Thursday, September 4, 2008

விடை பெறுகிறேன்

இந்த வலைபதிவு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அனைத்துப் பதிவுகளையும் மனித நேயத்துடன் படித்து அவற்றுடன் ஒன்றிப் பின்னூட்டங்கள் எழுதி எங்களை ஊக்குவித்த சக வலைப்பதிவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அனு காலமான செய்தியை சக பதிவரும் எங்கள் இருவரையும் தங்கள் எழுத்துக்களால் மிகவும் கவர்ந்த லக்கிலுக்,உண்மைத் தமிழன் ஆகியோரிடம் தெரிவித்து பதிவிடக் கேட்டுக் கொண்டேன்.அவர்களும் மிகுந்த அக்கறையோடு அவரவர் வலைகளில் பதிந்து அஞ்சலி செலுத்தித் தங்களின் உணர்வுகளையும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்கள்.செய்தி அறிந்த வேறு சில பதிவர்களும் தங்கள் எண்ணங்களை இன்றுவரை பதிந்து வருகிறார்கள்.அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சக பதிவர்கள் மட்டுமல்லாது வலையில் மேயும் அனைவரின் அஞ்சலிகளையும் பதிவதற்காகத் தமிழ்மணம் நினைவுப் பக்கத்தை ஏற்படுத்தி எங்களைப் பெருமைப்படுத்தி உள்ளது.தமிழ்மணத்திற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.அஞ்சலி செலுத்தி எங்களின் துக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்களின் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

திருமணம் ஆனதிலிருந்து அனுராதா பொழுதுபோக்கிற்கென ஒரு நாளும் செலவிட்டதில்லை.படித்தது எட்டாம் வகுப்பு வரைதான்.மேற்கொண்டு வீட்டில் படிக்க வைக்கவில்லையே என்ற தீராத ஏக்கம் அவருக்கு உண்டு.அதைப் போக்கும் வகையில் நிறைய நூல்களைப் படித்தார்.வெறும் ஆனந்த விகடன்,குமுதம் போன்றவைகளில் நாட்டமில்லை.சாண்டில்யனின் யவன ராணி,கடல்புறா போன்ற சரித்திர நாவல்கள் படித்திருக்கிறார்.அதன் தொடச்சியாகத் தமிழ்நாட்டின் சரித்திர வரலாறையும் என்னைப் படித்து விளக்கச் சொல்லித் தெரிந்து கொண்டார்."வாயேன்.அங்கெல்லம் அழைத்துச் செல்கிறேன்.போய்ப் பார்க்கலாம்"என்று அழைக்கும்போதெல்லாம் புன் சிரிப்புடன் மறுதலித்துவிடுவார்."அந்த இடங்கள் எல்லாம் அங்கேயே இருக்கும்.எங்கும் போய்விடாது.நீங்கள் ரிட்டயர் ஆனபின் ஒவ்வொரு ஊராகச் சுற்றிப் பார்க்கலாம்.இப்போது குழந்தைகள வளர்ப்பதும்,நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக ஆக்குவதும் தான் முதல் வேலை"என்று சொல்லி விடுவார்.

அதுவும் குழந்தைகள் சற்று வளர்ந்த பின்பு அவர்களை முதன்மையாகப் படிக்க வைப்பதிலும்,ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதிலுமே நாள் முழுதும் செலவிட்டார்.அவர்களுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.பண்புள்ள மாணாக்கர்களாக விளங்கச் செய்தார்.இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போதெல்லாம் அவரும் கூடவே இருந்து கண்விழித்து,அவர்களின் தனிமையைப் போக்கினார்.விளைவு?

மக்கள் மூவரும் கல்லூரி,பல்கலை,மாநிலம் என அனைத்திலும் முதலிடங்களைப் பெற்றனர்.அனைவருக்கும் நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தார்.

குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வனே நிறைவேற்றி முடிந்தன.இனி வாழ்நாளின் மிகுதியில் சுற்றுலா செல்லலாம் என்று நினைத்திருந்தார்.

