Friday, August 24, 2007

ஒரு நீண்ட விளக்கம்

பின்னூட்டமிட்ட உறவுகளுக்கு நன்றி.கேள்விக்குறிகளாக முகமிட்டுக்கொண்ட ஒருவர் டாக்டரிடம் நான் நடந்து கொண்டவிதத்தைப் பற்றிக் கண்டித்திருக்கிறார்.
தெகா அவர்கள் அதற்குப் பொருத்தமான பதிலும் கொடுத்திருக்கிறார்.
நான் யாரையும் விட உயர்ந்தளுமல்ல.யாரையும் விடத் தாழ்ந்தவளுமல்ல.என்னைப் பொருத்தவரையில் அனைவரும் சமமே.

நோயுற்று இருக்கும் ஒரு மாட்டை மாட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாலும்,மாடு வழக்கத்திற்கு மாறாக என்ன செய்யுது என்னென்ன கொடுத்தீங்க சாணம் எப்படிப் போட்டுச்சு,என்பதையெல்லாம் நம்மிடம் கேட்டுவிட்டுப் பிறகு வைத்தியம் பார்க்க ஆரம்பிப்பார்.

நான் மனுஷி.நாலு வார்த்தை பேசத் தெரிந்தவள்.நோய் வந்ததினால் டாக்டரை அணுகி என்ன சிகிச்சை பார்க்க்கலாம் என்று கேட்கிறோம்.அவர் விசாரிக்கிறார். நாமும் பதில் சொல்கிறோம்.இதில் என்ன பாசாங்கு வேண்டிக் கிடக்கிறது?பதிலே சொல்லாமல் சிகிச்சை கொடுத்துவிட முடியுமா?எவ்வளவு பெரிய டாக்டரானாலும் கேள்விகள் கேட்பேன்.என் சந்தேகங்கள் தீரும் வரை கேட்டுக்கொண்டே இருப்பேன்.என் சந்தேகங்களுக்கு டாக்டர் சரியான பதில் கொடுக்கவில்லை என்றால் அவருக்குத் தெரியவில்லை என்று தானே அர்த்தம்?

டாக்டரென்ன,அந்த எமனே உயிரை எடுக்க வந்தாலும் கேள்விகள் கேட்பேன்

"அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எண்ணித் தடுமாற்றம் அடைய வேண்டாம்.எவர் சொன்ன சொல்லானாலும் ஏன் எதற்காகச் சொன்னார் என்று தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்"என்று சாக்ரடீஸ் சொன்னது எதற்கு?

நான் கதை எழுதவில்லை.என் வாழ்வில் எனக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் பற்றியும்,அவைகளை நான் எதிர்கொண்ட/கொள்கிற முறைகளைப் பற்றியும் தான் எழுதி வருகிறேன்.மற்ற நாளிதழ்களில் வருகிற மாதிரி "கிசு கிசு"என்றோ பட்டும் படாமலோ யார் என்பதைச் சொல்லாமலோ எழுதவில்லை.பக்காவாகப் பெயர்களைப் போட்டுத்தான் எழுதியிருக்கிறேன். இந்நோயைப் பொறுத்த மட்டில் யாருக்கு எப்படியோ எனக்கு வாழ்வா சாவா என்பதியே மையமாக வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறேன்.எனக்கு வலிக்கிறது என்பதோடு முடிந்து விடுகிறதா பிரச்சனை?இந்த வலி கணந்தோறும் வலித்துக் கொண்டே இருக்கும் சார்!வெளியே சொல்ல முடியாது.விவரிக்கவும் முடியாது.ஒரு நேரத்துக்கு ஒருமாதிரி இருக்கும் கொஞ்சநேரம் கழித்து வேறு மாதிரி வலிக்கும்.திடீரென்று உடம்பு உஷ்ணமாகி விடும்.அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா?மார்பகப் புற்றுநோயின் விளைவுகள்,கொடுமைகள் சிகிச்சை முறைகளினால் ஏற்படும் கொடுமையான பாதிப்புகள் ஆகியவகளைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்?ஆண்களோ பெண்களோ எத்தனை பேருக்கு இது குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?

