Thursday, September 4, 2008

விடை பெறுகிறேன்

இந்த வலைபதிவு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அனைத்துப் பதிவுகளையும் மனித நேயத்துடன் படித்து அவற்றுடன் ஒன்றிப் பின்னூட்டங்கள் எழுதி எங்களை ஊக்குவித்த சக வலைப்பதிவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அனு காலமான செய்தியை சக பதிவரும் எங்கள் இருவரையும் தங்கள் எழுத்துக்களால் மிகவும் கவர்ந்த லக்கிலுக்,உண்மைத் தமிழன் ஆகியோரிடம் தெரிவித்து பதிவிடக் கேட்டுக் கொண்டேன்.அவர்களும் மிகுந்த அக்கறையோடு அவரவர் வலைகளில் பதிந்து அஞ்சலி செலுத்தித் தங்களின் உணர்வுகளையும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்கள்.செய்தி அறிந்த வேறு சில பதிவர்களும் தங்கள் எண்ணங்களை இன்றுவரை பதிந்து வருகிறார்கள்.அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சக பதிவர்கள் மட்டுமல்லாது வலையில் மேயும் அனைவரின் அஞ்சலிகளையும் பதிவதற்காகத் தமிழ்மணம் நினைவுப் பக்கத்தை ஏற்படுத்தி எங்களைப் பெருமைப்படுத்தி உள்ளது.தமிழ்மணத்திற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.அஞ்சலி செலுத்தி எங்களின் துக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்களின் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

திருமணம் ஆனதிலிருந்து அனுராதா பொழுதுபோக்கிற்கென ஒரு நாளும் செலவிட்டதில்லை.படித்தது எட்டாம் வகுப்பு வரைதான்.மேற்கொண்டு வீட்டில் படிக்க வைக்கவில்லையே என்ற தீராத ஏக்கம் அவருக்கு உண்டு.அதைப் போக்கும் வகையில் நிறைய நூல்களைப் படித்தார்.வெறும் ஆனந்த விகடன்,குமுதம் போன்றவைகளில் நாட்டமில்லை.சாண்டில்யனின் யவன ராணி,கடல்புறா போன்ற சரித்திர நாவல்கள் படித்திருக்கிறார்.அதன் தொடச்சியாகத் தமிழ்நாட்டின் சரித்திர வரலாறையும் என்னைப் படித்து விளக்கச் சொல்லித் தெரிந்து கொண்டார்."வாயேன்.அங்கெல்லம் அழைத்துச் செல்கிறேன்.போய்ப் பார்க்கலாம்"என்று அழைக்கும்போதெல்லாம் புன் சிரிப்புடன் மறுதலித்துவிடுவார்."அந்த இடங்கள் எல்லாம் அங்கேயே இருக்கும்.எங்கும் போய்விடாது.நீங்கள் ரிட்டயர் ஆனபின் ஒவ்வொரு ஊராகச் சுற்றிப் பார்க்கலாம்.இப்போது குழந்தைகள வளர்ப்பதும்,நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக ஆக்குவதும் தான் முதல் வேலை"என்று சொல்லி விடுவார்.

அதுவும் குழந்தைகள் சற்று வளர்ந்த பின்பு அவர்களை முதன்மையாகப் படிக்க வைப்பதிலும்,ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதிலுமே நாள் முழுதும் செலவிட்டார்.அவர்களுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.பண்புள்ள மாணாக்கர்களாக விளங்கச் செய்தார்.இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போதெல்லாம் அவரும் கூடவே இருந்து கண்விழித்து,அவர்களின் தனிமையைப் போக்கினார்.விளைவு?

மக்கள் மூவரும் கல்லூரி,பல்கலை,மாநிலம் என அனைத்திலும் முதலிடங்களைப் பெற்றனர்.அனைவருக்கும் நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தார்.

குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வனே நிறைவேற்றி முடிந்தன.இனி வாழ்நாளின் மிகுதியில் சுற்றுலா செல்லலாம் என்று நினைத்திருந்தார்.