மிகப் பழமையான கோவில்களுக்குச் செல்லவேண்டும்,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள்,கல்வெட்டுகள்,சிதிலமடைந்த கோட்டை கொத்தளங்கள் ஆகியவற்றைக் காண வேண்டும் என்பதெல்லாம் அவரின் சில ஆசைகள்.மயிலை சீனி.வெங்கடசாமி,ஐராவதம் மகாதேவன்,நாகசாமி போன்றோரின் நூல்களைப் படித்துக் காண்பிக்கும்போதெல்லாம்"பிற்காலத்தில் அங்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு போங்கள்.அந்த இடங்களில் நின்றுகொண்டு கடந்த காலத்தின் கற்பனையில் சிறிது நேரம் வாழவேண்டும்.அப்போது என்ன உணர்ச்சி உண்டாகிறது என்று பார்க்க வேண்டும்"என்று பலமுறை கூறி இருக்கிறார்.தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா,மொகஞ்சதாரோ போன்ற இடங்களையும்,கம்போடியாவில் உள்ள போராபொதுர்,அங்கோர்வாட் போன்ற இடங்களையும் பார்க்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

நினைப்பதெல்லாம் தான் நடப்பதில்லையே!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்டில் புற்று நோய் தாக்கியது.மனந்தளராமல் எதிர்கொண்டார்.நோயை எதிர்த்து வீரத்துடன் போராடினார்.இருமுறை வெற்றியுங்கண்டார்.மார்பகத்தில் வந்தது மறைந்தது.பின் கல்லீரலில் வந்ததும் மறைந்தது.அப்போதெல்லாம் அவரின் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே!மூன்றாவதாக மூளைக்கும் பரவியபோது தான் 'சரி,வாழ்வின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோமோ' என்ற மனக் குழப்பம் வந்தது.பிறகு அதையும் எதிர்த்துப் போராடினார்.

அவருக்குக் கடவுள் நம்பிக்கை நிறையவே உண்டு.ஆனால் அதற்காக அடிக்கடி கோவில்களுக்குச் செல்வதோ,விரதம் இருப்பதோ கிடையாது.வீட்டுப் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றிக் கும்பிடுவதோடு சரி.வீட்டு ஹாலில் கீதாசாரம் படம் மாட்டி இருக்கும்.அர்ச்சுனனுக்குக் கண்ணன் கீதோபதேசம் செய்யும் காட்சிப் படம்.தினமும் அப்படத்திலிருக்கும் கண்ணனைப் பார்த்துக் கேள்வி கேட்பார்."தினமும் உன்னைக் கும்பிடுகிறேன்.எனக்கு நினைவு தெரிந்து யாருக்கும் ஒரு தீங்கும் செய்ததில்லை.உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாது உதவி இருக்கிறேன்.எனக்கு ஏன் இந்தக் கொடிய நோயைக் கொடுத்தாய்?ஏதாவது கெட்ட பழக்கமிருந்தால் அதற்கேற்ப நோய் வருகிறது.சிகிரட் புகைத்தால் கேன்சர் வருகிறது.தவறான பெண்களிடம் உறவு கொள்வதால் எய்ட்ஸ் வருகிறது.குடிப் பழக்கத்தால் கல்லீரல் கெட்டு நோய் வருகிறது.ஆனால் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத எனக்கு இந்த மார்பகப் புற்றுநோய் எப்படி வந்தது?என்ன காரணம்?எனக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கும் இந்த நோய் வரக் காரணம் என்ன சொல்.சொல்.என்று கேட்பாள்.தினமும் பலமுறை கண்ணனைப் பார்த்துக் கேட்பாள்.எனக்கோ வாளைக் கொண்டு நெஞ்சைப் பிளந்தது போலிருக்கும்.சற்று நேரம் காத்திருந்து அவளைப் பேச விட்டுப் பின் சமாதானப்படுத்துவேன்.

'என்றாவது ஒரு நாள் உடல் நலமாகும்.அப்போது கோவில்களுக்குச் சென்று கடவுள்களிடம் இதே கேள்வியைக் கேட்க வேண்டும்' என்றெல்லாம் பலமுறை கூறி இருக்கிறாள்.நானும் சரி என்றிருந்தேன்.ஆனால் தனியாளாகக் கோவில்களுக்குச் செல்லும் அவல நிலை ஏற்படும் என்று நினைத்ததில்லை.

அனுராதாவின் ஆசைகள்.

1.பணமில்லாத காரணத்தால் தகுந்த சிகிச்சை பெற இயலாமல் தவிக்கும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவ வேண்டும்.

