Thursday, October 11, 2007

பண்(பாட்டு)நாயகன் திரு டி.எம்.எஸ்.அவர்களுடன் முதல் சந்திப்பு.

ரேடியேசன் கொடுக்க்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்று ரேடியேசன் முடிந்ததும் டாக்டரைப் பார்த்தோம். வழக்கம்போல் ஒரு திரைப் படப் பாடலை முணுமுணுத்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.'படிக்காத மேதை படத்தில் வருகிற பாடல்தானே இது?'என்று என் கணவர் கேட்டார். 'ஆமாம். டி.எம்.எஸ்.பாடினது''என்று டாக்டர் பதில் சொல்லிவிட்டு 'எப்படி கரெக்டா சொல்றீங்க?'என்று கேட்டார்.நான் பதில் சொன்னேன்.'கிட்டத்தட்ட டி.எம்.எஸ்.ஸின் எல்லாப் பாடல்களுமே நாங்க கேட்டிருக்கோம் சார்.தினமும் எஃப்.எம்.சென்னை ரேடியோவிலெ ராத்திரி ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரைக்கும் பழைய பாட்டுகளைத்தானே போட்றாங்க.அதுலேயும் டி.எம்.எஸ்.பாட்டுகளெத்தானெ அதிகமாப் போட்றாங்க' என்றேன்.ஒவ்வொரு நடிகரின் குரலுக்கு ஏற்ப அவர் பாடிய பாடல்கள் தொடர்பாக கருத்துக்களைப் பறிமாறிக்கொண்டோம்.'தமிழ்த் திரையுலகில் மாபெரும் சாதனை புரிந்த இவரை எனது வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்துப் பேச வேண்டும்.தன்னுடைய மயக்கும் குரலினால் உலகையே ஆட்சிபுரிந்த இவரை ஒரு தடவை பார்த்துப் பேசினாலே போதும்.ஆனா அவரெங்கே.நானெங்கே.அவருக்கு முன்னாலெ நாமெல்லாம் எம்மாத்திரம்?'என்று டாக்டர் சொன்னார்.அவர் பேச்சிலும் முகத்திலும் ஏக்கம் தெரிந்தது.எங்களுக்கோ ஒரே ஆச்சரியம்.நான் வாய் விட்டே கேட்டு விட்டேன்"என்ன சார். இவ்வளவு பெரிய டாக்டரா இருக்கீங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா?"
"ஏன் இருக்கக் கூடாதா?டாக்டரா இருந்தா என்ன? நானும் உங்களைப் போல மனுஷன் தானே?என் மனசுக்குள்ளே ஒழிஞ்சுகிட்டுருக்கிற நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒண்ணும்மா"என்றார்."இப்ப என்ன.நீங்க டி.எம்.எஸ்.ஸைப் பாக்கணும்.அவ்வளவு தானே சார்.
நான் எற்பாடு பண்றேன்"என்றேன்.அவ்வளவு தான்.டாக்டர் முகத்தில் பிரகாசம் தெரிந்தது."என்ன சொல்றீங்க.உண்மையிலேயே டி.எம்.எஸ்.ஸைப் பார்க்க
முடியுமா?சீரியஸாத் தான் பேசுறிங்களா?"நீங்க என்றைக்கு ஃபிரீயா இருப்பீங்க.ஒரு
தேதி மட்டும் சொல்லுங்க.மத்ததெல்லாம் நான் ஏற்பாடு பண்றேன்"என்றேன்.நான் போயி
தேதி சொல்றதா? அவருக்கு வசதியான தேதி எதுவோ அன்னிக்கு ஃபிக்ஸ் பண்ணுங்க"என்றார் டாக்டர்.அவர் குரலில் எங்கள் வார்த்தையை நம்பாதது போல் தெரிந்தது.

பிறகு சமீபத்தில் டி.எம்.எஸ்.அவர்களைப் பற்றி நாழிதழிலும் அடுத்து ஆனந்தவிகடனிலும்
வெளியாகியிருந்த விவரங்களையும்,இதனை ஒட்டி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர்
நாங்கள் டி.எம்.எஸ்.அவர்களின் வீட்டுக்குச் சென்று சந்தித்து வந்ததையும் டாக்டரிடம் சொன்னேன்.மிகவும் ஆச்சரியப்பட்டார்.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்!