மிகப் பழமையான கோவில்களுக்குச் செல்லவேண்டும்,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள்,கல்வெட்டுகள்,சிதிலமடைந்த கோட்டை கொத்தளங்கள் ஆகியவற்றைக் காண வேண்டும் என்பதெல்லாம் அவரின் சில ஆசைகள்.மயிலை சீனி.வெங்கடசாமி,ஐராவதம் மகாதேவன்,நாகசாமி போன்றோரின் நூல்களைப் படித்துக் காண்பிக்கும்போதெல்லாம்"பிற்காலத்தில் அங்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு போங்கள்.அந்த இடங்களில் நின்றுகொண்டு கடந்த காலத்தின் கற்பனையில் சிறிது நேரம் வாழவேண்டும்.அப்போது என்ன உணர்ச்சி உண்டாகிறது என்று பார்க்க வேண்டும்"என்று பலமுறை கூறி இருக்கிறார்.தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா,மொகஞ்சதாரோ போன்ற இடங்களையும்,கம்போடியாவில் உள்ள போராபொதுர்,அங்கோர்வாட் போன்ற இடங்களையும் பார்க்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

நினைப்பதெல்லாம் தான் நடப்பதில்லையே!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்டில் புற்று நோய் தாக்கியது.மனந்தளராமல் எதிர்கொண்டார்.நோயை எதிர்த்து வீரத்துடன் போராடினார்.இருமுறை வெற்றியுங்கண்டார்.மார்பகத்தில் வந்தது மறைந்தது.பின் கல்லீரலில் வந்ததும் மறைந்தது.அப்போதெல்லாம் அவரின் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே!மூன்றாவதாக மூளைக்கும் பரவியபோது தான் 'சரி,வாழ்வின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோமோ' என்ற மனக் குழப்பம் வந்தது.பிறகு அதையும் எதிர்த்துப் போராடினார்.

அவருக்குக் கடவுள் நம்பிக்கை நிறையவே உண்டு.ஆனால் அதற்காக அடிக்கடி கோவில்களுக்குச் செல்வதோ,விரதம் இருப்பதோ கிடையாது.வீட்டுப் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றிக் கும்பிடுவதோடு சரி.வீட்டு ஹாலில் கீதாசாரம் படம் மாட்டி இருக்கும்.அர்ச்சுனனுக்குக் கண்ணன் கீதோபதேசம் செய்யும் காட்சிப் படம்.தினமும் அப்படத்திலிருக்கும் கண்ணனைப் பார்த்துக் கேள்வி கேட்பார்."தினமும் உன்னைக் கும்பிடுகிறேன்.எனக்கு நினைவு தெரிந்து யாருக்கும் ஒரு தீங்கும் செய்ததில்லை.உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாது உதவி இருக்கிறேன்.எனக்கு ஏன் இந்தக் கொடிய நோயைக் கொடுத்தாய்?ஏதாவது கெட்ட பழக்கமிருந்தால் அதற்கேற்ப நோய் வருகிறது.சிகிரட் புகைத்தால் கேன்சர் வருகிறது.தவறான பெண்களிடம் உறவு கொள்வதால் எய்ட்ஸ் வருகிறது.குடிப் பழக்கத்தால் கல்லீரல் கெட்டு நோய் வருகிறது.ஆனால் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத எனக்கு இந்த மார்பகப் புற்றுநோய் எப்படி வந்தது?என்ன காரணம்?எனக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கும் இந்த நோய் வரக் காரணம் என்ன சொல்.சொல்.என்று கேட்பாள்.தினமும் பலமுறை கண்ணனைப் பார்த்துக் கேட்பாள்.எனக்கோ வாளைக் கொண்டு நெஞ்சைப் பிளந்தது போலிருக்கும்.சற்று நேரம் காத்திருந்து அவளைப் பேச விட்டுப் பின் சமாதானப்படுத்துவேன்.

'என்றாவது ஒரு நாள் உடல் நலமாகும்.அப்போது கோவில்களுக்குச் சென்று கடவுள்களிடம் இதே கேள்வியைக் கேட்க வேண்டும்' என்றெல்லாம் பலமுறை கூறி இருக்கிறாள்.நானும் சரி என்றிருந்தேன்.ஆனால் தனியாளாகக் கோவில்களுக்குச் செல்லும் அவல நிலை ஏற்படும் என்று நினைத்ததில்லை.

அனுராதாவின் ஆசைகள்.