என் எழுத்துக்களுக்கு எனது மருத்துவ ரிக்கார்டுகளே ஆதாரம்.என் எழுத்தில் கற்பனை சுத்தமாகக் கிடையாது.வார்த்தை அலங்காரம் கிடையாது.பாராட்ட வேண்டுமா?பாராட்டியிருப்பேன்.கண்டிக்க வேண்டுமா?கண்டித்திருப்பேன்.உதவி கேட்டு வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லவேமாட்டேன்.முடிந்த வரை உதவுவேன்.மனசாற உதவுவேன்.எங்களால் உதவி பெற்றுப் படித்தவர்களும் சரி வேலை பார்ப்பவர்களும் சரி ஏராளம்.எங்கெங்கேயோ கேட்டும் கிடெக்கல்லேம்மா ஒங்களெ நம்பி வந்திருக்கோம்.உதவி பண்ணுங்கம்மா என்று கை ஏந்தியவர்களை இதுநாள்வரைக்கும் ஏமாறவிட்டதில்லை. வருத்தத்துடன் வந்தவர்கள்
சந்தோஷத்துடன் தான் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
அட!கையில் இருந்தும் அடுத்தவர்களுக்கு உதவ மனசில்லை என்றால் மனிதப்பிறவி எடுதததற்கு என்ன தான் அர்த்தம்?
அதுக்குப் பதிலா செத்துப் போகலாம்.
எங்கும் எதிலும் மிச்சம் மீதி என்பதே இல்லை.
இப்படித்தான் இது வரையிலும் வாழ்ந்திருக்கிறேன்.

ஆனால் யாரையும் திட்டியதில்லை.வைததில்லை.நகைச்சுவைபிடிக்கும்.மதன் ஜோக்ஸை ரசிப்பேன்.ஆனால் நகைச்சுவையே வாழ்க்கை ஆகி விடாது.அது தயிர் சோறுக்கு ஊறுகாய் மாதிரி.அளவோடு தான் இருக்கும்.

இன்னும் இருக்கிறது சார்.முடிந்த வரை தினமும் எழுதுகிறேன்.இரண்டு மூன்று மாதம் பொறுங்கள்.இன்றைய தேதி வரை வந்து விடுவேன்.அப்புறம் தெரிவியுங்கள் உங்கள் விமரிசனங்களை.அதற்கும் பதில் சொல்வேன்.(தேவைப்பட்டால்)

எனக்கு ஆங்கிலம் தெரியாது.என் கணவர் உதவியால் உங்கள் விமர்சனத்தைத் தெரிந்துகொண்டேன்.அது சரி.உங்களுக்குத் தமிழ் தெரியாதா?நீங்கள் தமிழ் தானே.ஆங்கிலம் கற்றுக்கொண்ட அளவிற்கு நாகரிகத்துடன் எழுதவும் கொஞ்சம் கற்க முயற்சித்திருக்கலாமே!

ம்....எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிகிறது.எப்படியாகிலும் தங்களின் வருகைக்கு நன்றி.


இலவசக் கொத்தனார் அவர்களே.நீங்கள் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் ஒரு சராசரி மனுஷி தானே.8ஆங் கிளாஸ் தான் படித்திருக்கிறேன்.திருமணமாகி பிறந்த வீட்டை விட்டு வெளியே வந்த
பிறகுதானே வெளி உலகம்னா என்ன என்று தெரிந்தது?

மார்பகத்தை எடுத்து விட்டால் என்ன ஆவேனோ மற்றவர்கள் முன் எப்படி நடமாடுவது அக்கம்பக்கத்திலுள்ளோர் எப்படி நம்மிடம் பழகுவார்கள் சொந்தக் காரர்கள் என்னென்ன நினைப்பார்கள்பெண்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுத்த இடத்திலும் மாப்பிள்ளைகளும் என்னென்ன நினைப்பார்களோ.ஆத்தாவுக்கு வந்தது மகள்களுக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்னுட்டு சம்பந்தி வீட்டுக்காரர்கள் ஏதேனும் பேச ஆரம்பித்து விட்டால் அதனால் மகள்களின் வாழ்க்கை பாதிக்கப் படுமே?இப்படித் தான் குழம்பினேன்.