ரேடியேஷன் ஆரம்பிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக திருடி.எம்.எஸ்.அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் மருத்துவ சிகிச்சைக்குப்பின்
உடல்நலம் தேறி வருவதாகவும் நாளிதழ்களில் செய்தி வந்திருந்தது.அச்செய்தியைப் படித்ததிலிருந்து மனதுக்கு என்னவோ மாதிரிஇருந்தது.ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வென்ன,இருந்த இருப்பென்ன?அவர் கால கட்டத்தில் யாருமே எட்ட முடியாத சாதனை படைத்த இவருக்கா இந்த நிலை?
இரண்டு வாரம் கழித்து ஆனந்தவிகடனில் அவரது பேட்டி வெளிவந்திருந்தது.மருந்தென்று நினைத்து (ஏதோ)ஒரு திரவத்தைச் சாப்பிட்டுவிட்டாராம்.உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தகுந்த சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறிவிட்டாராம்.அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இளமைக் காலத்தில் தான் ஒரு பெண்மீது காதல் வயப்பட்டதையும் அது நிறைவேறாமல் போனதையும் விவரித்திருந்தார்.திரைப் படங்களில் சோகமான காதல் பாடல்களைப் பாடும் போது அவரது முன்னாள் காதலியை நினைத்துக் கொள்வாராம்.குரலில் சோகம் வந்து விடுமாம்.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?அவரது முன்னாள் காதலி எங்களின் நெருங்கிய உறவினர்.

மிகவும் சுவாரசியமாக இருந்தது அந்தப் பேட்டி.

இந்தப் பேட்டியைப் படித்த பிறகு எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.என்ன தான் இருந்தாலும்முன்னாள் காதலி என்று பெயரெல்லாம் போட்டு மானத்தை வாங்கிவிட்டாரே!
என்றுதான் முதலில் நினைக்கத் தோன்றியது.சிந்தனை தெளிவடைந்தபின் எண்ணம் மாறியது.'பாவம் தனதுஎண்பத்து இரண்டாம் வயதிலாவது தனது காதலைப் பற்றி
வாய் திறந்திருக்கிறாரே'என்று ஆதங்கப் பட்டேன்.

யோசித்துகொண்டே இருக்கும்போது திடீரென்று தோன்றியது.சரி.நாம் போய்ப் பார்த்து விசாரித்து வந்தால்என்ன?சென்னையில் தானே இருக்கிறார்?திரைப்படங்களில்தான் தற்போது பாடுவதேஇல்லையே!கண்டிப்பாக ஓய்வில் தான் இருப்பார்.
என் எண்ணத்தைக் கணவரிடம் சொன்னேன்.உடனே அவரது வீட்டுத் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம்.மயிலாப்பூரில் அவரது வீடு உள்ளது. தொடர்பு கோண்டோம்.டி.எம்.எஸ்.அனைத்துலக ரசிகர் மன்றத் தலைவர் என
அறிமுகப் படுத்திக் கொண்ட பாலன் என்பவர் பேசினார்.என்றைக்கு வேண்டுமானாலும் காலை வேளைகளில் வரலாம் என்று சொன்னார்.
அப்புறம் என்ன?
மறுநாள் காலையே கிளம்பினோம்.மல்லிகைப்பூ,கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டோம்.
என் இரு மகள்கள்,மாப்பிள்ளைகள், பேரன் பேத்தி ஆகியோர்களுடன் சென்று சந்தித்தோம்.
மிக அருமையான அமைதியான சந்திப்பு.என் பேரனைப் பாடச் சொன்னார்.வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் "உன்னை அறிந்தால்.."பாடலில் நான்கு வரிகளைப் பாடினான்.அவரும் உற்சாகமாக குரல் ஏற்ற இறக்கங்களுடன் எப்படிப் பாட வேண்டும் என்பதைப் பாடிக் காட்டினார். கொண்டுசென்ற பூ பழங்களை அவரிடமும் அவரின் மனைவியாரிடமும் கொடுத்தோம். பழங்களை ஏக்கத்துடன் பார்த்தார்.சர்க்கரை நோயின் காரணமாக இனிப்புகளை அறவே தவிர்த்து விட்டாராம். காப்பி பலகாரம் கொடுத்து உபசரித்தார்.