1.பணமில்லாத காரணத்தால் தகுந்த சிகிச்சை பெற இயலாமல் தவிக்கும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவ வேண்டும்.

2.சமுதாயத்தின் பெரும் பிரமுகர்களிடத்திலும்,சமய மடங்களை நிர்வகிக்கும் ஆன்மீகப் பெரியோர்களிடத்திலும் விரிவாகப் பேசி இதன் முக்கியத்தை உணர்த்த வேண்டும்.

3.இந்நோய் குறித்தான விழிப்புணர்ச்சியை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.முக்கியமாகப் பட்டி தொட்டியெங்கும் ஏற்படுத்த வேண்டும்.

4.இந்த வலைப் பதிவைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

5.பிற்காலத்தில் கோவில்களுக்குச் செல்லும்போது கடவுள்களிடம் கேள்வியாகக் கேட்டு முறையிட வேண்டும்.வேண்டுதல் என ஒன்றிருந்தால் பெண்களுக்கு இந்த நோய் வரவே கூடாது என்று கடவுளிடம் வேண்டுவது தான்.

இவைகளை நிறைவேற்றுவது தான் என் வாழ்நாளில் எஞ்சியிருக்கும் பணி.

முதலில் என் சோகம் சற்றேனும் தணிய வேண்டும்.

இனிமேலும் அனுராதாவின் வலையில் மேற்கொண்டு பதிய எனக்கு அருகதை இல்லை.

எனவே என் பெயரில் புதிதாக வலையொன்றை உருவாக்கி அதில் இதன்
தொடர்ச்சியைப் பதிய எண்ணி இருக்கிறேன்.

........அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்)........

Wednesday, September 3, 2008

அனுராதாவின் கடைசி நிமிடங்கள்

சூலை 28ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வரை அனுராதா நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்.ஆகஸ்டு 3-ந் தேதி வியாழக்கிழமை மாலை சில உறவினர்களும் அவர்களின் குழந்தைகளும் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்.சில நிமிடங்களில் அனு அழ ஆரம்பித்து விட்டார்.'எல்லோரும் அவரவர் குழந்தைகளுடன் வருகிறார்கள்.என் குழந்தைகளைக் காணோமே.உடனே பார்க்க வேண்டும்"என்றார்.உடனே சென்னையில் இருக்கும் மூத்த மகளுடன் பேசி மறுநாளே வரச் செய்தேன்.சிங்கப்பூரில் இருக்கும் மகனும் இன்னொரு மகளும் 6ந் தேதியன்று வந்தனர்.அனுவின் விருப்பப்படி11ந் தேதி திங்கட்கிழமையன்று ஆடி மாதம் என்று கூடப் பார்க்காமல் புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம் நடத்தினோம்.அன்றெல்லாம் அவரால் நடக்கக் கூட இயலவில்லை.அப்படியே தூக்கிக் காரில் உட்கார வைத்துக் கூட்டி வந்தோம்.அனு மிகவும் நிம்மதியாகக் காணப்பட்டார்.நான் சொல்லச் சொல்லக் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்தார்.மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது.மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துவந்தோம்.


நாளாக நாளாக அனுராதா பேசுவதும் குறைந்து கொண்டே போனது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.டாக்டரிடம் கேட்டால்'இனிமேல் தான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.என்ன நடக்கிறது என்பது அனுவுக்குத் தெரியாது.உங்கள் ஒருவரால் இரவும் பகலும் பார்த்துக் கொள்வது சிரமம்.உங்கள் மகனையும் கூட இருக்கச் சொல்லுங்கள்.இரவு நேரங்களில் பார்த்துக் கொள்ளும் பணியை இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்'என்றார்.


