அவரால் நடக்கக் கூட இயலவில்லை.அப்படியே தூக்கிக் காரில் உட்கார வைத்துக் கூட்டி வந்தோம்.அனு மிகவும் நிம்மதியாகக் காணப்பட்டார்.நான் சொல்லச் சொல்லக் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்தார்.மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது.மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துவந்தோம்.


நாளாக நாளாக அனுராதா பேசுவதும் குறைந்து கொண்டே போனது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.டாக்டரிடம் கேட்டால்'இனிமேல் தான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.என்ன நடக்கிறது என்பது அனுவுக்குத் தெரியாது.உங்கள் ஒருவரால் இரவும் பகலும் பார்த்துக் கொள்வது சிரமம்.உங்கள் மகனையும் கூட இருக்கச் சொல்லுங்கள்.இரவு நேரங்களில் பார்த்துக் கொள்ளும் பணியை இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்'என்றார்.


அடுத்த ஓரிரு நாட்களில் தூக்கமும் குறைந்தது.என்னதான் படுக்கையைச் சீர் செய்து வசதியாகப் படுக்க வைத்தாலும் அடுத்த நிமிடத்திலேயே எழ முயற்சிப்பார்.வலது கையும் வலது காலும் இயங்குவது பாதிப்படைந்திருந்ததால் வலது பக்கமே சாய்ந்து இடது கையைக் கொண்டு கட்டிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு எழப் பார்ப்பார்.அருகில் இருப்பவர் பார்த்துக்கொண்டே இருந்தால் உடனே சென்று பிடித்து உட்கார வைக்க வேண்டும்.பிறகு சாய்ந்துவிடாமல் இருக்க வேண்டி சுற்றிலும் தலையணைகளை அடுக்கி வைக்க வேண்டும்.யாரும் பார்க்கவில்லை என்றால் தலையைக் கட்டிலின் கைப்பிடியில் சாய்த்து வைத்துக் கொண்டு முனக ஆரம்பிப்பார்.அந்த சத்தத்தைக் கேட்டாவது அருகில் சென்று விடுவோம்.இப்படியாக இரவும் பகலும் எந்த நேரம் என்றில்லாமல் ஒரு நாளைக்கு முப்பது நாற்பது முறை எழுந்து உட்காருவார்.மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் தூங்கினாலே அதிகம்.


உணவு உட்கொள்வதும் மிகவும் குறைந்தது.காலையும் இரவும் ஒரு இட்லி அல்லது ஒரு இடியாப்பம் மட்டுமே உட்கொள்ள முடிந்தது.மதியம் எங்கள் இரு மகள்களில் ஒருவர் வந்து தயிர்சாதத்தை மாம்பழத்துடன் ஊட்டி விடுவார்கள்.ஆக,மதிய உணவு மட்டும் சற்றுப் போதுமான அளவு உட்கொண்டார்.காப்பி அல்லது டீ குடிப்பதும் அடுத்த சில நாட்களில் குறைந்தது.பதிலாகக் குளிர்பானங்களைக் குடிக்கச் செய்தோம்.


மருந்துகளைப் பொருத்தமட்டில் தினமும் மேனிடால் என்ற மருந்து நரம்பு வழியாகக் கொடுக்கப்பட்டு வந்தது.இம்மருந்து மூளையில் உள்ள புற்றுநோய்க் கட்டியால் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படுவதாகும்.அதுவும் ஒரு நாளுக்கு மூன்று வேளை என்பது நாளாக நாளாக ஒரு வேளையாகக் குறைக்கப்பட்டது.


24ந் தேதியிலிருந்து திட உணவு ஏதும் கொடுக்க வேண்டாம் என்றும் கொடுத்தால் தொண்டையில் உணவு தங்கி மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும் டாக்டர் சொன்னதன்பேரில் திட உணவு நிறுத்தப்பட்டது.


26ந் தேதி இரவு பத்து மணிக்குத் தூங்க ஆரம்பித்தவர் அன்று இரவு முழுதும்

நன்றாகத் தூங்கினார்.மறுநாள் எழுந்து பார்க்கையில் தொடர்ச்சியாகத் தூங்கிக் கொண்டே இருந்தார்.டாக்டர் வந்து பார்க்கும் போதும் தூக்கத்திலேயே இருந்தார்.27ம் தேதியும் தொடர்ந்து தூங்கினார்.அன்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.சிறிது நேரத்தில் சரியானது.
மறுநாள் 28ந் தேதி காலை ஏழு மணி அளவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உடனே ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் சரியானது.மறுபடியும் இறுதியாக காலை 9.50க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இரண்டு நிமிடங்களில் மூச்சு நின்றது.