நிறையப் பேசினோம்.சில பாடல்களப் பாடும் போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபிறகு பிரபல பின்னணிப் பாடகர் திரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மட்டுமே வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போனாராம்.வேறு யாருமே இன்று வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லையாம்.
"என்ன செய்றது.எனக்கு கூழைக் கும்பிடு போடத் தெரியாது.மனசிலெ ஒண்ணெ வச்சுகிட்டு வெளியிலெ ஒண்ணு பேசத் தெரியாது.பொய் பேசத் தெரியாது.இதனாலெ நான் இழந்தது ஏராளம்.இதனாலேயே எம்.ஜி.ஆர்.அவர்களுடன் கருத்து வேறுபாடு கூட வந்தது.ஆனாலும் என் நிலையிலிருந்து நான் மாறவேயில்லை.பிற்பாடு என் குணமே அது தான் என்பதை எம்.ஜி.ஆர்.
தெரிந்துகொண்டபிறகு மீண்டும் முன்போலவே பழக ஆரம்பித்தார்.
இன்றைய திரை உலகத்திலெ பாட்டுப் பாடறதுக்கு நான் லாயக்கில்லெ.ஒரு பாட்டுப் பாடரதுன்னா அதுலெ எல்லாரது உழைப்பு இருக்கணும்.அன்னிக்கெல்லாம் ஒரு போட்டியே இருந்துச்சில்லே!ஒருபக்கம் கவிஞரு(கண்ணதாசன்)ஒரு பக்கம் எம்.எஸ்.வி.அண்ணா.என் ராகத்துக்குப் பாட்டு எழுதிருவியோன்னு எம்.எஸ்.வி.சொல்ல,இந்தா பிடின்னு கவிஞரு மளமளன்னு சொல்ல தாளத்துக்கு ஒத்து வரல்லியே,மாத்திக் கொடுன்னு எம்.எஸ்வி.திருப்ப,அப்பிடியா இந்தா இன்னொண்ணு
பிடின்னு கவிஞரு சொல்ல ஒரே போட்டியா இருக்குமையா!இருவருக்கும் மனசு திருப்திப் பட்டாலொழிய எழுந்திருக்கவே மாட்டாங்க.பிறகு நான் பாடினதுக்கப்புறம் சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்
அனாயாசமாக வாயசைத்து நடித்துவிட்டுப் போய் விடுவார்.அப்புறம் பாடலின்
வெற்றிக்கோ படத்தோட வெற்றிக்கோ சந்தேகமே வராதே!ஆனா ஒண்ணு எங்க போட்டியிலே
பொறாமையில்லெ.வெறுப்பு இல்லெ.ஒவ்வொருத்தரும் உண்மையா உழைச்சோம்.
எந்தப் பாட்டானாலும் உயிர்த்துடிப்போட பாடணும்.லயிச்சுப் பாடணும்.ஜீவன் இருக்கணும்.சுருதி சுத்தமாப் பாடணும்.ஒரு ஆளு எங்கிட்டெ வந்து அண்ணே,ஒரே ஒரு பாட்டு சுருதிபேதமாப் பாடுங்க.நீங்க கேக்குற காசைத் தர்றேன்னான்.ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் சுருதிபேதமாப் பாடமுடியாதுன்னுட்டேன்.காசுக்காகப் பாட்றதுன்னா இன்னிக்கு எங்கேயோ இருப்பேன்.ஆனா மனத் திருப்தி இருக்காது.நிம்மதி இருக்காது.அம்மாதிரிப் பாட்டுக்கள் மனசிலேயும் நிக்காது.அப்படியெல்லாம் எனக்குப் பாடவுந்தெரியாது."