2.சமுதாயத்தின் பெரும் பிரமுகர்களிடத்திலும்,சமய மடங்களை நிர்வகிக்கும் ஆன்மீகப் பெரியோர்களிடத்திலும் விரிவாகப் பேசி இதன் முக்கியத்தை உணர்த்த வேண்டும்.

3.இந்நோய் குறித்தான விழிப்புணர்ச்சியை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.முக்கியமாகப் பட்டி தொட்டியெங்கும் ஏற்படுத்த வேண்டும்.

4.இந்த வலைப் பதிவைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

5.பிற்காலத்தில் கோவில்களுக்குச் செல்லும்போது கடவுள்களிடம் கேள்வியாகக் கேட்டு முறையிட வேண்டும்.வேண்டுதல் என ஒன்றிருந்தால் பெண்களுக்கு இந்த நோய் வரவே கூடாது என்று கடவுளிடம் வேண்டுவது தான்.

இவைகளை நிறைவேற்றுவது தான் என் வாழ்நாளில் எஞ்சியிருக்கும் பணி.

முதலில் என் சோகம் சற்றேனும் தணிய வேண்டும்.

இனிமேலும் அனுராதாவின் வலையில் மேற்கொண்டு பதிய எனக்கு அருகதை இல்லை.

எனவே என் பெயரில் புதிதாக வலையொன்றை உருவாக்கி அதில் இதன்
தொடர்ச்சியைப் பதிய எண்ணி இருக்கிறேன்.

........அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்)........

30 comments:

SurveySan said...

well written.

good decision.

good luck.

கிரி said...

அனுராதா அவர்களின் நிறைவேறாத ஆசைகளை நீங்கள் நிறைவேற்றி அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கோவி.கண்ணன் said...

எஸ்கேஎஸ் ஐயா,

அனுராதா அம்மாவிற்கு நான் எழுதிய கடிதம்...

Anonymous said...

Good Bye Anuradha Amma.. May all your wishes come true through your beloved husband and well wishers.

-- A reader of your blog for a long time.. with tearful eyes.

ers said...

இந்நோய் குறித்தான விழிப்புணர்ச்சியை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.முக்கியமாகப் பட்டி தொட்டியெங்கும் ஏற்படுத்த வேண்டும்.}}}}

இந்த பதிவுகளை படிக்கும் போதெல்லாம் கண்ணில் நீர் கசிகிறது. ஏனோ தெரியவில்லை. அனுராதா அன்னையின் மறைவிற்கு பின் இத்தளத்தை திறக்கும் பேதெல்லாம் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.

இந்த தளம் அவரது நினைவாக இருக்கட்டும். இன்னொன்றில் நிறைய பதிவிடுங்கள். சோகங்களை சுமந்தாலும் மருந்தாய் சில செய்திகளை பலருக்கும் பரப்புங்கள். அன்னையின் நூலை வெளியிட்டு பலருக்கும் இந்த கொடிய நோயின் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அவரது கடைசி கால ஏக்கங்கள் நிறைவேறவும், அவரது ஆத்மா சாந்தியடையவும் எங்கும் நிறைந்த பரம்பொருளை வேண்டுகிறேன். நன்றி.

அனுராதா said...

நன்றி நண்பர்களே நன்றி.

.....அனுராதாவின் கணவன்.....

Anonymous said...

You both are wonderful persons. Please continue to write about anu amma. Her courage to write about cancer inspite of her pains made me aware of cancer(I have few relatives and family friends suffered from cancer). You are a wonderful husband and blessed with nice family members. I feel lot of pain reading your last post and I am praying for anu amma, for you and your family. Thanks.
ushie

Anonymous said...

My heartfelt condolences to you and your family members.

Madurai citizen said...

கண்ணில் நீர் கசிகிறது.......
சோகங்களை சுமந்தாலும் மருந்தாய் சில செய்திகளை பலருக்கும் பரப்புங்கள்...
இந்த கொடிய நோயின் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.....
Jai Sai Ram

puduvaisiva said...

Sir

please Not close this Blog

something write thing for your future planning and that steps how to reach this news through this blog because this is evidence and the same time we have the feeling she still with us....

puduvai siva

பரிசல்காரன் said...

நனைந்த விழிகளோடு விடை கொடுக்கிறோம் எங்கள் அனு அம்மாவிற்கு!:-(

பனிமலர் said...