அனைவற்றையும் வெறுமனே கைகளைப் பிசைந்து கொண்டும்,மனதைக் கல்லாக்கிக் கொண்டும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.


என்னருமை ஜீவன் பிரிந்தது.துக்கம் தொண்டையை அடைத்தது.கோடிக்கணக்கில் செலவழிக்கத் தயாராக மகன் இருந்தும் அல்லும் பகலும் ஊன் உறக்கமின்றிப் பார்த்துக் கொள்ளக் கணவன் இருந்தும் தேர்ந்த மருத்துவர்கள் அருகில் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.சோகம்,அழுகை,வெறுப்பு,விரக்தி என எல்லாமும் சேர்ந்து வயிற்றுக்குள்ளிருந்து ஏதோ திரண்டு நெஞ்சில் நின்றது.போகும் உயிரை நிறுத்த வழியேதும் காணாமல் வெறுமனே மரம் போல் நின்றிருந்தேன்.


இனி என்ன எழுத?

..........அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்).............

30 comments:

Anonymous said...

எதை எழுதினால் ஆறுதல் அடைவீர்கள் எனத் தெரியவில்லை.
ஆத்மா சாந்தியடையட்டும். மனதார வேண்டுவோம்.

ஒரு ஈழத்துத் தமிழன்

சுல்தான் said...

அவருக்காக உங்களுடன் சேர்ந்து எங்கள் கண்களும் கண்ணீரைச் சொரிகின்றன. அவர் நிறைய நிறைய சொந்தங்களைப் பெற்று வாழ்ந்திருந்தார்.
அமைதி கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அவருக்கு வலிய்யிலிருந்து விடுதலை கிடைத்தது.
உங்களுக்கு வலி ஆரம்பித்திருக்கிறது. த்ணையை இழந்த உங்களுக்கு என்ன சொல்லித் தேற்ற முடியும்..
அமைதி கிடைக்க வேண்டுகிறேன்.

Anonymous said...

ஆறுதல் என எதுவும் சொல்ல முடியவில்லை. வாழ்க்கையின் நியதியை அறிவார்த்தமாய் எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அவர் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார். காலம் உங்களைத் தேற்றும்.

பரிசல்காரன் said...

எந்த ஆறுதல் சொல்லி உங்களைத் தேற்ற?

உங்கள் துக்கத்தில் பங்கு கொள்ளும் எண்ணிலடங்கா நல்ல உள்ளங்களை அனுராதா அம்மாவும், நீங்களும் சம்பாதித்திருக்கிறீர்கள்!

ஜோசப் பால்ராஜ் said...

எதை சொன்னாலும் அது வெறும் வார்த்தையாகத்தான் இருக்கும், உங்கள் மனம் அமைதியடைய வேண்டி பிரார்திக்கிறேன். உங்களுக்கு நாங்களும் சொந்தங்கள், உங்கள் வேதனையில் நாங்களும் பங்கெடுக்கிறோம். அம்மாவின் எழுத்துக்களை புத்தமாக்கும் முயற்சியில் நாம் இணைந்து செயல்படலாம். சடங்குகளை முடித்துக்கொண்டு வாருங்கள். காத்திருக்கின்றோம்.

வடுவூர் குமார் said...

படிக்கவே....

ILA said...

அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும். உலகின் எங்கோ ஓர் மூலையில் கண்ணீர் விட்டு அழும் எங்களைப்போன்றவர்களின் பிராத்தனைகளாவது அம்மாவை வாழ வைத்திருக்கலாம்.

கண்ணீருடன்
இளா

யட்சன்... said...

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே போன்றவொரு சூழலில் எனது பெரியம்மாவை பறிகொடுத்தவன் நான்..உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

வடுக்கள் வேண்டுமானால் நிரந்தரமாயிருக்கலாம்...வலிகள் இல்லை...

அண்ணாரின் எண்ணங்களையும் கணவுகளையும் செயல்படுத்துவதே அவருக்கு நீங்கள் செய்யும் நல்லஞ்சலியாக இருக்கும்.

எனவே.....

Kasi Arumugam - காசி said...

:(

நாமக்கல் சிபி said...

:(

ஸ்ரீ said...