நேரம் போனதே தெரியவில்லை.காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்தது மதியம் மூன்று மணி
ஆனபிறகும் பேசிக்கொண்டே இருந்தோம். பிறகு தான் வாங்கிய பரிசுகளைக் காட்டினார்.அடுக்கி வைக்க இடமில்லாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.சில பரிசுகளை எங்களிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.நன்றியுடன் வாங்கிக் கொண்டோம்.சமீபத்தில் வெளியாகியிருந்த அவரின் வாழ்க்கை வரலாறுப் புத்தகம் ஒன்றையும் கொடுத்தார்."பண்(பாட்டு)நாயகன்"என்ற தலைப்பில் மணிவாசகம் பதிப்பகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

நன்றி தெரிவித்துவிட்டு வெளியே வந்தோம்."நல்லா உழைச்சு முன்னேருங்க.கடைசிக் காலத்துலெ உங்களுக்குன்னு போதுமான பணத்தெ இப்போதிருந்தே சேமியுங்க.குழந்தெகளெ
நல்லாப் படிக்க வையுங்க.நல்லா நிம்மதியா வாழுங்க.அடிக்கடி வாங்க.உங்க மாதிரி ஆளுங்க
வந்துட்டுப் போனாத் தான் எங்களுக்கும் திருப்தியா இருக்கும்"என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.

வெளியே வரும் போது எதையோ பெற்ற மாதிரியும்,எதையோ இழந்த மாதிரியும் இருந்தது.
மனசெல்லாம் நிறைவாக இருந்தது.

11 comments:

PPattian : புபட்டியன் said...

//சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்
அனாவசியமாக வாயசைத்து நடித்துவிட்டுப் போய் விடுவார்//

அனாசியமாக என்று இருக்க வேண்டுமோ?

நல்ல சந்திப்பு, நன்றாக எழுதியுள்ளீர்கள்.

உடல் நலம் இப்போ எப்படி உள்ளது?

அனுராதா said...

தவறைத் திருத்தி விட்டேன்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி புபட்டியன் அவர்களே.
உடல்நலம் தேறி வருகிறது என்று பொய் சொல்ல மாட்டேன்.

CVR said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அம்மா!!
வர்ணனை ரொம்ப நல்லா இருக்கு!
வாழ்த்துக்கள்! :-)

உங்கள் உடல் நலம் தேறி வர மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! :-)

Voice on Wings said...

வணக்கம்.

அண்மையில் நான் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சி மற்றும் அதில் அறிந்து கொண்ட சில தகவல்கள், ஆகியவற்றை உங்களுக்குத் தெரிவிக்க நினைத்தேன். இந்த வலைப்பதிவு சில காலமாக update செய்யாமலிருந்ததால் அதை ஒரு பின்னூட்டமாக இடாமல், உங்கள் gmail முகவரிக்கு ஒரு தனி மடலாக அனுப்பியுள்ளேன். அதை நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. அதில், COPER (Centre of Psycho-oncology for Education and Research) என்ற மருத்துவ மையத்தைப் பற்றியும் அதன் சேவையால் பலனடைந்த ஒரு breast cancer survivorரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

நன்றி.

Voice on Wings said...

(எனது முந்தைய பின்னூட்டத்தைத் தொடர்ந்து) நான் அனுப்ப முயன்ற மின்மடல் 'முகவரி பிழை' என்று திரும்ப வந்துவிட்டது. ஆகவே, அதை கீழே வெட்டி ஒட்டுகிறேன்:
---------------------
அன்புடையீர்,

வணக்கம், சுகமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த எதிர்பாராத மின்னஞ்சலுக்கு மன்னிக்கவும்.