அடுத்த ஓரிரு நாட்களில் தூக்கமும் குறைந்தது.என்னதான் படுக்கையைச் சீர் செய்து வசதியாகப் படுக்க வைத்தாலும் அடுத்த நிமிடத்திலேயே எழ முயற்சிப்பார்.வலது கையும் வலது காலும் இயங்குவது பாதிப்படைந்திருந்ததால் வலது பக்கமே சாய்ந்து இடது கையைக் கொண்டு கட்டிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு எழப் பார்ப்பார்.அருகில் இருப்பவர் பார்த்துக்கொண்டே இருந்தால் உடனே சென்று பிடித்து உட்கார வைக்க வேண்டும்.பிறகு சாய்ந்துவிடாமல் இருக்க வேண்டி சுற்றிலும் தலையணைகளை அடுக்கி வைக்க வேண்டும்.யாரும் பார்க்கவில்லை என்றால் தலையைக் கட்டிலின் கைப்பிடியில் சாய்த்து வைத்துக் கொண்டு முனக ஆரம்பிப்பார்.அந்த சத்தத்தைக் கேட்டாவது அருகில் சென்று விடுவோம்.இப்படியாக இரவும் பகலும் எந்த நேரம் என்றில்லாமல் ஒரு நாளைக்கு முப்பது நாற்பது முறை எழுந்து உட்காருவார்.மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் தூங்கினாலே அதிகம்.


உணவு உட்கொள்வதும் மிகவும் குறைந்தது.காலையும் இரவும் ஒரு இட்லி அல்லது ஒரு இடியாப்பம் மட்டுமே உட்கொள்ள முடிந்தது.மதியம் எங்கள் இரு மகள்களில் ஒருவர் வந்து தயிர்சாதத்தை மாம்பழத்துடன் ஊட்டி விடுவார்கள்.ஆக,மதிய உணவு மட்டும் சற்றுப் போதுமான அளவு உட்கொண்டார்.காப்பி அல்லது டீ குடிப்பதும் அடுத்த சில நாட்களில் குறைந்தது.பதிலாகக் குளிர்பானங்களைக் குடிக்கச் செய்தோம்.


மருந்துகளைப் பொருத்தமட்டில் தினமும் மேனிடால் என்ற மருந்து நரம்பு வழியாகக் கொடுக்கப்பட்டு வந்தது.இம்மருந்து மூளையில் உள்ள புற்றுநோய்க் கட்டியால் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படுவதாகும்.அதுவும் ஒரு நாளுக்கு மூன்று வேளை என்பது நாளாக நாளாக ஒரு வேளையாகக் குறைக்கப்பட்டது.


24ந் தேதியிலிருந்து திட உணவு ஏதும் கொடுக்க வேண்டாம் என்றும் கொடுத்தால் தொண்டையில் உணவு தங்கி மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும் டாக்டர் சொன்னதன்பேரில் திட உணவு நிறுத்தப்பட்டது.


26ந் தேதி இரவு பத்து மணிக்குத் தூங்க ஆரம்பித்தவர் அன்று இரவு முழுதும்

நன்றாகத் தூங்கினார்.மறுநாள் எழுந்து பார்க்கையில் தொடர்ச்சியாகத் தூங்கிக் கொண்டே இருந்தார்.டாக்டர் வந்து பார்க்கும் போதும் தூக்கத்திலேயே இருந்தார்.27ம் தேதியும் தொடர்ந்து தூங்கினார்.அன்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.சிறிது நேரத்தில் சரியானது.
மறுநாள் 28ந் தேதி காலை ஏழு மணி அளவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உடனே ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் சரியானது.மறுபடியும் இறுதியாக காலை 9.50க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இரண்டு நிமிடங்களில் மூச்சு நின்றது.


அனைவற்றையும் வெறுமனே கைகளைப் பிசைந்து கொண்டும்,மனதைக் கல்லாக்கிக் கொண்டும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.


என்னருமை ஜீவன் பிரிந்தது.துக்கம் தொண்டையை அடைத்தது.கோடிக்கணக்கில் செலவழிக்கத் தயாராக மகன் இருந்தும் அல்லும் பகலும் ஊன் உறக்கமின்றிப் பார்த்துக் கொள்ளக் கணவன் இருந்தும் தேர்ந்த மருத்துவர்கள் அருகில் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.சோகம்,அழுகை,வெறுப்பு,விரக்தி என எல்லாமும் சேர்ந்து வயிற்றுக்குள்ளிருந்து ஏதோ திரண்டு நெஞ்சில் நின்றது.போகும் உயிரை நிறுத்த வழியேதும் காணாமல் வெறுமனே மரம் போல் நின்றிருந்தேன்.


இனி என்ன எழுத?

..........அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்).............