உற்றமும் சுற்றமும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம்
எப்படி அணுகுகிறார்கள் என்பது குறித்துப் பின் வரும் வாரங்களில் எழுதுவேன்.அதையும் படித்தபின் மீண்டும் இக்கேள்விக்கான விடைகளை
எல்லோரும் தேடுவோம்.

"புத்தி கெட்ட தேசம் பொடி வச்சிப் பேசும்"னு வைரமுத்து சும்மாவா எழுதினாரு?

2003 ஆகஸ்டில் இந்தநோய் கண்டுபிடிக்கப் பட்டபிறகு இதே மாதிரி எண்ணங்கள் மாறி மாறி வந்து ரொம்பத்தான் குழம்பி விட்டேன்.இன்றைக்கும் குழம்பிக்கொண்டுதான் இருக்கிறேன்.அப்பவே அறுத்து எறிந்திருந்தால் வேதனைகள் குறைந்திருக்குமோ,சிகிச்சை முறைகள் மாறியிருக்குமோ என்று ஒரு நேரம் நினைக்கிறேன்.ஆனால் ரேடியேஷன்,கீமோ சிகிசைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் மார்பகத்தை இழந்த பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவேளைஇம்மாதிரி இழப்பிலிருந்து நான் தப்பித்துவிட்டேனோ நம்ம பரவாயில்லையோ அப்பாடா சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேன் என்று மனதை ஆசுவாசப்படுத்திகொள்கிறேன்.நான் அப்போது எடுத்த முடிவு சரியா தவறா என்று இன்றைக்கும் என்னால் சொல்லமுடியவில்லை.

அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்.

16 comments:

Sowmya said...

வணக்கம்.

தங்களின் வலைப்பதிவில் பதிவுகளை படித்த பின், தங்களின் தளராத மனமும், உறுதியும் நம்பிக்கையை ப்றைசாற்றும் பாடமாக அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் பதிவுகளில் கூறியது போல், பல் வேறு மருத்துவ முறைகளில் நோயை குணப்படுத்த முயன்று கொண்டு இருக்கிறீர்கள் என்பது விளங்குகிறது. சித்த மருத்துவத்தில் எனக்குத் தெரிந்து பல கேன்சர் நோயாளிகளைகுணப்படுத்திய சித்தர் சுப்ரமண்ய சுவாமி அவர்களின் ஆசிரம்த்தில் பல பேர், இதற்காகவே சென்று நலம் பெறுகின்றனர். கீழ்கண்ட முகவரியில் அவர் ஆசிரமம் இயங்குகிறது. தாமதம் செய்யாமல் , சென்று நலம் பெறவும்.

சிவ சுப்ரமண்ய சுவாமி ஆசிரமம்,
பத்ராவதி - 577302
ஷிமோகா மாவட்டம்
கர்னாடகா

தொலைப் பேசி : 08282 - 267206

இதை பின்னூட்டமாக கருதாமல், தங்கள் நலனில் அக்கறை கொண்ட பல நல்ல உள்ளங்களின் வேண்டு கோளாக ஏற்று, உடனே செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

அனுராதா said...

மிக மிக நன்றி செளம்யா அவர்களே.தங்கள் ஆலோசனை கோடி பெறும்.நிச்சயம் முயற்சிப்பேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அனுராதா:

உங்களின் வலைப்பதிவை தொடக்கத்தில் இருந்து படித்து வருபவர்களில் நானும் ஒருத்தி. மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான தொடர் இது. வெளியே இருந்து வெறும் தரவுகளை மட்டுமே வைத்து எழுதுவதை விட இம்மாதிரி அனுபவங்களை வைத்து எழுதுவது மிகவும் பயன் தரும். தாங்கள், தயக்கமில்லாமல் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணி எழுதுவது தங்களின் எழுத்திலேயே தெரிகிறது.

உங்களுடைய மனோதைரியம் என்னை மிகவும் கவர்ந்தது.

தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.

இதை எழுத முடிவு செய்து எழுதிக்கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி!