உங்கள் வலைப்பதிவைப் பல முறை படித்து விட்டு அமைதியாகக் கடந்து சென்றிருக்கிறேன். இன்று இங்கே பெங்களூரில் ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க நேர்ந்தது. திருமதி.ஜெயஸ்ரீ என்ற மார்பகப் புற்று நோயிலிருந்து உயிர் பிழைத்தவருடனான (breast cancer survivor) உரையாடல் நிகழ்ச்சியே அது. உடனே நீங்களும் எனக்கு நினைவுக்கு வந்ததால் அதை உன்னிப்பாகக் கேட்டேன். அவரைக் குறித்து: ஒரு வங்கி ஊழியர், 27 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம், அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஏறக்குறைய 30 முறைகளுக்கு மேல் கதிரியக்க (radiation) மற்றும் chemo சிகிச்சைகளை செய்து கொண்டவர். தொடர்ந்து வங்கியில் பணியாற்றி வருபவர். (சிகிச்சை நாட்கள், மற்றும் அதைத் தொடர்ந்த சில நாட்கள், ஆகிய தினங்கள் மட்டும் விடுப்பெடுத்துக் கொள்வதுண்டு)

அவர் கூறியதில் குறிப்பிடும்படியாக இருந்த கருத்துக்கள் மற்றும் தகவல்கள்:

1. அவரை சிகிச்சைகளுக்கு மனதளவில்் தயார்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர் அவரது psycho-oncologist ஆவார். (அவரது பெயரைக் குறிப்பிட்டார், ஆனால் எனக்கு அது நினைவில்லை).

2. மேற்கூறிய நிபுணரால் ஒரு மாபெரும் மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. அதாவது, பெண்மையைக் குறிக்கும் உடல் ரீதியான குணாதிசயங்களை இழப்பதா என்பது போன்ற தயக்கங்கள் / வருத்தங்கள் ஏற்பட்ட போது, மேற்கூறிய நிபுணரின் உதவியால் அவற்றை எதிர்கொள்ள முடிந்தது. பெண்மை என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு குணமல்ல என்பது போன்ற மாறுபட்ட பார்வைகளை ஏற்றுக் கொள்ள முடிந்தது.

3. அவரது கணவருக்கும் மன ரீதியான ஆதரவு அளிக்கப்பட்டு, அவர்கள் இருவரது பார்வைகளும் மாற்றம் கண்டன. மண வாழ்க்கை என்பது பாலியல் உறவு மட்டுமே அல்ல என்பது போன்ற புரிதல்களும் கிடைத்ததால், அவர்களுக்கிடையேயான உறவு மேலும் நெருக்கமான ஒன்றாகியது.

4. பணிகள் செய்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் உதவி. நோய்வாய்ப் பட்டு விட்டோமென்று ஒதுங்கியிருப்பதை விட, செயலாற்றிக் கொண்டே இருப்பதுதான் சிறந்தது.

5. அவரும் அங்கம் வகிக்கும் YANA (You Are Not Alone) என்ற உதவி மையத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். அது, இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவிதமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

6. அவருக்கு psycho-oncology உதவி வழங்கிய COPER ( Centre of Psycho-Oncology for Education and Research) என்ற மையத்தைப் பற்றியும் குறிப்பிட்டு அதன் தொலைப்பேசி எண்ணை (080 4123 0024)் தெரிவித்தார். (குறிப்பு: கூகிள் செய்ததில் அந்நிறுவனத்தின் வலைத்தள முகவரியும் கிடைத்தது. அது: http://www.coperindia.org/) அவ்வலைத்தளத்தில் Dr.Brinda Sitaram என்ற பெயரைப் பார்த்ததில் அவர்தான் திருமதி.ஜெயஸ்ரீ குறிப்பிட்ட psycho-oncologist என்று தோன்றுகிறது. ஆனால் உறுதியாக நினைவில்லை)

மேலே குறிப்பிட்ட தகவல்கள் பலவும் தாங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும், உங்கள் கவனத்திற்கு இவற்றை அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். உங்கள் வலைப்பதிவிலேயே இதை பின்னூட்டமாகத் தெரிவிக்கலாமா என்று நினைத்தேன். கணினி பிரச்சனையினால் சமீப காலமாக நீங்கள் வலைப்பதிவைத் தொடரவில்லை என்றுத் தெரிய வந்தது. ஒரு பின்னூட்டத்தில் வேறொருவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவித்திருந்தீர்கள். அதை நான் பயன்படுத்திக் கொண்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நீங்கள் இதை எப்போதாவது பார்வையிடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் இதை உங்கள் மின்னஞ்சலுக்கே அனுப்புகிறேன்.