Saturday, August 30, 2008

"வாழ்வெனும் மண்பாண்டமே உடைந்ததடா விதியினாலே"

வாழ்வெனும் மண்பாண்டமே
உடைந்ததடா விதியினாலே

பார் மானிடனே
உடைந்ததடா உன் வாழ்க்கை
இதய தாகம் தணியுமா
இனியும் சோகம் தீருமா

கடலினில் அலை ஓயாது
கலைந்திடும்
உன் மனத்துயர் நீங்காது
மருந்தில்லாத நோயடா
மரணமே இனி சரணமடா

அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்)

Monday, August 25, 2008

அனுராதாவின் தற்போதைய உடல்நிலை

சென்ற 27/07/2008ந் தேதி மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அனுராதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
...................அனுராதாவின் கணவன்(திண்டுக்கல் சர்தார்)..................

Monday, August 4, 2008

மருத்துவமனையில் அனுராதா மீண்டும் அனுமதி

அனுராதாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்ற சூலை27ந் தேதி மீனாட்சி மிசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதன் பேரில் இன்று ஆகஸ்டு 4ந்தேதி சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.
...........................அனுராதாவின் கணவன்...........................

Thursday, July 24, 2008

மருத்துவ சிகிச்சை தொடர்கிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரு தினங்கள் கழித்து அருமை நண்பரும் சக பதிவருமான சீனாவும் அவரின் மனைவியாரும் நேரில் வந்து நலம் விசாரித்தார்கள்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உடனடியாகக் கொடுக்கப்படவேண்டிய சிகிச்சைகள் கொடுத்து முடிந்தன.முன்பு அவாஸ்டின் என்ற மருந்து கொடுத்ததைப் போல் இன்றைய தேதிக்குப் புதிதாக ஏதேனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால் அதனைத் தயங்காமல் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியும்,செலவைப் பற்றிக் கவலை இல்லை என்றும் டாக்டரிடம் கூறினேன்.பெரும்பாலான மருந்துகள் அனைத்துமே அனுவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன என்றார் டாக்டர்.அனுவின் இன்றைய நிலையை அனுசரித்து"TEMOZOLOMIDE--250 mg"என்ற கேப்சூல் வடிவிலான கீமோ மாத்திரையை ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதன்படியே சென்ற22ந் தேதி செவ்வாய்க் கிழமை முதல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.காலை ஆறு மணிக்கு எல்ட்ராக்சின் என்ற தைராய்டு மாத்திரை,ஏழு மணிக்கு எமிசெட் என்ற வாந்தி வருவதைத் தடுக்கும் மாத்திரை,எட்டு மணிக்கு மேற்சொன்ன டெமோசோலமைட் என்ற கீமோ மாத்திரை ஆக இம்மூன்று மாத்திரைகளும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.அவ்வாறே அனு உட்கொண்டு வருகிறாள்.வரும் சனிக்கிழமையோடு முடியும்.அதன் பின் 23 நாட்களுக்கு மேற்படி மாத்திரை இல்லை.இவ்வாறாக 28 நாட்கள் கொண்ட ஒரு சுற்று முடிவுற்றபின் அடுத்த மாதம் 18ந் தேதியன்று மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள்.இடைப்பட்ட நாட்களில் மீண்டும் வலிப்பு வராமல் தடுக்க வேண்டிய மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளவும் சொல்லி இருக்கிறார்கள்.

நேற்று 23ந் தேதி அனுவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.மிகவும் அசதியாக இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறாள்.

..........................................அனுராதாவின் கணவன்.............................................................

Thursday, July 17, 2008

மருத்துவமனையில் அனுராதா

நேற்று மதியம் இரண்டு மணி அளவில் சாப்பிட உட்கார்ந்தோம்.ஃபேனைப் போடவா என்று கேட்டுக் கொண்டே எழுந்தேன்.பேசாமல் என்னையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.என்னமோ சொல்ல வந்தவளுக்கு நாக்கு குழறியது.சேரிலிருந்து சாய்ந்தாள்.உடனே தாங்கிப் பிடித்துக் கொண்டேன்.வலிப்பு வந்தது.ஒரு நிமிடத்தில் சரியானது.உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வந்து தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சேர்த்திருகிறேன்.மறுபடியும் இருமுறை வலிப்பு வந்தது. மருத்துவ சிகிச்சை கொடுக்கப் பட்டு வருகிறது.இப்போது நன்றாக இருக்கிறாள். பேசுகிறாள்.

