Thursday, July 3, 2008

விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?

மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதை எழுதுகிறேன்.

இந்தப் பதிவின் விபரம் அனுவுக்குத் தெரியாது.

ஒரு வாரத்திற்கு முன் நான் வெளியே சென்று வீட்டுக்குத் திரும்பினேன்.
கதவைத் திறந்த அனுராதா மீண்டும் கதவை மூடாமல் அப்படியே
நின்று கொண்டிருந்தாள்.ஹாலைத் தாண்டியபிறகு தற்செயலாகத் திரும்பிப்
பார்த்தேன்."ஏன் அங்கேயே நிற்கிறாய் அனு?"என்று கேட்டேன்.அனு பதில் ஏதும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.சட்டென்று உறைத்தது.
உடனே ஓடிப் போய் அனுவைப் பிடித்துக் கொண்டேன்."என்ன செய்யுது?"
என்று கேட்டேன்."தலை பாரமா இருக்கு.கால் ரெண்டும் ஒரே அசதியா இருக்கு"என்றாள்.ஒரு முப்பது வினாடிக்குள் அனு சுதாரித்துக் கொண்டாள்.

மதிய உணவு உட்கொண்டபின் மாத்திரைகளைக் கொடுத்தேன்.தொடர்ந்து அனுவைக் கவனிக்கத் தொடங்கினேன்.மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.
பேசுவதில் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்தது.கொஞ்சம் இழுத்துப்
பேசினாள்.உடனே டாக்டரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.அவரது அறிவுரைகளின்படி மாத்திரை கொடுத்தேன்.மாலை வரை ஒரு பிரச்சனையும் இல்லை.

அன்று இரவு எங்கள் மகனுடன் தொலைபேசியில் பேசும்போது தயங்கித் தயங்கிப் பேசினாள்.என் மகன் உடனே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான்.பிறகு என்னிடம் பேசும் போது பகலில் நடந்ததைச் சொன்னேன்.

கடந்த 01/07/2008 திங்களன்று மருத்துவமனை சென்றோம்.எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டது.டாக்டரிடம் காண்பித்தோம்.
"ஒன்றுமில்லை.ஏற்கனவே மூளையில் கட்டி இருந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.இரண்டு வாரங்கள் மாத்திரைகள் சாப்பிட்டால் வீக்கம் குறைந்து விடும்.ஒன்றும் பிரச்சனை இல்லை" என்றார்.மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

மறுநாள்(நேற்று)வெளியே போவதாகச் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச்
சென்று டாக்டரைச் சந்தித்தேன்."உங்களிடமிருந்து போன் எதிர்பார்த்தேன்.நல்லவேளை நேரிலேயே வந்துவிட்டீர்கள்."என்றார்.
"கவலை அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால்,அனுவுக்கு மீண்டும் மூளையில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது.முன்பு இருந்த இடத்திலேயே வந்திருக்கிறது.இரண்டு வாரம் மாத்திரை கொடுத்திருக்கிறேன் அல்லவா.அதைத் தவறாமல் கொடுங்கள்.இரண்டு வாரத்தில் வீக்கம் முற்றிலும் குறைந்து விடும்.இரண்டு மூன்று நாடகளில் முன் போலவே பேச ஆரம்பித்து விடுவாள்.இரண்டு வாரம் கழித்து அழைத்து வாருங்கள்.மேற்கொண்டு கொடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அப்போது பேசுவோம்"என்றார்.
"மீண்டும் அவாஸ்டின் போன்ற மருந்து,கீமோ கொடுக்க வேண்டுமா"என்று கேட்டேன்.
"கொடுக்கலாம்.அவாஸ்டின் மருந்து நன்றாகவே வேலை செய்தது. கீமோ மருந்து தான் ஒத்துக் கொள்ளவில்லை.இப்போது கீமோ மாத்திரைகளுடன் அவாஸ்டின் கொடுப்பதா அல்லது வேறு என்ன செய்யலாம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.பிரச்சனை என்னவென்றால் அனுவுக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கி இருப்பது கொஞ்சம் சீரியசான விஷயம். சென்ற நவம்பர் மாதம் சிகிச்சை கொடுக்கும்போதே பிழைப்பது கடினம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கொடுக்கப்பட்ட சிகிச்சைகளும் இவரது மன உறுதியும் சேர்ந்து இந்த அளவுக்குக் குணம் அடைந்திருக்கிறார்.ஆனால் இப்போது இன்னும் சீரியஸ்.பார்த்துக் கொள்ளுங்கள்.
Her life span is limited.But how for long?I don't know"என்றார்.

செலவைப் பற்றிப் பிரச்சனை இல்லை என்றும்,என்ன சிகிச்சை கொடுக்கவேண்டுமோ தயங்காமல்,தாமதமில்லாமல் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும் டாக்டரிடம் கூறிவிட்டு வெளியே வந்தேன்.

இந்த விபரங்கள் எதுவும் அனுவுக்குத் தெரியாது.

இன்றெல்லாம் முன்போலவே அனு நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

................................. அனுராதாவின் கணவன்.............................

31 comments:

Thekkikattan|தெகா said...

:-( I am sorry to hear this. You take care, sir.

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
இராம்/Raam said...