நீங்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்,
-------------------

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி அனுராதா !!
இன்று ஒரே மூச்சில் தங்களது அனைத்துப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்தேன். 2003ல் இருந்து கொடிய புற்று நோய்க்குச் சிகிச்சை பெற்றுவரும் சகோதரியே !! உடலும் மனமும் புண் பட்டுக் கிடக்கும் நிலையிலும் இணையத்தில் மார்பகப் புற்று நோய் பற்றி எழுதி பதிவர்களின் பிரார்த்தனைகளோடு - பின்னூட்டங்களோடு - சற்றே மன ஆறுதல் கிடைக்கும் வகையில் பதிவுகளைத் தொடர்ந்து தரும் தங்களின் மன உறுதியைப் பாராட்டி எல்லாம் வல்ல இறைவனை - தாங்கள் பூரண நலம் அடைய வேண்டுகிறேன். மேன்மேலும் மன உறுதியையும் உடல் பலத்தையும் அன்புக்கணவரின் ஆதரவையும் அரவணைப்பையும் பெற வாழ்த்துகிறேன் - அல்ல அல்ல - இறையை வழிபடுகிறேன்

வெற்றி said...

மிகவும் அருமையான பதிவு. இப்போதுதான் கன்ணில் பட்டது. பதிவுக்கு மிக்க நன்றி. கவியரசர், மெல்லிசை மன்னர், சிவாஜி கணேசன், செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இவர்களெல்லாம் சரித்திர நாயகர்கள் என்றால் மிகையல்ல.

/* அன்னிக்கெல்லாம் ஒரு போட்டியே இருந்துச்சில்லே!ஒருபக்கம் கவிஞரு(கண்ணதாசன்)ஒரு பக்கம் எம்.எஸ்.வி.அண்ணா.என் ராகத்துக்குப் பாட்டு எழுதிருவியோன்னு எம்.எஸ்.வி.சொல்ல,இந்தா பிடின்னு கவிஞரு மளமளன்னு சொல்ல தாளத்துக்கு ஒத்து வரல்லியே,மாத்திக் கொடுன்னு எம்.எஸ்வி.திருப்ப,அப்பிடியா இந்தா இன்னொண்ணு
பிடின்னு கவிஞரு சொல்ல ஒரே போட்டியா இருக்குமையா!இருவருக்கும் மனசு திருப்திப் பட்டாலொழிய எழுந்திருக்கவே மாட்டாங்க.பிறகு நான் பாடினதுக்கப்புறம் சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்
அனாயாசமாக வாயசைத்து நடித்துவிட்டுப் போய் விடுவார்.அப்புறம் பாடலின்
வெற்றிக்கோ படத்தோட வெற்றிக்கோ சந்தேகமே வராதே!ஆனா ஒண்ணு எங்க போட்டியிலே
பொறாமையில்லெ. */

இப்படி பொறாமை இல்லாத போட்டியினால்தான் இன்றும் அவர்களின் கூட்டணியில் வந்த பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக இருக்கின்றன என நினைக்கிறேன்.

SurveySan said...

Thanks for sharing! excellent and interesting details.

அனுராதா said...

நன்றி வாய்ஸ் ஆஃப் விங்ஸ் அவர்களே.தகவலுக்கு நன்றி.கோபர்இந்தியா குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.
சீனா,வெற்றி,சர்வேசன் ஆகியோர்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் கூட இன்கிருந்து, இணையத்தில் சூரியன் எவ் எம் கேட்ப்பேன். எங்கள்
ரி.எம்.எஸ் பாடல்களை அள்ளி வழங்குகிறார்கள்.
அவருக்கும் ஆறுதல் கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் வித்யாசமானவர் தான்.
மிகச் சுவாரசியமான பகுதி...சந்தோசமானதும் கூட

அனுராதா said...

வாங்க யோகன் பாரிஸ்.இணையத்தில் யாழ் சுதாகரின் வலையைப் பாருங்கள்.இன்னும் நிறையக் கிடைக்கும்.நன்றி.