...........................அனுராதாவின் கணவன்...................................................

Thursday, July 3, 2008

விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?

மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதை எழுதுகிறேன்.

இந்தப் பதிவின் விபரம் அனுவுக்குத் தெரியாது.

ஒரு வாரத்திற்கு முன் நான் வெளியே சென்று வீட்டுக்குத் திரும்பினேன்.
கதவைத் திறந்த அனுராதா மீண்டும் கதவை மூடாமல் அப்படியே
நின்று கொண்டிருந்தாள்.ஹாலைத் தாண்டியபிறகு தற்செயலாகத் திரும்பிப்
பார்த்தேன்."ஏன் அங்கேயே நிற்கிறாய் அனு?"என்று கேட்டேன்.அனு பதில் ஏதும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.சட்டென்று உறைத்தது.
உடனே ஓடிப் போய் அனுவைப் பிடித்துக் கொண்டேன்."என்ன செய்யுது?"
என்று கேட்டேன்."தலை பாரமா இருக்கு.கால் ரெண்டும் ஒரே அசதியா இருக்கு"என்றாள்.ஒரு முப்பது வினாடிக்குள் அனு சுதாரித்துக் கொண்டாள்.

மதிய உணவு உட்கொண்டபின் மாத்திரைகளைக் கொடுத்தேன்.தொடர்ந்து அனுவைக் கவனிக்கத் தொடங்கினேன்.மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.
பேசுவதில் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்தது.கொஞ்சம் இழுத்துப்
பேசினாள்.உடனே டாக்டரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.அவரது அறிவுரைகளின்படி மாத்திரை கொடுத்தேன்.மாலை வரை ஒரு பிரச்சனையும் இல்லை.

அன்று இரவு எங்கள் மகனுடன் தொலைபேசியில் பேசும்போது தயங்கித் தயங்கிப் பேசினாள்.என் மகன் உடனே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான்.பிறகு என்னிடம் பேசும் போது பகலில் நடந்ததைச் சொன்னேன்.

கடந்த 01/07/2008 திங்களன்று மருத்துவமனை சென்றோம்.எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டது.டாக்டரிடம் காண்பித்தோம்.
"ஒன்றுமில்லை.ஏற்கனவே மூளையில் கட்டி இருந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.இரண்டு வாரங்கள் மாத்திரைகள் சாப்பிட்டால் வீக்கம் குறைந்து விடும்.ஒன்றும் பிரச்சனை இல்லை" என்றார்.மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

மறுநாள்(நேற்று)வெளியே போவதாகச் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச்
சென்று டாக்டரைச் சந்தித்தேன்."உங்களிடமிருந்து போன் எதிர்பார்த்தேன்.நல்லவேளை நேரிலேயே வந்துவிட்டீர்கள்."என்றார்.
"கவலை அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால்,அனுவுக்கு மீண்டும் மூளையில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது.முன்பு இருந்த இடத்திலேயே வந்திருக்கிறது.இரண்டு வாரம் மாத்திரை கொடுத்திருக்கிறேன் அல்லவா.அதைத் தவறாமல் கொடுங்கள்.இரண்டு வாரத்தில் வீக்கம் முற்றிலும் குறைந்து விடும்.இரண்டு மூன்று நாடகளில் முன் போலவே பேச ஆரம்பித்து விடுவாள்.இரண்டு வாரம் கழித்து அழைத்து வாருங்கள்.மேற்கொண்டு கொடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அப்போது பேசுவோம்"என்றார்.
"மீண்டும் அவாஸ்டின் போன்ற மருந்து,கீமோ கொடுக்க வேண்டுமா"என்று கேட்டேன்.
"கொடுக்கலாம்.அவாஸ்டின் மருந்து நன்றாகவே வேலை செய்தது. கீமோ மருந்து தான் ஒத்துக் கொள்ளவில்லை.இப்போது கீமோ மாத்திரைகளுடன் அவாஸ்டின் கொடுப்பதா அல்லது வேறு என்ன செய்யலாம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.பிரச்சனை என்னவென்றால் அனுவுக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கி இருப்பது கொஞ்சம் சீரியசான விஷயம். சென்ற நவம்பர் மாதம் சிகிச்சை கொடுக்கும்போதே பிழைப்பது கடினம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கொடுக்கப்பட்ட சிகிச்சைகளும் இவரது மன உறுதியும் சேர்ந்து இந்த அளவுக்குக் குணம் அடைந்திருக்கிறார்.ஆனால் இப்போது இன்னும் சீரியஸ்.பார்த்துக் கொள்ளுங்கள்.
Her life span is limited.But how for long?I don't know"என்றார்.