-மதி

மங்கை said...

//புத்தி கெட்ட தேசம் பொடி வச்சிப் பேசும்"னு வைரமுத்து சும்மாவா எழுதினாரு?//

அனுராதா

சாரியா சொன்னீங்க..அம்மாக்கு சர்ஜரி பண்ணலாம்னு முடிவு பண்ணது நானும் என் அண்ணனும்...அப்பா இறந்துவிட்டார்...சிறிய அளவு கட்டி என்றாலும்..சில விவரங்கள் தெரிந்ததால் அம்மாவின் சம்மத்துடன் மார்பு அக்ற்றப் பட்டது...ஆனா...
அதுனால சொந்தங்கள் என்னைப் பேசிய பேச்சு...தேவை இல்லாமல் 50,000 செலவு, அலைச்சல்..அது இது என்று..

ஏதாவது வந்த பெரிதாக வந்த பின்னால்...அனுபவிப்பது யார்...

நரம்பில்லாத நாக்கு அனுராதா.எப்படி வேண்டும் என்றாலும் பேசும்...

ஹ்ம்ம்ம்

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

நீங்கள் இங்கு என்ன நோக்கத்துடன் எழுதுகிறீர்கள் என்பதனை தங்களின் முதல் கட்டுரையை படிக்கும் பொழுதே என்னால் உணர முடிந்தது. நான் எண்ணியது போலவே உங்களின் விளக்க கட்டுரையும் இருக்கிறது.

அந்த அனானி கட்டுரையை தங்கள் சிந்தனையில் நிறுத்த வேண்டாம். இங்கு வந்து படிப்பவர்களில் நிறைய பேர் 30 வயதுக்கும் கீழே தான். சற்றே தன்னை சுற்றியும் என்ன நடக்கிறது என்று கிரகித்துக் கொள்ளக் கூடிய பக்குவம் குறைவே. அதானல், அந்த அனானி வார்த்தைகளை சட்டை செய்ய வேண்டாம்.

எனக்கு படித்தவுடனே மிகவும் வேகம் வந்தது, இருந்தாலும் நிதானத்தை வார்த்தைகளில் வைத்தே பதிலுரைத்தேன்.

நான் முன்பே கூறிய படி நீங்கள் செய்யும் சேவை இந்த தமிழுலகத்துக்கே ஒரு முன் உதாரணமாக அமையப் போகிறது. எல்லா இடங்களிலும், நாடுகளிலும் இது போன்ற கான்சர் சப்போர்ட் குழுக்கள் இருக்கின்றன ஆனால், இங்கு அப்படிக்கிடையாது. நீங்கள் தான் தொடங்கி வைக்கிறீர்கள். தொடர்ந்து கொண்டே இருங்கள்...

இங்கே கூட டாக்டர் டெல்ஃபீன் அப்போல்லோ மருத்துவமனையில் ஒருவர் இது போன்ற ஒரு செயலில் இறங்கி செய்வதாக ஒரு பதிவிட்டிருந்தார்... நீர்ஜா மலிக்...... 10 commandments of a cancer survivor to combat disease ......

வவ்வால் said...

வணக்கம் ,

உங்கள் பதிவுகளில் இருக்கும் உண்மை உறைய வைக்கும் ஒன்று, அப்படி இருக்கும் போது அந்த அனானி சொல்லியதற்கு எல்லாம் வருத்தம் கொள்ளாதீர்கள்
எல்லாப்பதிவிலும் பின்னூட்டம் இட வில்லை என்றாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். (என்ன சொல்வதென்று தெரியாது போய்விடுகிறது )

அனானிக்கு எல்லாம் பதில் கொடுக்க ஆரம்ப்பித்தால் அது வேறு விவாத களத்தில் கொண்டு போய் நிறுத்தும், உங்கள் நோக்கம் அதுவல்ல , உயர்ந்த நோக்கத்தோடு விழிப்புணர்வு ஊட்டி வருகிறீர்கள் தொடருங்கள்.இது ஒரு மிகப்பெரும் சேவை!