ஆத்மா சாந்தியடையட்டும். மனதார வேண்டுவோம்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இறைவன் அவருக்கு இம்மையில் வைத்த குறையை மறுமையில் நிவர்த்தி செய்யட்டும்...வேறு என்ன சொல்ல?

:(((((

SurveySan said...

:(

You can try to spend time helping others.

Anonymous said...

I have no word to discribe how sad we all feel about Anu AMMA. Time will heal SIR.I can't stop crying after reading this post. Sorry Sir.

Radha

Anonymous said...

Anu amma will be always with you and your loving family. I will pray for you and your family. Please have peace of mind that now she is without pain and will be always with all of her family members.

ushie

Madurai citizen said...

உங்கள் வேதனையில் நாங்களும் பங்கெடுக்கிறோம்
ஆறுதல் எதுவும் சொல்ல முடியவில்லை.
ஆத்மா சாந்தியடைய மனதார வேண்டுவோம்.

Seemachu said...

செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே மனது சரியில்லை.. கஷ்டமாக இருக்கிறது.. உங்கள் துயரம் புரிகிறது.. அது அளவிடமுடியாதது..


ஒரு நல்ல துணையாக நீங்கள் எல்லாம் செய்தீர்கள் என்ற ஆறுதல் அடையுங்கள்.. இத்துயரத்தைத் தாண்டியும் இனிமையான ஒரு வாழ்க்கை வாழ் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..

அன்புடன்
சீமாச்சு

அனுராதா said...

வருகை தந்து ஆறுதல்மொழியுரைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

.....அனுராதாவின் கணவன்.....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

தங்களைப் போன்ற அருமையான கணவனைப் பெற்ற மகிழ்ச்சியிலும் நல்ல பிள்ளைகளைப் பெற்ற திருப்தியிலும் அவர்கள் நிம்மதியாய் உயிர் துறந்தார்கள்.

இறைவன் நாடினால் அவர்களுக்கு மிக நல்ல அந்தஸ்து கிடைக்கும். அதற்காக நாங்கள் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்

- ரசிகவ்

எம்.ரிஷான் ஷெரீப் said...

:(

மோகன் said...

அனுராதா அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும்,அவரின் இழப்பைத் தாங்கக்கூடிய மனவலிமை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் கிடைக்க என் ப்ரார்த்தனை என்றென்றும்....

தாமிரா said...

சிறப்பாகவும் நிறைவாகவும் வாழ்ந்து விடைபெற்றிருக்கிறார் அனுராதா.! உங்களைத்தேற்ற வார்த்தைகளில்லை..

அனுராதா said...

நன்றி தோழர்களே.நன்றி.

.....அனுராதாவின் கணவன்.....

கீதா சாம்பசிவம் said...

சீக்கிரம் உங்கள் மனம் ஆறுதல் அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தருமி said...

......

RAMYA said...

I have no word to explain how sad we all feel about Anu AMMA. Time only can heal the situation and pain.

RAMYA

RATHNESH said...

தாமதமாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன் இந்த இழப்பு குறித்து. வாழ்க்கையின் சிரமங்களைப் போராடியே வென்று காட்டிய அவருடைய படைப்புகளை நிறைய உள்வாங்கி இருக்கிறேன். எனக்கு உங்களுடைய துக்கத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. முழுக்க அனுபவித்துத் தெளிவடையுங்கள். வாழ்க்கையில் திகைத்திருந்த எத்தனையோ பேருக்கு வாழ வழிகாட்டிய உத்தம எழுத்தாளர் அவர். அவருடைய கணவருக்கு உணர்வு பூர்வமாக ஊக்கமுட்டாமலா இருப்பார் அவர்?

அனுராதா said...

நன்றி தோழர்களே,நன்றி.

.....அனுராதாவின் கணவன்.....

prince said...

அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.
இன்று தான் இந்த வலை பதிவுக்கு வந்தேன். எல்லாம் முடிந்து விட்டிருக்கிறது.
எல்லாம் கஷ்டப்படும் காலத்தில் புலம்புவார்கள், இல்லை செயலற்று இருப்பார்கள்.
கேன்சரின் கொடிய வேதனையிலும் சமூக அக்கறை கொண்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த blog -ல் உங்கள் அனைத்து அனுபவஙளையும் பகிர்ந்து கொண்டீர்களே உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
என்ன ஒரு மனப் பக்குவம்
சல்யூட்ஸ்.
அழு.....கை வருகிறது