செலவைப் பற்றிப் பிரச்சனை இல்லை என்றும்,என்ன சிகிச்சை கொடுக்கவேண்டுமோ தயங்காமல்,தாமதமில்லாமல் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும் டாக்டரிடம் கூறிவிட்டு வெளியே வந்தேன்.

இந்த விபரங்கள் எதுவும் அனுவுக்குத் தெரியாது.

இன்றெல்லாம் முன்போலவே அனு நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

................................. அனுராதாவின் கணவன்.............................

Monday, June 16, 2008

சூன் மாத செக்கப்பும் முடிந்தது.

பலவிதமான வீட்டுப் பிரச்சனைகளால் பதிவிட முடியவில்லை.இம்மாதம் 2ம் தேதி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொண்டேன்.ஒரு பிரச்சனையும் இல்லை.வலது மார்பகத்திற்குக் கீழே லேசாகப் புண் ஆகியுள்ளது.டாக்டர் அதற்கு ஒரு ஆயின்மெண்ட் கொடுத்துள்ளார்.தலைவலி வருவது தற்போது குறைந்துள்ளது.முன்பெல்லாம் தினமும் மாத்திரை சாப்பிட்டாலும் சரி சாப்பிடாவிட்டாலும் சரி.தலை அதுபாட்டுக்கு வலித்துக்கொண்டே இருக்கும்.இப்போது இல்லை.

இன்னொரு சந்தோஷமான விஷயம்,சர்க்கரை நோய் ஒரு கட்டுக்கு வந்து விட்டது.முன்பெல்லாம் சென்னையில் இருக்கும்போது தினமும் இன்சுலின் ஊசி(HUMENSULIN30/70) மூன்றுவேளையும் போட்டுக் கொண்டிருந்தேன்.அத்துடன் மாத்திரைகள் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.இப்போது ஊசி போட்டு பதினைந்து நாட்கள் ஆகிறது.
மாத்திரையும் மதியம் மட்டும் தான்.

அடுத்ததாக மதுரை வில்லாபுரத்தில் புது வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.லின்டல் வரை வந்துள்ளது.இந்த வாரம் சென்டரிங் போடப் போகிறார்கள். வரும் ஆவணி மாதத்திற்குள் முடித்துத் தந்து விடுகிறேன் என்று பில்டர் சொல்லி இருக்கிறார்.செப்டம்பரி மாதம் முதல் வாரத்தில் குடி புகலாம் என்று எண்ணி இருக்கிறேன்.என் சிந்தனையை வேறு வழிகளில் செலுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

Saturday, May 3, 2008

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

நேற்று மே 2ந் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.எக்ஸ்ரே,அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்,எம்.ஆர்.ஐ. பிரெய்ன் ஸ்கேன் ஆகியவைகள் எடுக்கப்பட்டன.அனைத்தையும் பரிசீலித்துவிட்டு,"உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை மிகவும் நன்றாக வேலை செய்திருக்கிறது.மூளையில் இப்போது 1.5x1.3 செ.மீ.அளவில் தென்படுகிற கட்டியானது ஏற்கனவே இருந்த புற்றுநோயின் இறந்துபோன செல்களாக (dead cells)இருக்கும்.எனவே அடுத்த ஆறு மாதம் வரை எந்த மருந்தோ சிகிச்சையோ தேவை இல்லை.எதற்கும் மாதம் ஒருமுறை வந்துவிட்டுப் போங்கள்.இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே வாருங்கள்.அப்படி பிரச்சனை எதுவும் நிச்சயமாக ஏற்படாது"என்று டாக்டர் சொன்னார்.
நல்ல ரிசல்ட் வந்திருக்கிறது என்று மனதார சந்தோசப்பட்டேன்.பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்தது.