உடலில் வலி இருந்தாலும் உள்ளத்தில் வலிமை கொண்ட உங்களைப் போன்றவர்களை காண்பது வெகு அரிது. வாழ்த்துகள்!

அனுராதா said...

மதி கந்தசாமி,மங்கை,தெகா,வவ்வால் ஆகியோர்களுக்கு நன்றி.உங்களின் ஆதரவுக் கரங்கள் என் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான உரங்கள்.
டாக்டர் டெல்ஃபின் அவர்களே
ஒரு நோயாளியின் அடிப்படை உரிமையே அது தானே!தங்களின் ஆறுதலுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

இலவசக்கொத்தனார் said...

எனது சந்தேகங்களுக்குப் பொறுமையோடு பதில் அளித்தமைக்கு நன்றி அனுராதா. நான் உங்களை புண்படுத்தும் விதத்தில் ஏதும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

உங்களது அப்போதைய மனநிலையை அறிந்து கொள்ளவே நினைத்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவ்வளவு வேதனைகளிலும் , மற்றவர்கள் இது பற்றி அறிய வேண்டுமெனும் ஒரே நோக்கில், தங்கள் பரந்த வாசிப்பூடு, சொந்த அனுபவத்தை சேர்த்து, மிகச் சுவைபடச் சொல்லிக்கொண்டு வரும்
உங்கள் எழுத்தில் இழையோடும்,மெல்லிய கேலி,சாடல்,நகைச்சுவை,உறுத்தல் மிக்க உண்மை...அத்தோடு மிக நிதானம்,,கைதேர்ந்த எழுத்தாளர்களுக்குக் கூடக் கைகூடாதது.
நலம் பெற வேண்டும்..உங்கள் ஏனைய வாழ்க்கை அனுபவங்களையும்
பகிர வேண்டும்.

ILA (a) இளா said...

மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் நோக்க வெற்றி பெறட்டும். தாங்கள், தயக்கமில்லாமல் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணி எழுதுவது தங்களின் எழுத்திலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள்!

Unknown said...

//அட!கையில் இருந்தும் அடுத்தவர்களுக்கு உதவ மனசில்லை என்றால் மனிதப்பிறவி எடுதததற்கு என்ன தான் அர்த்தம்?
அதுக்குப் பதிலா செத்துப் போகலாம்.//

உண்மையான வார்த்தைகள், சகோதரி!
தொடருங்கள் உங்கள் தொடரை... மார்பக புற்றுநோய் பற்றி 'படித்த' நிறைய பேருக்கே சரியான உண்மை தெரிவதில்லை.

வாழ்த்துக்கள்!!

அமலசிங் said...

உங்களுடைய வெளிப்படையான மனப்பான்மை எனக்குப்பிடிக்குது.
ஆனால், உங்களுடைய attitude on cancer is appalling.
You have not understood the seriousness of cancer though
you have gone through that. You are talking like in
many cases in India they are giving option of caesarian
or normal birth.

some people lose their pancrease and live with insulin for
the whole life. Many lose many parts in their stomach
and live like a skeleton for whole life. Some lose their
testicle.

உயிரே போகும்போது, மயிரைப்பத்திக்கவலைப்படக்கூடாது.

Which one is the best for a longer term? We need to
leave it to the doctor for the best option. Your life
is very important for your family. Breast is just a
secondary. Take care and wish you all the best.

அனுராதா said...

அனைவருக்கும் நன்றி.நன்றி.

அனுராதா said...

அனைவருக்கும் நன்றி.நன்றி.

Anonymous said...

//என் சந்தேகங்களுக்கு டாக்டர் சரியான பதில் கொடுக்கவில்லை என்றால் அவருக்குத் தெரியவில்லை என்று தானே அர்த்தம்?//

இருக்கலாம்... அல்லது அதை உங்களிடம் சொல்லவா வேண்டாமா என்பது குறித்து தெரியாமல், முடிவு செய்ய முடியாமலும் இருக்கலாம்...உதாரணமாக, burr hole போடுவது எப்படி என்று யாரவது கேட்டால் என்னால் கூறமுடியும் என்று தோனவில்லை... ஆனால் எனக்கு burr hole போட தெரியும்