ஒரு தாயின் இழப்பு எவ்வளவு பெரிய இழப்பு என்று எங்களுக்கு தெரியும். ஆழ்ந்த அனுதாபங்கள், இந்த இழப்பில் தவிக்கும் உங்களது குடும்பத்தார்கள் மீண்டுவர மன தைரியத்தை இறைவன் அருளட்டும்.

பனிமலர்.

அனுராதா said...
This comment has been removed by the author.
அனுராதா said...

நன்றி தோழர்களே நன்றி.

.....அனுராதாவின் கணவன்.....

Geetha Sambasivam said...

மனமெல்லாம் கனத்துப் போய் விட்டது. அனுராதாவின் ஆசைகளைக் கட்டாயமாய் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதற்கான மன உறுதியை அனுராதா பின்புலத்தில் இருந்து உங்களுக்கு அளிப்பார். இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

RAMYA said...

Anu Amma is always with us only. Don't get upset. Write more and more in this blog. you are having so much of talent. Do not waste the same. With some extent it will help to others, they can develop their will power and mental strength.

RAMYA

Anonymous said...

/Good Bye Anuradha Amma.. May all your wishes come true through your beloved husband and well wishers.

-- A reader of your blog for a long time.. with tearful eyes/

I agree with Anonymous 100%.

Ramya

enRenRum-anbudan.BALA said...

ஆழ்ந்த அனுதாபங்கள் :(

இந்த இழப்பில் தவிக்கும் உங்களது குடும்பத்தார்கள் மீண்டுவர மன தைரியத்தை இறைவன் அருளட்டும்.

I pray for you to succeed in fulfilling the last wishes of your courageous wife, Anuradha madam.

enRenRum anbudan
BALA

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படத்திலிருக்கும் கண்ணனைப் பார்த்துக் கேள்வி கேட்பார்//

:(

கண்ணன் கழல் நீழல் அம்மாவுக்கு வேண்டிய அமைதியைக் கொடுக்கும்!

அனு அம்மாவின் பதிவுகளுக்கு மிகவும் ஏக்கத்துடன் விடை கொடுக்கிறோம்! அம்மாவின் ஆசைகள் ஒவ்வொன்றாய் நிறைவேற வாழ்த்துக்கள் மற்றும் வேண்டுதல்கள்!

இந்த வலைப்பதிவினை மூடி விடாது திறந்த புத்தகமாகவே இருக்கட்டும்! அவர்கள் ஆசைக்கான முயற்சிகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக
அவ்வப்போது அமையட்டும்!

அனுராதா said...

நன்றி தோழர்களே.

......அனுராதாவின் கணவன்......

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

இந்த வலைப்பதிவை இந்தக்கணத்தே
தான் நான் பார்வையிட்டேன்.எல்லாம் முடிந்தபிறகு..... மனதையறுக்கிறது சோகம். இத்தனை இடர்களுக்கு மத்தியிலும்
மற்றோருக்கும் நன்மை பயக்கும் என்றெண்னி வலையில் பதிந்த அந்த மகத்தான அன்னையின் ஆன்மா சாந்தி பெறட்டும்.
நோயுடன் போரிட்ட அன்னைக்கு
உறுதுணையாயிருந்த உங்கள்
மனித நேயம் மகத்தானது.
இந்த வாழ்வு உண்மையில்லைத்தான்.ஆனாலும்
உங்களைப் போன்றமனிதர்களின் மனிதம் உண்மையானது. நித்தியமானது.
தமிழ்சித்தன்.

manjoorraja said...

உங்களின் ஒவ்வொரு எழுத்தும் மனதை கனக்க செய்தது.

அனுராதாவின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

Anonymous said...

May God give you the strength to overcome the tragedy; and give you the strength to carry her memories and realise her dreams.

Unknown said...

sir, My father got cancer., Just two weeks before only we did a brain operations. After that brain operations all doctors told to us. Upto 6 months only my father can live in this world. Please help me., if any other solutions to help to my father., Please tell me the cancer hospital or any homeopathy or any other treatment., My phone number is 9841912080. I also went to adayar cancer hospital. they also told that same thing. please i need some help to live my father.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Avargal Unmaigal said...

முதல் முறையாக இந்த பதிவிற்குள் நுழைகிறேன். கதறி அழுக வைத்துவிட்டீர்கள்

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Bapooji.P said...

Reading again and again this blog

Bapooji.P said...

Still one of my favorite blog.

Avargal Unmaigal said...

My Favorite blog