படித்து முடித்ததும் என்ன சொல்லுறதுன்னே தெரியலை..... :(

இவன் said...

என்ன சொல்லுறது என்று தெரியவில்லை, முடிந்தளவு அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கப்பர்ருங்கள்....

மதுவதனன் மௌ. said...

கனத்துப் போகிறது நெஞ்சு,

ஆமாம், நம்பிக்கையான வார்த்தைகளையே கதைத்துக்கொண்டிருங்கள்

Anonymous said...

I am also very,very sorry to hear about this news. God will help both of you.You have to take care of yourself too SIR.We all continue to pray for her.

Ravi

எம்.ரிஷான் ஷெரீப் said...

மனதுக்கு மிகவும் கவலை தரும் விடயம் அங்கிள்.ஆனாலும் அனு ஆண்ட்டியிடம் காட்டிக் கொள்ளவேண்டாம்.. உங்களது சிறுமாற்றம் கூடக் காட்டிக் கொடுத்துவிடும்.

ஆண்ட்டி நோயிலிருந்து மீண்டு பூரண சுகம்பெற்று வர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

கிரி said...

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மனதிற்கு பாரமாக இருக்கிறது..

We The People said...

:((((

தருமி said...

sorry to hear about her.

கோவி.கண்ணன் said...

அனு அம்மாவை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள் !
:(

நிலா said...

மிகவும் வருத்தமாக உள்ளது. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சோகமான மௌனத்தை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை நண்பரே

அவர்களின் உடல் நலத்திற்காக பிரார்த்திக்கின்றேன்

கயல்விழி முத்துலெட்சுமி said...

அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளத்தில் வலு தரும்படி இறைவனை வேண்டுகிறேன்.

ராஜ நடராஜன் said...

மனம் கனக்கிறது.

Unsettled Woman said...

my hearty wishes to both of you for a speedy recovery from this current condition.Today only I heard about your blog and going through the pages. extra ordinary effort. if wishes can be of any help my daily wishes will be for anu aunty

with love
thamizarasi

Kumar said...

azhuvathai thavira vera ethuvum enakku theriyavillai.

azhuthu kondae
Kumar.

Aruna said...

என்ன சொன்னாலும் குறைத்து விட முடியாத சோகம்.காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்
அன்புடன் அருணா

Anonymous said...

i pray God for both of you !!

nagoreismail said...

நான் உங்களை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன். யார் இருப்பா?
எவ்வளவு பெரிய மனிதர் ஐயா நீங்கள், உயர்ந்து நிற்கிறீர்கள். வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

Voice on Wings said...

அவர்களுக்கு இருக்கும் மனஉறுதிக்கும், உங்களுடைய தளராத முயற்சிக்கும், விரைவில் அவர் சகஜ நிலைக்குத் திரும்புவார் என்று நம்புகிறேன். மனக்கலக்கம் கொள்ளாமல் தொடரவும்.

செந்தழல் ரவி said...

வேறு ஏதாவது வைத்தியமுறை முயலுங்கள்...

cheena (சீனா) said...

அன்பு நண்பரே !

எழுத மனம் வரவில்லை. எதிர்பார்த்தது தான் என்றாலும், சென்ற பதிவிற்கும் இப்பதிவினிற்கும் நடுவில் எத்தனை மாற்றங்கள்.
இறைவனின் கருணை இன்னும் கொஞ்ச நாள் - வீடு கட்டி முடியும் வரை - புதுமனை புகும் வரை - அன்புச்சகோதரி அனுவின் மீது பொழிய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

நன்பரே - கடவுளைத் தவிர வேறு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா வலைப்பதிவர்களின் கூட்டுப் பிரார்த்தனை பலனளிக்கும். சகோதரியின் மன தைரியம் உறு துணையாக இருக்கும்.

எதையும் எதிர் கொள்ள தயாராகுங்கள். மன உறுதி கலைய வேண்டாம். சொல்வது எளிது - எனக்குப் புரிகிறது. ஆனால் எப்படி ஆறுதல் கூறுவதென்று தான் தெரிய வில்லை.

ஆண்டவனைப் பிரார்த்தியுங்கள்

மதுரையம்பதி said...

நிலைமை நன்றாக புரிகிறது. இறைவனிடம் நாம் எல்லோரும் இறைஞ்சுவோம். கண்டிப்பாக செவி சாய்ப்பார் என்று நம்புவோம்.

அனுராதா said...

வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

......அனுராதாவின் கணவன்.....

Seemachu said...

அனுராதா அவர்கள் நல்ல முறையில் தேறி வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..

அவரது மன உறுதியும், தெயவானுக்கிரஹமும் அவரைக் காப்பாற்றும் என பூரணமாக நம்புகிறேன்.

அன்புடன்
சீமாச்சு

Anonymous said...

அனு அம்மா விரைவில் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

ushie

Madurai citizen said...

Om Sri Sai Ram!
Don't worry brother!
I hope God will give peace to you and who read this article!
Jai Sai Ram

Anonymous said...

please take care of anu aunty well.

let us hope for the best.

regards,
latha

கீதா சாம்பசிவம் said...

ஆண்டவன் துணை இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன், அனுராதா, உங்கள் உறுதி உங்களைக் காக்கட்டும்.

அனுராதா said...

வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

......அனுராதாவின் கணவன்.....